பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

9 Oct 2015

பாட்டியற்றுக : 7 இன் தொகுப்பு.



அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! 
முன் பயிற்சிகளைப் போன்றே இப்பயிற்சியிலும் பலர் பங்கேற்றனர். பலரும் புதிதாகப் பங்கேற்பது இப்பகுதியின் வெற்றியே. அனைவரின் ஊக்கம் மிகுந்த பங்கேற்பால் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. அனைவருக்கும் நன்றி.
பாட்டியற்றுக: 7 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
நன்றி.!
***** ***** *****
பாட்டியற்றுக: 7
*ஆசிரிய விருத்தம்*


1. முனைவர் பத்மநாபன்
என்றனின் இதயம்! என்றான்
       இன்பமே! நீதான் என்றான்
தென்றலே !தேனே! என்றான்
       தெவிட்டிடாத் தித்திப் பென்றான்
அன்றவன் வலையில் வீழ்ந்தேன்
       அணைத்தவன் நுகர்ந்தான் சென்றான்
என்றவன் வருவான் என்றே
        ஏங்குதே நெஞ்சம் ஈங்கே!

2. அர.விவேகானந்தன்
அன்றுதான் அரிந்திட் டானே
       அரக்கியின் மூக்கை; நின்றே
கன்றினுக் கிரங்கும் தாயாய்
       கனிந்துமே அவத ரித்தான்
முன்வரும் இன்பம் சேர்ப்பான்
       முனைப்புடன் நிறையும் தீயை
வென்றுதான் கண்ணாய்க் காப்பான்;
        வெட்டியும் வீழ்த்து வானே!

3. சேலம் பாலன்
ஒன்றினைச் செய்ய வேண்டின் 
       உளபல வேலை தம்மில் 
நன்றதை உடன்செய் திட்டால்
       நல்மனம் அமைதி காணும்
நன்றதைப் பிறகு செய்வோம்
       ஞாபக மாக வென்றே 
அன்றதைத் தள்ளிப் போட்டால் அ
       துமறந் தேகிப் போமே !

4. குருநாதன் ரமணி
கண்முனே தோன்றும் யாவும்
     காட்சியே உண்மை யல்ல
உண்ணுதல் உறங்கல் யாவும்
     உடலிதன் பொருட்டே ஆகும்
மண்ணிலே நீரைப் போல
     மறைந்துள ஆன்மா விற்கோ
எண்ணமே பகையென் றாகும்
    இம்மையே சிறையென் றாமே!

5. சரஸ்வதி பாஸ்கரன்
கருவறைப் பயணம் தன்னில் 
       கனவது மிகுந்து நிற்கும் . 
திருவடிச் சேர்வை காண 
      தினமுனை நினைத்தே ஏங்கும். 
வருவதும் கடவுள் தந்த 
      வரமது வணங்கும் வாழ்க்கை . 
ஒருமுறை பிறப்பே நம்பு . 
       ஒதுங்கியும் மரணம் வீழ்க . 
 
6. வெங்கடேன் சீனிவாச கோபாலன்
நல்லவர் வாழ்வில் என்றும்
     நடுங்கியே நிற்றல் கண்டும்
அல்லவர் வாழ்வில் என்றும்
     அதட்டியே வெல்லல் கண்டும்
நல்லதை இனிநாம் செய்யோம்
      நமக்கது தீமை என்றே
அல்லதைத் தேர்ந்து நிற்றல்
     அறவழி யல்ல வாமே!
அழுக்கென மாறிப் போச்சே.

7. பரமநாதன் கணேசு
உழைப்பினை யுறிஞ்சி நாளும்
       உயர்வுறப் பொருளைத் தேடும்
பிழைப்பினைக் கொண்டோ ரெல்லாம்
       பெரும்புகழ் சூடிப் பாரில்
திளைத்தவர் போடும் கூத்தால்
        சிறப்புறக் கட்டிக் காக்கும்
அழகுறு மனித வாழ்வும்
       அழுக்கென மாறிப் போச்சே!
★ 
8. கவிஞர் பசுபதி
நோயினில் கிடந்து நானும்
         நொந்துபோய்க் கலங்க லாமோ?
சேயெனத் தமிழைக் காக்கும்
         செயலினைத் தடுக்க லாமோ?
தாயினும் சிறந்த வேலா
         தவித்திடும் என்னைக் காப்பாய்
பாயினில் கிடத்தா தென்னை
         பயனுற வாழ்விப் பாயே!
 
9. வனராசன் பெரியகண்டர்
நாய்களே நரிக ளோடு
        நல்லவர் வேடந் தாங்கி
காய்களே கனியென் கின்றார்
        காண்பவ ராமென் கின்றார்
பேய்களே நாட்டை யாள 
       பெருந்துணை மக்க ளென்றால்
சேய்களே தாயின் மார்பை 
       சிதைத்திடுங் கொடுமை தானே!

10. அழகர் சண்முகம்
கருவினில் அமிழ்த மூட்டிக்
        கருத்தினில் கனிவு காட்டிப்
பெருவிரல் பிடிக்க நீட்டிப்
       பிணிக்குறை வருத்தம் போக்கிக்
குருவிபோல் சிறுகச் சேர்த்துக்
      குணமுடன் வளர்த்த தாயைத்
தெருவினில் தவிக்க விட்டுத்
      திருப்பணி செய்தல் வீணே.!

11. கலாம் ஷேக் அப்துல் காதர்
பாவையை விட்டு வந்து
       பாலையின் சூட்டில் நொந்து
தேவையைக் கருத்திற் கொண்டு
       தேடினோம் செல்வம் இன்று
யாவையும் மறக்கும் நெஞ்சம்
       யாழிசை மழலை கொஞ்சும்
பூவையும் மிஞ்சும் பிள்ளை
       பிரிவினைத் தாங்க வில்லை!

12. இரா.கி.இராஜேந்திரன்
வண்டுகள் வந்து பாடும்
         வளமுடன் தேனைக் கொள்ளும் 
வண்ணம யில்கள் ஆடும் 
         வனப்பினில் சோலை ஓங்கும்
எண்ணமும் இருத்தி என்றும் 
         எழும்பியே எழுச்சி பொங்கும் 
கண்ணனின் ராதை கூடிக்
        களித்திடும் சோலை தானே!

13. சுரேஷ் சீனிவாசன்
அண்டிய பேரைக் காக்க
        ஆண்மையில் ஆற்ற லுண்டு
பெண்களில் பேய்க ளுண்டு
        பெண்மையில் தெய்வ முண்டு
எண்ணிய நோக்கம் வெல்ல
       ஏற்றமும் வாழ்வில் கண்டு
உண்மையை அறிந்து கொண்டு
       உலகினில் வாழ லாமே!

14. கவிஞர் வள்ளிமுத்து
கடகட முழங்கு வானம்
        கவின்மிகு மழையைத் தூவும்
படபட இடியும் மேவும்
        பளிச்சிடு மின்ன லாடும்
மடமட வெள்ள மோடும்
        மணலினை யிழுத்துப் போடும்
அடடட சாரல் காலம்
        அழகினை வனைந்து போமே!

15. நாகினி கருப்பசாமி
மடியினில் சுரக்கும் பாலை
      மாற்றமாய்க் கருவி கொண்டு
கடிதினில் கறக்கும் வித்தை
      கலைகளும் வளரும் மண்ணில்
இடியென மறுப்புச் சொல்லி
      ஈரமும் தழைக்க அன்பால்
வடித்திடும் விழிநீர் வாழ்வை
      வளமுடன் காக்கும் ஆறே!

16. நிறோஸ் ஜி.அரவிந்த்
நடிக்கவே பிறந்தேன் நானும்
      நடிக்கிறேன் இங்கு நாளும்
துடித்திடும் வாழ்க்கை போகத்
     துரியமே துணையாய் ஆகப்
படிக்கவோ ஞானப் பாட்டு
     பாழ்மனக் குரல்தான் கேட்டு
வடித்திடு ஞானப் பாட்டில்
     வாலையும் வருவாள் தானே!

17. சியாமளா ராஜசேகர்
செந்தமிழ்ப் பாட்டு கேட்டால் 
         செவியொடு குளிரு முள்ளம் !
சிந்தையில் மகிழ்ச்சி வெள்ளம் 
         செம்மையாய்ப் பொங்கிப் பாயும் !
சந்தமும் கொஞ்சிக் கூட 
         சந்தன மணமும் தோற்கும் !
சுந்தரத் தமிழே என்றும் 
        சொக்கிட வைக்கும் தேனே !

18. சீராளன் வீ.
கந்தகக் கருந்தீ பட்டுக் .....கருகிடும் போதும் நாவால் 
எந்தையே தாயே என்று .....எவரையும் அழைத்தி டாமல் 
சிந்தையில் ஊறிப் போன ....சீர்கமழ் ஈழத் தாயை 
வந்தனம் செய்து வீழ்ந்த .....மறவரைப் போற்று வேனே !

19. இளம்பரிதியன்
நீந்திடு நினைவில் நின்றாள்
       நினைப்பினுட் பொருளாய் ஆனாள்
ஏந்திய அன்புத் தீயில் 
       என்னையே வாட்டு கின்றாள் 
தீந்தமிழ் தோய்த்த தேனில் 
       தீங்கனி ஊற லிட்டு
மாந்திய இன்பம் தந்தாள் 
       மயங்கினேன் இவளன் பாலே!

20. தமிழகழ்வன் சுப்பிரமணி
முருகனே! கந்த னே!கார்
       முகில்வணன் மருக னே!செந்
திருக்கரத் தால ருள்சேர்
       திருப்பரங் குன்றக் கோனே!
செருப்புகும் செவ்வேல் வீர!
       சீரலை வாயிற் கோவே!
திருப்புகழ் நாளும் ஓதத்
        திருவருள் மோதும் அன்றே!

21.நடராசன் பாலசுப்பிரமணியன்
தசரதன் மகனாய் வந்தான் 
       தலைமகன் முடியை ஈந்தான்
வசிட்டனைக் குருவாய்க் கொண்டான் 
       வாலியைத் துளைத்தான் அம்பால்
தசமுகன் உயிரைக் கொண்டான் 
        தன்மனை சிறையை மீட்டான்
குசலவன் மகவாய் ஈன்றான் 
        குரங்கவன் தொழநின் றானே!

22. சுந்தரராசன்
பாயிரம் நின்மேல் செய்தேன்
        பரமனின் மைந்தா! - இந்த
மாயிரு ஞாலம் தன்னில்
        மகனென என்னைக் காக்கும்,
தாயுமுன் தாயே! - ஆங்கே
        தம்பிநான் முறையு னக்கு!
தோயுதுன் பதத்தில் உள்ளம்!
       தோல்விகள் துரத்து வாயே!

23. விஜயகுமார் வேல்முருகன்
அருந்தமிழ் நூல்கள் கற்றே
        அழகிய கவிகள் செய்வோம்
கருத்துடன் தமிழில் என்றும்
         கவர்ந்திடும் பொருள்கள் கொள்வோம்
பருகிடும் தேனைப் போலே
          பாக்களை இனிமை செய்வோம்
உருகிடும் உள்ளம் தன்னை
          உயிரெனும் தமிழில் சேர்த்தே!
★★★★

மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

No comments: