பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

20 Feb 2016

சோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் : 6




#‎சோலைக்கவியரங்கம்‬

கவிஞரை அழைத்தல் : 6
(ஆனந்தக் களிப்பு)

நாளும்நற் பாக்களை நாடி - இவர்
நற்றமிழ்த் தாயவள் சீரதைப் பாடி
ஆளும்த னித்திறத் தோடே - என்றும்
அன்னைத் தமிழினைப் போற்றிடுவாரே!

பாவலர் போற்றும் ரமணி - இவர்
பாவகை பல்வேறு தான்படைப்பாரே!
ஆவலால் நானழைத் தேனே - உங்கள்
யாப்பெனும் தோப்பில் இளைப்பாறு வேனே!

‪#‎குருநாதன்‬ ரமணியாரே வருக!
குன்றாத் தமிழ்ச்சுவை தருக!!



போற்றப்பட வேண்டியது...
ஆ. கடவுள்
"""""""""""""""""""
கவிஞர் ‪#‎குருநாதன்ரமணி‬
தமிழும், ஆன்மிகமும் இருகண்களாய்க் கொண்டு பாப்புனையும் அருந்தமிழ்ப் பாவலர்.சந்தவசந்தம் குழுவில் மரபால் ஈர்க்கப்பட்டு, பைந்தமிழ்ச் சோலையில் மெருகேற்றிக் கொள்ளும் கவிஞர்.
புதிய பா வடிவங்களைக் கற்பதிலும், முயல்வதிலும் ஈடுபாடு கொண்டவர்.


கடவுள் வாழ்த்து
(நேரிசை வெண்பா)

நாமகள் அம்சமே நற்றமிழ்த் தாயே!என்
பாமலரை வைத்தேனுன் பாதவிணை! - ஏமமாய்
நின்றென் கவிதைகள் நேர்வரச் செய்தருள்வாய்
என்றுமுன் தாள்பணி வேன்.

அவையடக்கம்

பைந்தமிழ்ச் சோலையவைப் பாவலரே! உம்திறத்தால்
ஐந்தருவாய்ப் பாப்பொழியும் அன்பர்காள்! - மைந்தன்நான்
பத்தியில் காணும் பரமனைப் பாடுவ(து)
எத்தகைத்தா னுந்தருவீர் ஏற்பு.


போற்றப்பட வேண்டியது கடவுள்
(முச்சீர் சமநிலைச் சிந்து)

போற்றப்ப டத்தக்க தாவதே - யென்று
. பொதுவாக நான்குநிலை யில்லெது?
ஆற்றுநெறி யாவியற்கை யாவதா - அன்றி
. ஆண்டவனா தாய்மையதா வல்லது? ... 1

போற்றப்ப டத்தக்க தாவதாய் - எந்தப்
. போதினிலும் ஆண்டவனே என்பனே!
ஆற்றலுடன் ஆன்மவொளி சேர்வதாய் - வேரின்
. ஆனந்தம் நிம்மதியே நண்பனே! ... 2

ஏன்பிறந்தேன் என்றவொரு கேள்வியே - என்னை
. எப்பொழுதும் ஆட்டிவைக்கும் வாதமே!
நான்சிறக்கும் வாழ்க்கையிது வேள்வியே - என்று
. நானவனைக் காணவரும் மாதவம்! ... 3

தாயென்னைப் பெற்றெடுத்தே ஊட்டினாள் - என்றன்
. சாதனைய வள்மகிழ்ச்சி யானதே!
தாயன்பைத் தந்தெனக்குக் காட்டினாள் - தன்னைத்
. தந்ததெய்வம், சாலமகிழ் வானதே! ... 4

தந்தையவர் நன்னெறியைக் காட்டினர் - அதைத்
. தக்கவைப்ப தென்திறமை என்றனர்
தந்தநெறி யில்வாழ்வை யோட்டினன் - அதில்
. சாதனையாய்க் கண்டதெய்வம் ஒன்றென! ... 5

பள்ளியிலே ஆசிரியர் போதனை - ஆகும்
. பல்லுயிரும் வாழுமிந்த வையகம்
கொள்கலனென் றேவியற்கை சாதனை - அதைக்
. கோணமனி தம்படுத்தும் கையகம்! ... 6

தாய்தந்தை யாவருமே போயினர் - நிற்ப
. தாயுள்ள இவ்வியற்கை குன்றுமே!
ஓய்வில்லா மானிடனும் ஆய்வென - வளம்
. ஒன்றுமியற் கைகொள்வன் என்றுமே! ... 7

நல்லொழுக்க நன்னெறியில் வந்தனன் - இன்னும்
. நாடுமனம் ஆண்டவனில் நின்றது
இல்லாளும் தாயன்பைத் தந்தனள் - இன்று
. ஈசனுரு வாயியற்கை வென்றது! ... 8

பல்லுயிரும் பல்லுலகும் ஈசனே - வாழ்வில்
. பார்ப்பதெலாம் ஈசனரு வாகுமே
சொல்வதுடன் செய்வதிலும் நேசமே - எனத்
. தோத்தரித்தே ஈசனருள் கொள்வமே! ... 9

--கவிஞர் குருநாதன் ரமணி,
18/01/2016
★★★★★

2 comments:

Unknown said...

மிகவும் அருமை

Unknown said...

மிகவும் அருமை