பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

10 Mar 2016

எதற்கு எழுதுகிறேன்?
கைக்காசைச் செலவழித்துப் புகழைச் சேர்க்கும்
கவிஞர்கள் பல்லோரில் ஒருவ னல்லேன்
மொய்க்கின்ற வண்டாக விருதைத் தேடி
முனைப்போடு சுற்றுகின்ற சிறுமை கொள்ளேன்
பைக்குள்ளே பணத்தோடும் புகழ்ப்பாட் டோடும்
பலரிடத்தே அடிவருடும் பண்பைக் கொள்ளேன்
தைக்கின்ற சொல்வீசிப் பகைவர் கட்குச்
சாட்டையடி கொடுக்கின்ற பாவ லன்நான்!

விருதுக்கும் பதவிக்கும் பட்டத் திற்கும்
"விலைபோனால்" நானெதற்கிங் கெழுத வேண்டும்?
எருமைகளாய் நாலைந்து தடியர் தம்மை
எனக்காக அடியாளாய் வைத்தி ருந்தால்
பெருமைகளும் மாலைமரி யாதை யெல்லாம் 
பெற்றிடுதல் மிகவெளிதே..அதைநான் வேண்டேன்
கருத்துள்ள கவிதைகளால் குமுகா யத்தின் 
களைகளைதல் மட்டுந்தான் என்றன் வேலை!

சிறப்பாக நான்வாழ வேண்டு மாயின்
திரைத்துறையில் எப்போதோ நுழைந்தி ருப்பேன்
பிறகேன்நான் இலக்கணத்தைக் கற்க வேண்டும்.!
பிதற்றலொடு வேறெதுவும் எழுத லாமே.
முறையாகப் படித்திங்குப் பட்டம் பெற்று
முயல்வோர்கள் பலருக்கும் வாய்க்க வில்லை
சிறப்பான செந்தமிழின் "மரபைக் காக்கும் "
சிலபேருள் ஒருவன்நான் அதுவே போதும்.!

பாவலர் .மா.வரதராசன் 

No comments: