பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

3 Oct 2015

மரபைப் போற்று. 3(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
....நிறைவு...

உலகத்தில் எங்கேனும் தாய்மொ ழிக்கென்(று)
          ஒருதீங்கு நேர்ந்ததென வரலா றுண்டா.?
கலகங்கள் செய்கின்றார் கயவர் கூடித்
          கனித்தமிழை ஒழித்துவிடத் துடிக்கின் றார்கள்
'மலையொன்றைச் சுண்டெலிகள் மயிரால் கட்டி
          மறுபக்கம் சாய்த்துவிட முயல்வ தைப்போல்.
உலையிட்டுத் தமிழ்ப்பொன்னை உருக்கி னாலும்
          உருமாறிப் புதிதாக உருவா குங்காண்.!


தாயிருந்தே அன்போடும் பாசத் தோடும்
          சத்தான உணவுளை ஊட்டும் போது
நாயனைய மாற்றாந்தாய் நச்சை யூட்ட
          நலமென்றே உண்பீரோ! சிந்தி யுங்கள்
வாயிருந்தும் ஊமையராய் நாமி ருந்தால்
          வருங்காலம் நமைத்தூற்றும் கயவ ரென்று
நீயிறந்த பின்னாலும் நிறைவாய் வாழ
          நிறைதமிழில் நிறைகவியை நிறைத்தல் வேண்டும்.!

தமிழாநீ தமிழ்க்கவியைப் படைத்தல் வேண்டும்
          தவறாமல் புதுக்கவியை மறத்தல் வேண்டும்.
தமிழாவுன் பிள்ளைக்கும் தமிழை யூட்டு
          தவறாமல் தமிழுணர்வைச் சேர்த்தே ஊட்டு.
தமிழாஉன் வாழ்நாளில் தமிழைப் போற்று
          தவறாமல் உன்கருத்தைத் தமிழி லேற்று.
தமிழாஉன் மூச்செல்லாம் தமிழே வேண்டும்
         தவறாமல் தமிழ்வளர்க்க வாராய் தம்பீ.!

*பாவலர் மா.வரதராசன்*

1 comment:

Iniya said...

மரபை வளர்க்க மனதிடம் பேண
உரமிட்டீர் உண்டேன் உவந்து!

இது என் சிறிய முயற்சி. தவறு இருந்தால் சுட்டவும்.
அருமை அருமையான எண்சீர் விருத்தம் தொடர வாழ்த்துக்கள் ...!