பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

25 Feb 2016

சோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் : 17




#‎சோலைக்கவியரங்கம்‬

கவிஞரை அழைத்தல் : 17
(கலிவிருத்தம்)

சோலையின் குயிலெனத் தூய நற்கவி
மாலையின் தேனியாய் மயங்கச் செய்திடக்
காலையின் பரிதியாய் சீனி வாசனும்
சோலையில் நுழைகிறார் சொக்க வைக்கவே!

‪#‎நடராசன்சீனிவாசன்‬ அவர்களே வருக!
நற்றமிழ் தேன்கவி தருக!!


போற்றப்பட வேண்டியது...
ஆ.கடவுள்
**************

கவிஞர் ‪#‎நடராஜன்சீனிவாசன்‬
சிறந்த மரபு கவிஞர், பைந்தமிழ்ச் சோலையின் உறுப்பினர். பாட்டியற்றுக பயிற்சியில் தொடர்ந்து பங்கேற்றவர்.
★★★

(இன்னிசை வெண்பாக்கள்)
மொழி வாழ்த்து:

நெற்குவியல் கொண்ட நிலம்போலே நல்லினிமைச்
சொற்குவியல் கொண்ட சுவைமிகு செந்தமிழ்தான்
கற்கண்டோ? தேன்சுவையோ? கன்னல்சேர் முக்கனியோ?
நற்றமிழே! உன்னடிமை நான்!

அவையடக்கம்:

தேன்போன்ற செந்தமிழில் தேர்ந்தோர் கவியெழுதும்
ஆன்றோர்தம் கூட்டத்தில் அற்பன்நான் சேர்ந்திட்டேன்!
நான்கொண்ட ஆர்வத்தில் நான்காறுப் பாயாத்தேன்!
சான்றோர் பொறுப்பீரே சற்று!

போற்றப்பட வேண்டியவர் கடவுள் : (வெண்பாக்கள்)

1) காற்றை விசும்பைக் கனலைப் புவியினை
ஊற்றுப் புனலை உயிரைப் படைத்திடும்
ஆற்றலைக் கொண்டுள்ள ஆண்டவனை எப்போதும்
போற்றுக பொன்னினைப் போல்.

2) கடவுச்சொல் இன்றிக் கணிப்பொறிகள் இல்லை;
கடவுட்சொல் இன்றிக் கடுகளவும் இல்லை;
உடலை உயிரை உணர்வினைத் தந்த
கடவுள்தான் எல்லோர்க்கும் காப்பு!

3) வயல்வெளி, பூக்கள், வசந்தம், அருவி
முயல்மான், செடிகொடி, முக்கனி என்றே
இயற்கையைத் தந்த இறைக்கையை வாழ்த்தி
இயம்பிடு பாசுரம் இன்று!

4) உடலில் இருக்கும் உயிரென்ன காற்றா?
திடப்பொருளா? இல்லை திரவப் பொருளா?
தடயமற்ற இவ்வுயிரைத் தாரணியில் வைத்த
அடலேறாம் ஆண்டவனை அண்டு!

5) ஓட்டைகள் கொண்ட உடல்தன்னை நம்முயிரின்
கோட்டையென ஆக்கிவைத்த கோமகனைப் போற்றிடு!
கேட்டவுடன் தந்திடுவான்; கேடுகளைப் போக்கிடுவான்!
நாட்டமுடன் நாயகனை நாடு!

6) என்பற்ற மண்புழுவும் ஏக்கமின்றி வாழ்ந்திட
அன்புற்றுக் காக்கின்ற ஆண்டவனைப் போற்றிடு.
தன்னலமே இல்லாமல் தாய்போல் தயைகாட்டும்
மன்னவனை என்றும் மதி!

7) முன்னையொடு பின்னையற்ற மூத்தோனை எல்லோர்க்கும்
நன்மைதன்னை நல்கிடும் நாயகனைப் போற்றிடு!
அன்னையைப் போன்றே அனைவரையும் காக்கின்ற
மன்னவனுக் கேதிங்கு மாற்று?

8) ஊழ்வினை போக்க, உலகத்தின் தந்தையிடம்
வீழ்ந்திடுவாய் என்னெஞ்சே! விண்ணரசன் தாளினிலே
ஆழ்ந்திடுவாய் என்றும்! அதுபோதும்; துன்பமின்றி
வாழ்ந்திட ஈவான் வரம்!

9) உச்சத்தில் யாரையும் உட்கார்த்தி வைப்பதும்,
துச்சமென அன்னாரைத் தூக்கி எறிவதும்
இச்சகத்தைத் தந்த இறையின் செயலேயாம்!
ஒச்சமின்றி ஆண்டவன்சீர் ஓது!

10) அகத்தில் மகிழ்வுடன் ஆண்டவனைப் போற்றல்
சுகத்தில் பெருஞ்சுகமாம்! சோதியைப் போன்று
முகமே மலர முழுநிலவு தோற்கும்!
சகமே! இறைபுகழ் சாற்று!

நடராசன் சீனிவாசன்
நாள் : 23/01/2016.
★★★★★

1 comment:

kn-nr said...

Excellent poems. மிகவும் எளிதாய் ஓடும் வரிகள். வெண்தளை இயல்பாய் உட்காரும் தன்மை. கடவுளைப் பொதுப்பெயரால் பாடியது வள்ளுவர் நெறியில்! அவையடக்கம் அமைதியாக இருந்தது. மொத்தத்தில் விருந்து. மறுபடியும் கிடைக்க விழைகிறேன்.