பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

5 Sept 2019

நோவறு_பதிகம்

நோவறு_பதிகம்
* * * * * * * * * * *
பாவலர் மா.வரதராசன்
(என் குடும்பச்சூழலையும், மன இறுக்கத்தையும் நன்கறிந்த என் கெழுதகை நண்பர் மன்னை வெங்கடேசன் அவர்கள் நீண்ட காலமாக "நோயறு பதிகம்"

3 Apr 2019

நெஞ்சொடு கிளத்தல் .

இன்றைக்கு (நாள் – 24.03.2019 ) நிகழ்ந்த ஒருநிகழ்வால் மனம் கொதித்துக் கொண்டிருக்கிறது. அம்மனத்தை ஆற்றுவிதத்தான் 'என்னெஞ்சே அமைதிபெறு ' என

                          நெஞ்சொடு கிளத்தல் .

ஒற்றை இலக்கப் பாடல்கள் பாவலர் மா.வரதராசன் 
இரட்டை இலக்கப் பாடல்கள் விவேக்பாரதி 


கேளாய் மடநெஞ்சே கீழோர் நிறைவையம்
தேளாய்க் கொடுக்காற் றிகைப்பூட்டும் - நாளாக
எல்லாம் தெளிவாகும் ஈசன் செயலென்று
நல்லதே நாளும் நினை                                                                         .

நினைவே அழையாதே நீயுந்தேம் பாதே
கனவே அனைத்தும் கலையும் - மனமே
அமைதியுடன் வையத்தின் ஆட்டத்தைக் கண்டால்
சுமையெதுவும் இல்லை சுகம்!

சுகமொன்றே நோக்காய்ச் சுமக்கின்றார் பல்லோர்
முகம்முன்னே பாடித் துதிப்பர் - அகத்திலோ
ஆயிரம் கீழ்மை அணைந்திருக் கச்செய்வான்
பேயினும் தீய செயல்

செயல்கண்டு பல்லோர் செழிப்பெல்லாங் கண்டு
வியப்புற்றுச் செய்திடுவார் வஞ்சம் - அயலானா
நம்நிலைமை மாற்றுவது நன்னெஞ்சே தேம்பாதே
கம்மென் றிருத்தல் கலை!

கலையே உயிரென்பான் கன்னித் தமிழை
விலைகொண்டு விற்றுப் பிழைப்பான் - அலைநெஞ்சே
பொன்னாடைக் கேங்கிப் புலைதீய செய்யுமப்
பன்னாடை யையுள் தவிர்

தவிர்ப்பவரை நம்செய்கை கண்டு மனத்தால்
தவிப்பவரை வாழ்வில் தரிசி - அவர்சொல்வார்
நம்வழிப் பாட்டையது நல்வழி என்பதை
உம்மெனும் வார்த்தை உகுத்து

உகுக்கின்ற கண்ணீரே உம்மத்தர் தம்மைச்
செகுக்கின்ற வாளாம் தெருள்க - பகுக்கின்ற
காக்கைக்கும் உண்டாம் பகுத்தறிவு இவ்வோட்டை
யாக்கைக்கு முண்டோ அது?

அதுசெய்க இன்னும் இதுசெய்க வென்பார்
மெதுவாக கால்வாரிச் செல்வார் - பொதுநலத்தை
எண்ணுதல் முக்கியம் ஏ!மனமே அத்துடன்
உண்மையும் சேர்த்தே உணர்

உணரும்போ தெல்லாம் உயிர்கொய்யு மாகில்
திணறுத லாமே இயற்கை - அணங்கிற்கும்
நன்மன முண்டாங்கொல் நாயா மிம்மூடர்க்குக்
கன்மனம் தானே களிப்பு

களிப்பார் விழிகள் கலங்கிடக் கண்டு
விளிப்பார் நகைத்திடுவார் வீணாய் - புளித்திருக்கும்
பாலை எறிதல்போல் பாவியரை நாமெறிந்தால்
நாலும் நடக்கும் நலம்

நலமென்று கண்டும் நலமில்லை யாமால்
பலங்கொள்ள லாமோ பகர்வாய் - முலைகெட்ட
மாதர்தம் வேட்கையும் மாய்க்கும்நற் பண்பென்னும்
ஓதலே நன்றாம் உணர்

உணர்ந்துவிட்டால் நெஞ்சே உதரலினி இல்லை
புணர்ந்து பிரிகின்ற பொய்யர் - வணங்கிடுவார்
வாலாட்டு வார்பின்னால் வாரிமண் தூற்றுவார்
நூலாட்டம் நீயறுப்பாய் நட்பு!

அறுப்பாய்நன் னெஞ்சே அடுப்பாய் பகையை
ஒறுத்தல்நம் வேலை ஒழிக - பொறுத்தலும்
முட்டாள் தனமாகும் முந்தி யுணர்வாயே
பட்டால் தெரியும் வலி

வலிமை வளர்ப்பாய் வளைநெஞ்சே உன்னை
எலியாய் நினைத்திங்கே ஏசும் - வலியில்லாப்
புல்லரை உன்செயலால் பூழ்தி யெனவாக்கு
கல்வியால் தீர்ப்பாய் களை

களைப்பால் அயராதே காண்நெஞ்சே தீதை
உளைப்பாய் உயர்தொண்டால் ஒன்றி - விளைசெய்கை
நற்றமிழே என்னும் நறும்பணியைக் கொள்ளப்
பெற்றிடுவாய் என்றும் சிறப்பு

சிறப்புடையான் நீநெஞ்சே சேராத நட்பால்
சிறப்பிழந்து நோயில் சிதையாய்! - பொறுப்புனக்
குண்டுபல வேலை உடனுண்டே உன்பகைவர்
உண்டு கொழுத்திருப்பார் உற்று!

உற்றறிக நன்னெஞ்சே ஒல்லார்தம் தீமனத்தை
முற்றொழித்த லாகா முனையழியும் - நற்றுணையாய்ப்
பொற்றமிழைக் கொள்வாய் புதுத்தெம்பை நீயடைவாய்
கற்றுயர வேண்டும் கனிந்து

கனிந்தபடி பேசுவார் காலம் நெருங்க
மனத்தில் அவிழ்ப்பார் விலங்கை - மனிதரிங்குப்
பொய்சூழ் உலகத்தைப் போகமென வாழ்கின்றார்
மெய்நீ உணர்ந்திட்டால் மேல்

மேலும் நிலையில்லை கீழூம் நிலையில்லை
காலுமிரண் டென்பாய் கவினெஞ்சே - பாலுள்
துளிநஞ்சும் கூடத் துயராக்கும் போதிங்
குளைதலோ நல்லோர் உளம்?

உளமே உனகோர் உபாயம் மொழிவேன்
களிப்பை உனதாய்க் கருது! - குளத்தினில்
கல்லை எறிந்தால் குழப்பந்தான் தேம்பாதே
எல்லாம் நடக்கும் இனிது

துன்பம் வருங்கால் நகுகவென் றையனும்
முன்ன முரைத்த தறிநெஞ்சே - இன்னமும்
தீயோர் செயலெண்ணித் தேம்பிக் கிடக்காமல்
மாயோன் பதத்தை வளை!

வளையப் பழகிக்கொள் மென்நெஞ்சே உன்னைத்
தளையிடும் தீயுணர்வைத் தீர்ப்பாய் - விளையாட்டே
யாவும் எனநினைத் தானந்தம் நீகொள்க
யாவும் அடங்கும் அணைந்து!

அணைந்தாலும் கங்கு கனன்றிருத்தல் காண்பாய்
இணையாரை என்றும் இருத்து - முனைநெஞ்சே
தண்ணீரும் தீயாய்ச் சுடுமுண்மை யோர்கவே
மண்ணில் இதுவே நிலை


நிலையாமை எல்லாம் நினைக்குமென் நெஞ்சே
கலையாமை தன்னைக் கருது! - மலைபோலத்
துன்பம் நெருங்கும் துணையாக நம்பிக்கை
இன்பம் கொடுக்கும் இதம்

தம்முள்ளத் தைநம்பும் தக்காரின் நற்பண்பு
இம்மியும் வீணாய் இரியாதே - எம்மனோர்
சொன்ன தெலாமோர்க தூயநன் னெஞ்சமே
நன்னயம் என்றும் நலம்

நலமதனை மட்டும் நினைப்பாய் மனமே
பலமது! கண்டு பழகு! - உலகமிதில்
இன்னாசெய் தாரை ஒருத்தர் அவர்நாண
நன்னயம் செய்தலைநீ நாடு

நாடும் நலமெல்லாம் நற்றமிழத் தொண்டென்றே
நாடுகநீ நன்னெஞ்சே நட்டாரைத் - தேடுக
தீயோர் செயன்மறந்து சேர்வாய் தமிழோடு
நீயோர் பிறவி நெருப்பு

நெருப்பென நின்றால் நெருங்குவோர் தாமாய்ச்
செருக்கழி வெய்திடுவார் செய்வாய்! - கருத்திலே
தூய்மை யுடனிருத்தல் தோன்றும் நெருப்பாகும்
வாய்மையே கங்கு! வளர்!

வளர்மரமே கல்லடிக்கு வாய்க்கும் அறிவாய்
தளராமல் செய்வாய் தமிழோ(டு)- உளைநெஞ்சே
நல்லார் பலரிருக்க நாளும் நடுங்காதே
ஒல்லார் வினையை யொழி

ஒழிக்க நினைப்பவருக் கோரத்தில் நின்று
வழிவிடக் கற்றால் வசந்தம் - பழிவந்தால்
விட்டான் எனும்பழி மேல்தான் பிறரைநீ
சுட்டாய் எனும்சொல் சுடும்!

சுடுசொல்லும் தீய்க்கும் கொடுஞ்செய்கை மாய்க்கும்
அடுப்பாரே தீமை அகத்து - விடுநெஞ்சே
நாளை நமக்குண்டு நற்பணிக ளென்றீசன்
தாளை நினைந்து தொடர்

தொடர்ந்தின்னல் செய்கின்ற தொல்லைகளை மாய்க்கப்
படர்ந்தின்னும் தொண்டைப் பழகு! - முடக்கிடுவான்
எல்லாத் திசையும் எதிர்க்க வியலாதே
வெல்வாய் வெகுண்டால் விரைந்து

விரைகநன் னெஞ்சே வியன்றமிழின் சீரை
உரக்கப் பணிசெய்க ஓர்ந்து - திரைகடல்
ஓசை யடங்குமோ ஓட்ட மொடுங்குமோ
ஆசை யடங்குமோ சொல்

சொல்லால் நலம்கொள்வாய் சொற்கள் இருக்கையிலே
இல்லை யொருகுறை என்நெஞ்சே - சொல்லே
பகையாக்கும் சொல்லை பகைமாய்க்கும்! சொல்லே
நகைசெய்யும் நம்மை நனைத்து

நனைத்தருள் செய்வான் நமையாளு மீசன்
எனைத்தொன்றும் துன்பமில் நெஞ்சே - பனையுச்சி
வாழும் புழுவுக்கும் வாழ்வளிக்கும் அவ்வீசன்
தாழ்சடை தன்னை யடை

அடையும் புகழை அழைக்கும் மதிப்பை
உடைமையைக் காண்பார் உறுத்தத் - தடைசெய்வார்
ஏதும் நமதல்ல எல்லாமே தெய்வத்தின்
தூதென் றுணர்திடுதல் தோது

தோதாய்ப் பல்லன்பர் தோற்றித் துணைசெய்ய
தீதாய் எதையும் நினையாதே - ஆதாயம்
கொண்டலையும் தீயர் குறையுள்ளங் கண்டுணர்வாய்
கொண்டலென நற்பா குவி

குவிந்தொரு மோனத்தில் குந்தப் பழகு
தவிப்படங்கிக் காண்பாய் தவத்தை - அவனியில்
சித்தம் அடக்கச் சிவனைநாம் கண்டிடலாம்
பித்தும் அவன்செய்யும் பீடு

பீடுறுக நன்னெஞ்சே பித்தனவன் றாள்போற்றி
வீடுறுத லொன்றே வினையாகும் - கேடுடைய
நற்றமிழைக் காக்கும் நயஞ்செய்க இவ்வையம்
பொற்றேரில் வைக்கும் பொதித்து.

பொதிந்து கிடக்கின்ற போதந்தான் மோனம்
அதிராமல் அஃதை அறிவாய் - பொதுவாக
ஆண்மை எனமோன ஆழத்தைச் சொல்லிடுவர்
கேண்மை அதனுறவு கேள்

31 Mar 2019

சோலை ஆசுகவி விருந்து

சோலை ஆசுகவி விருந்து 

- 3௦/௦3/2௦19 பைந்தமிழ்ச் சோலை முகநூற் குழுவில்
இரவு 9மணி முதல் 1௦மணிவரை எழுதப்பட்ட 1௦௦ பாடல்கள்

ஒற்றை இலக்கப் பாடல்கள் பாவலர் மா.வரதராசன் 
இரட்டை இலக்கப் பாடல்கள்  கவிஞர் விவேக்பாரதி 


நிலவுதரு தண்மை நினைவுதனைக் கொல்லக்
கலையழகே வந்தென்னைக் கா

காதல் கிளியே கனிவாய் மலர்ந்துநீ
ஓதாய் எனதுபெயர் ஓர்ந்து

துவர்வாய் செழிப்பில் துவண்டு கிடத்தல்
எவருக்கு வாய்க்கும் இனி

 இனியும் வழியில்லை இன்பக் கிளியே
மனத்தில் துடித்தேன் மருண்டு

மருண்டோடும் மானாய் மலைக்கின்ற கண்கள்
உருள்கின்ற தேர்க்கச்சாம் ஓர்

ஓர்மொழி சொல்வாய் உடனே மனம்தருவேன்
பார்வையி லேனும் பகர்

பகலும் இரவும் பரிதவிக்கச் செய்வாய்
அகலாதே என்னுள் ளிரு.

30 Mar 2019

சோலை மெய்ஞ்ஞான வந்தாதி




சோலை மெய்ஞ்ஞான வந்தாதி

* * * * * * * * * * * * * * * ** * * * * * * ** 
பாடியோர் : 
காப்பும் , இரட்டையிலக்கப் பாடல்களும் பைந்தமிழரசு பாவலர் மா.வரதராசன்
ஒன்றையிலக்கப் பாடல்களும் நூற்பயனும் 
பைந்தமிழ்ச்செம்மல் விவேக்பாரதி

         பைந்தமிழ்ச்சோலை முகநூகுழுவில் நேரலையாக ஒன்றரை மணிநேரத்தில் பாடப்பெற்ற 100 பாடல்கள்.

காப்பு
(நேரிசை வெண்பா)
----------
கருத்தோன் முதல்வனே காப்பென நிற்பாய்
கருத்தாவைப் பாடப் புகுந்தோம் - திருத்தாளில்
வந்தணைந்த எங்கள் வழுவா எழுத்தினில்
செந்தமிழைச் செய்க சிறந்து! 


உலகம் முழுமைக்கும் ஒன்றாய் விளங்கும் 
தலைவன் திருப்பாதந் தான்பெறுதல் எக்காலம்? (1)

பெறுதலைத் தானீக்கிப் பேரானந் தத்தில்
உறுதலை யான்பெற் றுருப்படுவ தெக்காலம் (2)

படுகின்ற காயங்கள் பாவங்கள் நீங்கிச்
சுடுகின்ற நல்லிறையைச் சுற்றுவதும் எக்காலம்? ( 3)

சுற்றித் தொடர்ந்தவனைத் தூயவனை மாதவனைப்
பற்றிப் படர்ந்து பணிகுவது மெக்காலம் ( 4)

பணியைம் புலனின் பயனை அறிந்து
துணிந்தென் உடலத்தைத் தூற்றுவது மெக்காலம்? (5)

தூற்றலையும் போற்றலையும் தூய வுளத்தோடு
மாற்றிக் களைந்து மகிழ்வுறுவ தெக்காலம்(6)

மகிழ்ச்சி இறைவன் மலர்ப்பாதம் வேண்டல்
புகழ்ந்தவன் தாளில் புகுவதுமு மெக்காலம்?(7)

புகுந்து மலர்ப்பாதம் போற்றிப் பணிந்து
வெகுதல் வினைநீக்கி மேலுறுத லெக்காலம் (8)

மேலிருக்கும் நாயகனின் மேன்மை நினைத்திந்தத்
தோலிருக்கும் பொய்ச்சிறையைத் தூரவிடல் எக்காலம்? (9)

விடலாய் வினைமிகுத்து மேதினியில் பற்றுகுத்துப்
படலாய்ப் பரமனைப் பாவுதலு மெக்காலம்(10)

பாவி எனையந்தப் பாருக் கிறைவனுவந் 
தாவி இனிமையுற ஆட்கொள்வ தெக்காலம்?(11)

கொள்வதூஉ மன்றிக் கொடுப்பதூஉம் சிந்தையறத்
தெள்ளிறையைத் தேடித் திளைப்பதுவு மெக்காலம்(12)

திளைக்கின்ற இன்பங்கள் தீர்ந்தே அமைதி
முளைக்கின்ற நாதன்தாள் முத்திடுத லெக்காலம்? (13)

