பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

4 Mar 2016

பாட்டியற்றுக - 23


நண்பர்களே.! கவிஞர்களே.! அறிஞர் பலரும் பாராட்டும் 
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 23" இதோ.!
முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, இந்தப் பதிவைப் பகிர்ந்தும், மற்ற நண்பர்களுக்குத் தெரியப்படுத்தவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.! 
*** *** *** ***
பாட்டியற்றுக: 23
மருட்பா
(செவியறிவுறூஉ) 

*********
வாழுமிந் நாளில் வகையிலாச் செய்தழிந்து
தாழுந் தமிழ்மகனே தாயவளைக் காப்பாயே
யார்க்கும் பயனின்றி ஈற்றகம் சேர்வதா?
தூர்ப்பாய் தமிழ்ப்பகையைத் தூய பணியாற்றித்
தாழும் வகையில் தமிழைச்
சூழும் இருட்டைத் துடைத்தெறி வாயே! 

* பாவலர் மா. வரதராசன்*
கருத்தூன்றுக.
இப்பாடல், தமிழ் மரபிலுள்ள ஐவகைப் பாக்களில் "மருட்பா " எனப்படும்.
வெண்பா அடிகளும், ஆசிரியப் பா அடிகளும் கலந்து, மருட்டுவதால் (மயக்கந் தருவதால்) "மருட்பா " எனப்பெயர்.
இது வெண்பா அடிகளும், அகவலடிகளும் சமமாக வந்தால்
 "சமநிலை மருட்பா " எனவும்,
சமமின்றி வந்தால் "வியனிலை மருட்பா " என்றும் அழைக்கப்பெறும்.
மருட்பா நான்கு வகைப்படும்.
அவை,
வாயுறை வாழ்த்து, புறநிலை வாழ்த்து, செவியறிவுறூஉ, கைக்கிளை
(இவற்றின் விளக்கங்களைத் தனியே காணலாம்.)
சான்று பாடல் வியனிலையாய் வந்த "செவியறிவுறூஉ மருட்பா" ஆகும்.
அறவழியைக் காட்டி, நன்மையைச் செய்ய அறிவுறுத்துதல் "செவியறிவுறூஉ " எனப்படும்.
பொது இலக்கணம்.
*முன் அடிகள் வெண்பாவாகவும் (நாற்சீர்)
* பின்னடிகள் ஆசிரியப் பா ஆகவும், (நேரிசையாசிரியப் பா, நிலைமண்டில ஆசிரியப் பா)
* சமமற்ற அடி எண்ணிக்கையைக் கொண்டு, 
* இரண்டு அடிகளுக்கு ஒரு எதுகையும், 
* முதல், மூன்றாம் சீர்களில் மோனையும்,(பொழிப்பு மோனை) 
* அறநெறியைக் காட்டி நன்மையைச் செய்ய வலியுறுத்தும் கருவைக் கொண்டும்,
* முதலில் வெண்டளையால் தொடங்குவதால் வெண்பா இலக்கணமும், ஈற்றில் ஆசிரியப்பாவால் முடிவதால் அதற்குரிய இலக்கணங்களும் பெற்று,
* ஈற்றயலடி முச்சீராய், ஏனைய அடிகள் நாற்சீராய்,
* அகவலடிகள் இரண்டை மட்டும் பெற்று,
* ஈற்றுச் சீர் ஏகாரத்தில் முடிவதும்
வியனிலையான் வந்த "செவியறிவுறூஉ மருட்பா " எனப்படும்.
அன்பர்களே.! மேலும் ஐயங்கள் ஏற்படின் கேட்கலாம். (9840457176)
இவ்வாறான மருட்பா ஒன்றை ஆறடிகளில் (வெண்பா அடிகள் நான்கு, அகவலடிகள் இரண்டு) விரும்பிய கருத்தமைய வரும் வியாழக்கிழமைக்குள் இப்பதிவின் கருத்துப் பகுதியில் Coment மட்டும் எழுதி அனுப்புங்கள்.
அன்பு கூர்ந்து ஒருவர் ஒரு பாடலை மட்டும் அனுப்பவும். மற்ற பாடல்களைச் செம்மைப்படுத்த நேரம் ஒதுக்க உதவியாக இருக்கும்.
★★★

No comments: