பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

10 Feb 2016

பாட்டியற்றுக 21 இன் தொகுப்பு


அன்பு நண்பர்களே! கவிஞர்களே! பாட்டியற்றுக : 21 இன் தொகுப்பு அப்பாடல்களை இயற்றிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
புதிதாகப் பல கவிஞர்கள் இணைந்திருப்பது மனத்திற்கு மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் தருகிறது.
பைந்தமிழ்ச் சோலையில் விருப்பத்துடன் பலர் இணைவது, தமிழ் மரபைக் கற்கப் பலரும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பதையே காட்டுகிறது. 
கொடுக்கப்பட்டுள்ள எண்கள் தரவரிசைக்குரியதல்ல. கவிஞர் அனுப்பிய வரிசைக்குரியதே.
கவிஞர்களை வாழ்த்துங்கள். 
கவிதைகளைப் படியுங்கள். நண்பர்களுக்குப் பகிருங்கள்.

பாட்டியற்றுக : 21


வஞ்சித் தாழிசை
*****************

1. கவிஞர் சுந்தரராசன்
காதலும் தோன்றினால்
மோதலே இல்லையே!
சாதலும் சாகுமே
ஆதலால் காதலி!

மீசையின் பாரதி
ஆசையாய்ச் சொன்னதை
தாசனும் சொல்கிறான்
நேசமாய்க் காதலி!

ஆடலின் இன்பமும்
பாடலின் கன்னலும்
ஊடலின் நன்மையும்
கூடவே காதலி!

2. கவிஞர் காவியக்கவி இனியா
கனிவுடன் பூத்திடும்
இனியநல் நாள்களும்
நனிமிகு பாக்களும்
கனியெனச் சுவைக்குமே!

எந்தமிழ்ச் சோலையின் 
செந்தமிழ்ப் பாக்களைச் 
சிந்தையில் சேர்த்திடச் 
சந்தமும் சுவைக்குமே !

பாவலர் பார்வையில்
ஆவலாய்க் கற்றிடப்
பூவனம் போற்றிடும்
யாவும்சு வைக்குமே!

3. கவிஞர் கட்டிக்குளம் ஓ.சுந்தரமூர்த்தி
பரந்தயித் தரணியில்
வரம்பல உடையநல்
கரந்திரு தமிழ்க்கடல்
பரவிடும் வழியெது ?

திடமென உயர்ந்திட
விடம்பல சுவைத்தவன்
சுடரென எழுந்திட
நடமுடை வழியெது ?

தமிழனே பெரியவன் !
தமிழனோ அமிழ்தவன்....
தமிழனை உயர்த்திடும்
தமிழனின் வழியெது ?

4. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
கற்பவர் கண்ணது
மற்றவர் புண்ணது
பற்றுவர் பற்றது
நற்றவக் கல்வியே

கண்ணொளி காட்டிடும்
பண்ணிசை பாடிடும்
வண்ணமா யாக்கிடும்
வண்டமிழ்க் கல்வியே

வித்தையை வீசியே
வித்ததை வித்திடும்
நித்தியம் நல்கிடும்
முத்திநற் கல்வியே!

5. கவிஞர் கணேசன் ராமசாமி
வெள்ளிப் பணமழை
வெள்ளைப் பூமழை
அள்ளித் தெளித்திட
உள்ளுதல் காதலே

கள்ளச் சிரிப்பில் 
உள்ளச் சிலிர்ப்பில்
கொள்ளை கொள்வது
வெள்ளைக் காதலே

கொட்டு மழையும்
பொட்டல் வெயிலும்
திட்டல் பேச்சும்
ஒட்டிடாக் காதலே!

6. கவிஞர் தாமோதரன் கபாலி
கண்டதென் கற்றதென்
உண்டதென் உற்றதென்
விண்டதென் நின்றதென்
கண்ணனை பற்றிடும்!

கட்டிடும் அன்பினைத்
தட்டிடும் விந்தையைத்
தொட்டிடும் சிந்தையை
எட்டிடப் பற்றிடும்!

வற்றிட வன்மையை
நெற்றிட நல்லொளி
உற்றிட உன்னதம்
முற்றிடப் பற்றிடும்!

7. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
மயங்கிடும் மாலையிலே ! 
தயங்கியும் சோலையிலே ! 
வியந்திடும் வேளையிலே! 
துயரமும் ஏனடியோ ?

எழில்மிகும் தேவதையே ! 
மொழியியல் கண்மணியே ! 
பொழிலிடைப் பைங்கிளியே ! 
அழிப்பதும் ஏனடியோ ?

சிலைகளும் பேசிடுமோ ?
விலைதனைக் கேட்டிடுமோ ?
மலைகளும் நின்றிடுமோ ?
நிலைகளும் ஏனடியோ ?

8. கவிஞர் வள்ளிமுத்து
புயலெழு முகிலெனப்
பெயல்விழு துளியென
வயலுழு கலையெனத்
துயிலெழ வருமழை..!

இடியது முழங்கிடப்
பொடித்துகள் அடங்கிடச்
செடிகொடி மலர்ந்திட
அடித்தொழ வருமழை..!

கலப்பைகள் கவியுழ
நிலப்பையில் மணிவிழக்
குலத்தொழில் சுடர்விட
நலம்விளை வருமழை..!

9. கவிஞர் நாகினி கருப்பசாமி
தெம்புடன் முயன்று
வம்பினைத் தவிர்க்கும் 
கொம்பெனத் தழுவும்
நம்முயிர் படிப்பு

நல்வழி நடக்கும் 
பல்லறம் இயம்பும் 
சொல்லறம் தவழும்
இல்லறம் படிப்பு

முகத்திரை கிழித்து
அகந்தையும் அழிக்கும்
நகமென உலவும்
பகலவன் படிப்பு! 

10. கவிஞர் சுரேஷ் சீனிவாசன்
தடமது தெரிந்திடக்
கடமைகள் விளங்கிட
மடமைகள் விலகிடக்
கடவுளை தினம்நினை

உடலது திடம்பெறத்
திடமதை மனம்பெறப்
புடமதை உளம்பெறக்
கடவுளை தினம்நினை

தொடர்ந்திடும் துயரமும்
படர்வதைத் தடுத்திட
உடன்வரும் வழித்துணை
கடவுளை தினம்நினை!

11. கவிஞர் கலாம் ஷேக் அப்துல் காதர்
அலைகடல் போலவே
நிலையிலா வாழ்விது
விலையிலாப் பேர்தரும்
கலைபொருள் கல்வியே!

அறம்பொருள் இன்பமும்
திறமுடன் ஈட்டலாம்
மறைபொருள் விளங்கலாம்
நெறிதரும் கல்வியால்!

திரைகடல் ஓடியும்
திரவியம் தேடலாம்
நரைவரும் காலமும்
கரையிலாக் கல்வியே!

12. கவிஞர் அஷ்பா அஷ்ரப் அலி
சுயநலம் முள்ளவர்
மயங்கிடப் பேசியே
இயங்குவார் தேர்தலில்
வியப்பிதே எங்கிலும் !

உயர்நிலை கண்டவர்
துயர்தர அஞ்சிடார்
பயனிலா ஆட்சியே
பயக்குதே எங்கிலும் !

நடைமுறை வாழ்விலே
கடைநிலை நம்மையே
குடைகிறா ரின்னமும்
இடைஞ்சலே எங்கிலும் !

13. கவிஞர் வெங்கடேசன் சீனிவாங கோபாலன்
எவரெவர் நல்லவர் 
எவரெவர் தீயவர்
விவரமாய்க் காண்பதில்
கவனமே தேவையே!

அவரவர் பார்வையில்
தவறெனக் காண்பது
தவறிடக் கூடுமே
கவனமே தேவையே!

தவற்றினைச் சுட்டுதல்
தவமெனக் கொள்ளுதல்
அவத்தினைத் தந்திடும்
கவனமே தேவையே!

14. கவிஞர் ரவீந்திரன் காளிமுத்து
படிப்பினைப் பரப்ப
நடிப்புடன் நடத்தி
அடித்தளம் அமைய
துடிப்பான்ஆசான்.

சிலையெனக் கல்லையும்
கலையெனக் கல்வியை
மலையெனச் சொல்லியே
விளைப்பான் ஆசான்.

படிப்பதும் கடமையே
குடிப்பதும் மடமையே
துடிப்புடன் சொல்லியே
விடுப்பதும் ஆசானே.!

15. கவிஞர் சியாமளா ராஜசேகர்
விரைவுட னலைகளும் 
கரைதொட வருகையில் 
நுரைத்திடு மெழிலுடன்
இரைந்திடுந் தரங்கமே !

உதித்திடும் பொழுதினில் 
கதிர்க்குளித் தெழும்பிடப்
புதிரென விளங்கிடும்
அதிசயம் தரங்கமே !

நிலவத னொளிதனில்
சலதரம் மிளிர்ந்திடப்
புலவரும் புகழ்ந்திட 
இலங்கிடும் தரங்கமே!

16. கவிஞர் அழகர் சண்முகம்
விழிப்பினைக் கதிர்தர
வழித்துணை முகில்வரத்
தொழில்கலை உழவினால்
செழித்திடும் உலகமே

பொழில்திகழ்ப் பொதிகையில்
எழிலுடன் தவழ்ந்தயெம்
மொழித்தமிழ் ஒலித்திடச்
செழித்திடும் உலகமே

பழித்திடும் குணமதின்
அழித்திடும் செயல்களை
ஒழித்திட மகிழ்ச்சியில்
செழித்திடும் உலகமே!

17. கவிஞர் குருநாதன் ரமணி
வானதி தலைவீழ
கானகம் நடமாடும்
வானவர் புகழீசா
நானுனைப் பணிவேனே!

கண்ணுதல் பரமேட்டி
விண்ணவர் துதிபாட
நண்ணுவர்க் கருள்செய்வான்
எண்ணியே பணிவேனே!

உருவிலி உருவோடே
ஒருபுறம் உமைமேவ
அருள்தரும் அறவோனை
மருளறப் பணிவேனே!

18. கவிஞர் அர.விவேகானந்தன்
மனத்தினைத் தேற்றியே
கனவினை நீட்டிடும்
சினமதைப் போக்கிடும்
வனப்பெனும் நட்புமே!

மயங்கிடும் வேளையில்
தயங்கியே நின்றிடா
புயமதைத் தந்திடும்
பயமிலா நட்புமே!

துறவெனும் நெஞ்சினும்
பறவையாய்ச் சுற்றியே
அறமதை யாக்கிடும்
உறவெனும் நட்புமே!

19. கவிஞர் ஹபீலா நிசாம்
கற்றவர் என்றிலா
மற்றவர் தாமுமாய்ப்
பெற்றபே ராளரும்
உற்றநன் நூலிதாம்

தன்மனப் போக்கிலே
பின்னது நோக்கிடா
முன்னிலை பெற்றிடும்
பொன்முக நூலிதாம்

கண்களை மூடியே
பண்பினை நோக்கிடா
எண்ணிலாப் பதிவுகள்
பண்ணிடும் நூலிதாம்!

20. கவிஞர் கேகிரவா
மழையெனப் பொழிந்திடும்
பிழைதனை யுணர்த்திடா
விழைவெனும் போற்றுதல்
உழைப்பெனும் வாழ்த்தடா?

நெறிதனி லோங்கியே
அறிவொளி ஏற்றிநல்
வெறிதனில் மிஞ்சிடும்
குறியது வாழ்த்தடா?

புகழ்தனை நாடடியே
அகமது வாடிடா 
இகமதில் நாளெலாம்
சுகமது வாழ்த்தடா?

21. கவிஞர் பசுபதி
எண்ணிடும் எண்ணமே
வண்ணமாய்த் தோன்றிடின்
பண்ணிடும் வினையெலாம்
நன்மையே நல்கிடும்!

நல்லவை செய்திடின்
நல்லன நடந்திடும்
அல்லவை செய்திட்டின்
வல்வினை வாட்டிடும்!

ஒழுக்கமே பேணிடின்
விழுப்பமே விளைந்திடும்
உழைப்பினை உயர்த்திடின்
தழைத்திடும் வாழ்க்கையே!

22. கவிஞர் பரமநாதன் கணேசு
முத்தென நகைகொட்டிப்
பித்தென யெனையாக்கி
நித்தமும் வலம்வந்தாள்
சித்துகள் பலசெய்தே

நடைதனில் இழுத்தென்னை
இடைதனில் உடுத்தள்ளிக்
கொடியென அசைந்தாடி
நடந்தனள் பலசெய்தே.

கருநாகம் போலொக்கும்
கரும்கூந்தல் காற்றாட
இரவெல்லாம் தூக்கத்தில்
வருகின்றாள் பலசெய்தே!

23. கவிஞர் வீ.சீராளன்
கருவளர் சிசுதனின் 
உருவினைக் கொடுத்திடத் 
திருவளர் மகளிரும் 
பெருவலி பொறுப்பரே !

பருவமும் அடைந்துடல்
அரும்பிடும் உணர்வினில் 
விரும்பிடும் துணைமனம் 
இரும்பெனும் பொறுப்பரே

திருமண விரிசலின் 
இருமன உரசலில் 
நெருப்பென நினைவுகள் 
வருத்தியும் பொறுப்பரே !

24. கவிஞர் நிறோஸ் அரவிந்த்
விழிகளின் அழகினில்
மொழிகளும் மறந்திடும்
பிழிவளென் மனத்தினைக்
கெழிதரும் உறவினள்!

நெஞ்செழு கனலினை
மஞ்செனத் தணித்திட
விஞ்சிடும் கனிவளி
வஞ்சியென் உறவினள்!

அருகினில் வரவென
உருகியான் இசைத்திடக்
கரும்பதன் இனிமையாய்
வருவளென் உறவினள்!

25. கவிஞர் சேலம் பாலன்
இனித் திட உயர்ந்திடக்
கனி எனப் பணி செயல்
தனித்தனி மனிதரின்
நனி மிகு நோக்கமே.

பனை என உயரமும்
வினை செய முயலுதல்
முனைந்துயிர் வென்றிட
நினைப்பவர் நோக்கமே .

எவரெவர் எப்படித் 
தவறுகள் செய்யினும்
தவமென வளருதல் 
அவரவர் நோக்கமே!
★★★★★



No comments: