பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

3 Oct 2015

யாப்பறிவோம் -4


சீர்

இனிச் “ சீர் “ என்றால் என்னவென்று பார்ப்போம்.

1.சீர் என்பதன் பொதுவான இலக்கணம் யாது? 
நேரசை நிரையசை ஆகிய இரண்டு அசைகளும் தனித்தோ அல்லது இரண்டு முதலானவை இணைந்தோ அழகுபட நயம்பட இசைத்துச் சீராகி நிற்பது சீராகும்.
செய்யுளுக்கு இசைநயத்தைத் தருவதும் செய்யுள் ஓசையை ஒழுங்கு படுத்துவதும் சீர் ஆகும்.


2..எண்ணிக்கை அடிப்படையில் சீரினை வகைப்படுத்துக.
எண்ணிக்கை அடிப்படையில் சீர்கள் நான்காகும்
அவை.
அ. ஓரசைச்சீர் 
ஆ. ஈரசைச் சீர் 
இ. மூவசைச்சீர்
 ஈ. நாலசைச்சீர்
1.ஓரசைச்சீரனை விளக்குக.
தனித்து வருகின்ற இசையை நிறைத்து நிற்கும் நேரசை நிரையசை ஆகிய இரண்டும் ஓரசைச் சீர்களாகும். இவற்றுக்கு “ அசைச்சீர் “ என்றபெயரும் உண்டு.
எ.கா. 1.நேரசை . நாள் 2. நிரையசை . மலர் = ஓரைச்சீர் இரண்டாகும்
2.ஈரசைச் சீர்களை விளக்கி எடுத்துக்காட்டுகள் தருக.
இரண்டு அசைகளால் ஆகும் சீர் ஈரசைச்சீராகும்.இச்சீருக்குப் பல்வேறுபெயர்கள் உண்டு.அகவற்சீர்,ஆசிரியச்சீர்,ஆசிரியஉரிச்சீர், இயற்சீர் எனப்பலபெயர்கள் இச்சீருக்குண்டு.நேரசை,நிரையசை ஆகிய இரண்டும் தன்னொடு தானும் தன்னொடு பிறிதுமாகச் சேர்ந்து நான்கு சீர்களாக வருகின்னறன.

நேர் நேர்
நேர் நிரை
நிரை நேர்
நிரை நரை

இந்த வாய்பாட்டை இப்படியும் வரிசையிடலாம்

நேர் நேர்
நிரை நேர்
நேர் நிரை
நிரை நரை

இவைநான்கின் வாய்பாடுகளை யாப்பருங்கலக்காரிகை பின்வரும் வாய்பாட்டில் அமைக்கும்.
நேரசை ஈற்றுச்சீர்களுக்கு மாச்சீர் என்றும்
 நிரையசை ஈற்றுச்சீர்களுக்கு விளச்சீர் என்றும் 
காரிகை பெயர்சூட்டும்.வாய்பாடுகள் கீழே தரப்படுகின்றன.
எடுத்துக்காட்டு
ஒற்றில்லாமல் ஒற்றோடு
1.நேர் நேர் - தே மா பாடு பாட்டு
2.நிரை நேர் - புளிமா அழகு அழுக்கு
3.நேர் நிரை - கூவிளம் தேமொழி தேன்மொழி
4.நிரை நரை - கருவிளம் வருவது வரட்டுமே
எனவே மாச்சீர் இரண்டு.விளச்சீர்இரண்டு. ஆக நான்கு சீர்கள்.இயற்சீர்கள் என அழைக்கப்பெறும்
இவை சிறப்பாக ஆசிரியப்பாவுக்கே உரியதால் ஆசிரிய உரிச்சீர் என்றும் பொதுவாக எல்லாப்பாக்களுக்கும்உரியதால் பொதுச்சீர் என்றும் அழைக்கப்படும்.
ஈரசைச் சீர்கள் நான்காகும்
3.மூவசைச் சீர்களை விளக்கி எடுத்துக்காட்டுகள் தருக.
இரண்டு மாச்சீர், இரண்டுவிளச்சீர் ஆகிய நான்கின் இறுதியில் நேரசையும் நிரையசையும் முறையே நிறுத்திட மூவசைச்சீர்கள் உருவாகின்றன.
இனிமூவசைச்சீர்களுக்குரிய வாய்பாடு
நேரசையில் முடிகின்ற சீர்கள் காய்ச்சீர்கள் என்றும் 
நிரையசையில் முடிகின்ற சீர்கள் கனிச்சீர்கள் என்றும் 
அழைக்கபடுகின்றன.
வாய்பாடு - காய்ச்சீர் எடுத்துக்காட்டுகள்
1.நேர் நேர் நேர் - தேமாங்காய் நூலாடை
2.நிரை நேர் நேர் - புளிமாங்காய் உறவென்றான்
3.நேர் நிரை நேர் - கூவிளங்காய் பாக்களிலே
4.நிரை நிரை நேர் - கருவிளங்காய் வலுவிழந்தான்
வாய்பாடு - கனிச்ச்சீர்
5.நேர் நேர் நிரை - தேமாங்கனி கண்ணால்வரும்
6.நிரை நேர் நிரை - புளிமாங்கனி செவியால்வரும் 
7.நேர் நிரை நிரை - கூவிளங்கனி போவெனவரும்
8.நிரை நிரை நிரை - கருவிளங்கனி இருவெனவரும்

காய்ச்சீர்கள் நான்கும் வெண்பாவுக்கே உரியவை. எனவே
இவை வெண்பா வுரிச்சீர் என அழைக்கப்படும்.
கனிச்சீர்கள் நான்கும் வஞ்சிப்பாவுக்கு உரியவை.
எனவே இவை வஞ்சி உரிச்சீர் என அழைக்கப்படும்.
இச்சீர்கள் பொதுவாக ஏனைய பாக்களில் மிக அருகிவரலாம்.
ஆசிரியப்பாவில்மற்றும் கலிப்பாவில்
கூவிளங்கனி கருவிளங்கனி ஆகிய இரண்டு
நிரைநடு வஞ்சி உரிச்சீர்கள் இடம்பெறா.
மூவசைச் சீர்கள் எட்டாகும்.

6.நாலசைச் சீர்களை விளக்கி எடுத்துக்காட்டுகள் தருக.
நான்கு அசைகளால் ஆகிய சீர் நாலசைச் சீராகும். எட்டு மூவசைச்சீர்களின் ஈற்றில் நேர் நிரை முறையே நிற்கப் பதினாறு நாலசைச் சீர்கள் உருவாகின்றன.
காரிகை ஈற்றில் நேரசை கொண்டு முடியும் சீர்களுக்குப் பூச்சீர் என்றும்
                  ஈற்றில் நிரையசை கொண்டு முடியும் சீர்களுக்கு நிழற்சீர் என்றும்                  பெயர்  சூட்டும்.
இவை தண்பூ, நறும்பூ ,தண்ணிழல், நறுநிழல் என்ற வாய்பாடு களில் வரும்.
வாய்பாடு - தண்பூ
1.நேர் நேர் நேர் நேர் - தேமாந் தண்பூ
2.நிரை நேர் நேர் நேர் - புளிமாந் தண்பூ
3.நேர் நிரை நேர் நேர் - கூவிளந் தண்பூ
4.நிரை நிரை நேர் நேர் - கருவிளந் தண்பூ
வாய்பாடு - நறும்பூ 
5.நேர் நேர் நிரை நேர் - தேமாநறும்பூ 
6.நிரை நேர் நிரை நேர் - புளிமாநறும்பூ 
7.நேர் நிரை நிரை நேர் - கூவிளநறும்பூ 
8.நிரை நிரை நிரை நேர் - கருவிளநறும்பூ
வாய்பாடு - தண்ணிழல் 
9.நேர் நேர் நேர் நிரை - தேமாந் தண்ணிழல்
10.நிரை நேர் நேர் நிரை - புளிமாந் தண்ணிழல் 
11.நேர் நிரை நேர் நிரை - கூவிளந் தண்ணிழல்
12.நிரை நிரை நேர் நிரை - கருவிளந் தண்ணிழல்
வாய்பாடு - நறுநிழல் 
13. நேர் நேர் நிரை நிரை - தேமா நறுநிழல் 
14.நிரை நேர் நிரை நிரை - புளிமா நறுநிழல் 
15.நேர் நிரை நிரை நிரை - கூவிள நறுநிழல் 
16.நிரை நிரை நிரை நிரை கருவிள நறுநிழல்

நாலசைச் சீர்கள் பதினாறாகும்.
ஓரசைச்சீர்கள் (அசைச்சீர்) 2
ஈரசைச் சீர்கள் (அகவற்சீர்) 4
மூவøச்சீர்கள்(வெண்சீர்,வஞ்சிச்சீர்) 8
நாலசைச் சீர்கள்(பொதுச்சீர்) 16.
மொத்தச்சீர்கள் 30
ஓரசைச்சீரின் ஒருமடங்கு ஈரசைச்சீர்கள்.இவ்வாறே
ஈரசை,மூவசை,நாலசை ஆகும்.
நாலசைச்சீர்கள் ஒவ்வொன்றையும் பிரித்தால் இரு ஈரசைச் சீர்களாகிவிடும்.
பொதுவாகப் பாக்களில் மிகுதியும் பயின்றுவரும் சீர்கள் ஈரசை மற்றும் மூவசைச் சீர்கள் ஆகும்.
ஓரசைச் சீர் வெண்பாவின் ஈற்றடியில் மட்டும் வரும். வெண்பா அல்லாத பாக்களில் வருவதால் நாலசைச்சீர் பொதுச்சீர் என அழைக்கப் பெறும்.
இப்போது நாலசைச்சீர் பயன்படுத்தப் படுவதில்லை.
சீர்கள்பற்றிய செய்திகளின் திரண்டகருத்தாகப் பின்வரும்வெண்பா அமையும்

மாச்சீர் விளச்சீரும் காய்ச்சீர் கனிச்சீரும்
பாப்புனைய ஏற்ற பதமான சீர்களாம்
பூச்சீர் நிழற்சீர் பொலிவிலாச் சீர்களாம்
பாக்கொள்ளா இன்று பழைது (என்பாடல்)

No comments: