பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

3 Oct 2015

யாப்பறிவோம் -3


அசை

1.தனிக்குறில்! 2.ஒற்றும் 3.தனிநெடில்! 4ஒற்றும்
இனியநல் நேரசை என்பார் 1இணைக்குறில்!
2ஒற்றும்! 3.குறில்நெடில் 4.கூடவே ஒற்றுமே!
நிற்றல் நிரையசையின் நேர்பு

 ( நேர்பு -- மாண்பு.) இது என்பாடல்)

சென்றதொடரில் எழுத்துகளைப்பற்றிப் பற்றி ஓரளவில் தெரிந்துகொண்டோம்.
சென்றதொடரின் தொடர்ச்சியாகக் குற்றியலுகரத்தைப் பற்றிஇரண்டு கூடுதல் செய்திகளைப்பார்த்து அடுத்து அசையைப்பற்றிப்பார்ப்போம்.
பொதுவாகமொழியிறுதியில் வல்லொற்றுமேல் ஏறிநிற்கும் உகரம்தான் குறுகும் என்றுதான் பார்த்தோம்
.ஆனால் மொழிக்கு முதலில் வரும்போது குறுகி ஒலிக்கும் ஒரு குற்றியலுகரத்தையும் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
முறைப்பெயரான நுந்தை என்ற சொல்லில் மொழிக்கு முதலில் வரும் நகரமெய்யின்மேல்நின்ற உகரம் குறுகும் என்கிறார்.
குற்றிய லுகரம் முறைப்பெயர் மருங்கின்
ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் (தொல்.எழுத்.மொழி.34)
நுந்தை என்பது உன் தந்தை எனப்பொருள்படும்
எ.டு..எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்(குறுந் 40.2)
இனிச் சில இடங்களில் முற்றியலுகரமும் குறுகும்
.
கத வு+அருகே- கதவருகே
நில வு+ அன்றோ- நிலவன்றோ
எனவரும் .விதிப்படி வகர உடம்படுமெய் வரவேண்டும். ஆனால் குற்றியலுகர விதியே இங்கும் வந்தது.
இவைபோன்ற இடங்களைப்பார்த்துக் கையாள வேண்டும். வெண்பாவின் ஈற்றடி ஈற்றுச்சீராகிய பிறப்பு எனும் குற்றியலுகர வாய்பாட்டில் முடிவது.
ஆனால் அருகி இதுபோன்ற முற்றியலுகரமும் வரும்.
இப்போது இரண்டாம் உறுப்பாகிய அசையைப் பற்றிப்பார்ப்போம்


1.அசை என்றால் என்ன? 
அசைக்கப்படுவது அசை என அழைக்கப்படுகிறது.எது அசைக்கப்படுகிறது எனில் எழுத்து அசைக்கப்படுகிறது.
எழுத்துகளது இசைத் தொடர்வை அசைத்துச் செல்லும் போது அசைக்கப்பட்டு பிரிந்துவரும் எழுத்தால்
அமைந்து சீர்களின் உறுப்பாக நின்றமைவது அசையாகும்.
“எழுதப் படுதலின் எழுத்தே அவ்வெழுத்து
அசைத்திசை கோடலின் அசையே “ 
என்பது யாப்பருங்கலவிருத்தியுரை மேற்கோள்.

2.அசை உருவாவது எப்படி?
குறில்,நெடில்.மெய் எனும்மூவகை எழுத்துகளால் அசை உருவாகும்.ஒற்று தனித்துநின்று அசையாக உருவாகாது.ஓரெழுத்து அல்லது ஈரெழுத்துகளோடு இணைந்துதான் அசையாக வரும்

3.அசையின் இருவகைகள் யாவை?
அ. நேரசை ஆ.நிரையசை.

4. நேரசையை விளக்குக ?
ஓரெழுத்தாகிய குறிலும் நெடிலும் தனியே வந்தாலும் அல்லது ஒற்றுடன் வந்தாலும் அது நேரசையாகும்.இதைத் “தனியசை “ என்றும் அழைப்பர்.
5.நேரசையின் வகைகளைக் குறிப்பிட்டு எடுத்துகாட்டுகள் தருக.?
நேரசையின் வகைகள் நான்கு
அ.தனிக்குறில் - க
ஆ. தனிக்குறில் ஒற்று - கல் 
இ. தனிநெடில்- கா
ஈ. தனிநெடில்- கால்

6.நிரையசையின் வகைகளைக் குறிப்பிட்டு எடுத்துகாட்டுகள் தருக.?
நிரையசையின் வகைகள் நான்கு
இரண்டெழுத்துகள் தனியே வந்தாலும் அல்லது ஒற்றுடன் வந்தாலும் அது நிரையசையாகும்.இதை “இணையசை “ என்றும் அழைப்பர்.
அ. குறிலிணை (அ)இணைக்குறில் - சில
ஆ. குறிலிணை (அ) இணைக்குறில் ஒற்று - சிலர் 
இ. குறில்நெடில்- பலா
ஈ. குறில்நெடில் ஒற்று - விளாம்
இங்கே ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நிரையசையின் வகை குறில்நெடில் ,குறில்நெடில் ஒற்று.
எழுத்துகள் இம்முறை மாறி நெடில் குறில் என நின்றால் இரண்டு நேரசைகளாக மாறிவிடும்.
இனி அசையினைப் பற்றிய சில கூடுதல்செய்திகள்.
தொல்காப்பியம் அசையைப்பற்றிக் கூறும் செய்திகள்.
குறிலே நெடிலே குறிலிணை குறில்நெடில்
ஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி
நேரும் நிரையும் என்றிசிற் பெயரே
என்பது செய்யுளியலின் மூன்றாம் நூற்பா.இந்நூற்பாவிற்கான பொருளே மேலே நாம் வகுத்த நேரசை நிரையசை வகைகள்.
இவையல்லாமல் மேலும் இரண்டு அசைகளைத் தொல்காப்பியர் கூறுகிறார்.
இவ்விரண்டு அசைகளோடு குற்றுகரமோ அல்லது முற்றுகரமோ சேர்ந்து வரும் நேர்பு நிரைபு என் இரண்டு அசைகளைக் கூறுகிறார்.
வெண்பா வாய்பாட்டில் இப்போது நாம பயன்படுத்தும் காசு,பிறப்பு என்ற வாய்பாட்டைஒத்ததே இவ்வசைகள்.
ஆனால் இவ்வசைகள் பிரிக்கப் படும்போது இப்போதைய ஈரசைச் சீரகளாகிய தேமா,புளிமா எனும்வாய்பாட்டில் அடங்கிவிடும்.
நேரை,நிரையசை ஆகிய இரண்டும் இயலசை என்றும் நேர்பசை,நிரைபசை ஆகியஇரண்டும் உரியசை என்றும் தொல்காப்பியரால் அழைக்கப்பட்டன.
ஆனால் இக்காலத்தில் நேர்பசை,நிரைபசை ஆகியஇரண்டும் வழக்கிழந்து விட்டன.
அசையைப் பற்றி யாப்பருங்கலம் கூறும் செய்திகள்.
யாப்பருங்கலம் அசையின் பொதுவிலக்கணத்தை முதலில் கூறிப் பின்னர் நேரசை நிரையசை பற்றிக் கூறுகிறது.
அசையின் பொது இலக்கணம்
நேரசை யென்றா நிரையசையென்றா 
ஆயிரண் டாகி அடங்குமன் இசையே(யா.கலம் .5)
நேரசை
நெடில்குறில் தனியாய் நின்றும் ஒற்றடுத்தும்
நடைபெறும் நேரசை நால்வகை யானே(யா.கலம் .6)
நிரையசை
குறிலிணை குறில்நெடில் தனித்தும்ஒற்றடுத்தும்
நெறிமையின் நான்காய் வருநிரை யசையே(யா.கலம் .7)

அசையைப் பற்றி யாப்பருங்கலக் காரிகை கூறும் செய்திகள்.
குறிலே நெடிலே குறிலிணை ஏனை குறில்நெடிலே
நெறியே வரினும் நிரைந்தொற் றடுப்பினும் நேர்நிரையென்று
அறிவேய் புரையுமென் தோளி யுதாரண மாழிவெள்வேல்
வெறியே சுறாநிறம்விண்டோய் விளாமென்று வேண்டுவரே(யா.காரிகை.5)
யாப்பருங்கலக்காரிகைக்குப்பின்னால் வந்த யாப்பியல் நூல்கள் அனைத்தும் இதே வாய்பாட்டைத்தான் பின்பற்றி நிற்கின்றன.
நாமும் இதே வாய்பாட்டைத்தான் பின்பற்றி மரபுப்பாக்களைப் புனைந்து வருகிறோம்.

1 comment:

Jayaseelan said...

தனிநெடில் எழுத்துக்கள் எத்தனை? அவை யாவை?