பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

3 Oct 2015

பாட்டியற்றுக : 5 இன் தொகுப்பு.அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.!

 முன் பயிற்சிகளைப் போன்றே இப்பயிற்சியிலும் பலர் பங்கேற்றனர். பலரும் புதிதாகப் பங்கேற்பது இப்பகுதியின் வெற்றியே. அனைவரின் ஊக்கம் மிகுந்த பங்கேற்பால் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. அனைவருக்கும் நன்றி.!

பாட்டியற்றுக: 5 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.

நன்றி.!
***** 

பாட்டியற்றுக: 5


*நேரிசை ஆசிரியப் பா*

1. வள்ளிமுத்து

மேகம் பார்த்து மேனி சிலிர்த்துத்
தோகை விரித்துத் தொல்நடம் புரிந்துக்
கண்டவர் மயங்கக் காட்சிக ளமைத்து
விண்ணவர் வியக்கும் அரம்பை போலவே
கண்கவர் நடனம் தந்தே
மண்ணில் யாரையும் மயக்குமாம் மயிலே.!


2. பா.நடராசன்
சிந்தா மணியைச் சிறப்பாய்த் தொகுத்தே
எந்தமிழ்த் தாத்தா இயங்கினார் ஆய்வில்
ஏட்டைத் தேடியே எங்கும் அலைந்தார்
பாட்டைத் தொகுத்துப் பதித்தார் பைந்தமிழ்
செய்யுள் பரப்பிய சீலனாம்
அய்யர் செயலே அருஞ்செய லன்றோ!


3. இராஜ.தியாகராஜன்
காதற் பெண்ணே! கானக் குயிலே!
தூது செல்லும் தோழி யெனவே
சேற்று வயலைச் சீண்டிப் பார்க்கும்
காற்று தேரில் கடுகிச் செல்லும்
வண்ணம் பூசிய மாலை முகிலை
எண்ணம் உதித்த என்றன் இச்சை
தன்னை உனக்குச் சொல்ல நானும்
அன்பாய் நிதமும் அனுப்பி வைத்தேன்.
அதையும் நீயே அறிந்தி டாமல்
வதைக்கும் வனிதா மணியே! என்னைச்
சிதையில் எரித்தே சிரித்த
கதையும் கவியாய்க் காலம் வெல்லுமே!


4. வெங்கடேசன் சீனிவாச 
    கோபாலன்
பாவகை யிலக்கணம் பலரும் பயின்றிடப்
பாவலர் வகுத்த பட்டறை இதனில்
கற்கண் டுடன்றேன் கலந்தாற் போலே
சொற்கொண் டியற்றும் சுவைமிகு பாக்கள்
முயற்சி செய்தே முனைவோர்க்
கயற்சி நீக்கும் அருமருந் தாமே!


5. சேலம் பாலன்.
என்ன உலகம்? எங்கும் கலகமே
என்றே உலகை எண்ணும் போது மனமே நோக வருத்தமும் கோபமும்
தினமே நல்லோர் செப்பிட நடப்பு. வாழ்வது யாரென மனத்தால் சற்றே
ஆழ்ந்து நோக்கின் அனைவரும் பிழைப்பரே.
தமிழ்க்கவி படைப்போர் தரணியில்
அமிழ்த வாழ்வை ஆள்பவ ரென்பமே !


6.Sarabass 
அன்பினில் உலகை ஆளும் சக்தி .
உன்னிடம் தினமே உள்ளம் சேர
வந்திடும் பிணிகளை வருமுன் காத்துத்
தந்திடும் வரங்களைத் தரவே வந்து
கண்முன் நின்று காவியம் படைக்கும்
பெண்ணே உன்றனின் பெருமை கண்டே
என்னுள் நீயே என்றதோர் உணர்வில்
அன்னை உன்னை ஆண்டவன் வனைந்த
அற்புதம் நிறைந்தவள் ;அகிலம்
கற்பனை இலாத காணும் தெய்வமே !


7. குருநாதன் ரமணி
ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை
வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க
வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில்
தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை!
நீரால் தொட்டி நிறைந்தே வழியும்
நேரம் பார்த்தே நீரைப் பருக
வாயசம் அமரும் வழிகுழாய்! ... ...
மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே!
(வாயசம்.- காக்கை.)


8. அர.விவேகானந்தன்
இன்பம் பொங்கும் இருளை நீக்கும்
உன்னில் அறிவை ஊட்டி வளர்க்கும்
உறவை உனக்காய் உயர்த்திச் சேர்க்கும்
பறவை போலப் பாசம் வாய்க்கும்
பணிவை என்றும் பாங்காய் வளர்க்கும்
துணிவைக் கூட்டித் துன்பம் துடைக்கும்
நாளும் பள்ளியை நாடின்
மாளும் வாழ்வில் மண்டும் துயரே.


9. சியாமளா ராஜசேகர்
தேகம் சிலிர்த்திடும் தென்றல் தீண்டலில்
சோகம் விலகிடும் சோர்வும் பறந்திடும்
அலைகள் கொஞ்சிடும் ஆழியைக் கண்டால்
தொலைந்து போகும் துயரமும் விரைவில்
கொட்டு மருவியில் குளியல் போட
மட்டிலா இன்பம் மனத்தினி லூறும்
இயற்கையோ டிணைந்தால் இதமே
மயங்கிய நெஞ்சமும் மகிழ்ச்சியில் பொங்குமே !!


10. கவிஞர். பசுபதி
கன்னிப் பெண்களைக்
. . கர்ப்பிணி களையும்
கன்மியர் சிங்களர்
. கற்பழிக் கின்றார்
அன்னைநாட் டிலேயே
. . அன்னிய ரானார்
என்றமி ழினத்தர்
. . ஏங்கிசா கின்றார்
இன்றவர் தோல்வி
. . யுறினு(ம்) இறுதியில்
வென்றே முடிப்பார்
. .விரட்டுவார் பகைவரை
விடுதலை வேட்கையே
. . வெல்லும்
படுகொலை செய்தார்
. பயனற் றழிவரே!


11. முனைவர் பத்மநாபன்
அலையும் நெஞ்சை அடக்கி வைப்பாய்!
நிலையிலா வாழ்வில் நேர்மை நாடுவாய்!
இறையருள் வேண்டுவாய்! எளியோர்க் கீவாய்!
குறைகளைக் களைவாய்! குற்றம் தடுப்பாய்!
நல்லதைச் செய்வாய்! நாட்டிற் குழைப்பாய்!
நல்லவர் வாழ நன்மையைச் செய்வாய்!
இல்லெனின் சும்மா இருப்பாய்!
நல்லாற்றுப் படுத்திடும் நல்வழி இதுவே!


12.ஞா.நிறோஷ்
வண்ணப் பூக்கள் வாரி எடுத்துக்
கண்ணே உன்மேற் களிபெறத் தூவி
இன்பப் பொழுதுகள் இனிமை நினைவுகள்
அன்புக் கவிகள் அரற்றிப் பிதற்றிப்
பாதம் வருடிப் பக்கத் தமரும்
காதல் நிலையும் காதம் உளதோ
கண்மணி சொல்லாய் கனிவாய்
எண்ணம் நிறைந்தே இருப்பாய் எனுள்ளே...


13. நாகினி கருப்பசாமி
ஒழுக்கக் கட்டுடன் ஓங்கி நடந்திட
பழுத்த அறிவுடை பல்லோர் உரைத்த
தத்துவ விதையதில் தவறி மண்ணில்
மெத்தன மாந்தர் மேவும் பாதக
வினையது வாழ்வை வினையாய் விழுங்கிட
நனைந்திடும் அன்பு நளினம் சீர்கெடத்
தப்பின் வாசலைத் தாங்கும்
குப்பைத் தொட்டியும் குழந்தை பெறுதே!


14. விஜயகுமார் வேல்முருகன்
அல்லும் பகலும் அயரா துழைத்துச்
சொல்லும் பொருளும் சோர்விலாக் காத்தே
அழகிய தமிழில் ஆற்றல் பெருகிடப்
பழகிய நடையில் பாக்கள் புனைந்து
தழுவிடும் அன்னைத் தமிழைப் போற்றித்
தொழுதிடும் பாவலர் தொகுத்தே உரைத்த
தெள்ளுத் தமிழில் தேனெனும்
பள்ளுப் பாடப் பாங்குடன் எழுகவே!!


15. கலாம் ஷேக் அப்துல்காதர்
கலந்திடும் மகிழ்வினைக் களிப்பொடு நிரப்பியே
மலர்ந்திடும் பொழுதினை மனத்தினில் வளர்த்ததால்
அழகுறுக் குழலுடன் அலைமுகில் வடிவென
மெழுகதுச் சிலையென முழுவதும் எழிலுடன்
மழலையின் இனிமையாய மயக்கிடும் குரலுடன்
நிழலது வழங்கிடும் நிகரிலாக் குளுமையும்
சுழலுரும் மணியிசைத் தொடரென
முழுவதும் இலகுவாய் மெதுநடை பழகுமே!


16. இரா.கி.இராஜேந்திரன்
மோனத்தில் ஆழ்ந்து மாதுயில் கொள்வர்
மேனகை யாடிடும் மேடையோ நாவது
மேன்மையில் நர்த்தகி வாழ்த்தியே புகழ்வார்
வானுளத் தேவர்கள் வியப்பர் மயங்கியே
மாதவன் துதியில் ம்ர்கழிப் பாடலில்
யாதவத் திலகம் இளமை ஒலிக்கும்
மேதகு தமிழிசை வித்தகர்
வேதனை எண்ணவி விற்கிறார் பாடியே.


17. அழகர் சண்முகம்
மலர்ந்திடும் செந்தா மரையினைப் போலேப்
புலர்ந்திடும் பொழுதில் புத்தகம் விரித்து
நற்றமிழ் படித்தால் நாவே இனிக்கும்
மறறவர் சொல்லில் மயங்கிட வேண்டா
இனிப்பென் றுகாய்ச்சிய ஈயத்தை மொய்த்துக்
கனியினை விட்டுக் காய்கவர்ந் தற்று
வண்டமிழ் மொழியில் வளமா இல்லைக்
கண்டவர் கல்லைக் கரும்பெனக் கொண்டே
தலையில் தாங்கித் தரணியில்
அலைதல் விட்டொழி அருந்தமி ழினமே.!


18. பரமநாதன் கணேசு
அழுதது ஈழம் அணைப்பா ரின்றித்
தொழுதது இறைவா! துணைவா என்று!
கொன்றார் குவித்தார் கொடுமை செய்தார்
தின்றார் சீரெழில் தீந்தமிழ்ப் பெண்களை
உறங்கிக் கிடந்தது உலகம்
மறக்குமோ தமிழினம்! வலிக்குது நெஞ்சே!


19. அஸ்ஃபா அஷ்ரப் அலி
நன்னிலை பெற்றே ஞாலத் துளவுந்
தன்னிக ரற்ற தமிழே உன்னைத்
தாய்மொழி கொண்ட தமிழர் தம்மில்
வாய்மொழி கேட்க வந்திடுஞ் சினமே
அந்நிய மொழியே அசையும் நாவில் !
புண்ணிய மொழியாம் பூந்தமி ழென்றே
கலப்படஞ் செய்யும் தமிழினம்
விலக்கிட வேண்டும் விரைகநட் புகளே !


20. விவேக் பாரதி
தேகந் தழுவுந் தென்றலிற் பூமணம்
மோகங் கிளப்பிட ! மொய்த்திடும் வண்டினம்
பூவைச் சுற்றிடப் , பூந்தேன் பருகிட
நாவை அசைத்து நகர்ந்திடுங் காலை
வண்டினம் வீசிடும் வளமுடை யிறக்கையிற்
அண்டிய தூசும் அழகாய்க் காற்றிற்
கலப்ப தொப்பவே கன்னியே நின்விழி
மலர்ந்தென தின்விழி யோடே
அன்றொரு நாள்சேர்ந் தலர்ந்த காட்சியே !


21. சிதம்பரம் சு.மோகன்
மலைசா ரிடமும் மலையுங் குறிஞ்சி;
மலரும் வனமே மகிழ்தரும் முல்லை;
கழனியில் இருக்கும் களரே மருதம்;
அழகிய கடலின் அருகே நெய்தல்;
தூரல் துளியில் பாலை;
பேரென வுரைத்த பெரியோர் திறமே!


22. வனராசன் பெரியகண்டர்
ஊனினைத் தந்தாய் உயிரினைத் தந்தாய்
வானினைப் போலெனை வளர்த்துடன் வந்தாய்
அன்பினைத் தந்தாய் அறிவினைத் தந்தாய்
என்பசிப் போக்கி இன்முகங் கொண்டாய்
இன்பமுந் தந்தாய் ஏற்றமுந் தந்தாய்
பொன்பொருள் போலெனைப் போற்றியும் வந்தாய்
இன்றெனைப் பிரிந்தே எங்கோ பறந்தாய்
உன்மகன் மறந்தே உலகந் துறந்தாய்
என்னுயிர் தாயே ஏனோ
இன்னமும் உயிரது இருக்குது வீணே.
★★★★★

No comments: