நண்பர்களே.! கவிஞர்களே.! அறிஞர் பலரும் பாராட்டும்
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 22" இதோ.!
"இப்பகுதியில் கொடுக்கப்படும் இலக்கணக் குறிப்புகள், புதிதாகக் கற்பவர்கள் அஞ்சி ஒதுங்காமல், குழப்பமடையாவண்ணம் எளிதில் கற்கும் விதத்தில் (பாட்டியற்றும் வகையில்) தேவையானவை மட்டுமே கொடுக்கப்படுகின்றன.
மேல்விளக்கம் தேவைப்படுவோர்
முன்னோர் யாப்பியல் நூல்களைப் பார்க்கவும்."
முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, இந்தப் பதிவைப் பகிர்ந்தும், மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.!
*** *** *** ***
பாட்டியற்றுக - 22
வஞ்சி விருத்தம்
********************
ஈடாய் எதுவு மில்லாத
ஏடா யிரங்கள் எழிலூட்டும்
தேடாச் செல்வச் செந்தமிழை
நாடா தோரே நலிவாரே!
--பாவலர் மா.வரதராசன்
*** *** *** ***
கருத்தூன்றுக.:
மேற்கண்ட பாடல் "வஞ்சி விருத்தம்" ஆகும்.
மிகவும் எளிதான இவ்விருத்தம் சிந்தடிகளால் (முச்சீர் அடிகளால்) அமையும். அளவொத்த சிந்தடிகள் என்பதே குறிப்பு. எனவே இன்ன சீர்கள் தான் வர வேண்டும் என்ற வரைறையில்லை. எந்த வித அமைப்பிலும் அமைத்து எழுதலாம்.
நாம் பயிற்சிக்கு,
தேமா, மா, காய் என்ற அமைப்பை மட்டும் எழுதலாம்.
பொது இலக்கணம்.
*அளவொத்த மூன்று சீர்கள் கொண்டதாய்,
*நான்கு அடிகள் பெற்று,
* நான்டிகளும் ஒரே எதுகையைப் பெற்றும்,
* முடிந்தால் பொழிப்பு மோனை பெற்று (கட்டாயமில்லை)(சான்று பாடலில் வந்துள்ளதைப் பார்க்க)
வருவது "வஞ்சி விருத்தம் " ஆகும்.
ஓரடிக்கு, முதற்சீர் தேமாவாகவும், இரண்டாம் சீர் தேமா, புளிமா இவற்றில் ஒன்றும், மூன்றாம் சீர் காய்ச்சீர் ஏதாவது ஒன்றும் (ஒரே வகைக் காய்ச்சீராய் இருந்தால் சிறப்பு) சீர்கள் அமைதல் வேண்டும்.
இவ்வகையான ஒரு பாடலை வரும் வெள்ளிக்கிழமை நண்பகலுக்குள் இப்பதிவின் கருத்துப் பகுதியில்(comment) மட்டுமே எழுதி அனுப்புங்கள்.
அன்பு கூர்ந்து ஒருவர் ஒரு பாடலை மட்டுமே அனுப்பவும். பயிற்சிக்கு நேரம் ஒதுக்க உதவியாக இருக்கும்.
★★★
No comments:
Post a Comment