பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

26 Mar 2016

சிந்துப் பாடல்கள் - ஓர் அறிமுகம். பாடம் - 2பாடம் - 2
**********
சிந்து - இலக்கணம்
பாமர மக்களின் வாழ்வியலுடன் இரண்டறக் கலந்த சிந்துப் பாடல்கள் அவர்தம் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்ததால், அவற்றில் இலக்கியச் சொற்கள் அதிகமின்றி வழக்குச் சொற்களே அதிகமிருந்தன. கொச்சைச் சொற்களும் கலந்திருந்தன...ஆனால் அவை எதுகை, மோனை, இயைபு நயம் நோக்கி ஆளப்பெற்றன. 
தெரிசனம் (தரிசனம்) , தெசரதன் (தசரதன்) போன்று மோனைக்கும், எதுகைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பெற்றன.
இவ்வாறான பாடல்கள் வாய்வழியாக, செவி வழியாகவே இருந்தன. அவற்றிற்கென இலக்கணம் வகுக்கப்படாததால், பின்வந்த பாட்டியல் நூலோர் ஏதும் வகுத்தாரில்லை. 
அ.கி.பரந்தாமனார், புலவர் குழந்தை போன்றோர் சிந்துப் பாடல்களுக்கு அவை வழங்கப்பட்ட முறைமையினான் வகுத்த இலக்கணமும் சரியான முறையில் அமையவில்லை. பல முரணான விதிகளும் வகுத்தனர். (சான்று : கும்மிச் சிந்துக்கு வெண்டளை வேண்டும் என்றது)

சிந்துப் பாவியல் :
20ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்து, அண்மையில் மறைந்த புதுவை இரா.திருமுருகன் அவர்களே சிந்துப் பாடல்களை இசை வகையில் ஆய்ந்து அவற்றிற்கு மிகத் தெளிவான இலக்கணமும் வகுத்தார். அது அவருடைய முனைவர் பட்ட ஆய்வேடாக அமைந்தது. அந்த இலக்கண நூலே "சிந்துப் பாவியல் " ஆகும்.
தெளிந்த முறையில் வகுக்கப்பெற்ற சிந்துப் பாவியலை அடியொற்றியே நாமும் சிந்துப் பாடல் பயிற்சியைக் கற்கவுள்ளோம். 
அதில் கூறப்பெற்ற வகையில் விளக்கினால் கடினமாக இருக்கும் என்பதால் நான் என் அனுபவப் பாடங்களின் நுட்பங்களையும் இணைத்துத் தரவுள்ளேன்.
‪#‎குறிப்பு‬ :
பைந்தமிழ்ச் சோலையில் வரவிருக்கும் "#சிந்துப்பாடுக " பயிற்சியில் கொடுக்கப்பெறும் இலக்கண நெறிகள் தெளிந்த முறையில், எளிமையாகக் கற்கும்படி அமையும். அவற்றிற்கான வேறுபாடு விவாதங்களை முனைவர் இரா.தி,யின் "சிந்துப் பாவியல் " வழிநின்று தொடர முனைந்தால் அவர்களுக்கு விடையளிக்கப்படும். மற்ற நூலாசிரியர்களின் வழிநின்று விவாதிக்க வேண்டா. அவை தள்ளப்படும்.

..,தொடரும் ..,.

No comments: