பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

25 Feb 2016

‎சோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் : 16



#‎சோலைக்கவியரங்கம்‬

கவிஞரை அழைத்தல் : 16
( நேரிசை வெண்பா)

சிந்தை மயக்கும் செழுங்கவிதை பாடுதற் (கு)
இந்தக் கவிஞன் இன்கவி - செந்தேனில்
வைத்தளிக்க வந்திட்டார் வாழ்த்தி அழைக்கின்றேன்
மெய்களிக்க வாரும் விரைந்து!

போற்றப்பட வேண்டியது...
அ. இயற்கை
***************
கவிஞர் ‪#‎அய்யப்பன்‬
கோவில்பட்டி.
பைந்தமிழ்ச் சோலையின் உறுப்பினர். பாட்டியற்றுக பயிற்சியில் பங்கேற்றவர்.
மரபைப் பயிலும் ஆர்வலர்.
★★★
*************

தமிழ் வாழ்த்து
******************
சொக்கனாய்க் கடவுளையே சொக்கவைத்த தென்தமிழே
சொற்களால் கடவுளையே சொக்கவைக்கு மென்தமிழே
எக்காலும் உனைவணங்கி இயம்பிடுவேன் முதல்வணக்கம்
எக்காள மேகம்போல் எனைப்பாடச் செய்தருளே

அவையடக்கம்.
*******************
தலைமையினை ஏற்றுகவி தரும்மரபு மாமணியே
(உம்)தலைமையினை ஏத்துங்கவி தரும்மரபும் ஆம்அணியே
புலமைமிகும் அவைக்குகவி தமிழ்+அகத்தின் வணக்கம்
புலவருக்கென் வணக்கத்தை உரு+அகத்தில் விரிக்கும் (உருவகத்தில் விரிக்கும்)
போற்றப்படவேண்டும் இயற்கைஎனப் புகன்றிங்கே
சாற்றுகவி பாடுதற்குச் சாமான்யன் வருகின்றேன்
ஆற்றுப் படுத்துகவி அவைத்தலைமை ஏற்றுள்ளீர்
ஏற்றருள்வீர் என்வாக்கை இயற்கையாய்ப் பேசுகிறேன்

இயற்கை
************
வாக்குண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்ம்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கென்று பாடிநின்றேன்
அப்பப்பா ஐயப்பா இதுஎன்ன பாட்டப்பா
இயற்கையினைப் பாடாமல் இறைவனைப் பாடுகிறாய்
என்பருக்குச் சொல்லுகிறேன் எளியபதம் காட்டுகிறேன்
முன்னை இரண்டடிகள் மூவுலகும் வேண்டுவதே
பின்னை வருமடியில் பிறிதுபொருள் காட்டுகிறேன்
அன்னை மொழியான ஔவைமொழி கேளுங்கள்
பூக்கொண்டு தாமரையாம் பூக்கொண் டதனுடனே
சேர்க்கும் திருமேனி குப்பைமேனி தும்பைப்பூ
கையாம் தகரையோடு செருப்படை சேர்த்துண்ண
செய்யும் நலமென்றே செப்புகிறார் அறிந்திடுக..
ஐயன் துணையென்று அவனருளை துதிக்கையிலும்
செய்யுள் இயற்கையினைச் செப்புவதைப் பாருங்கள்
மூத்த கணபதிக்குப் புல்லருகு படைக்கின்றோம்
கூத்தாடும் சிவனுக்குக் குளிர்ச்சிதரும் வில்வமென்றும்
காத்தருளும் கண்ணனுக்குக் கபம்நீக்கும் துளசியென்றும்
ஆத்தாளின் வேம்பென்றால் அதுகிருமி நாசினியாம்
கூர்த்த அறிவோடும் கும்பிட வைத்ததனைப்
பார்த்தறிந்த மேனாட்டான் பக்குவமாய் மருந்தென்றான்
இயற்கையிலே பிறந்தவர்நாம் இயற்கையினை மறந்துவிட்டோம்
இயற்கையினை மறந்ததனால் இயற்கையினை இழக்கின்றோம்
பொல்லாத பாம்புடனே போராடும் கீரிகளும்
புல்லருகைத் தேடிவரும் புரண்டெழுந்து நஞ்சகற்றும்
புல்லிலே நீநடந்தால் புல்முளைப்ப தில்லையடா
புல்லைவிட எளியவர்நாம் புல்லேனும் வளர்த்தோமா?
உன்புகையில் உன்சாம்பல் உன்கையில் உன்சாம்பல்
உன்புகையால் ஆகாய ஓசோனில் ஓட்டைவிழும்
உன்புகையால் தாய்மையின் உட்கருவுக் கூறுவரும்
உணர்ந்தால் புகைப்பாயா? உலகத்தை அழிப்பாயா?
காற்றில் புகைவிட்டுக் காற்றைக் கெடுக்காதே
காற்றெல்லாம் மாசுபட்டால் சுவாசிக்க முடியாதே
காற்றைச் சுவாசிக்க காற்றுக் கலைந்திடுவோம்
காற்றுப்பை வாங்குகின்ற காலமே நாளைவரும்
காற்றுப்பை வாங்குகின்ற காலனே நாளைவரும்
ஆதலினால் போற்றப் படவேண்டும் இயற்கையென்றே
காதலினால் சொன்னேன் கவி.

சு.ஐயப்பன்
நாள் : 23/01/2016
★★★★★

No comments: