பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

26 Mar 2016

சிந்துப் பாடுக - 1 (ஆனந்தக் களிப்பு)


★அன்பு நண்பர்களே! கவிஞர்களே! 
புதிய பகுதியின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.:
பாட்டியற்றுக பயிற்சி அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்பெற்றது. வெற்றிபெற உதவிய அனைவருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
"#சிந்துப்பாடுக" இந்தப் பயிற்சியிலும் தவறாமல் கலந்து கொண்டு, இசைத்தமிழ் வடிவங்களைக் கற்க அன்புடன் அழைக்கிறேன். உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.
★இந்தப் பயிற்சிப் பகுதி புதிதாகப் பாப்புனைவோர் அஞ்சியொதுங்கா வண்ணம் எளிமையாகவும், பாப்புனைய தேவையான குறிப்புகளோடும் தொடரும். மேல் விவரம் வேண்டுவோர் முன்னோர் யாப்பியல் நூல்களைப் பார்க்கவும்.
சிந்துப் பாடல்களின் இலக்கணங்கள் முனைவர் இரா.திருமுகன் அவர்களின் "சிந்துப் பாவியல் " நூலை அடியொற்றியும், என் சொந்தப் பயிற்சியைக் கொண்டும் கூறப்படுகின்றன.

சிந்துப் பாடுக - 1
*******************
(ஆனந்தக் களிப்பு)
நாளுந்த மிழ்ப்படிப் பாயே★- வாழ்வில்
நன்மைகள் யாவும டைந்திடு வாயே★
ஆளும்நி லையினில் சேர்ப்போம்★ - நம்
அன்னைத்த மிழ்தனை ஒன்றாகிக் காப்போம்★!
பாவலர் மா.வரதராசன்
கருத்தூன்றுக :
மேற்கண்ட பாடல் வகை "ஆனந்தக் களிப்பு "ஆகும். 
மகாகவி பாரதியாரின் புகழ்பெற்ற கீர்த்தனைகளான
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்,
தீராத விளையாட்டுப் பிள்ளை,
சித்தர் பாடலான, 
நந்தவ னத்திலோர் ஆண்டி
போன்றவை இவ்வகைப் பாடல்களே. திரைப்பாடலான
கல்லிலே கலைவண்ணம் கண்டான், 
என்ற பாடலும் இவ்வகையே.
***
சிந்துப் பாடல்களை யாப்பிலக்கணத்தின்படி தேமா, புளிமா கொண்டு வகைப்படுத்த இயலாது. இசைப்பாடலான இவற்றைப் பாடிப் பார்த்து விளங்கிப் பின் எழுத வேண்டும்.
ஒவ்வொரு சீரிலும் மூன்று எழுத்துகள் (ஒற்று நீக்கி) உள்ளன.
(நா ளு த) (மி ப டி) (போ மே ★) 
3,8 ஆம்சீர்கள் இரண்டெழுத்துகள் இ.ருந்தாலும் மூன்றாவது எழுத்துக்குப் பதில் அந்த இடத்தில் நீண்டு இசைக்கும். நீண்டிசைக்கும் எழுத்து ★குறியிட்டுள்ளதைக் காண்க. (பாடலை எழுதும் போது குறியிடத் தேவையில்லை. புரிவதற்காகப் போட்டுள்ளேன்.)
நான்காவது சீர் சிறுகோடிட்டுத் தனிச் சொல்லாக வரும். பெரும்பாலும் அது ஓரசையாகவே வரும். (நம்) அல்லது (வாழ்வில்) போல தேமாச் சீர்களாக வரும்.
இருகுறில் இணைந்த சீரால் அடி தொடங்காது. அடிகளின் இடையிலும் அவ்வாறு வாராதிருத்தல் நலம். நெடில், நெடிலொற்று, குறிலொற்று இப்படியான சீர்களே வரும்.
பொது இலக்கணம் :
மேற்கண்ட பாடலின்படி...
* ஓரடிக்கு மூன்றெழுத்துச் சீர்கள் எட்டு வரவேண்டும்
* நாளுந்த என்பது முதல் வாயே என்பது வரை ஓரடி. 
ஆளும்நி என்பது முதல் காப்போம் என்பது வரை மற்றோரடி.
* இரண்டடிகளும் எதுகையால் இணைந்து (நாளும், ஆளும்)
* முதற்சீரும் ஐந்தாம் சீரும் மோனையால் இணைந்து (நா, ந) (ஆ,அ)
* அடிகளின் மூன்றாம் சீரும், எட்டாம் சீரும் இயைபு பெற்று (பாயே, வாயே)
(சேர்ப்போம், காப்போம்) ,
இந்த இலக்கணப்படி வருவது "ஆனந்தக் களிப்பு " ஆகும்.
★பாடிப் பார்த்து விளங்கிக் கொள்ள நம் "பைந்தமிழ்ச் சோலை" கட்செவிக் குழுவில் பலவகைச் சந்தத்தில் பாடிய என் பாடலைக் கேட்கவும். உங்களுக்கு எந்தச் சந்தம் பிடிக்கிறதோ அதைப் பழகிக் கொள்ளவும்.
நண்பர்களே! முதல் பயிற்சி என்பதால் நீண்ட விளக்கம் தேவைப்பட்டது. அடுத்த பயிற்சிகளில் இதில் பலவும் பயன்படும் என்பதால் சுருங்கிவரும்.
இவ்வகையான பாடல் ஒன்றை விரும்பிய பொருளமைய வரும் வெள்ளிக்கிழமைக்குள் இப்பதிவின் கருத்துப் பகுதியில் (Coment) மட்டும் பதியவும்.
ஒருவர் ஒரு பாடலை மட்டுமே பதியவும். மற்ற பாடல்களைச் செம்மைப்படுத்த நேரமொதுக்க உதவியாகஇருக்கும்.

No comments: