பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

16 Mar 2016

பாட்டியற்றுக‬ - 25



நண்பர்களே.! கவிஞர்களே.! அறிஞர் பலரும் பாராட்டும் 
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 25" இதோ.!
முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, இந்தப் பதிவைப் பகிர்ந்தும், மற்ற நண்பர்களுக்குத் தெரியப்படுத்தவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.! 


*** *** *** ***
பாட்டியற்றுக: 25
ஒற்றிலா வெண்பா
*********
யாவையுமா யானா ளபிராமி யாளவ
ளாவி யனைய அடியிணை - தேவையை
நாளு மகிழ நலமே யருளிட
மாளுத லேனோ வினி! 
* பாவலர் மா. வரதராசன்*
கருத்தூன்றுக.
இப்பாடல் ஒற்றெழுத்துகள் வராத வண்ணம் அமைந்ததால் "ஒற்றொழி வெண்பா " அல்லது "ஒற்றிலா வெண்பா " எனப்படும். 
(இது நானாக அமைத்தது. பாட்டியல் நூலுள் இதற்குக் குறிப்புகள் தேட வேண்டா) 
இது நேரிசை வெண்பாவே. ஒற்றில்லாமல் எழுதுதல் சவாலானது என்பதால் தனிப்பயிற்சியாகக் கொடுத்துள்ளேன்.
முதல் பயிற்சி எளிமையாய்த் தொடங்கியது. நிறைவு பயிற்சியைக் கடினமாக முடிக்கலாம்.
பொது இலக்கணம்.
* வெண்பாவின் இலக்கணங்களே இதற்கும்.,
* மாமுன் நிரை, விளம்முன் நேர், காய்முன்நேர் என்பது வெண்டளைக்கு விதி.
* தனிச்சீரும் முதலிரண்டு அடிகளும் ஓரெதுகையாகவும், பின்னிரண்டு அடிகள் வேறு எதுகையாகவும் பெறும். (அனைத்தும் ஓரெதுகையாகவும் வரலாம்)
* அடிதோறும் பொழிப்பு மோனையைப் பெற்று, (1,3ஆம் சீர்களில்)
* ஈற்றுச்சீர் நாள்,மலர்,காசு,பிறப்பு எனும் நான்கு வாய்ப்பாட்டுள் ஒன்றைக் கொண்டு முடிவதும்,
நேரிசை வெண்பா எனப்படும்.
‪#‎முக்கியவிதி‬
★ ஒற்று எழுத்துகளே இல்லாமல் அதாவது, புணர்ச்சியில் ஒற்றை மறைத்து, வல்லினம் மிகுமிடங்களில் ஒற்று வருவதைக் கருத்தில் கொண்டு முழுவதுமாய் ஒற்றில்லாமல் எழுத வேண்டும். இதுவே
‪#‎ஒற்றிலாவெண்பா‬ ஆகும்.
இத்தகைய ஒரு ஒற்றிலா நேரிசை வெண்பாவை, 
விரும்பிய கருத்தமைய வரும் வெள்ளிக்கிழமைக்குள் இப்பதிவின் கருத்துப் பகுதியில் Coment மட்டும் எழுதி அனுப்புங்கள்.
அன்பு கூர்ந்து ஒருவர் ஒரு பாடலை மட்டும் அனுப்பவும். மற்ற பாடல்களைச் செம்மைப்படுத்த நேரம் ஒதுக்க உதவியாக இருக்கும்.
★★★

No comments: