பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

12 May 2016

சிந்துப்பாடுக 6 இன் தொகுப்பு‬ - வளையற்சிந்து


அன்பு நண்பர்களே !
சோலைக் கவிஞர்களே!
சிந்துப்பாடுக. - 6 இல் பல கவிஞர்கள் கலந்து கொண்டு தங்கள் பாக்களைப் படைத்தனர். அனைவருக்கும் நன்றியும், வாழ்த்தும் உரித்தாகுக.
பயிற்சியின் தொகுப்பு, அப்பயிற்சியில் கலந்து கொண்ட கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. 
கொடுக்கப்பட்டுள்ள வரிசை எண் தரவரிசைக்குரியதன்று. கவிஞர்கள் கவிதைளை அனுப்பிய வரிசைக்குரியது.
அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்...
இந்தத் தொகுப்புப் பாடல்களைப் படிக்க வேண்டா. ★பாடிப் பார்க்கவும். அப்போது தான் சுவைக்கும்.
கவிஞர்களை வாழ்த்துங்கள்...உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


சிந்து பாடுக - 6
(வளையற்சிந்து)
1. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
மதியெனவே கொண்டிடுவார்
மாமறையின் சொல்லை - அது
மன்றிலாடும் தில்லை - தவ
மாபொருளின் எல்லை- இதை
வணங்கிடுவார் உணர்ந்திடுவார்
மனமகிழும் எல்லை

விதிபுதிதைக் கண்டிடாதார்
வீணராகிப் போனார் - மதி
விண்ணமுதைக் காணார்- கொடும்
விதியினாலே பேணார் - பொருள்
விண்டவரும் காப்பவரும் 
விதிகடந்தோர் ஆனார்!

2. கவிஞர் மாரிமுத்து
காலையிலே கோலமிடும்
கன்னியிடம் வந்து - அவ
கட்டழகில் நொந்து - நான்
காணுமிடம் சந்து - கண் 
காட்டியதி லாகிவிட்டேன்
காற்றடைத்த பந்து..!

சாலையிலே நடக்கயிலே
சலங்கையொலி கேட்டு - நான்
சந்தமிடும் பாட்டு - அதில்
சங்கதியைப் போட்டு - தினம்
சரசமுடன் பேசிடுவோம்
சம்மதத்தைக் கேட்டு..!

3. கவிஞர் பொன்.பசுபதி
உயிர்களெலாம் வாழ்ந்திடவே
உரியவழி கண்டே-மிக
உழைக்கணும்தி ரண்டே-அது
உயர்வுடைய தொண்டே- வெற்றி
ஓடிநமை நாடிவரும்
உவகைமிகக் கொண்டே!

பயிர்வளரின் பார்வளரும்
பழமொழியைத் தேற்று-நல்ல
பணிபலவு(ம்) ஆற்று- மிகப்
பலப்பலதொண் டாற்று-நீயும்
பாங்குடனே வாழ்ந்திடவே
பயிர்த்தொழிலைப் போற்று!

4. கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்
குழலிலொரு கீதம்தந்த
கோபியரின் கண்ணன் – பலர்
கொஞ்சுமணி வண்ணன் - அவன்
கோகுலத்தின் மன்னன் – ஒரு
கோலமயில் திரௌபதியின்
குலத்தைக்காத்த அண்ணன்!

அழிவிருந்து காக்கவென்று
அன்றெடுத்தான் குன்றே – அவன்
அழகுமிக நன்றே – அவன்
ஆணிலிளங் கன்றே – கொடும்
அரக்கர்தமைக் குலங்கெடுத்து
அழிவிலிட்டான் அன்றே!

5. கவிஞர் பரமநாதன் கணேசு
அழிவில்லாத பொருளெதுவும்
அகிலத்திலே யில்லை – எனும்
அறிஞர்களின் சொல்லை – நீயும்
அறிந்திடுஎன் முல்லை – வளர்
அறிவுமிக வெழுந்தழிப்பாய்
அறிவிலிகள் தொல்லை

இழிவில்லாத வாழ்வுதனில்
இன்பம்கோடி யென்று – பலர்
எழுதிவைத்தார் அன்று – அதை 
ஏற்றிடுவாய் இன்று – உனை
எதிர்ப்பவர்கள் பகையுணர்வை
இவ்வுலகில் கொன்று.!

6. கவிஞர் கலாம் ஷேக் அப்துல் காதர்
இறையவனை மறந்தனரே
இம்மையினைப் பற்றி - அதன்
இச்சைகளில் சுற்றி - எழும்
ஈகைகளும் வற்றி - இதை
ஏற்றிடவே முயன்றிடாமல்
இயன்றிடுமா வெற்றி?

மறையருளும் வரிகளிலே
மாண்புகளைக் கண்டு - அதன்
மறைபொருளும் கொண்டு - நிதம்
மனமுவக்கும் தொண்டு - செயும்
மனத்தினிலே இறையவனும்
மறைவிடமாய் உண்டு!

7. கவிஞர் நிறோஸ் அரவிந்த்
வந்திடுவான் மஞ்ஞைதனில்
வள்ளிமண வாளன் - அவன்
வஞ்சனைக்குக் காலன் - உயர்
வாழ்க்கைதரும் வேலன் - நலம்
வழங்கியெனைக் காத்திடவே
வந்திடுமென் தோழன்!

கந்தனுமை பாலகனைக்
காணமனம் பாடும் - தினம்
கண்ணிரண்டும் தேடும் - மனக்
கவலையெலாம் ஓடும் - முகம்
கண்டதுமே நெஞ்சமது
களிப்பினிலே ஆடும்!

8. கவிஞர் நாகினி கருப்பசாமி
தட்டிப்பறித்துச் செல்பவரைத்
.. தட்டிக்கேட்க மறக்கும் .. விதி
தரணியிலே சுரக்கும்.. நிலை
தள்ளிடவே பறக்கும் .. சிலர்
தங்கியிங்கு இருப்பதனால் 
தன்னிறைவு பிறக்கும்!

எட்டிப்பிடிக்க வேண்டுமெனும்
... எழுச்சியொன்று கொண்டு.. உள்
எண்ணங்களின் செண்டு.. நடை
ஏற்றம்பெறக் கண்டு.. பல
எழுத்துகளால் விதியைமாற்றும்
எளியவர்கள் உண்டு! 

9. கவிஞர் அக்னிச்சிறகு முடியரசு
தவித்து ஏங்கும் உணவிலாதோர்
தவிக்கையிலே கண்டு- அவர்
தளர்வினிலே இரண்டு- கரம்
தந்திடுவாய் தொண்டு- மனம்
தளராமல் அரவணைப்பாய்
தாயுளமே கொண்டு.

தவிக்கின்ற. ஏழைகளின்
சத்தங்களைக் கேட்டு- மனம்
சளைக்காமல் ஓட்டு- வாங்க
சலிக்காமல் பாட்டு - பாடி
சர்க்கரையாய் பேசுவார்கள்
சத்தியங்கள் போட்டு.!

10. கவிஞர் ரவீந்திரன் காளிமுத்து
பாடிடுவேன் நன்றுடனே
பாக்களையும் இங்கு - நல்
பாட்டினையும் முங்கி - தமிழ்
பயின்றிடுவேன் நன்கு - நம்மை
பாட்டியற்ற யழைக்கின்ற
பாவலரின் பண்பு

கூடிடுவோம் சோலையிலே
கொடுத்திடவே பாட்டு - நல்
குரல்வளத்தைக் கேட்டு - நீ
கொஞ்சிப்பாடிக் காட்டு - நம்
குறல்வளமும் நெறிபடுமே
கூர்மையுடன் கேட்டு.!

11. கவிஞர் விவேக் பாரதி
இதழினிலே பூசுகிறாள் 
இனிமைத்தமிழ்ச் சாயம் - அதில் 
இருப்பதெலாம் நேயம் - எனை 
இயக்கிடுமம் மாயம் - அவள் 
இயற்றுகவி கேட்கையிலே 
இன்புறுமென் காயம் !

மதகளிறை ஒத்ததனம் 
மல்லிகைப்பூக் கண்கள் - அதில் 
மயங்கிடுவர் பெண்கள் - அவள் 
மழலைமொழி விண்கள் - சுடர் 
மலர்க்கொடியாய் இடையுடையாள் 
மகிழ்ந்திடுமேன் கண்கள் ! 

12. கவிஞர் அர.விவேகானந்தன்.
நலம்பலவே தந்திடுவாள்
நமைப்பெற்றாள் வீடு - அவள்
நன்மையதை நாடு - புகழ்
நலந்தனையே தேடு - நம்
நாடியெங்கும் கலந்திடுவாள்
நாவினிக்கப் பாடு..

நிலந்தனிலே நீடுவாழ
நினைந்தவளைத் தேற்று - தாய்
நிம்மதியின் ஊற்று - நீ
நெஞ்சமதில் சாற்று - நின்று
நிலைத்திடுமே வாழ்வதுவும்
நீள்புகழை ஏற்று..!

13. கவிஞர் வனராசன் பெரியகண்டர்
ஆடிடுவோம் பாடிடுவோம் 
அல்லலெலாம் வென்று- நல் 
ஆற்றலினால் நின்று- நாம்
அயர்ந்ததுவும் அன்று- நமை
ஆள்பவரும் வீழ்பவர்தான்
அறிந்திடுவாய் நன்று!

கூடிவரும் நாடிவரும்
கோடிசுகம் இங்கு- நம்
கூட்டுழைப்பே பங்கு- நமைக்
குட்டியவர் எங்கு- பெரும்
கோட்டைகளும் மீட்டிடுவோம்
கூடிமனம் பொங்கு!

14. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
முயற்சியினால் நலம்பலவும் 
முழுவதுமாய் உண்டு -- என 
முகங்கனியப் பண்டு -- நாம் 
முயன்றிடலாம் கொண்டு -- தினம் 
முயற்சியினைச் செய்திடவும் 
முகவரிகள் கண்டு !

தயக்கமின்றி மதிவழியே 
தகர்த்திடலாம் இன்று -- மனத் 
தளர்ச்சியின்றி வென்று -- நாம் 
தரத்தினிலே சென்று -- நலம் 
தங்கிடவும் வெற்றியினால் 
தரணியிலே நின்று!

15. கவிஞர் சியாமளா ராஜசேகர்
மாரியம்மன் கோயிலிலே 
மாவிளக்கை ஏற்று - மலர் 
மாலைகளும் சாற்று -அவள் 
மனங்குளிரப் போற்று - தினம் 
மஞ்சள்பூசித் திலகமிட்டால் 
வருதற்கஞ்சும் கூற்று !

கோரிக்கைகள் நிறைவேறிடக் 
குலவையிட்டுப் பாடு - நீ 
கும்மிக்கொட்டி ஆடு - மனக் 
குறைவிலக நாடு - தன் 
கோலவிழி திறந்தவளும் 
குலம்காப்பாள் நீடு !

16. கவிஞர் அழகர் சண்முகம்
கழனியிலே நாற்றுநட்டுக்
களையெடுக்கும் பெண்ணே-செங்
கதிர்விளைக்கும் கண்ணே-உயர்
கனிவுடைய விண்ணே-மணிக்
கரங்களிலே வளைகுலுங்கிக்
கவிக்குமிசைப் பண்ணே!

அழகொளிரும் பூமுகத்தை
ஆவலில்நான் பார்க்க-உன்
அங்கமெல்லாம் வேர்க்கத்-நல்
அன்பினாலே ஈர்க்க-மலர்
அம்புபாய்ந்து இருமனமும்
அணியமாலை கோக்க!

17. கவிஞர் கட்டிக்குளம் ஓ.சுந்தரமூர்த்தி
நதியினெழு சலங்கையென
நடந்துவரும் பெண்ணே -இனி
நலந்தருவாய்க் கண்ணே-எழில்
நடனமிடும் விண்ணே-என்
நலிவனைத்தும் போக்குதற்கு
நாடுவாயா பொண்ணே ?

நதிவருடும் கரையருகில்
நாணலது போல - நீ
நாடினாயோ சோல-நல்ல
நாவலரும் மீள -என்
நாடியெல்லாம் ஊத்துறியே
நாறுந்தமிழ்ப் பால !

18. கவிஞர் குருநாதன் ரமணி
சோலையிலே கால்பரவத்
தோரணமாய் ஆடும் - வான்
தோகைமரம் மூடும் - மலர்ச்
சுமையமர்ந்து தேடும் - அளி
தொட்டருந்தி யோடக்குயில்
தோழமையாய்ப் பாடும்!

மாலையிலே கோவிலிலே
மணியொலித்தே ஈர்க்கும் - கால்
வாசலிலே சேர்க்கும் - விழி
மறைகடவுள் பார்க்கும் - வாய்
வாலறிவன் புகழ்பாடி
மனச்சுமையைத் தீர்க்கும்! 

19. கவிஞர் சிதம்பரம் சு.மோகன்
பிறவியெனப் பிறவியெனப்
பிறந்துமென்ன பேறு? - துயர் 
பிரிந்திடுமோ கூறு? - இந்தப்
பிறப்பறுந்தா நீறு! - இனிப்
பிறந்திடாமல் இருந்திடவே 
பிறக்குமொரு ஆறு!

மறலியவன் வருவதற்குள்
மனக்கருத்தை மாற்று! – அவன்
மறந்திடாத கூற்று! – பொருள்
மயக்கமெலாம் ஆற்று! – சிவ
மந்திரத்தை மனமிருத்தி
மயங்கிடாமல் போற்று!!

20. கவிஞர் காவியக்கவி இனியா
மதியிழந்து போனதனால்
மானபங்கப் பட்டு - மனம்
மைந்ததிங்கு குட்டு - விதி
மாற்றியிதைக் கட்டு - நாம்
மகிழ்வுடனே வாழ்ந்திடவே
வாழ்த்திடுபூ இட்டு !

விதித்தபடி வாழ்வமைய
விம்முகின்ற திங்கு - தினம்
வேண்டுவதால் தங்கு - சுகம்
விலகிடுமோ பொங்கு - பல
வேதனைகள் தீர்ந்திடவே
விரைந்தளிப்பாய் பங்கு !

21. கவிஞர் தாமோதரன் கபாலி
நற்றமிழாம் மொழியிருக்க
நற்குரலால் பாடு- உயர்
நானிலத்தே கூடு - பெரும்
நான்மறையை நாடு - அரும்
நட்புறவே நல்லறிவாம்
நற்றாமரை வீடு!

சொற்றிறமாம் தமிழிருக்கு
சொற்சுவையாய்ப் பாடும் - வந்து
சொல்லிசையாய் ஆடும் - தந்து
சொல்லமுதை நாடும் - முந்து
சொல்லழகின் திருவருளே
சொல்லொளியைச் சூடும்!

22. கவிஞர் சுரேஷ் சீனிவாசன்
கருவிலுள்ள குழந்தையதும்
கடவுள்கண்ட துண்டு - அது
களித்திருக்கும் கண்டு - அவர்
கதைத்தகால முண்டு - பின்
கண்திறந்து பார்த்தபோது
காட்சிமாற்ற முண்டு !

உருவமது பலவிருந்தும்
உதவும்தெய்வம் ஒன்று - இது
உண்மைதானே என்று - நாம
உளமுணர்ந்தால் நன்று - இதை
உணர்ந்திடாமல் பகைவளர்த்தால்
உவப்பதுதான் என்று! 

23. கவிஞர் வீ.சீராளன்
மறைமனதைக் கொண்டுலகில் 
மகிழ்ச்சிதரும் மாது - மலர் 
மஞ்சரியின் தாது - பகை 
மனமழிக்கும் சாது - அவள் 
மறுத்துவிடில் மன்பதையும் 
மண்ணுலகில் ஏது !

இறைமனதைக் கொண்டுலகில் 
இதமளிக்கும் பெண்மை - அவள் 
இருக்குமிடம் வெண்மை - மன 
இடர்களையும் வண்மை - இதை 
இவ்வுலகும் அறியும்வரை 
ஏற்றமில்லை உண்மை !

24. கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி
.
தென்றலினை நெஞ்சுதனைச்
செந்தமிழை முகிலை - மான்
சேர்பணத்தைக் குயிலைக் - கிளி
செம்மலரைத் துகிலைத் - தூது
சேர்த்திடவே ஏவிடுவார்
செவ்வேலோன் மயிலை !

அன்னம்புகை யிலைவிறலி 
அரவஞ்சேர் வண்டு - காக்கை
அருநாரை நண்டு - நெல்
அரும்பலவாம் கொண்டு - பேர்
அழகுமாலை கொண்டுவாராய்
அகங்குளிரக் கண்டு .

25. கவிஞர் வள்ளிமுத்து
சந்தனத்துத் வாசத்துடன்
சலசலக்கும் நீரும்-அதில்
சாரைப்பாம்புக ளூரும்-நுணல்
சரிந்தகரையி லேறும்-உடல்
சாய்ந்தெழுந்தவ லவனொளியும்
சங்கதிதனைப் பாரும்.!

வந்தகொக்கு தவமிருக்கும்
வயல்வெளியி னூடும்-நீர்
வளைந்துநெளிந் தோடும்-மீன்
வரிந்துகட்டி ஆடும்-அதை
வக்கனையொடு கொத்தித்தூக்கிட
வான்குருவியும் பாடும்.!

26. கவிஞர் அஷ்பா அஷ்ரப் அலி
கல்வியதைக் கற்றிடுவாய் 
கசடறவே நாளும் - உன்
கனவுகளும் மீளும் - தினம்
கற்பதனால் சூழும் - நல்ல
காலமுன்னில் கனிந்துவந்து
கண்ணெதிரே வீழும் !

கல்வியுனக் களித்தவரைக்
காலமெலாம் போற்று - அவர்
காலடியில் ஊற்று - தினம்
கண்ணியத்தி லேற்று - இது
கற்றறிந்த கல்விமான்கள்
கற்றுத்தந்த கூற்று !

No comments: