பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

10 Mar 2016

கடவுள் என் தோழன், 5.....தொடர்ச்சி : 5
ஆசைதரும் உணர்வுகளால் உந்தப் பட்டே
          அல்வழியில் செல்கின்ற தீயோர், தங்கள்
காசைத்தம் துணையாகக் கொண்டு ழன்று
          கலக்கத்தில் போய்வீழ்வர்.,இவர்கள் பெற்ற
ஆசைவழி யின்பங்கள் இவர்க்குப் பின்னால்
          ஆருக்கும் உதவாமல் புதையும் மண்ணில்.
மாசில்லா நல்வாழ்க்கை வாழ்வோ மாயின்
          வையத்து வெற்றியெலாம் வாசல் நிற்கும்.!


மாசகற்றி வாழ்வதுவே வாழ்க்கை யென்று
          மற்றவர்க்குப் பயன்தந்து வாழும் பேரைப்
பேசுகின்ற கடவுளெனக் கொள்வோ மாயின்
          பெறற்கரிய வெற்றிகளோ தானே சேரும்.
ஓசோனின் ஓட்டையினை அடைக்கும் நண்பா
          உன்மனத்தின் ஓட்டையினை அடைப்ப தெந்நாள்?
தூசோடு நம்முளத்தை வைப்போ மாயின்
          தோல்விகளே நம்வீட்டுக் கதவைத் தட்டும்!

சந்தணமும் தான்தேய்ந்து மணத்தை நல்கும்
          தாளிழந்தும் நாள்காட்டிக் காலம் காட்டும்
வெந்துடலம் போனாலும் மெழுகும் கூட
          மேன்மைமிகு ஒளிதந்து வாழ்வி ழக்கும்
தந்துதவி வாழ்வதிலே பிறருக் கென்று
          தனிமகிழ்ச்சிப் பொங்கிவரும் உணர்ந்த துண்டா?
சிந்தையிலே பொதுநலத்தைத் தேக்கி வைத்துச்
          சிறப்போடு வாழ்பவனே மனித னாவான்.!!!

...தொடரும்...!

No comments: