பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

28 Oct 2015

முயன்று பார்க்கலாம் - 1





முயன்று பார்க்கலாம் - 1
நண்பர்களே.! இதோ முதல் பயிற்சி.

பாடல்களை நன்கு ஆழ்ந்து படித்துப் பின் எழும் ஐயங்களைக் கருத்துப் பகுதியில் கேளுங்கள். (பாடலைப் பற்றி உங்கள் உணர்வையும் பகிரலாம்.)


இதழகல் குறள் வெண்பா
******--*--**********************

நெஞ்சி லினிக்கின்ற நேரிழையே நீயின்றேல்
ஞ்சி யிராதே யிரா.!
இதழகல் நேரிசை வெண்பா
**********************************

காலையெழிற் சீரழகில் கன்னியெதிர் நிற்கின்றாள்
ஆலையத னெள்ளாய் அழிகின்றேன் - சேலையினில்
தென்றலென நீசிரிக்கத் தீயாய்த் தகிக்கின்றேன்
அன்றிலெனக் கண்ணே அணை.!
இதழகல் இன்னிசை வெண்பா
**********-*--*************************

கண்ணேயென் கற்கண்டே காரெழிலின் சீரழகே
தண்ணே ரெழிலே தளிரிடையே கண்ணிரண்டால்
ஆயிரந்தான் காயங்கள் ஆகி நலிகின்றேன்
சேயிழையே நீயென்னைச் சேர்.!
*பாவலர் மா.வரதராசன்*
★★★
குறிப்பு ; 
இப்பாடல்கள் "இதழகல்." எனப்படும் இதழொட்டாப் பாக்கள் ஆகும். (உதடு) இதழ்கள் ஒட்டாமலும், குவியாமலும், வி(பி)ரிந்த நிலையில் பாடுகின்ற வகையாகும்.
அதாவது,
ப், ம், வ் ஆகிய மெய்யெழுத்துள் மூன்றும்,
உ,ஊ,ஒ,ஓ,ஔ ஆகிய உயிரெழுத்துகள் ஐந்தும்,
இவை முறையே உயிருடனும், மெய்யுடனும் உறழ, மொத்தம்
3+5: 8
3*12: 36
5*15: 75
----
119. எழுத்துகள் வராமல் இயற்றப்படுவது "இதழகல் பாக்கள்" எனப்படும்.
புணர்ச்சியில் உடம்படு மெய் வரும் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். சான்று, நல்ல + இடம்,. இது புணர்ச்சியில் வகர உடம்படு மெய் பெற்று "நல்லவிடம்." என மாறும். அவ்வாறாயின் வி என்ற எழுத்து உதடு ஒட்டும்.
நண்பர்களே.! புரிகிறதா.? குழம்புகிறதா.? முயன்றால் முடியாததில்லை.
முயன்று பார்க்கலாம் வாருங்கள்.

2 comments:

பரமநாதன் கவிதைகள் said...

ஐயா உங்களின் பணி தொடர வாழ்த்துக்கள். உங்களின் இப்பணியினால் என்போன்றவர்கள் மரபுக்கவிதை எழுதும் முறைதனைக் கற்றுக் கொள்ளும் பேற்றினைப் பெற்றோம். வாழ்க வளமுடன். அன்புடன் பரமநாதன் கணேசு

மரபுமாமணி பாவலர் மா.வரதராசன் said...

நன்றி ஐயா! மகிழ்ச்சி.