பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

26 Mar 2016

சிந்துப் பாடல்கள் - ஓர் அறிமுகம் - பாடம் : 1




பாடம் : 1
**********
நாட்டுப்புற மக்களின் உரிமைச் சொத்தாகிய நாட்டுப்புறப் பாடல் வகையைச் சேர்ந்தவை"சிந்துப் பாடல்கள் ". 
யாப்பியல் நூல்களில் கூறப்பட்ட பாவகைகளின் இலக்கணக் கட்டுக் கோப்புகளில் அடங்காமல், தங்கள் மனத்தில் எழுந்த உணர்வுகளின் வெளிப்பாடாக, வடிகாலாகப் பாமர மக்கள் இப்பாடல்களைப் பாடிவந்தனர்.
இலக்கியத்திற்கே இலக்கணம் என்கின்ற தொல்காப்பியரின் பண்பு இப்பா வகைகளுக்குப் பொருந்தும். ஏனெனில் இவற்றை யாப்பியல் கூறுகளான தேமா, புளிமா போன்றவற்றால் அடக்க முடியாது. அவற்றில் இவை அடங்காது. பண், பண்ணத்தி, தோல், பாட்டு போன்ற சொற்களால் தொல்காப்பியர் இவற்றைப் பொதுவாக அடக்கினாரேயன்றி அவற்றிற்கு இலக்கணம் வகுத்தாரில்லை. அவை நாட்டுப்புறப் பாமரர்களின் உணர்வில் கலந்த உரிமை முழக்கங்கள்.
தங்கள் வாழ்வில் நிகழ்ந்த பிறப்பு, இறப்பு, திருமணம், பூப்புனித நீராட்டு, கோயில் திருவிழாக்கள், உழவுத் தொழிலில் ஈடுபடும் போது, நெடுந்தொலைவு நடைபயணத்தின் போது அம்மக்கள் இந்தப் பாடல்களைப் பாடினர். சந்தத்துடன் அவை இசைத்துப் பாடக் கூடியவை என்பதால் "இசைத்தமிழ் " வகையில் அவற்றை அடக்கலாம்.


பெயர் காரணம் :
சந்தம் சிந்தும் தன்மையானும், சிந்தடிகளான முச்சீரடிகள் நிறைந்ததானும் இவை "சிந்துப் பாடல்கள் " எனப்பட்டன.
முருகனுக்குக் காவடி எடுக்கும் போது இரண்டு பக்கங்களில் தொங்கும் பெரிய பாத்திரங்களில் பாலை எடுத்துச் செல்வர். அவ்விதம் ஆடிப்பாடிச் செல்லும் போது அந்தப் பால் அவர்கள் மேலும் மற்றவர்களின் மீதும் "சிந்தும் ". அதாவது, மக்களின் மருளாகவும், முருகனின் அருளாகவும் உருவகமான பால், சிந்தி நம்மீது படும்போது, முருகனின் அருள் நமக்குக் கிடைக்கிறது. இந்தக் காரணம் பற்றியும் காவடிச் 'சிந்து 'ப் பாடல்கள் அப்பெயர் பெற்றிருக்கலாம்.

இலக்கிய வடிவம்.:
சிந்துப் பாடல்கள் மக்கள் வாழ்வில் ஒன்றிக் கலந்திருந்த நடைமுறையில்., சித்தர்கள் அவற்றைத் தங்கள் பாடல்களில் வாழ்வியலை, சமயத்தின் கோட்பாடுகளை விளக்கப் பயன்படுத்திக் கொண்டனர். வாலைச் சித்தரின் "வாலைக்கும்மி. பாம்பாட்டிச் சித்தரின்பாடல்கள், கிளிக்கண்ணிகள் போன்றவை சான்றுகளாகும். 
அதன்பின் அவை மிக உச்சத்தில் உயரக் காரணமானவர் அண்ணாமலை ரெட்டியார் ஆவார். அவரும் காவடிச் சிந்துகளையே பெருமளவில் பாடினார். அதில் தனிச்சிறப்பு என்னவென்றால், அவற்றை அவர் அப்போதைக்கப்போதே மெட்டுக்கட்டிச் சந்தத்துடன் பாடினார் என்பது வரலாறு. அவற்றைப் பின்வந்தோர் இலக்கியமாகத் தொகுத்தனர். சிந்துப் பாடல்களின் முன்னோடி என்றால் அண்ணாமலை ரெட்டியாரே..(அடிப்படை வேர்கள் நாட்டுப்புற மக்கள்)
பிற்காலத்தே வந்த மகாகவி பாரதியார் தன் பாடலில் ஏறத்தாழ அறுபது விழுக்காடு சிந்து வகைகளைப் பயன்படுத்தி, விடுதலை வேட்கையை மக்களிடையே கொண்டு சேர்க்க இந்தப் பாடல் வகைகளைப் பயன்படுத்திப் புகழ்பெற்றார். "சிந்துக்குத் தந்தை " என்று போற்றப்பட்டார். அண்ணாமலை ரெட்டியார் முன்னவர் எனினும் அவர் காவடிச் சிந்துகளையே அதிகம் பாடினார். ஆனால் பாரதி அனைத்து வகைகளையும் பாடியதுடன் பல புதிய வகைகளையும் அறிமுகப்படுத்தினார். பாஞ்சாலி சபதம் பெரும்பான்மை  சிந்துப் பாடல்களால் இயன்றது.

சிந்துப்பாடல்களின் வகைககள்.
இசைத்தமிழின் வடிவமான சிந்துப்பாடல்களில்.,

காவடிச் சிந்து, 
கும்மி, 
வளையற்சிந்து, 
நொண்டிச்சிந்து, 
ஆனந்தக்களிப்பு, 
இலாவணி, 
கிளிக்கண்ணிகள், 
நெஞ்சொடு கிளத்தல், 
வண்டிக்காரன் பாட்டு, 
ஏற்றப்பாட்டு, 
வழிநடைச் சிந்து, 
உருப்படி (இசைப்பாடல்) 


போன்றவை சிந்தின் வகைககளாகும்.

....தொடரும்....

1 comment:

Unknown said...


வணக்கம்! மகாகவி பாரதியார் சிந்துக்கு முன்னோடியார் அல்லர். அவர் எழுதிய பெரும்பாலன சிந்துவகைகளில் ஒன்றான நொண்டிச்சிந்துக்களே! இனி அருணாகிரியாருக்கும் சிந்துக்கும் தொடர்பே இல்லை. திருப்புகழ் பெரும்பாலும் 'வண்ணம்' சிந்து வேறு வண்ணம் வேறு. கந்தரலங்காரம் கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் ஆனது. 'பாஞ்சாலிசபதம்' எண்சீர் விருத்தங்கள் உட்பட பல்வகை யாப்புக்களால் ஆனது. ரெட்டியாரின் 23 சிந்துக்களும் தனித்தனி சந்த அமைப்புக்களைக் கொண்டவை. தகவலுக்காக. தர்க்கத்திற்காக அல்ல. நன்றி. வணக்கம்