பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

26 Mar 2016

‪சிந்துப்பாடுக 1 இன் தொகுப்பு‬


அன்பு நண்பர்களே !
சோலைக் கவிஞர்களே! சிந்துப்பாடுக முதல் பயிற்சி செவ்வ னே முடிந்தது.
பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் பாக்களைப் படைத்தனர். புதிய யாப்பைப் பயில்கின்றஆர்வம் பலரிடத்தே இருந்ததைக் காண முடிந்தது. அனைவருக்கும் நன்றியும், வாழ்த்தும் உரித்தாகுக.
முதல் பயிற்சியின் தொகுப்பு, அப்பயிற்சியில் கலந்து கொண்ட கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. 
கொடுக்கப்பட்டுள்ள வரிசை எண் தரவரிசைக்குரியதன்று. கவிஞர்கள் கவிதைளை அனுப்பிய வரிசைக்குரியது.
அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்...
இந்தத் தொகுப்புப் பாடல்களைப் படிக்க வேண்டா. ★பாடிப் பார்க்கவும். அப்போது தான் சுவைக்கும்.
கவிஞர்களை வாழ்த்துங்கள்...உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

சிந்துப் பாடுக - 1 (ஆனந்தக் களிப்பு)


★அன்பு நண்பர்களே! கவிஞர்களே! 
புதிய பகுதியின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.:
பாட்டியற்றுக பயிற்சி அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்பெற்றது. வெற்றிபெற உதவிய அனைவருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
"#சிந்துப்பாடுக" இந்தப் பயிற்சியிலும் தவறாமல் கலந்து கொண்டு, இசைத்தமிழ் வடிவங்களைக் கற்க அன்புடன் அழைக்கிறேன். உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.
★இந்தப் பயிற்சிப் பகுதி புதிதாகப் பாப்புனைவோர் அஞ்சியொதுங்கா வண்ணம் எளிமையாகவும், பாப்புனைய தேவையான குறிப்புகளோடும் தொடரும். மேல் விவரம் வேண்டுவோர் முன்னோர் யாப்பியல் நூல்களைப் பார்க்கவும்.
சிந்துப் பாடல்களின் இலக்கணங்கள் முனைவர் இரா.திருமுகன் அவர்களின் "சிந்துப் பாவியல் " நூலை அடியொற்றியும், என் சொந்தப் பயிற்சியைக் கொண்டும் கூறப்படுகின்றன.

சிந்துப் பாடல்கள் - ஓர் அறிமுகம். நிறைவுரை.



நிறைவுரை.
*************
பாட வேறுபாடுகள் : 
பிற நூலாசிரியர் வழி விவாதங்கள் தள்ளப்படும் என்றதற்குக் காரணமுண்டு. இயல்பான இசைப்பாடல் வடிவங்களான சிந்துப் பாடல்களை, சீர், தளை, யாப்பு எனத் தளையிட்டு மக்களின் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் போக்கே அவற்றிற்கு "யாப்பியல் வழி "இலக்கணம் வகுப்பதாகும். அந்த வழி விவாதங்கள் பெரு வேறுபாடு கொண்டிருக்கும் என்பதால் விவாதத்தில் தீர்வு கிடைக்காது.

சிந்துப் பாடல்கள் - ஓர் அறிமுகம். பாடம் - 2



பாடம் - 2
**********
சிந்து - இலக்கணம்
பாமர மக்களின் வாழ்வியலுடன் இரண்டறக் கலந்த சிந்துப் பாடல்கள் அவர்தம் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்ததால், அவற்றில் இலக்கியச் சொற்கள் அதிகமின்றி வழக்குச் சொற்களே அதிகமிருந்தன. கொச்சைச் சொற்களும் கலந்திருந்தன...ஆனால் அவை எதுகை, மோனை, இயைபு நயம் நோக்கி ஆளப்பெற்றன. 
தெரிசனம் (தரிசனம்) , தெசரதன் (தசரதன்) போன்று மோனைக்கும், எதுகைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பெற்றன.
இவ்வாறான பாடல்கள் வாய்வழியாக, செவி வழியாகவே இருந்தன. அவற்றிற்கென இலக்கணம் வகுக்கப்படாததால், பின்வந்த பாட்டியல் நூலோர் ஏதும் வகுத்தாரில்லை. 
அ.கி.பரந்தாமனார், புலவர் குழந்தை போன்றோர் சிந்துப் பாடல்களுக்கு அவை வழங்கப்பட்ட முறைமையினான் வகுத்த இலக்கணமும் சரியான முறையில் அமையவில்லை. பல முரணான விதிகளும் வகுத்தனர். (சான்று : கும்மிச் சிந்துக்கு வெண்டளை வேண்டும் என்றது)

சிந்துப் பாடல்கள் - ஓர் அறிமுகம் - பாடம் : 1




பாடம் : 1
**********
நாட்டுப்புற மக்களின் உரிமைச் சொத்தாகிய நாட்டுப்புறப் பாடல் வகையைச் சேர்ந்தவை"சிந்துப் பாடல்கள் ". 
யாப்பியல் நூல்களில் கூறப்பட்ட பாவகைகளின் இலக்கணக் கட்டுக் கோப்புகளில் அடங்காமல், தங்கள் மனத்தில் எழுந்த உணர்வுகளின் வெளிப்பாடாக, வடிகாலாகப் பாமர மக்கள் இப்பாடல்களைப் பாடிவந்தனர்.
இலக்கியத்திற்கே இலக்கணம் என்கின்ற தொல்காப்பியரின் பண்பு இப்பா வகைகளுக்குப் பொருந்தும். ஏனெனில் இவற்றை யாப்பியல் கூறுகளான தேமா, புளிமா போன்றவற்றால் அடக்க முடியாது. அவற்றில் இவை அடங்காது. பண், பண்ணத்தி, தோல், பாட்டு போன்ற சொற்களால் தொல்காப்பியர் இவற்றைப் பொதுவாக அடக்கினாரேயன்றி அவற்றிற்கு இலக்கணம் வகுத்தாரில்லை. அவை நாட்டுப்புறப் பாமரர்களின் உணர்வில் கலந்த உரிமை முழக்கங்கள்.
தங்கள் வாழ்வில் நிகழ்ந்த பிறப்பு, இறப்பு, திருமணம், பூப்புனித நீராட்டு, கோயில் திருவிழாக்கள், உழவுத் தொழிலில் ஈடுபடும் போது, நெடுந்தொலைவு நடைபயணத்தின் போது அம்மக்கள் இந்தப் பாடல்களைப் பாடினர். சந்தத்துடன் அவை இசைத்துப் பாடக் கூடியவை என்பதால் "இசைத்தமிழ் " வகையில் அவற்றை அடக்கலாம்.

கடவுள்என்தோழன்‬ 8


....தொடர்ச்சி : 8....

சுயநலமாய் வாழ்கின்றோர் பரம ஏழை
          தூய்மையிலா உள்ளத்தார் ஏழை.! நாட்டில்
கயமையினைப் புரிகின்ற கசடர் ஏழை
          கருணையிலா மனங்கொண்டோர் ஏழை! போதை
மயக்கத்தாற் பொறுப்பின்றி வாழ்வோர் ஏழை
          மானுடத்தைக் கொன்றொழிக்கும் மாக்கள் ஏழை
நயமாகப் பேசிப்பின் நட்பைக் கொல்லும்
          நரிக்குணத்தைக் கொண்டவர்கள் ஏழை தம்பீ!

16 Mar 2016

‪பாட்டியற்றுக 25 இன் தொகுப்பு‬


நிறைவு பயிற்சி...
அன்பு நண்பர்களே! கவிஞர்களே! பாட்டியற்றுக : 25 இன் தொகுப்பு அப்பாடல்களை இயற்றிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
புதிதாகப் பல கவிஞர்கள் இணைந்திருப்பது மனத்திற்கு மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் தருகிறது.
பைந்தமிழ்ச் சோலையில் விருப்பத்துடன் பலர் இணைவது, தமிழ் மரபைக் கற்கப் பலரும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பதையே காட்டுகிறது. 
கொடுக்கப்பட்டுள்ள எண்கள் தரவரிசைக்குரியதல்ல. கவிஞர் அனுப்பிய வரிசைக்குரியதே.
கவிஞர்களை வாழ்த்துங்கள். 
கவிதைகளைப் படியுங்கள். நண்பர்களுக்குப் பகிருங்கள்.
பாட்டியற்றுக : 25

பாட்டியற்றுக‬ - 25



நண்பர்களே.! கவிஞர்களே.! அறிஞர் பலரும் பாராட்டும் 
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 25" இதோ.!
முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, இந்தப் பதிவைப் பகிர்ந்தும், மற்ற நண்பர்களுக்குத் தெரியப்படுத்தவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.! 

‪கடவுள்என்தோழன் - 7‬




....தொடர்ச்சி,..7

ஒருகையில் நான்மறைகள் வைத்துக் கொண்டும்,
         ஒருகையில் குர்ரானை ஏந்திக் கொண்டும்,
ஒருகையில் துலாக்கோலை வைத்துக் கொண்டும்,
         ஒருகையில் சிலுவையினை ஏந்திக் கொண்டும்
திருக்கடவுள் என்னெதிரே நின்றி ருந்தார்
         திங்களொளி போல்மேனி திகழக் கண்டேன்.
அருளபயம் தருகின்ற காட்சி தந்தான்
         ஆண்டவனே என்நண்பன் வடிவில் வந்தான்.!

‪கடவுள்என்தோழன்‬ - 6




....தொடர்ச்சி..6

பொல்லாங்கும் வஞ்சனையும் பொய்யும் சூதும்
         புவிவாழ்வில் கீழ்மையிலே சேர்க்கும்.,மாறாய்
நல்லன்பும் மாந்தயினக் கனிவுங் கொண்டால்
         நாமிறந்த பின்னாலும் வாழ்வோம் மண்ணில்.
எல்லோர்க்கும் ஏற்றவிதம் வாழ்வை மாற்றி
         எல்லோர்க்கும் ஏற்றவிதம் அன்பைக் கூட்டி
எல்லோரும் இன்பமாக வாழ வேண்டும்
         என்றுரைத்தான் என்நண்பன் ...அசந்து போனேன்.!

10 Mar 2016

எதற்கு எழுதுகிறேன்?




கைக்காசைச் செலவழித்துப் புகழைச் சேர்க்கும்
கவிஞர்கள் பல்லோரில் ஒருவ னல்லேன்
மொய்க்கின்ற வண்டாக விருதைத் தேடி
முனைப்போடு சுற்றுகின்ற சிறுமை கொள்ளேன்
பைக்குள்ளே பணத்தோடும் புகழ்ப்பாட் டோடும்
பலரிடத்தே அடிவருடும் பண்பைக் கொள்ளேன்
தைக்கின்ற சொல்வீசிப் பகைவர் கட்குச்
சாட்டையடி கொடுக்கின்ற பாவ லன்நான்!

விருதுக்கும் பதவிக்கும் பட்டத் திற்கும்
"விலைபோனால்" நானெதற்கிங் கெழுத வேண்டும்?
எருமைகளாய் நாலைந்து தடியர் தம்மை
எனக்காக அடியாளாய் வைத்தி ருந்தால்
பெருமைகளும் மாலைமரி யாதை யெல்லாம் 
பெற்றிடுதல் மிகவெளிதே..அதைநான் வேண்டேன்
கருத்துள்ள கவிதைகளால் குமுகா யத்தின் 
களைகளைதல் மட்டுந்தான் என்றன் வேலை!

சிறப்பாக நான்வாழ வேண்டு மாயின்
திரைத்துறையில் எப்போதோ நுழைந்தி ருப்பேன்
பிறகேன்நான் இலக்கணத்தைக் கற்க வேண்டும்.!
பிதற்றலொடு வேறெதுவும் எழுத லாமே.
முறையாகப் படித்திங்குப் பட்டம் பெற்று
முயல்வோர்கள் பலருக்கும் வாய்க்க வில்லை
சிறப்பான செந்தமிழின் "மரபைக் காக்கும் "
சிலபேருள் ஒருவன்நான் அதுவே போதும்.!

பாவலர் .மா.வரதராசன் 

நெஞ்சொடு கிளத்தல்



நான்பெற்ற இன்பத்தை நானறிந்த வாறாக
ஏன்தந்தேன் எல்லோர்க்கும் என்னெஞ்சே - வான்பெய்
மழையெந்தக் கைம்மாறு மக்களிடம் கேட்கும்
விழைவாலே சொன்னேன் விரைந்து.!

பணத்திற்கா அன்றிப் பதவிக்கா உண்ணும்
உணவுக்கா இப்பணிசெய் கின்றேன் - கணந்தோறும்
இல்லாள் எரிச்சலும் என்கால வீணடிப்பும்
தொல்லை பலகண்டேன் தொய்ந்து!

கடவுள் என் தோழன், 5



.....தொடர்ச்சி : 5
ஆசைதரும் உணர்வுகளால் உந்தப் பட்டே
          அல்வழியில் செல்கின்ற தீயோர், தங்கள்
காசைத்தம் துணையாகக் கொண்டு ழன்று
          கலக்கத்தில் போய்வீழ்வர்.,இவர்கள் பெற்ற
ஆசைவழி யின்பங்கள் இவர்க்குப் பின்னால்
          ஆருக்கும் உதவாமல் புதையும் மண்ணில்.
மாசில்லா நல்வாழ்க்கை வாழ்வோ மாயின்
          வையத்து வெற்றியெலாம் வாசல் நிற்கும்.!

கடவுள் என் தோழன், 4


தொடர்ச்சி...4

"என்னிடத்தில் மகிழ்வாகப் பேசும் போதே
         ஏன்முகத்தில் கவலை"யென நண்பன் கேட்டான்
"ஒன்றுமிலை" என்றேன்நான்... "மறைக்கா தேநீ 
         உள்ளத்தில் உள்ளவற்றைச் சொல்லி விட்டால்
உன்மனத்தில் அமைதிவரும்" என்றான் நண்பன்
         "உண்மைதான் என்மனத்தின் எண்ண மெல்லாம்
உன்னிடத்தில் சொல்கின்றேன்" எனத்தொ டங்கி
         உள்ளத்தின் உணர்ச்சிகளைக் கொட்டு கின்றேன்.!

கடவுள் என் தோழன், 3


தொடர்ச்சி,...3

பொன்னான சுந்தரரைத் தடுத்தாட் கொண்டு
        புவியினிலே நட்புக்குக் காட்டாய் நின்று
என்னப்பன் சிவனாண்டி தோழ னானான்.
        ஏழுமலை குசேலரிடம் தோழ னானான்
என்னய்யன் முருகன்வீர பாகு வோடும்
        இராமபிரான் குகனோடும்...உலகோர் போற்றும்
பொன்னம்ப லத்துவாசன் வாப ரோடும்
        போற்றுவிதம் தோழமையாய்ப் பழகி னார்கள்!

கடவுள் என் தோழன், 2



தொடர்ச்சி....(2)

ஆண்டவனை எப்படிநீ பார்ப்பா யென்றே
         அடுத்ததாக ஒருகேள்வி எழுதல் கூடும்
ஆண்டவனைத் தாயாகப் பார்த்தோ மானால்
         அன்பென்ற எல்லைக்குள் அடங்கிப் போகும்
ஆண்டவனைத் தந்தையாக ஆசா னாக
         அறிவென்ற எல்லைக்குள் அடக்க மாட்டேன்
ஆண்டவனைக் காதலனாய்ப் பார்த்தோ மானால்
         அதுசிறிய மயக்கத்தில் முடிந்து போகும்.!

கடவுள் என் தோழன் 1



இக்கவிதை, 28/01/2012 அன்று திருநெல்வேலி மாவட்டம் திருமலாபுரம், வடக்குத்தியான் ஆலயக் குடமுழுக்கு விழாவின் "சிறப்புக் கவியரங்கில் " பங்கேற்ற என் கவிதை.
பொதுத் தலைப்பு : இறைவன் இருப்பது யாராக..,!

1. தாயாக 2. தந்தையாக 3. ஆசானாக 4. தோழனாக 5. காதலனாக.

என் தலைப்பு...
கடவுள் என் தோழன் (1)
*************************
யாராக ஆண்டவனும் இருக்கின் றானென்
         றருமையான தலைப்பொன்றைத் தந்துள் ளார்கள்
வேரோடி வளர்ந்திருக்கும் மரங்க ளுக்கு
         மேல்தெரியும் இலையாலே பெயரை வைப்பர்
பேரோடு திரிகின்ற மனித ரெல்லாம்
         பேரொளியின் வேராலே வளர்ந்த வைதாம்
யாராக இறைவனைநாம் காண்கின் றோமோ
         அப்படியே கண்களுக்குத் தெரியும் தெய்வம்.!

....(தொடரும்)

4 Mar 2016

‪பாட்டியற்றுக 24 இன் தொகுப்பு‬




அன்பு நண்பர்களே! கவிஞர்களே! பாட்டியற்றுக : 24 இன் தொகுப்பு அப்பாடல்களை இயற்றிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
புதிதாகப் பல கவிஞர்கள் இணைந்திருப்பது மனத்திற்கு மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் தருகிறது.
பைந்தமிழ்ச் சோலையில் விருப்பத்துடன் பலர் இணைவது, தமிழ் மரபைக் கற்கப் பலரும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பதையே காட்டுகிறது. 
கொடுக்கப்பட்டுள்ள எண்கள் தரவரிசைக்குரியதல்ல. கவிஞர் அனுப்பிய வரிசைக்குரியதே.
கவிஞர்களை வாழ்த்துங்கள். 
கவிதைகளைப் படியுங்கள். நண்பர்களுக்குப் பகிருங்கள்.
பாட்டியற்றுக : 24
சமநிலை மருட்பா 
(கைக்கிளை) 
****************

பாட்டியற்றுக - 24


நண்பர்களே.! கவிஞர்களே.! அறிஞர் பலரும் பாராட்டும் 
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 24" இதோ.!
முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, இந்தப் பதிவைப் பகிர்ந்தும், மற்ற நண்பர்களுக்குத் தெரியப்படுத்தவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.! 
*** *** *** ***
பாட்டியற்றுக: 24
மருட்பா
(கைக்கிளை) 

‎பாட்டியற்றுக 23 இன் தொகுப்பு‬


அன்பு நண்பர்களே! கவிஞர்களே! பாட்டியற்றுக : 23 இன் தொகுப்பு அப்பாடல்களை இயற்றிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
புதிதாகப் பல கவிஞர்கள் இணைந்திருப்பது மனத்திற்கு மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் தருகிறது.
பைந்தமிழ்ச் சோலையில் விருப்பத்துடன் பலர் இணைவது, தமிழ் மரபைக் கற்கப் பலரும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பதையே காட்டுகிறது. 
கொடுக்கப்பட்டுள்ள எண்கள் தரவரிசைக்குரியதல்ல. கவிஞர் அனுப்பிய வரிசைக்குரியதே.
கவிஞர்களை வாழ்த்துங்கள். 
கவிதைகளைப் படியுங்கள். நண்பர்களுக்குப் பகிருங்கள்.
பாட்டியற்றுக : 23
மருட்பா
*********

பாட்டியற்றுக - 23


நண்பர்களே.! கவிஞர்களே.! அறிஞர் பலரும் பாராட்டும் 
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 23" இதோ.!
முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, இந்தப் பதிவைப் பகிர்ந்தும், மற்ற நண்பர்களுக்குத் தெரியப்படுத்தவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.! 
*** *** *** ***
பாட்டியற்றுக: 23
மருட்பா
(செவியறிவுறூஉ)