பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

3 Apr 2019

நெஞ்சொடு கிளத்தல் .

இன்றைக்கு (நாள் – 24.03.2019 ) நிகழ்ந்த ஒருநிகழ்வால் மனம் கொதித்துக் கொண்டிருக்கிறது. அம்மனத்தை ஆற்றுவிதத்தான் 'என்னெஞ்சே அமைதிபெறு ' என

                          நெஞ்சொடு கிளத்தல் .

ஒற்றை இலக்கப் பாடல்கள் பாவலர் மா.வரதராசன் 
இரட்டை இலக்கப் பாடல்கள் விவேக்பாரதி 


கேளாய் மடநெஞ்சே கீழோர் நிறைவையம்
தேளாய்க் கொடுக்காற் றிகைப்பூட்டும் - நாளாக
எல்லாம் தெளிவாகும் ஈசன் செயலென்று
நல்லதே நாளும் நினை                                                                         .

நினைவே அழையாதே நீயுந்தேம் பாதே
கனவே அனைத்தும் கலையும் - மனமே
அமைதியுடன் வையத்தின் ஆட்டத்தைக் கண்டால்
சுமையெதுவும் இல்லை சுகம்!

சுகமொன்றே நோக்காய்ச் சுமக்கின்றார் பல்லோர்
முகம்முன்னே பாடித் துதிப்பர் - அகத்திலோ
ஆயிரம் கீழ்மை அணைந்திருக் கச்செய்வான்
பேயினும் தீய செயல்

செயல்கண்டு பல்லோர் செழிப்பெல்லாங் கண்டு
வியப்புற்றுச் செய்திடுவார் வஞ்சம் - அயலானா
நம்நிலைமை மாற்றுவது நன்னெஞ்சே தேம்பாதே
கம்மென் றிருத்தல் கலை!

கலையே உயிரென்பான் கன்னித் தமிழை
விலைகொண்டு விற்றுப் பிழைப்பான் - அலைநெஞ்சே
பொன்னாடைக் கேங்கிப் புலைதீய செய்யுமப்
பன்னாடை யையுள் தவிர்

தவிர்ப்பவரை நம்செய்கை கண்டு மனத்தால்
தவிப்பவரை வாழ்வில் தரிசி - அவர்சொல்வார்
நம்வழிப் பாட்டையது நல்வழி என்பதை
உம்மெனும் வார்த்தை உகுத்து

உகுக்கின்ற கண்ணீரே உம்மத்தர் தம்மைச்
செகுக்கின்ற வாளாம் தெருள்க - பகுக்கின்ற
காக்கைக்கும் உண்டாம் பகுத்தறிவு இவ்வோட்டை
யாக்கைக்கு முண்டோ அது?

அதுசெய்க இன்னும் இதுசெய்க வென்பார்
மெதுவாக கால்வாரிச் செல்வார் - பொதுநலத்தை
எண்ணுதல் முக்கியம் ஏ!மனமே அத்துடன்
உண்மையும் சேர்த்தே உணர்

உணரும்போ தெல்லாம் உயிர்கொய்யு மாகில்
திணறுத லாமே இயற்கை - அணங்கிற்கும்
நன்மன முண்டாங்கொல் நாயா மிம்மூடர்க்குக்
கன்மனம் தானே களிப்பு

களிப்பார் விழிகள் கலங்கிடக் கண்டு
விளிப்பார் நகைத்திடுவார் வீணாய் - புளித்திருக்கும்
பாலை எறிதல்போல் பாவியரை நாமெறிந்தால்
நாலும் நடக்கும் நலம்

நலமென்று கண்டும் நலமில்லை யாமால்
பலங்கொள்ள லாமோ பகர்வாய் - முலைகெட்ட
மாதர்தம் வேட்கையும் மாய்க்கும்நற் பண்பென்னும்
ஓதலே நன்றாம் உணர்

உணர்ந்துவிட்டால் நெஞ்சே உதரலினி இல்லை
புணர்ந்து பிரிகின்ற பொய்யர் - வணங்கிடுவார்
வாலாட்டு வார்பின்னால் வாரிமண் தூற்றுவார்
நூலாட்டம் நீயறுப்பாய் நட்பு!

அறுப்பாய்நன் னெஞ்சே அடுப்பாய் பகையை
ஒறுத்தல்நம் வேலை ஒழிக - பொறுத்தலும்
முட்டாள் தனமாகும் முந்தி யுணர்வாயே
பட்டால் தெரியும் வலி

வலிமை வளர்ப்பாய் வளைநெஞ்சே உன்னை
எலியாய் நினைத்திங்கே ஏசும் - வலியில்லாப்
புல்லரை உன்செயலால் பூழ்தி யெனவாக்கு
கல்வியால் தீர்ப்பாய் களை

களைப்பால் அயராதே காண்நெஞ்சே தீதை
உளைப்பாய் உயர்தொண்டால் ஒன்றி - விளைசெய்கை
நற்றமிழே என்னும் நறும்பணியைக் கொள்ளப்
பெற்றிடுவாய் என்றும் சிறப்பு

சிறப்புடையான் நீநெஞ்சே சேராத நட்பால்
சிறப்பிழந்து நோயில் சிதையாய்! - பொறுப்புனக்
குண்டுபல வேலை உடனுண்டே உன்பகைவர்
உண்டு கொழுத்திருப்பார் உற்று!

உற்றறிக நன்னெஞ்சே ஒல்லார்தம் தீமனத்தை
முற்றொழித்த லாகா முனையழியும் - நற்றுணையாய்ப்
பொற்றமிழைக் கொள்வாய் புதுத்தெம்பை நீயடைவாய்
கற்றுயர வேண்டும் கனிந்து

கனிந்தபடி பேசுவார் காலம் நெருங்க
மனத்தில் அவிழ்ப்பார் விலங்கை - மனிதரிங்குப்
பொய்சூழ் உலகத்தைப் போகமென வாழ்கின்றார்
மெய்நீ உணர்ந்திட்டால் மேல்

மேலும் நிலையில்லை கீழூம் நிலையில்லை
காலுமிரண் டென்பாய் கவினெஞ்சே - பாலுள்
துளிநஞ்சும் கூடத் துயராக்கும் போதிங்
குளைதலோ நல்லோர் உளம்?

உளமே உனகோர் உபாயம் மொழிவேன்
களிப்பை உனதாய்க் கருது! - குளத்தினில்
கல்லை எறிந்தால் குழப்பந்தான் தேம்பாதே
எல்லாம் நடக்கும் இனிது

துன்பம் வருங்கால் நகுகவென் றையனும்
முன்ன முரைத்த தறிநெஞ்சே - இன்னமும்
தீயோர் செயலெண்ணித் தேம்பிக் கிடக்காமல்
மாயோன் பதத்தை வளை!

வளையப் பழகிக்கொள் மென்நெஞ்சே உன்னைத்
தளையிடும் தீயுணர்வைத் தீர்ப்பாய் - விளையாட்டே
யாவும் எனநினைத் தானந்தம் நீகொள்க
யாவும் அடங்கும் அணைந்து!

அணைந்தாலும் கங்கு கனன்றிருத்தல் காண்பாய்
இணையாரை என்றும் இருத்து - முனைநெஞ்சே
தண்ணீரும் தீயாய்ச் சுடுமுண்மை யோர்கவே
மண்ணில் இதுவே நிலை


நிலையாமை எல்லாம் நினைக்குமென் நெஞ்சே
கலையாமை தன்னைக் கருது! - மலைபோலத்
துன்பம் நெருங்கும் துணையாக நம்பிக்கை
இன்பம் கொடுக்கும் இதம்

தம்முள்ளத் தைநம்பும் தக்காரின் நற்பண்பு
இம்மியும் வீணாய் இரியாதே - எம்மனோர்
சொன்ன தெலாமோர்க தூயநன் னெஞ்சமே
நன்னயம் என்றும் நலம்

நலமதனை மட்டும் நினைப்பாய் மனமே
பலமது! கண்டு பழகு! - உலகமிதில்
இன்னாசெய் தாரை ஒருத்தர் அவர்நாண
நன்னயம் செய்தலைநீ நாடு

நாடும் நலமெல்லாம் நற்றமிழத் தொண்டென்றே
நாடுகநீ நன்னெஞ்சே நட்டாரைத் - தேடுக
தீயோர் செயன்மறந்து சேர்வாய் தமிழோடு
நீயோர் பிறவி நெருப்பு

நெருப்பென நின்றால் நெருங்குவோர் தாமாய்ச்
செருக்கழி வெய்திடுவார் செய்வாய்! - கருத்திலே
தூய்மை யுடனிருத்தல் தோன்றும் நெருப்பாகும்
வாய்மையே கங்கு! வளர்!

வளர்மரமே கல்லடிக்கு வாய்க்கும் அறிவாய்
தளராமல் செய்வாய் தமிழோ(டு)- உளைநெஞ்சே
நல்லார் பலரிருக்க நாளும் நடுங்காதே
ஒல்லார் வினையை யொழி

ஒழிக்க நினைப்பவருக் கோரத்தில் நின்று
வழிவிடக் கற்றால் வசந்தம் - பழிவந்தால்
விட்டான் எனும்பழி மேல்தான் பிறரைநீ
சுட்டாய் எனும்சொல் சுடும்!

சுடுசொல்லும் தீய்க்கும் கொடுஞ்செய்கை மாய்க்கும்
அடுப்பாரே தீமை அகத்து - விடுநெஞ்சே
நாளை நமக்குண்டு நற்பணிக ளென்றீசன்
தாளை நினைந்து தொடர்

தொடர்ந்தின்னல் செய்கின்ற தொல்லைகளை மாய்க்கப்
படர்ந்தின்னும் தொண்டைப் பழகு! - முடக்கிடுவான்
எல்லாத் திசையும் எதிர்க்க வியலாதே
வெல்வாய் வெகுண்டால் விரைந்து

விரைகநன் னெஞ்சே வியன்றமிழின் சீரை
உரக்கப் பணிசெய்க ஓர்ந்து - திரைகடல்
ஓசை யடங்குமோ ஓட்ட மொடுங்குமோ
ஆசை யடங்குமோ சொல்

சொல்லால் நலம்கொள்வாய் சொற்கள் இருக்கையிலே
இல்லை யொருகுறை என்நெஞ்சே - சொல்லே
பகையாக்கும் சொல்லை பகைமாய்க்கும்! சொல்லே
நகைசெய்யும் நம்மை நனைத்து

நனைத்தருள் செய்வான் நமையாளு மீசன்
எனைத்தொன்றும் துன்பமில் நெஞ்சே - பனையுச்சி
வாழும் புழுவுக்கும் வாழ்வளிக்கும் அவ்வீசன்
தாழ்சடை தன்னை யடை

அடையும் புகழை அழைக்கும் மதிப்பை
உடைமையைக் காண்பார் உறுத்தத் - தடைசெய்வார்
ஏதும் நமதல்ல எல்லாமே தெய்வத்தின்
தூதென் றுணர்திடுதல் தோது

தோதாய்ப் பல்லன்பர் தோற்றித் துணைசெய்ய
தீதாய் எதையும் நினையாதே - ஆதாயம்
கொண்டலையும் தீயர் குறையுள்ளங் கண்டுணர்வாய்
கொண்டலென நற்பா குவி

குவிந்தொரு மோனத்தில் குந்தப் பழகு
தவிப்படங்கிக் காண்பாய் தவத்தை - அவனியில்
சித்தம் அடக்கச் சிவனைநாம் கண்டிடலாம்
பித்தும் அவன்செய்யும் பீடு

பீடுறுக நன்னெஞ்சே பித்தனவன் றாள்போற்றி
வீடுறுத லொன்றே வினையாகும் - கேடுடைய
நற்றமிழைக் காக்கும் நயஞ்செய்க இவ்வையம்
பொற்றேரில் வைக்கும் பொதித்து.

பொதிந்து கிடக்கின்ற போதந்தான் மோனம்
அதிராமல் அஃதை அறிவாய் - பொதுவாக
ஆண்மை எனமோன ஆழத்தைச் சொல்லிடுவர்
கேண்மை அதனுறவு கேள்