பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

19 Oct 2015

3) பழமோ வண்டோ ?


அன்புடைப் பாவலர்க்கு வணக்கம் !
இந்த வார ‪#‎இலக்கியத்_தேன்துளி‬ யில் தங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வு எய்துகிறேன். இதோ இவ்வாரத் துளி
3) பழமோ வண்டோ ?

அது ஒரு அழகிய படுக்கை. சிவந்த நிறங்கொண்டு பட்டால் நெய்தது போன்ற ஒரு மென்மையான படுக்கை. அது ஒரு மலர் படுக்கை. அந்த மலர்படுக்கை மீது நன்கு உண்டு நகர முடியாதவாறு படுத்திருக்கிறான் கதாநாயகன். வயிறு புடைக்க விருந்து உண்டு உண்ட மயக்கத்தில் அந்தப் பூவின் மீது ரீங்காரமிட்டுப் படுத்திருக்கிறான் நமது கதாநாயகன். தனது ஒற்றை நெல்லளவு வயிறு முட்ட முட்ட மலர்த் தேனைப் பருகிவிட்டு ஒய்யார உறக்கஞ் செய்கிறான் நமது வண்டுக் கதாநாயகன்.
அந்த நேரம் ஒரு அழகி அந்த மலரிடைக் கண்துயிலும் கரிய நிறத்துக் கதாநாயகனை இன்சுவை நல்குகின்ற நாவல் பழமாக எண்ணுகிறாள். அதனை எடுத்துத் தனது எழில் வாயில் போட்டு மென்று சுவை யுணர விரும்புகிறாள். அழகுத் தந்தத்தைக் குடைந்து எடுத்தது போன்ற தனது வெண்ணிறப் பற்களில் மென்று களித்திட விழைகிறாள். அதனால் உறங்கிக் கொண்டிருந்த அவனைக் கைகளில் எடுத்து முன் பார்க்கிறாள்.
அவளது எழில் ததும்பும் ஒளி பொருந்திய முகத்தினை அந்த அரைபோதை நிலையில் கண்ட கதாநாயகன், அந்த முகத்தை விண்மீன் இனத்தின் தலைவி, வெளிச்சத்தின் நாயகி, வானத் திடலில் ஓடும் வெள்ளிப் புனல், என்றெல்லாம் புலவர் பாவிக்கும் நிலாவாகப் பார்க்கின்றான். உடல் வேர்கின்றான். அவளது மருதாணி பூசிய மெல்லிய கரத்தில் தான் இருப்பதை, நிலாவைக் கண்டு கண் மூடும் செந்நிறத்துத் தாமரையில் தான் இருப்பதாக எண்ணுகிறான். 'அய்யகோ! நிலாவினைக் கண்டதும் தாமரை மூடிவிடுமே !' என்று அஞ்சுகின்றான்.
நகர முடியாத நமது நாயகன் தனது பூதாகார உடலைக் காற்றில் தூக்கி விடுக்கென்று இறக்கை அசைத்துப் பறக்கத் துவங்குகிறான். நிலவைக் கண்டதும் அந்தத் தாமரை மலர்கரம் இதழ் குவித்து மூடும் என்று அஞ்சி அந்த இடத்தை விட்டு விரைகின்றான் நாயகன். தனது கைகளில் ஏந்திய நாவல் பழமானது இறக்கை விரித்துப் பறப்பதைக் கண்டதும் ஒரு கணம் அவள் திகைக்கிறாள். பறந்து போன வண்டைப் 'பழம் தான் பறந்ததா?' என்று நினைத்து வியக்கிறாள். ஈதென்ன புதுமை என்று மனம் மயங்குகிறாள்.
இதுவே நமது இன்றைய தேன்துளி. விவேக சிந்தாமணி என்னும் நூலில் இருந்து ஒழுகிய தேன் துளி.
பாடல்:
தேனுகர் வண்டு மதுதனை உண்டு 
---தியங்கியேக் கிடந்ததைக் கண்டு 
தானதைச் சம்பு வின்கனி என்று 
---தடங்கையில் எடுத்துமுன் பார்த்தாள்!
வானுறு மதியம் வந்ததென்(று) எண்ணி 
---மலர்கரம் குவியுமென்(று) அஞ்சி 
போனது வண்டோ பறந்ததோ பழந்தான் 
---புதுமையோ இதுவெனப் புகன்றாள் !
-விவேகசிந்தாமணி

No comments: