பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

12 May 2016

சிந்துபாடுக 7 இன் தொகுப்பு‬ - காவடிச் சிந்து


அன்பு நண்பர்களே !
சோலைக் கவிஞர்களே!
சிந்துப்பாடுக. - 7 இல் பல கவிஞர்கள் கலந்து கொண்டு தங்கள் பாக்களைப் படைத்தனர். அனைவருக்கும் நன்றியும், வாழ்த்தும் உரித்தாகுக.
பயிற்சியின் தொகுப்பு, அப்பயிற்சியில் கலந்து கொண்ட கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. 
கொடுக்கப்பட்டுள்ள வரிசை எண் தரவரிசைக்குரியதன்று. கவிஞர்கள் கவிதைளை அனுப்பிய வரிசைக்குரியது.
அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்...
இந்தத் தொகுப்புப் பாடல்களைப் படிக்க வேண்டா.‪#‎பாடிப்பார்க்கவும்‬. அப்போது தான் சுவைக்கும்.
கவிஞர்களை வாழ்த்துங்கள்...உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


சிந்து பாடுக - 7
(காவடிச் சிந்து)
1. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
தாய்மையது சொல்லிடுமே பாசம் -- அது 
தாங்குகிற நெஞ்சமதில் நேசம் -- உயர் 
தன்மையிலும் திண்மையிலும் 
உண்மையிலும் தொன்மையிலும் 
ஊட்டும் -- துயர் ஓட்டும் .

தூய்மையது செப்பிடுமே வாசம் -- பலத் 
துயரங்கள் போக்கிடுமே தேசம் -- வளர் 
துள்ளிவரும் வெள்ளிமயில் 
உள்ளமென அன்னையினை 
நாடு -- புகழ் பாடு!

2. கவிஞர் ரவீந்திரன் காளிமுத்து
பாவலரும் பயிற்சியினில் சொல்வார் - அதை
பாமரனும் படித்துவிட்டு வெல்வார் - தினம்
பாட்டெழுதி பாடியுமே 
போட்டிடுவார் கட்செவியில் 
பாடு- அதைத் தேடு

காவலவர் தமிழ்மரபை கற்க - அவர்
காலமெலாம் மேன்மையுடன் நிற்க - அவர்
நல்லத்தமிழ் சொல்லுமடி 
உள்ளப்படி மெல்லப்படி 
நன்று - அதில் நின்று! 

3. கவிஞர் மாரிமுத்து
பாடுபடும் பாமரனாய் என்றும் - நாம்
பாவப்பட்டு நின்றதில்லை இன்றும் - நாமும்
பக்குவமாய்ச் செய்வதினால் 
வெற்றியெலாம் வந்திடுமே
பாதம் - அது வேதம்..

ஓடுதுபார் நம்முடைய துன்பம் - தினம்
ஓடிவரும் நம்முடனே இன்பம் - இனி
ஓலமிடும் காலமதும் ஓடிடவே போட்டிடுவேன்
ஓட்டு - அதுவேட்டு! 

4. கவிஞர் நிறோஸ் அரவிந்த்
வானமழை போலவரும் அன்னை – அவள்
வண்டமிழிற் பாடவைத்தாள் என்னை – தினம்
வாடுமுளம் நாடியுனை, 
வாடியெனப் பாடிடவும்,
வல்லாய்! – துணை – நில்லாய்!

தேனமுதம் வாராகியுன் பாட்டு – அதில்
தேசொளிர உன்கருணை காட்டு – அருள் 
தேவியுனைப் பாடியெழிற்
சேவடியைச் சூடமனத்
திண்மை – உறும் - உண்மை! 

5. கவிஞர் வள்ளிமுத்து
பெண்ணினமாய் வெண்ணிலவும் மாறி-புவிப்
பேரழகின் அத்தனையும் ஏறி-உன்
பின்னழகும் முன்னழகும் 
கண்டுமனம் நொந்துதினம்
பேசும்-உயிர் கூசும்

கண்ணிரண்டும் மின்னல்விழி காட்டும்-உயிர்
கத்தரித்து மண்ணைவிட்டு ஓட் டும் - உன்
கன்னியிதழ் சின்னயிடை 
மென்மயிலின் அன்னநடை
காணும்-கண்ணும் கோணும்..!

6. கவிஞர் நாகினி கருப்பசாமி
ஊர்முழுக்க சாதியெனும் ஓலம்.. தீ
ஊடுருவி பாழ்படுத்தும் கோலம்.. இனி
ஊருவிட்ட கன்றதென ஆருடமும் மெய்ப்படவே
ஊறும் .. விதி .. தேறும்

ஆர்ப்பரிக்கும் உள்ளமதில் பங்கம் .. மதம்
ஆழமென்று நாட்டிடுமோர் அங்கம் .. உயிர்
அன்பெனுமோர் பண்புணர்ந்து மன்பதையில் சாதியற்று 
ஆடும்.. நலம்.. கூடும்! 

7. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
ஐம்புலனும் தீங்கினிலே தள்ளும்-குரு
அன்புமொழி கொண்டதனை வெல்லும் - நெறி
ஔவைமொழி ஓதிவரும் 
செவ்வைவழி ஊன்றிமனம்
ஆளும்- அதைக் கேளும்

நம்மொழியில் வந்திடுமே பாரு - வேத
நான்மறையாய் ஆனதிலே சேரு - அதை
நம்பிடவும் பெற்றிடவும் 
நம்மவர்க்கு வெற்றிதரும்
நாடு - அது வீடு! 

8. கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி
வந்தவினை நொந்துமிக ஓடும் - தமிழ்
வாழ்ந்திருக்கும் இந்தவுல கோடும் - கடல்
வந்திழுத்துப் போயிடினும் 
செந்தமிழச் சங்கதனை
வழங்கும் அது முழங்கும்

எந்தமிழென்(று) ஏத்துகிற வரதர் - பணி
ஏற்றவரும் பைந்தமிழ மரபர் - அவர்
ஏற்றிவைக்கும் தீபவொளி 
போற்றிவைக்கும் தீந்தமிழை
எங்கும் வளம் பொங்கும்! 

9. கவிஞர் கட்டிக்குளம் ஓ.சுந்தரமூர்த்தி
சந்தமுடன் செந்தமிழைப் பாடும்-நல்ல
சாந்தந்தரும் தேன்தமிழை நாடும் -வல்ல
சத்திதரும் புத்திதரும் 
அத்தனையும் சித்திதரும்
சாற்று-புகழ்- போற்று

பந்தமுடன் பைந்தமிழை நாடு-இங்கு
பாவலரை நாவலரைத் தேடு-தங்கு
பண்புபல கொண்டதமிழ் 
அன்பறத்து மாமயிலைப் 
பார்த்து - புகழ் - சார்த்து! 

10. கவிஞர் கலாம் ஷேக் அப்துல் காதர்
கற்பவரின் ஞானமதில் சூழ்ந்து- ஞானக்
கண்களிலும் தேடல்கள் சார்ந்து- ஒளிக்
கற்றைகளின் மின்னுதலைப் பெற்றுதரும்
கல்வியது காற்று - அதைப் போற்று!

அற்புதங்கள் கண்டுகொண்டு நாளும்- ஓத
அகமெங்கும் நிம்மதியே மீளும் - இதை
அண்ணலவர் சொல்லியதன் உண்மையென
அச்சமின்றி அறைவாய் - புகழ் பெறுவாய்! 

11. கவிஞர் அழகர் சண்முகம்
குன்றத்திலே கோயில்கொண்ட பாலா-கரம்
கூப்பிடவே வந்துநிற்கும் வேலா-எழில்
குஞ்சரியை மாலையிட்டுக் கொஞ்சிவிளை யாடுமனு 
கூலா-தவ சீலா

மன்றத்திலே நன்றளிக்கும் பாதா-உயர்
மாசிலாத சிந்துகவிப் பாதா-நடை
மாறிடாமல் சந்தமுடன் 
செந்தமிழைத் தந்தருள்வாய் 
மன்னா-எம் தென்னா! 

12. கவிஞர் சியாமளா ராஜசேகர்
நாவினிக்கப் பாடிடுவார் கண்ணா - திரு 
நாமம்கேட்டு வாராய்மணி வண்ணா - பல 
நல்லழகுக் கன்னியரும் 
நல்லறிவுக் கொண்டவுனை 
நாடும் - துணை - தேடும் !

மாவிலையும் தோரணமும் ஆடப் - புது 
வாசமுடன் பூமணமும் கூட - எழில் 
வங்கியத்தின் மெல்லிசையில் 
மங்கைமனம் சொக்கிவிடும் 
மாயம் - செயும் - காயம் !

13. கவிஞர் பாலமுருகன்
காளையர்க்கும் கன்னியர்க்கும் காதல்-அதைக்
காட்டியிங்கே செய்திடுவர் மோதல்-தினம்
கத்தியினால் வெட்டியுடல் 
நித்தம்வெட்டித் துடிப்பதைப்
களிக்கும் - மகிழ் வளிக்கும்!

சாதனைகள் செய்தாற்போல் நாளும்- வேசம்
சாய்ந்தாடும் மாலையுடன் தோளும்-பேசும்
சாதியெனும் கூட்டமதைச்
மேதினியில் சுத்தமாக்க 
தாரீர்! துணை-சேரீர்! 

14. கவிஞர் பரமநாதன் கணேசு
அன்னைமடி தந்தசுகம் கொண்டேன் – அவ(ள்) 
அள்ளிமடி வைத்தாளெனைக் கண்டேன் – தினம்
ஆடுகிறாள் நெஞ்சினிலே 
பாடுகிறாள் அன்புடனே
ஆத்தாள்- மனம்- பூத்தாள்

என்னையவள் இங்குவிட்டுப் போனாள் –உயிர்
என்மடியில் விட்டுத்தெய்வ மானாள் – அதை
எண்ணியெண்ணி இங்கிருப்பேன்
கண்சொரியத் தானிருப்பேன்
ஏங்கி – துயர் – தாங்கி! 

15. கவிஞர் விவேக் பாரதி
வெற்றிவடி வேலனடி தோறும் - தினம் 
வேகமுடன் பற்றியிளைப் பாறும் - அவன் 
வெண்குழையின் சத்தமெலாம் 
நன்முறையில் கீதமென 
மாறும் - சுவை ஊறும்

கொற்றவனின் கோலநகை அய்யோ - அதன் 
கொஞ்சுமெழில் முன்னிசையும் பொய்யோ - கரம் 
கொண்டாடிக் காவடியைச்
சென்னியதன் மேல்வைத்தே 
ஆடும் - புகழ் பாடும் ! 

16. கவிஞர் பொன்.பசுபதி
வாய்மையினைப் பொய்ம்மொழிகள் தாழ்த்தும்-பலர்
வாழ்க்கைதனைப் பள்ளமதில் வீழ்த்தும்- என்றும்
வண்மையொடு மெய்விளம்ப 
நன்மைதரும் திண்மைதரும்
வாழும்-இதைக் கேளும்.

தூய்மனத்துள் தூசுறாமல் காத்து-நன்றாய்த்
துய்த்திடுவோ மின்பமதைச் சேர்த்து - புகழ்
தூமழையாய்ப் பெய்திடுமே 
துன்பமெலாம் போய்விடுமே
தூர்த்து-உளம் பூத்து.

17. கவிஞர் சுந்தரராசன்
பாடிவரும் சோலைமலர்க் கூட்டம் - அது
பைந்தமிழின் பக்திவெறி ஆட்டம்! - அந்தப்
பாடலுக்கும் பாடலுக்குள்
தேடலுக்கும் ஊடிநிற்கும்
பண்ணே ! தமிழ்ப் பெண்ணே!

நாடிவந்த நல்லதமிழ்ச் சோதி - இது
நன்கமைந்த நண்பர்களின் வீதி! - இந்த
நானிலமும் பாநிலமும்
வானிலவும் சேர்ந்துசொலும்
நலமே! - எங்கள் பலமே!

18. கவிஞர் அஷ்பா அஷ்ரப் அலி
ஊமையராய் வாழ்ந்திடாது இங்கு - இனி
ஊளையிடு வோர்க்குஊது சங்கு - பெரும்
ஊழலிலே உண்டுநிதம் சூழநம்மை யாள்பவரால்
ஓலம் - ஏழ்மைக் - கோலம் !

சீமையிலே வாழ்வதுபோல் வாழ்ந்து - நமை
சீர்குலையச் செய்தவரைச் சூழ்ந்து - நாம்
தீர்த்திடுவோம் தேர்தலிலே ஊரிணைந்து ஒன்றுபடத்
தீரும் - வளமும் - சேரும் !

19. கவிஞர் அர.விவேகானந்தன்
வந்திடுவான் செந்தில்வடி வேலன் - அவன்
வரம்தந்தே வாழ்வளிக்கும் பாலன் - நமை
வாட்டிவரும் பொய்மையதை 
மீட்டியுமே காத்திடுவான்
வாழ்த்து சிரம் தாழ்த்து

தந்திடுவான் நற்புகழை நாளும் - நமை
தாக்கவரும் இன்னலது மாளும் - அவன்
தாள்தனையே பற்றிடுவோம்
நீள்புகழைப் பெற்றிடுவோம்
தழைத்து அகம் குழைத்து!

20. கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்
உங்கள்வீட்டுப் பிள்ளையென்று சொல்லி – இந்த
ஊர்ப்பணத்தைத் தங்கணக்கில் அள்ளி – அவர் 
உத்தமரை ஒத்தவராய் வித்தைகளை காட்டிடுவார் 
ஊரில் – இந்தப் – பாரில்

நங்கடமை ஒன்றுசொல்வேன் நானே – தேர்தல்
நாளினிலே வாக்களித்தல் தானே – நீயும்
நல்லவழி செல்பவரை வல்லவரை உள்ளபடி 
நாடு - நன்மை - தேடு

21. கவிஞர் வீ. சீராளன்
என்னுயிரின் ஆசையிலே ஊறும் - அவள் 
ஏக்கமதைக் கண்ணிரெண்டும் கூறும் - விதி 
எந்தவழி போகுதென்று 
நொந்துமனம் வேகுமுன்னே 
ஏற்பாள் கரம் கோர்ப்பாள் !

கன்னியிதழ் மென்னகையைத் தேடி - உயிர் 
கண்டகனா என்னிரவில் கோடி - தினம் 
காத்திருப்பைத் தந்தவளும் 
பூத்துமணம் வீசும்வரை 
காற்றும் எனைத் தூற்றும் !

22. கவிஞர் சேலம் பாலன்
ஆசைக்கொரு எல்லையில்லை இன்று – அதை
அடைந்திடவே முன்நிற்பான் நன்று – யாரும்
அச்செயலைத் தீமையென்றால் 
நச்செனவே கொண்டுமனம்
ஆள்வான் - பின் வீழ்வான் !

நாட்டுக்குள் கட்சிகளின் பேச்சு - இந்த
நாட்டைத்தான் ஆள்வதுவே மூச்சு – என்று
நாட்ட முடன் தந்திடுவார்
ஓட்டுக்காக வாக்குறுதி
நன்றே - பல - இன்றே !

23. கவிஞர் வனராசன் பெரியகண்டர்
கள்ளிருக்கும் சொல்லிருக்கும் கள்ளி - நீ
கற்றதெல்லாம் மன்மதனின் பள்ளி - உன்
கண்ணிரண்டில் மின்னிவரும் 
பொன்னலைகள் காட்டும்பல
காட்சி புவி சாட்சி!

உள்ளமதில் உன்னுருவம் சேர்த்தேன் - அதில்
ஊரழகும் பேரழகும் கோர்த்தேன் - என்னை
உண்ணவரும் உன்விழியால்
என்மனதில் தேனமுதை
ஊட்டு சுகம் கூட்டு!

24. கவிஞர் காவியக்கவி இனியா
கண்டபடி எம்மனதை ஆட்டும் - உயிர்
களிப்படையக் கற்பனைகள் தீட்டும் - புதுக்
காதலரும் நாணவிழி
மீதமிலா அன்புதனைக்
காட்டும் புதிர் கூட்டும் !

பெண்மனதில் பீடுநடை போடும் - அவள்
பிறந்தபயன் காதலினால் கூடும் - தன்
பெற்றவரும் போற்றிடவே
கற்றவரும் பாடிடவே
பேசும் - மணம் வீசும் !

25. கவிஞர் இராச.கிருட்டிணன்.
தாரமவள் தருகின்ற தொல்லை - தாங்கும்
சத்தியதும் ஈசனுக்கு மில்லை - அவன்
தன்னுடலில்ப் பாதியைத்தான்
தாயவற்கும் தானளித்த
தருமை கொண்டான் பெருமை.

ஆரணங்கின் நெஞ்சிலெழும் எண்ணம் - உடன்
அறிவானே ஈசனதன் வண்ணம் - அம்மை 
அவன்பாதி ஆனதனால்
அவ்விருவர் மற்றவரை
அறிவார்- அருள் புரிவார். 

26. கவிஞர் குருநாதன் ரமணி
தூளிமரப் பாச்சிதனை இட்டு - அதைத்
தூங்கவைக்கப் பாமுரலும் சிட்டு - அவள்
வாயசைவும் கண்மினுக்கும்
தாய்மையுறும் தண்ணமுதம்
பாசம் - கொள்ளும் - நேசம்.

வேளைதோறும் பாவையைச்சீ ராட்டி - அதில்
மேவுமன்பில் தேனமுதை யூட்டி - தினம்
தேடிவரும் தோழியுடன்
ஆடுவிளை யாட்டவளின்
பருவம் - இறை - உருவம்!


No comments: