அனுமனைச் "சொல்லின் செல்வன் " என இராமன் அழைக்க என்ன காரணம்.?
இந்தக் கேள்வியைப் பல நாள்களுக்கு முன் சோலையிலும், சொல்மேடை என்ற என் தனிப் பக்கத்திலும் கேட்டிருந்தேன்.
அதற்கான விடையைக் கூறுமுகத்தான் கம்பன் கவிநயம் கட்டுரையின் வாயிலாகக் கொடுக்கிறேன்.
இராமன் சீதையைத் தேடிக் காட்டுவழியே கிட்கிந்தையை அடைகிறான். தொலைவில் அவர்களைப் பார்த்த. அனுமன்,
இவர்கள் தான் தருமத்தின் மாற்று வடிவம் என்பதைக் கண்டு, அவர்களை வரவேற்கிறான்.
இராமன் அனுமனை நோக்கி, 'நீ யார்? " என்று ஒரு கேள்வியைத் தான் கேட்கிறான். அனுமனோ,
"மஞ்செனத் திரண்ட கோல
மேனிய மகளிர்க் கெல்லாம்
நஞ்செனத் தகைய வாகி
நளிரிரும் பனிக்குத் தேம்பாக்
கஞ்சமொத் தலர்ந்த செய்ய
கண்ண,யான் காற்றின் வேந்தர்க் (கு)
அஞ்சனை வயிற்றில் வந்தேன்
நாமமும் அனுமன் என்போன் "
எனத் தெளிவாகக் கூறுமுகத்தான் தன் ஆன்ற அறிவுநுட்பத்தையும், தெளிந்ததோர் துணைவனாக ஆகப் போகின்ற அமைச்சுத் திறனையும், கொடுத்துப் பெற்றுப் பயன்கொள்ளும் இயல்பையும் காட்டி நிற்பதுடன் அல்லாமல்,
இராமனை முன்னரே அறியாதவனான அவன், இராமனை முன்னிலையாய் விளிக்கும் சொற்களைக் கொண்டே "சொல்லின் செல்வன் " என்று இராமனால் புகழப்படுகிறான்.
முதலில்,
பாடலின் பொருளைப் பார்ப்போம்.
" மஞ்செனத் திரண்ட கோல மேனிய "
- மஞ்செனில் மேகம். அதாவது மழையைப் பொழிந்து, இவ்வுலக உயிர்களைக் காத்து அருளும் மேகம். மேகம் கருமையானது. இராமனின் நிறமான கருமையைக் கண்ட அனுமனுக்கு உவமையாகத் தோன்றியது மஞ்சு - மழைமேகம். இராமனும் இவ்வுலக மக்களைக் காத்தருளும் மனித வடிவில் உள்ள திருமாலே என்பதை அறிந்த அனுமன் "மஞ்செனத் திரண்ட மேனி " என்கிறான்.
"மகளிர்க் கெல்லாம் நஞ்செனத் தகைய வாகி "
- இராமாயணத்தின் மையப் பொருள்களில் ஒன்று "ஒரு இல் " (ஒரு தாரம்)
இராமன் தன்மனையாள் சீதையைத் தவிர மற்ற பெண்களுக்கு நஞ்சு போன்ற (அவர்கள் தன்னைக் காமுறா வண்ணம்) இயல்பை உடையவனாதலால் இவ்வாறு கூறுகிறான்.
"நளிரிரும் ...கண்ண"...
- நளிர் - குளிர், பகை எனப் பொருள்.
குளிர்ந்த பனியால் வாடாத தாமரையைப் போன்ற கண்ணனே என்னும் பொருளும்,
பகையைக் கண்டு வாடாமல் மலர்ந்த. முகத்தோனே என்ற பொருளையும் (இராவணனைக் கண்டு கலங்காதவன்)
நளிர், தேம்பா என்ற இரு சொற்கள் மடங்கிப் பொருள்தருமாறு கூறுகிறான்.
"யான்....என்போன் "
- நான் காற்றின் வேந்தனுக்கும், அஞ்சனைக்கும் பிறந்தவன். என்பெயர் அனுமன்.
இவ்வாறு, இராமனைக் கண்ட நொடியிலேயே அவனைப் பற்றிய இயல்பு, அவனுடைய பகைவன், அதில் அடங்கிய அவனுடைய வீரம், கடவுளின் தோன்றல் என அனைத்தையும் உணர்ந்து கொண்ட அனுமன் தேர்ந்த சொற்களால் இராமன் கேட்ட ஒற்றைக் கேள்விக்கு இந்தத் தெளிந்த விடையைக் கூறிய காரணத்தால் தான்,
வியந்து போன இராமன் தன் தம்பியிடம்,
"கல்லாத கலையும், வேதக்
கடலுமே, என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற் றன்றே
யார்கொள்இச் சொல்லின் செல்வன்? "
என்று அயர்ந்து கேட்கும் காட்சியைப் படைத்துக் காட்டிய கம்பரின் கவிநயத்தைக் கற்போர் களிப்பில் மூழ்குவர் என்பதே உண்மை.
இப்போது அந்தப் பாடலை மீண்டும் படித்துப் பாருங்கள்...
"மஞ்செனத்..,
..., அனுமன் என்போன் "
(கம்ப. கிட்கிந்.அனுமப். 15)
No comments:
Post a Comment