பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

26 Mar 2016

‪சிந்துப்பாடுக 1 இன் தொகுப்பு‬


அன்பு நண்பர்களே !
சோலைக் கவிஞர்களே! சிந்துப்பாடுக முதல் பயிற்சி செவ்வ னே முடிந்தது.
பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் பாக்களைப் படைத்தனர். புதிய யாப்பைப் பயில்கின்றஆர்வம் பலரிடத்தே இருந்ததைக் காண முடிந்தது. அனைவருக்கும் நன்றியும், வாழ்த்தும் உரித்தாகுக.
முதல் பயிற்சியின் தொகுப்பு, அப்பயிற்சியில் கலந்து கொண்ட கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. 
கொடுக்கப்பட்டுள்ள வரிசை எண் தரவரிசைக்குரியதன்று. கவிஞர்கள் கவிதைளை அனுப்பிய வரிசைக்குரியது.
அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்...
இந்தத் தொகுப்புப் பாடல்களைப் படிக்க வேண்டா. ★பாடிப் பார்க்கவும். அப்போது தான் சுவைக்கும்.
கவிஞர்களை வாழ்த்துங்கள்...உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


சிந்துப் பாடுக -1
(ஆனந்தக் களிப்பு)
1. கவிஞர் வள்ளிமுத்து
துள்ளித்தி ரிந்திடும் தம்பி..!-நீ
தும்பிபோல் நித்தம்நம் பள்ளிசெல் நம்பி..!
பள்ளிப்ப டிப்பினில் தேறி-வா
பார்போற்றும் வெற்றிப்ப டிக்கட்டில் ஏறி!

2. கவிஞர் சியாமளா ராஜசேகர்
கானக்கு யில்கூவக் கண்டேன் - என்
காதோரம் சிந்திசைத் தேனைநான் உண்டேன்!
வானமு கில்கூட்ட மாடும் - கீழ்
வந்துந்தன் பாட்டைக்க ளித்துக்கேட் டோடும்! 

3. கவிஞர் ரமேஷ் மாதவன்
கோவிந்தன் பேரினைப் பாடு - நல்ல
கோபியர் போலவே சேர்ந்திங்கே ஆடு!
நாவினில் அப்பேரை ஏற்று - அந்த
நாரணன் பேரினை எப்போதும் போற்று!

4. கவிஞர் அர.விவேகானந்தன்
பாதகம் செய்வோரைக் கண்டு - நீயும்
பாசத்தைச் சேர்த்திட்டால் நன்மையும் உண்டு!
மோதலை யன்புதான் நீக்கும் - உன்னில்
மோதிடும் துன்பத்தை முன்னின்று போக்கும்!

5. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
பள்ளிக்கு நாள்தோறும் செல்வோம் - சொன்ன
பாடத்தை எந்நாளும் சிந்தையில் வைப்போம் 
தெள்ளுத்த மிழ்தானே ஞானம் - தேர்ந்த
தேவர்கள் தன்கையில் வைத்தாளும் பாணம்! 

6. கவிஞர் பரமநாதன் கணேசு
பைந்தமிழ்ச் சோலையின் உள்ளே! - பலர்
பாடிடும் பாட்டுகள் நானுண்ணும் கள்ளே!
தீந்தமிழ் ஈந்திடும் இன்பம் – நெஞ்சைத்
தீண்டிடச் சாய்ந்திடும் தீராத துன்பம்.! 

7. கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்
ஐந்தாண்டு போனாலோர் தேர்தல் – நம்மை
ஆள்வோரை நாம்கண்டு சொல்லுமோர் தேர்தல்
நைந்திட்ட நாடும்செல் வாக்கு – பெற்று
நாளும்வ ளர்ந்திட போடுவோம் வாக்கு!

8. கவிஞர் வனராசன் பெரியகண்டர்
பேர்பெற்ற பைந்தமிழ்ச் சோலை-தன்னில்
பேரின்பம் தோன்றுதே நாம்நிற்கும் வேளை!
சீர்பெற்று ஊராள வேண்டும்-எங்கள்
சிந்தையில் செந்தமிழ்த் தேன்பாய வேண்டும்!

9. கவிஞர் அழகர் சண்முகம்
சாதிக்கொ டுமையைச் சாய்ப்போம்-கள்ளச்
சண்டாளர் செய்யுஞ்ச தீயினை மாய்ப்போம்
தீதில்வ ளர்வதைத் தீய்ப்போம்-நம்மில்
தீண்டாரெ னும்சொல்லைத் தேடியே ஓய்ப்போம்! 

10. கவிஞர் நிறோஸ் அரவிந்த்
முந்திடும் வல்வினை போகும் – கந்தன்
முன்னிற்க வாழ்வது செம்மையாய் ஆகும்
தந்தன தந்தன என்றே – ஆடும்
சங்கரன் மைந்தனைப் போற்றுவாய் இன்றே! 

11. கவிஞர் கைலாசநாதன் காளிதாசு
பாவில்சி றந்தது சிந்து- அதைப் 
பாடிக்க ளித்திட நீயிங்கு முந்து! 
நாவிலி னித்திடும் தேனே- என
நாளுந்த மிழ்க்கவி செய்திடு வேனே!

12. கவிஞர் நாகினி கருப்பசாமி
உள்ளமெல் லாமாடிப் பாடிப் - பொங்கும்
.. உன்னதம் என்னென்று கண்டேனே தேடி
கள்ளமில் லாநகை கொண்டு - என்றும் 
.. காவலா கும்வேராம் பிள்ளைநற் செண்டு!

13. கவிஞர் அஷ்பா அஷ்ரப் அலி
தெம்மாங்குப் பாட்டொன்று பாட- கண்ணே
தெம்பாக என்னோடு சேர்ந்தேநீ யாட
வம்பாகிப் போனாலும் போகும் - உனை
வம்பலர்க் காணாமல் நின்றாடு போதும் ! 

14. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
சிந்துப்பாப் பாடிடு வாயே --- வாழ்வில் 
சிந்தனைச் சத்தியம் செப்பிடு வாயே . 
வந்திடும் பாடல்கள் நன்றாம் --- என்றும் 
வாழ்விற்குத் தாய்மொழி என்றென்று மொன்றாம்! 

15. கவிஞர் வீ.சீராளன்
காதல்கொ டுத்ததவ ளாலே - நாளும்
கற்பனை சேர்ந்திடுங் கண்களி னாலே 
வேதப்பொ றையவள் முன்னால் - என் 
வேகும்ம னத்துயர் ஆறுதே தன்னால்! 

16. கவிஞர் தாமோதரன் கபாலி
முத்தாக முன்வந்த பெண்ணே சிறு 
சித்தாக உன்யிடை யாடுதே கண்ணே 
வத்தாத தீந்தமிழ் வீசும் - அது
சொத்தாகி முத்தத்தை நாளெல்லாம் பேசும்.!

17. கவிஞர் இரா.கி. இராஜேந்திரன்
நல்லது செய்திடு வாயே வாழ்வில்
அல்லவை நீக்கி வாழ்ந்திடு வாயே
சொல்லினில் வாய்மையைக் கொள்வோம் - என்றும்
செல்லுமிட மெங்கும் நற்புகழ் கொள்வோம்!

18. கவிஞர் பொன்.பசுபதி
செந்தமி ழேநறுந் தேனே - உயர்
செம்மொழி யாமுனை யேபணி வேனே
என்னுயி ரென்றும்நீ தானே - உன்னை 
ஏத்தியே பாடிநா னின்புறு வேனே.!

19. கவிஞர் தன்ராஜ் பாப்பண்ணன்
நேரத்தைக் கைப்பிடிப் பாயே-நீச்சம்
நெட்டிக்க ளைந்ததை வீசிடு வாயே
தேர்ந்ததோர் நல்வினை செய்வோம்- தேர்வில்
திண்ணிய வெற்றித னைப்பற்றிக் கொய்வோம்! 

20. கவிஞர் பாலமுருன்
சாதிச்சண் டைகளில் நாளும்- தேகம்
சாக்காடு சேர்வதால் இல்லையே லாபம்
காதலில் பிஞ்சுகள் சாகும் - நாம்
கைகட்டி வேடிக்கை காண்பதா நாளும்?

21. கவிஞர் விவேக் பாரதி
என்னவள் மேனியைப் பற்றி - அவள்
...ஏந்துமு தட்டினி் லென்னித ழொற்றிக் ! 
கன்னலு தட்டினில் மேலே - புதுக் 
...காவிய மாக்கினேன் பாவலன் போலே! 

22. கவிஞர் கேக்கிரவ
பாழ்கிணற் றுள்ளிடை போலே -நான்
பக்கத்தில் யாரையும் கண்டறி யேனே!
ஆழ்ந்திட்ட காரிருள் தானே - என்
ஆவியைப் பாதியில் போக்கிவிட் டானே.!

23. கவிஞர் கட்டிக்குளம் ஓ.சுந்தரமூர்த்தி
வாடாத தேனறுஞ் சோலை-இங்கு
வந்ததால் இன்பமே இன்பநற் காலை
ஈடாக ஏதுண்டு பாரில் -அன்னை
இன்பத்த மிழ்தன்னை ஏற்றிடு தேரில்.!

24. கவிஞர் குருநாதன் ரமணி
வண்டாடும் சோலைந டந்தேன் - அங்கே
. வண்ணம லர்யாவும் பேசிடக் கண்டேன்
கொண்டாடிக் கொண்டாடிச் சென்றேன் - உள்ளம்
. கூத்தாடக் கூத்தாட வாழ்வில்நி றைந்தேன்! 

25. கவிஞர் ஹபீலா நிசாம்
செம்மொழி என்கின்ற போதே - தமிழ்
செப்பிடச் சொல்லுது பற்றதன் மேலே
இம்மொழி நீங்கிடப் பாரே -இனி
இன்பமி ழந்திடும் என்றுரைப் பீரே.!

26. கவிஞர் ரவீந்திரன் காளிமுத்து
ஏருழும் சம்சாரி பாடு -அவன்
ஏரிலே பட்டானே நொந்தந்த பாடு
பாருக்குந் தந்தானே சோறு - அந்தப்
பற்றையும் பாராட்டி நன்றியைக் கூறு.!

27. கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி
கந்தனை உள்ளத்துக் கொண்டேன் - அந்தக்
காந்தனைச் செந்தமிழ்ச் சொல்லுக்குள் கண்டேன்
எந்துணை என்றும வன்றான் - துயர்
ஏதேதும் என்னெதிர் வந்தெள்ளி நின்றால்...

28. கவிஞர் மாரிமுத்து
சுற்றத்தின் தூய்மையைக் கற்று நம்மைச்
சூழ்ந்துள்ள குப்பையைத் தூரத்த கற்று
நற்செய்தி சென்றுநீ சாற்று நம் 
நாட்டினை நோயின்றி நல்லதாய் மாற்று!
★★★★★

No comments: