பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

12 May 2016

‪‎சிந்துபாடுக‬- 7 -காவடிச் சிந்து


அன்பு நண்பர்களே! கவிஞர்களே!
 புதிய பகுதியின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.:
"#சிந்துபாடுக" இந்தப் பயிற்சியிலும் தவறாமல் கலந்து கொண்டு, இசைத்தமிழ் வடிவங்களைக் கற்க அன்புடன் அழைக்கிறேன். உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.
★இந்தப் பயிற்சிப் பகுதி புதிதாகப் பாப்புனைவோர் அஞ்சியொதுங்கா வண்ணம் எளிமையாகவும், பாப்புனைய தேவையான குறிப்புகளோடும் தொடரும். 
சிந்துப் பாடல்களின் இலக்கணங்கள் முனைவர் இரா.திருமுகன் அவர்களின் "சிந்துப் பாவியல் " நூலை அடியொற்றியும், என் சொந்தப் பயிற்சியைக் கொண்டும் கூறப்படுகின்றன.

சிந்து பாடுக - 7
******************
(காவடிச் சிந்து) 1 
தீமைகளைக் கண்ணிரண்டும் காட்★டும்★ - பல
தீங்குகளைச் செய்துநமை வாட்★டும்★ - பிணம்
தின்னவரும் குள்ளநரி மின்னுகிற கண்கள்தமைச்
சே★ரும்★ - அதைப்  பா★ரும்★!

பூமணத்தைக் கொண்டுநாளும் வாழ்ந்★து★ - தமிழ்ப்
பொன்மனத்து நல்லவரைச் சார்ந்★து★ - துயர்
போக்கிடுவோம் நல்லறிவைத் தேக்கிடுவோம் பாரதியைப்
போன்★று★ - அவன் சான்★று★!
பாவலர் மா.வரதராசன்
கருத்தூன்றுக :
மேற்கண்ட பாடல் வகை "காவடிச் சிந்து"ஆகும். காவடிச் சிந்தில் பல வகைகள் உள்ளன. இது நம் கணக்கில் முதல் வகையாகக் கொள்வோம். (உங்கள் தனிப்பாடல்களில் எண் போட வேண்டியதில்லை. காவடிச் சிந்து என்று மட்டும் போட வேண்டும்.)
அண்ணாமலை ரெட்டியாரின்,
"முத்தமிழ்சேர் வித்வசனக் கூட்டம்... என்ற பாடல் இவ்வகையே.
கிராமியக் கூத்துகளில் காவடிச் சிந்து வகைகள் பெருமளவு பாடப்பெறும்.
***
சிந்துப் பாடல்களைப் பாடிப் பார்த்துச் சந்தம் விளங்கிப் பின் எழுத வேண்டும்.
மேற்கண்ட பாடலில், 15 சீர்களும்,
ஒவ்வொரு சீரிலும் நான்கு எழுத்துகளும் (ஒற்று நீக்கி) உள்ளன.(தீ மை க ளை, க ணி ர டு, தீ கு க ளை, செ து ந மை) 
3,7,13,15ஆம்சீர்கள் ஈரெழுத்தே இருந்தாலும் (கா டு★★) (வா டு★★) (சே ரு★★)(பா ரு★★)அந்த எழுத்துக்குப் பதில் அந்த இடத்தில் நீண்டு இசைக்கும் (நீட்டிப் பாட வேண்டும்) . நீண்டிசைக்கும் எழுத்து ★குறியிட்டுள்ளதைக் காண்க. (பாடலை எழுதும் போது குறியிடத் தேவையில்லை. புரிவதற்காகப் போட்டுள்ளேன்.)
அந்தச் சீர்கள் இயைபாகவும் வரவேண்டும். (காட்டும்..வாட்டும்) (சேரும், பாரும்)
4,8,14 ஆம் சீர்கள் தனிச்சீர்களாக வரவேண்டும். அவை ஓரசைச் சீர்களாக அல்லது தேமாச் சீராக மட்டுமே வரவேண்டும்.
பொது இலக்கணம் :
மேற்கண்ட பாடலின்படி...
* ஓரடிக்கு நான்கெழுத்துச் சீர்கள் 15 வரவேண்டும்
* தீமைகளைக் ...என்பது முதல் பாரும்...என்பது வரை ஓரடி. 
பூமணத்தை... என்பது முதல், சான்று...என்பது வரை மற்றோரடி.
* இரண்டடிக்கும் எதுகை அமைய வேண்டும். (தீமை, பூம) 
* 1,5,9,13 ஆம் சீரகள் மோனையால் இணைந்து (தீ, தீ, தி, சே)
முடுகியல் : 
★ தின்னவரும் என்பதுமுதல், கண்கள்தமை என்பது வரை "தன்னனன "என முடுகியோடும்.
(இதற்கு ஒற்று இலக்கணம் பார்க்கத் தேவையில்லை) 
இந்த இலக்கணப்படி வருவது "காவடிச் சிந்து" ஆகும்.
★முடுகியல் அடிகளில் பொழிப்பு எதுகை அமைய வேண்டும்.. சான்று பாடலில் வந்துள்ளமையைக் காண்க. (தின்ன, மின்னு)
★பாடிப் பார்த்து விளங்கிக் கொள்ள நம் "பைந்தமிழ்ச் சோலை" கட்செவிக் குழுவில் இந்தச் சந்தத்தில் பாடிய என் பாடலைக் கேட்கவும். அதைப் பழகிக் கொள்ளவும். இதே சந்தத்தில் பாடினால் தான் காவடிச் சிந்து வகை விளங்கும். எழுதவரும்.
இவ்வகையான பாடல் ஒன்றை விரும்பிய பொருளமைய வரும் வெள்ளிக்கிழமைக்குள் இப்பதிவின் கருத்துப் பகுதியில் (Coment) மட்டும் பதியவும்.
ஒருவர் ஒரு பாடலை மட்டுமே பதியவும். மற்ற பாடல்களைச் செம்மைப்படுத்த நேரமொதுக்க உதவியாகஇருக்கும்.

பயிற்சிப் பாடலை எழுதும் முறை.:
தீமைகளைக் கண்ணிரண்டும் காட்டும் - பல
தீங்குகளைச் செய்துநமை வாட்டும் - பிணம்
தின்னவரும் குள்ளநரி 
மின்னுகிற கண்கள்தமைச்
சேரும் - அதைப் - பாரும்!

பூமணத்தைக் கொண்டுநாளும் வாழ்ந்து - தமிழ்ப்
பொன்மனத்து நல்லவரைச் சார்ந்து - துயர்
போக்கிடுவோம் நல்லறிவைத்
தேக்கிடுவோம் பாரதியைப்
போன்று - அவன் - சான்று!

No comments: