பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

4 Oct 2015

பாட்டியற்றுக : 6 இன் தொகுப்பு.
அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! 

முன் பயிற்சிகளைப் போன்றே இப்பயிற்சியிலும் பலர் பங்கேற்றனர். பலரும் புதிதாகப் பங்கேற்பது இப்பகுதியின் வெற்றியே. அனைவரின் ஊக்கம் மிகுந்த பங்கேற்பால் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. அனைவருக்கும் நன்றி.
பாட்டியற்றுக: 6 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
நன்றி.!
***** ***** *****
பாட்டியற்றுக: 6


*ஆசிரியத் தாழிசை*

1. வள்ளிமுத்து.
தலைப்பு.: விவசாயி
ஆற்றை வயலில் அழகுற நிரப்பிச்
சேற்றை யுழக்கிச் சேரி கலக்கி
நாற்றை வயலில் நடுவது யாரோ ?
பாழுங் களர்நிலம் பண்பட மாற்றித்
தாழும் நிலத்தில் தண்ணீ ரூற்றிக்
கூழுஞ் சோறுங் கொடுத்தவர் யாரோ ?
களையை நீக்கிக் கதிரை யறுத்து
வளையல் குலுங்க வாரி யடித்துக்
களத்தில் பொலியை குவித்தவர் யாரோ ?

2. அர. விவேகானந்தன்
ஆயிரம் உறவுகள் அனைத்தே நிற்பினும்
பாயிரம் போலவே பதவி யளிப்பது
தாயின் கருவில் தவழும் மழலையே!
வினையது ஒழிந்து வீடு திரும்பின்
உனையே மாற்றும் உள்ளம் பூக்கும்
மனையதின் மங்கா மாண்பும் மழலையே!
இன்பம் சுரக்கும் இனிமை செழிக்கும்
அன்பாய்ச் சிரிக்கும் அணைத்தே மகிழும்
அன்னை மனத்தில் அனைத்தும் மழலையே!

3. இரா.கி. இராஜேந்திரன்
பெற்று வளர்த்துப் பாசமும் கொடுத்துப் 
பற்றுடன் தமிழில் பாடி வளர்த்த
சற்றும் விலகாத் தாய்போல் வருவரோ
ஓய்விலாப் பணியில் ஓடியே உழைத்துத்
தாயாய்த் தாதியாய்த் தினமும் வாழ்வில்
தேய்ந்து ழைக்கும் தாய்போல் வருவரோ
மணமும் செய்த மருமகள் நெஞ்சம் 
கணவனும் மகிழவே காரியம் செய்வாள்
பணத்தை நினையாப் பாவைபோல் வருவரோ

4. சுரேஷ் சீனிவாசன்
நாத்திக ரெல்லாம் நாவினை நீட்டிட
மூத்த பக்தரோ மூடிய வாயுடன்
காத்திடத் தெரிவாய் கண்ணில் இறைவனே
வாடின பயிர்கள் மழையே இல்லை
சாடினார் உன்னைச் சரியே இல்லை
நாடியே வந்து நிற்பாய் இறைவனே
துன்பமெல்லாம் உன்னால் என்பர்
இன்பம் மட்டும் தம்மால் என்பர்
உன்னிலை இங்கே உரைப்பாய் இறைவனே.

5. வெங்கடேசன் சீனீவாச கோபாலன்
நுந்தம் பசிக்கு நுஞ்சேய் புசிப்பரோ
நுந்தம் குறிக்கோள் நுஞ்சே யவர்மேல்
உந்தித் தள்ளுவ தென்றும் தவறே!
உம்முடைக் காலத்(து) உருப்பெறாக் குறிக்கோள்
உம்முடை மகவால் உருப்பெற வேண்டுமென்(று)
உம்முடை மகவை உருக்குதல் தவறே!
மண்ணில் உதித்த மானிடர் எவர்க்கும்
எண்ண மென்றொன்(று) ஏற்றமாய் உண்டுநும்
எண்ணந் திணிப்ப தென்றும் தவறே!

6. Sara bass
இயற்கை அளித்த இன்பச் சூழலை 
செயற்கை தன்னை செயலில் புகுத்திட 
உயர்வை உலகிலே உணர முடியுமோ ?
காற்றின் வாசம் கழிவின் செயலே . 
ஆற்றின் நிறமே அகன்றதோர் நீரினில் 
சேற்றில் நெல்லும் செழிக்க முடியுமோ ?
நஞ்சு கலந்திடும் நாசம் விளைத்திடும் . 
பஞ்சம் மிகுந்திடும் பசியால் வாடிடும் 
தஞ்சம் யாரும் தந்திடல் முடியுமோ ?

7. பரமநாதன் கணேசு
கன்னிப் பெண்ணைக் கசக்கிப் பிழிந்து
தின்று பின்னே தெருவில் வீசும்
துன்பியல் கனவால் தூக்கம் வருமோ?
முதுமைக் காலம் மூட்டை முடிச்சு
முதுகில் சுமந்து முனகி நடப்போர்
நிதமும் கனவில், நித்திரை வருமோ?
போரைச் சாட்டிப் புலியெனச் சுட்டார்
யாரை யங்கு யார்தான் காப்பார்
ஊரை யெண்ணில் உறக்கம் வருமோ?

8. நாகினி கருப்பசாமி
சுணக்கம் இன்றிச் சூதும் வாதும்
இணக்கம் கொண்ட இடத்தில் சேர்ந்து
வணக்கம் போட்டு வளைவதும் தொடருதே!
நாளும் மாற்றும் நல்ல உடைபோல்
ஆளும் இடமும் ஆழமாய்ப் பார்த்துத்
தாளும் பற்றிடும் தயவும் தொடருதே!
கூட இருந்தே குழியும் பறித்துச்
சாட வழிவகை சதியும் தீட்டி
ஆடல் பாடலாய் அடிதொழல் தொடருதே!

9. குருநாதன் ரமணி
வானம் பார்த்தேன் வரப்பில் நின்றே
தானே எல்லாம் தாங்குவ தாகி
ஊனம் நீங்க உயரும் உளமே.
வானம் பார்த்தேன் சாலை நின்றே
மானிட வண்ண மாளிகை பிரிக்க
ஈனம் தன்னில் இழியும் உளமே.
கானம் போற்றும் கடவுள் முன்னே
ஞானம் சற்றே ஞாபகம் ஏற
வானம் என்னுள் வதியும் உளமே!

10. அஷ்ஃபா அஷ்ரப் அலி
இருப்போ ரெல்லாம் இல்லா தவர்மேல்
தருக்கம் செய்யின் வருத்த மெனக்குள்
இருக்கு மெவரும் ஈதல் நன்றே
கவளம் கேட்டே கையை நீட்டப்
பவளம் வேண்டா பருக்கை யளித்தே
அவலப் படுவோர் ஆற்றுதல் நன்றே
கல்லாக் குழந்தை கடைநிலை மக்கள்
இல்லாக் கல்வி இனிதே கற்க
உள்ளோ ரெல்லாம் உதவுதல் நன்றே.

11. கவிஞர் பசுபதி
விண்ணும் விண்ணில்
. . விளங்கும் நிலவும்
எண்ணில் விண்மீன்
. . மின்னிடும் எழிலும்
இன்பம் நல்கிடும்
. . இயற்கைக் காட்சியே!
மண்ணின் கடல்நீர்
. . மழைதரு முகிலாய்
விண்ணில் தோன்றி
. . மிதந்திடும் அழகும்
இன்பம் நல்கிடும்
. . இயற்கைக் காட்சியே!
வண்ணம் ஏழும்
. . வனப்புடன் வானில்
ஒன்றி அடுக்காய் 
. . வில்போல் ஒளித்தலும்
இன்பம் நல்கிடும்
. . இயற்கைக் காட்சியே!

12. கவிமுகிலன்
ஆக்கம் எல்லாம் அடக்கம் அன்னை
ஊக்கம் எல்லாம் உந்துதல் அன்னை
தாக்கம் கொண்டு தாங்குவாள் அன்னையே.
நீக்கம் நீக்கி நிறைவாய்க் காப்பாள்
ஏக்கம் தீர்த்தெமை ஏற்றியே வைப்பாள்
காக்கும் காளியாய்க் காவலும் அன்னையே.
தீய்க்கும் தீமைக்கும் தோளிலே அணைப்பாள்
தூக்கம் தொலைத்துத் தாலாட்டு படிப்பாள்
நோக்க வேண்டும் நிறைவாய் அன்னையே.

13. விஜயகுமார் வேல்முருகன்
இனிய மொழியாம் இன்பத் தமிழில்
கனியின் சுவையில் கவிகள் படைத்து
மனிதம் வளர்ப்பாய் மாண்புறு பெண்ணே!
கலைகள் யாவும் கற்றுத் தமிழை
அலைகடல் கடந்து ஆற்றல் பெருக்கி
மலையின் சிகர மாக்கிடும் பெண்ணே!
தளைகள் யாவும் தகர்த்துத் தமிழில்
களைகள் இன்றி காத்து தினமும்
வளையின் கையால் வளர்த்திடும் பெண்ணே.

14. அழகர் சண்முகம்.
அஞ்சுக மொழியா
ளன்பா லுமையவள்
கொஞ்சிடுங் குமரனைக்
கொடியுடன் கண்டே
வஞ்சக மழிந்திட
வணங்கிடு மனமே
நஞ்சினை யுண்டயெம்
நாயகன் மகனை
நெஞ்சினில் நிறுத்தி
நேசமாய்ப் போற்றி
வஞ்சக மழிந்திட
வணங்கிடு மனமே
பிஞ்சினில் பழுத்த
பிரணவக் கனியைப்
பஞ்சம் நோய்பகை
பாதகச் செயல்களின்
வஞ்சக மழிந்திட
வணங்கிடு மனமே.

15. நிறோஸ் ஜி.அரவிந்த்
வஞ்சி மகளே வாடி யருகே
கொஞ்சிக் குலவக் கூடி மகிழ...
நெஞ்சு முழுதும் நிறைந்தாய் கண்ணே...
கள்ளப் பார்வை களத்து மேட்டில்
அள்ளித் தாடி அருகில் வாடி...
உள்ளம் முழுதும் உறைந்தாய் கண்ணே...
சுகத்தில் பிதற்றிச் சொக்கிப் போக
முகத்தைக் காட்டியென் முன்னே வாடி...
அகத்தில் நெருங்கி அமர்ந்தாய் கண்ணே...

16. சியாமளா ராஜசேகர்
கருத்த குழலும் கழிந்து வெளுக்கும்
சுருங்கும் விழியின் சொலிப்பு மங்கும் 
சருமம் தளர்ந்து சரீரம் ஒடுங்குமே !
கவனம் பிசகும் கருமம் மறக்கும் 
துவளும் நடையும் தொலையும் சுகமும் 
அவதிப் படுத்தும் அடங்காப் பிணியுமே
உறக்கம் குறையும் உடலும் களைக்கும்
மறதி வந்து மகிழ்வைக் கெடுக்கும் 
மறலி வரவை மனமும் விழையுமே !

17. கலாம் ஷேக் அப்துல் காதர்
முந்தியப் பருவம் முதலணு வளர்ச்சி
பந்துபோ லுருண்டுப் பருவங்கள் ஓடி
வந்திடும் முதுமை வாழ்வின் இறுதியே!
இளமையின் வேட்கையில் எங்கோ அலைந்தாய்
உளமதில் பருவம் உணர்த்திடும வேளை
களமதில் நீங்கியது காலமெனும் பருவமே!
அறுவடைப் பருவம் அதற்குள் விதைத்திடு
மறுமுறை வராமல் மரணமும் தடுக்கும்
நெறிமுறை பேணுக நிம்மதி மறுமையே!

18. தமிழகழ்வன் சுப்பிரமணி
கனியுளந் தேன்மொழி கவினொளி மதிமுகம்
நனிசிறந் திலங்கிடும் நற்பண்(பு) அரசி
இனிமையுற் றென்றும் இசைபெற வாழிய!
ஆற்றுப் படுத்தும் ஆற்ற லுடைய
ஆற்றுப் பெயர்கொள் அன்புத் தோழி
ஏற்றமுற் றென்றும் இசைபெற வாழிய!
பொறுமை அரும்பெரு பொற்குணம் இயல்பாய்
உறுந்தகை மையினால் உயர்செவி லியரெனப்
பெறும்பே றிதுவே புகழொடு வாழிய!

19. சேலம் பாலன்
ஆர்வக் கோளா றதிக மிருந்தால் 
ஈர்த்திடச் செயவல இனிய செயலும்
தீர்வாய் நகைக்கச் சீர்குறைத் திடுமே !
சிறப்பாய் இதுவரை செய்த செயல்தான் 
அறவழிச் செய்ததால் அனைவரும் போற்றிய 
திறம்இருந் தாலும் சீர்குறைந் திடுமே! 
அறிவால் நன்றே அறிந்திருந் தாலும் 
செறிவாய் உணர்வாய்ச் செய்திட முனையாத் 
தெறிக்கும் கோபம் சீர்குறைத் திடுமே !

20. வனராசன் பெரியகண்டர்
செங்கதிர் நீண்டு சேர்ந்திடும் போது
பங்கயம் மலர்ந்து பார்வை யினாலே
இன்னிசை வண்டினை ஈர்ப்பது மேனோ!
தென்திசைக் காற்று தீண்டிடும் போது
தன்னிமை திறக்கும் வெண்பூ யாவும்
இன்னிசை வண்டினை ஈர்ப்பது மேனோ!
பொன்முக மாலை தன்முகம் மறைய 
இன்முகங் காட்டி எழிலுறும் பூக்கள்
இன்னிசை வண்டினை ஈர்ப்பது மேனோ!

21. முனைவர் பத்மநாபன்
சங்க இலக்கியம் தங்க இலக்கியம்
பொங்கும் இலக்கியம் புதுமை இலக்கியம்
உங்கள் வாழ்க்கை ஒளிபெற உதவுமே
அகவல் பாவால் அமைந்த இலக்கியம்
அகத்தில் நிற்கும் ஆன்றோர் இலக்கியம்
புகழுடைஇலக்கியம் போற்றுக இதையே
அறத்தைச் சொல்லும் அன்பைச் சோல்லும்
புறத்தைச் சொல்லும் புகழைச் சொல்லும்
மறத்தையும் சொல்லும் மகிழ்ந்து படிக்கவே.

22. நடராசன் பாலசுப்பிரமணியன்
கடவுள் வேடம் கைத்தொழத் தூண்டும்
மனிதன் என்பது மறந்து போகும்
திகட்டா நடிகர் திலகம் சிவாஜியே!
சிம்மக் குரலது சீறி முழங்கும்
தம்முடன் நடிப்போர் தம்மையும் ஏற்றும்
செம்மல் நடிகர் திலகம் சிவாஜியே!
நற்றமிழ் வசனம் நன்றாய் பேசும்
வெற்றித் தமிழன் விழுப்புரம் சின்னையா
பெற்ற நடிகர் திலகம் சிவாஜியே!

23. விவேக் பாரதி
உண்மை சொல்லினால் உரக்கச் சொல்லினால் 
மண்ணுல கத்திலே மாபெரும் சக்தியும் 
அண்டி வாருமே அகிம்சை வெல்லுமே !
நன்மை செய்திட நாணுவார் வந்திடும் 
பின்விளை வெண்ணிப் பிதற்றுவார் உண்மையில் 
அன்பு வெல்லுமே அகிம்சை வெல்லுமே !
எத்தனை காலம் ஏமாற்றம் நேருமோ 
புத்துயிர் தந்துநம் பூமி காத்திட 
அத்தனை சக்திதந் தகிம்சை வெல்லுமே ! 
★★★★★

No comments: