பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

14 Feb 2016

கவிஞரை அழைத்தல்.,1 கவிஞர் பொன். பசுபதி



‪‎சோலைக்கவியரங்கம்‬

கவிஞரை அழைத்தல்.,
(அறுசீர் விருத்தம்)

"புரட்சியைப் பாட்டில் ஊட்டும்
         புதுவையின் செம்மல்.. பாட்டில்
திரட்சியைக் கொட்டி வைத்துத்
         தீந்தமிழ்க் கவிதை செய்வார்
உரசிடுந் தீயாய்ச் சொற்கள்
         உகுத்திடும் இவர்தம் பாட்டில்
முரசென "இயற்கை " போற்ற
         முதன்மையாய் வருகின் றாரே!!

‪#‎பொன்பசுபதி‬ அவர்களே வருக!
பொற்றமிழ்ச் சுவைக்கவி தருக!
★★★


பொது தலைப்பு:
போற்றப்பட வேண்டியது...

அ. இயற்கை
****************
கவிஞர் பொன்.பசுபதி
(விடுதலைப் போராட்ட வீரர்)
புதுச்சேரி.

தமிழ்த்தாய் வாழ்த்து.
(நேரிசை வெண்பா)

பொதிகையில் தோன்றிப் பொலிவினைக் காட்டி
மதுரையில் ஓங்கி வளர்ந்தே - புதுவையின்
மண்ணிலும் பூத்துக் குலுங்குமென் வண்டமிழே
என்னுள்ளும் ஏறியயொளி ஏற்று.


அவையடக்கம்
(நேரிசை வெண்பா)

தகவுசேர் "மாமணியைத்"தாழ்ந்து . வணங்கி
முகநூலில் பாட முனைந்தேன் - அகத்திலுறை
ஆவலால் தான்வந்தேன் ஆன்றோர் பொறுத்திடுக
பாவினில் குற்றமிருந் தால்!


இயற்கை:
(முன்முடுகு இன்னிசை வெண்பா)

பாடி வருங்குயிலை நாடி வருந்துணையை
யோடி வரும்புயலை நீல . நெடுங்கடலை
என்றுபல கோடி இயற்கைப் படைப்புகளைக்
கண்டுநாம் போற்றுவோம் களித்து.!

(கட்டளைக் கலிப்பா)
புலரும் போதினில் கூவிடும் புள்ளினம
புதிய சூரியன் தோன்றுநற் காலையில்
மலரும் பூக்களும் ஈந்திடும் நன்மனம்
மகிழும் மங்கையர் இட்டிடும் கோலமும்
உலவும் மக்களின் ஊக்கமும் ஆர்வமும்
உணரும் போதினில் உள்மனம் இன்புரும
உலகில் இவ்விதம் எத்தனை யெத்தனை
ஒளிரும் சீர்மைகள் உய்த்திடல் இன்பமே!

(எழுசீர்ச் சந்த விருத்தம்)
கோழி கூவு காலை வேளை
கொஞ்சும் கிளியும் கத்துமே
மேழி தாங்கு தோளி(ன்) மீது
மிக்க வீறு காணலாம்
ஆழி பூமி வாழு(ம்) யாவும்
ஆடி வேலை செய்யுமே
நாழி யொன்று சேத மின்றி
நாமு(ம்) வேலை செய்வமே!

(தாழிசைகள்)
நெருப்புநிற பந்தொன்று
நீள்கடலில் மெல்ல
நிமிர்ந்தெழுந்து
பொன்னொளியை
நிறைக்குதடா எங்கும்
கருப்புநிறக் கடல்நீரும் கனல்
நிறமாய் மாறிக்
கடல்பரப்பைத் தகதகெனக்
காணல்பே ரழகே!

வான்மீதில் கருமுகிலின்
கூட்டத்தைக் கண்டு
வண்ணமயில் தோகைவிரித்
தாடுமெழில் பாரீர்
மான்கூட்டம் அங்குமிங்கும்
மருண்டோடும் காட்சி
மனத்திலின்பம் கூட்டுதலை
நாம்சுவைப்போம் வாரீர்!

(எண்சீர் விருத்தம்)
பூங்குயிலும் பூமரத்தின் மேலமர்ந்து கூவும்
         புன்னைமரக் கிளையிடையே குரங்குவந்து தாவும்
பாங்குடனே கதிரவனும் ஒளிபரப்பி வருவான்
         பல்லுயிர்கள் வாழ்ந்திடவே சூட்டொளியும் தருவான்
தூங்கினபல் லுயிரினங்கள் துயில்விடுத்துக் கூவும்
         துள்ளியோடும் மானினங்கள் புள்ளினங்கள் பாடும்
தேங்கியநீர் பரப்பெல்லாம் .மீனினங்கள் துள்ளும்
         திக்கெட்டும் உழைக்குமினம் உழைத்துவகைக் கொள்ளும்!

முடிப்பு:(கலிவிருத்தம்)

செயற்கையால் இயற்கையின் செல்வம் தன்னை
நயமிலாச் செய்கையால் . நலியச் செய்யின்
இயற்கையே நமையெலாம் எதிர்க்கும் என்றே
இயற்கையைப் போற்றியே இன்பம் கொள்வோம்!

வாழ்க பைந்தமிழ்!
வாழ்க இவ்வையகம்!

. . . பொன். பசுபதி
புதுச்சேரி
15-01-2016

1 comment:

Unknown said...

மிகவும் அருமை