#சோலைக்கவியரங்கம்
கவிஞரை அழைத்தல் : 7
(அறுசீர் விருத்தம்)
கணினியில் பணிசெய் தாலும்
கவிதையை மறந்தா ரில்லை.
அணிசெயும் மரபில் யாக்கும்
அருங்கவி பலருள் பூத்த
மணிக்கவி, பார திக்கு
மனத்தினில் இடம ளித்துத்
துணிந்துபல் கவிதை செய்யும்
தூயராம் சுந்தர் ராசன்!
#சுந்தரராசன் அவர்களே வருக!
சொக்கும் கவிதையைத் தருக!!
★
போற்றப்பட வேண்டியது...
அ. இயற்கை
""""""""""""""""""""""""
கவிஞர் #சுந்தரராசன்
Sundara Rajan
கணினிப் பணி, தமிழ் மரபில் நாட்டம் கொண்டவர், பாரதியை மனத்தில் வழிகாட்டியாகக் கொண்டு பாப்புனையும் "மரபு பாவலர் "
பைந்தமிழ்ச் சோலையில் பாட்டியற்றுக பயிற்சியில் தொடர்ந்து பங்கேற்பவர்.
*************★★★**********
தமிழ்த்தாய் வாழ்த்து
(அறுசீர் விருத்தம்)
நாவென்னும் மேடை ஏறி
நடனமொன் றாடற் காக
வாவென்று நின்னை வேண்டி
வணங்கினேன் உன்னைக் கொண்டே!
தாவென்று கேட்கும் முன்னம்
தருபவை யாவும் நல்கும்
கோவவன் மகளே! உள்ளம்
கொள்ளைகொள் தமிழே வாழி!
(கோவவன் : சிவன்)
★
தலைவர் வாழ்த்து + அவையடக்கம்!
சோலையின் தோட்டக் காரர்!
சொற்றமிழ் நாட்டுக் காரர்!
பாலையாய்ப் போகும் முன்னே
பைந்தமிழ் மரபைக் காக்கும்
வேலையைச் செய்யும் வேந்தர்!
வீற்றிரு சபையில் கல்விச்
சாலையில் நுழையும் சின்னச்
சவலையாய்த் துணிந்து வந்தேன்!
★
போற்ற வேண்டியது : இயற்கை!
போற்றிடத் தக்க தேது?
புகலுவீர் என்றீர் எம்மை!
போற்றுவம் இறையைத் தாயைப்
புகழ்தரு ஒழுக்கந் தன்னை!
மாற்றமே இல்லை மூன்றும்
மானுடம் வாழு மட்டும்
போற்றவே! எனினும் என்னுள்
புகலவோர் சேதி உண்டே!
காலத்தின் தேவை கண்டே
கற்றவர் முடிவு செய்வார்!
சீலத்தை இறையைத் தாயைச்
செபிப்பவர் யாண்டும் உண்டு!
கோலத்தை இழந்த வண்ணம்
கொளுமுயிர் ஊச லாடும்
ஞாலத்தின் இயற்கை அன்றோ
நாம்போற்ற வேண்டு மின்று?
தனைப்போற்ற மறந்த சேயைத்
தாயவள் சபித்த லுண்டோ?
நினைந்தேத்தும் நிமலன் தாளை
நீங்கியே செலினும் தொண்டர்
வினைக்கேற்ற விளைவை அன்றோ
விமலனும் தருவான்! ஈங்கே
தனைச்சேர்ந்த ஒழுக்கம் நீங்கின்
தவிப்பதும் சிலரே தானே!
இயற்கையின் நிலையைக் கண்டால்
எவர்க்குமே கண்ணீர் தோன்றும்!
செயற்கையை யேத்தி யேத்திச்
சேர்த்ததோர் பயனைப் பார்த்தால்
மயக்கமே மூளும்! இங்கே
மானுடம் வாழ்தற் கான
இயக்கமே முடங்கிற் றம்மா!
எங்கணம் வாழ யேலும்?
நீரெலாம் கழிவென் றாக்கி,
நிலமெலாம் மலடாய் மாற்றிப்
பாரெலாம் காற்றை மாசாய்ப்
படைத்தனம்! வாழ்தல் வேண்டின்,
சீரெலாம் அகத்துள் கொண்ட
சிறப்புறும் இயற்கை தன்னை
ஊரெலாம் போற்றி வாழ்த்தால்
உலகினில் வாழ லாமே!
★
கவிஞர் இல.சுந்தரராசன்.
நாள் 18/02/2016
★★★★★
2 comments:
மிகவும் அருமை
மிகவும் அருமை
Post a Comment