#சோலைக்கவியரங்கம்
கவிஞரை அழைத்தல் : 18
(நேரிசை வெண்பா)
தாயின் பெருமை தகவுடன் சொல்லுதற்குத்
தோய்வில் கவிதையில் சொல்லடுக்கி - வாய்த்திட்ட
சோலைக் கவியரங்கில் சொக்கும் கவிபாட
மாலை யிளம்பிறையே வா!
கணேசன் ராமசாமி அவர்களே வருக!
கன்னித் தமிழ்ச்சுவை தருக!!
★
போற்றப்பட வேண்டியது...
இ. தாய்மை
***************
கவிஞர் #கணேசன்ராமசாமி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் முதன்மை மேலாளராக பணியாற்றி 2011 ஏப்ரலில் பணி ஓய்வு பெற்றவர். தற்போது என் குடும்பத்தினருடன் சென்னை மடிப்பாக்கத்தில் வசிக்கிறார்.
★
தலைப்பு- போற்றப்பட வேண்டியது
இ.தாய்மை
---+-+_+---------------
தமிழ்த்தாய் வாழ்த்து
(கலிவிருத்தம்)
புவியில் பூமணம் பூந்தமிழ் வீசிடச்
செவியில் தேனிசை செந்தமிழ் பாய்ச்சிட
நவிலும் நாலடி நற்பயன் தந்திடக்
கவியில் அற்புதம் காட்டுவாய் வாழிய
★
அவையடக்கம்
பதைக்கும் நெஞ்சுடன் பாவலர் முன்னிலை
கதைக்க வந்துளேன் காத்திடும் தாய்மையே
கதையும் காதையும் காவியம் மேவிட
விதைக்க வந்துளேன் வேண்டிய நெஞ்சிலே
★
தலைப்புக்குள்ளே
இரவின் இன்பமோ இங்கித மற்றதே
உறவின் தீண்டலால் உன்னத மானதே
அரவ மின்றியே ஆண்துளி வென்றது
சரசப் பெண்ணவள் சந்ததி தாங்கவே
மயக்கம் வாந்தியால் மாந்தளிர் மேனியாள்
பயந்த நெஞ்சுடன் பாதிதான் உண்டனள்
தயக்க மின்றியே தன்துயர் தாங்கினாள்
வியக்கும் நல்மனம் வென்றது பெண்மையே
கருவில் காத்தவள் காதலால் ஈன்றனள்
பெருகும் இன்பமும் பெற்றதால் பெற்றனள்
உருகும் நெஞ்சொடு உள்ளமே துள்ளிட
விரும்பும் சேயினால் வென்றனள் சொர்க்கமே
குருதி கூட்டிய கொங்கையின் பாலொடும்
உறுதி கொள்ளவே உன்னத வீரமும்
பருக ஊட்டினள் பைந்தமிழ்ப் பெண்ணவள்
விரும்பி ஏற்றிட விண்ணிலா காட்டியே
வளரும் கன்றினால் வாலிபம் தொய்ந்தது
மலரும் பூவினால் மாறிய வாழ்நிலை
நிலவின் வானமாய் நீந்திடத் தந்தனள்
பலரும் போற்றிடப் பார்புகழ் கல்வியே
உறக்கம் விட்டனள் உண்பதும் மீந்த தை
சிறகில் பொத்தியே செல்லமாய்ப் பேணினள்
உறவில் பூத்ததை ஊர்க்கிளி கொஞ்சவே
மரத்த நெஞ்சொடு மாற்றமும் ஏற்றனள்
பயிரைக் காத்திடும் பாமரத் தாயவள்
உயிரும் தந்தனள் ஊனுமே தந்தவள்
துயிலில் கூடவும் துன்புற அஞ்சுவாய்
உயிரொ டொப்பிலா உன்னதம் போற்றிடு
★
கணேசன் ராமசாமி
நாள் : 24/01/2916
★★★★★
No comments:
Post a Comment