முத்தும் மணியும் முகிழ்த்த மலர்க்கரமும்
நத்தாமல் நாதன்றாள் நாடுவது மெக்காலம் ? (14)
/
நாடும் பொருளனைத்தும் நாயகனே என்றுரைத்துக்
கூடும் மனத்தாசை கொன்றிடுதல் எக்காலம்? (15)

இட்டாரைத் தேடி இருட்குழிக்குள் வீழாமல்
பட்டாங்கில் ஈசனைப் பாடுவது மெக்காலம்(16)

பாடும் மொழியனைத்தும் பாரா இறைகொடுத்த
கூடல் எனச்சொல்லிக் கும்பிடுதல் எக்காலம்? (17)

கும்பிட் டொருங்காமல் கூடித் திளைக்காமல்
நம்புமிவ் வாழ்வின் நயப்பறுத்த லெக்காலம்(18)

அறுக்கும் அவாநீங்கி ஆழத்தில் மூழ்கிப்
பொறுத்துத் தவமேற்றுப் பொற்புறுத லெக்காலம்? (19)

பொற்புடைய ஈசன் பொலிவை யுணராத
அற்பத் தனமொழித்து ஆட்படுவ லெக்காலம்(20)

ஆட்கொள்ளும் ஆண்டவன்மேல் ஆசை வளர்ந்தென்றன்
நாட்களைநான் போக்கும் நலம்வருத லெக்காலம்? (21)

வருமுயிர்க ளாவுமிங்கு வாழ்விழத்தல் கண்டும்
திருவிடத்தை நீங்கிச் சிறப்புறுத லெக்காலம் (22)

சிறந்த இறைவனையே சிந்தித்து வாழ்வில்
கறந்தபா லுள்ளத்தைக் கண்டிடுத லெக்காலம்? (23)

கண்டுன் மலர்ப்பாதம் காதலித்து வாழாமல்
உண்டுயிர்த்தல் தீதென் றுணர்வதுவு மெக்காலம் (24)

உணர்ச்சிக் கிரையாகி உள்ளொழிந்து வீழா
திணங்கி யிறையோ டிணைந்திருத்த லெக்காலம்?(25)

இருத்தலும் போதலும் ஈசன் வினையென்று
இருத்தியவன் பாதம் இணைந்திருத்த லெக்காலம்(26)

இருக்கும் நிலையறிந் தின்னும் தெளிந்த
கருத்தை எதிர்பார்த்துக் காத்திருத்த லெக்காலம்?(29)

காத்தலும் ஆக்கலும் காணா தழித்தலும்
ஆத்தம்செய் ஈசனென் றாய்வதுவு மெக்காலம்(30)

அறிவுகளுக் கெல்லாமும் அப்பாலாய் ஆகிச்
செறிந்தவனை என்னுள் தெரிசிப்ப தெக்காலம்?(31)

பல்லூழி வாழ்வேன் பரமன் தனையேத்தி
நல்லூழே என்று நனைவதூஉ மெக்காலம்(32)

 உமையொடு நிற்கும் உயர்ந்தவனை என்னுள் 
அமைந்திடக் கண்டே அதிசயித்தல் எக்காலம்? (33)

அதிசயமே ஈசனருள் ஆகத்தாள் தானும்
விதித்த தெனவறிந்து வீடுறுத லெக்காலம்(34)

வீடும் உறவும் விதியும் எனவாழ்ந்தே
ஓடும் நிலைமை ஒழிந்திடுதல் எக்காலம்?(35)

ஒழியா தெனவெண்ணி ஒழியும்வினை செய்வார்
கழியா நிலைகண்டு கட்டறுத்த லெக்காலம் (36)

கட்டி மனத்தைக் கணக்கிட்டு நானாளும்
ஒற்றை நிலைமை உயர்ந்துவரல் எக்காலம்?(37)

வருமச்சில் சுற்றும் பரிதிவடு நீங்கிப்
பருவொழிதல் கண்டு பதைப்பதுவு மெக்காலம்(38)

பதைபதைக்கும் உள்ளதின் பாடுகளைப் போக்கும்
கதையுணர்ந்து வாழ்வில் கதியடைத லெக்காலம்?(39)

அடைந்தமட் பாண்டம் அழியுநீர் சேர
உடையுமுட லோர்ந்தே உருப்படுவ தெக்காலம் (40)

உருப்படும் நாள்பார்த்தே ஓய்ந்திருக்கா தேநான்
திருப்பணிகள் செய்யும் திணவடைதல் எக்காலம்(41)

திணவுடனே செய்த சிறப்பில் வினையால்
உனையடைத லோர்ந்தே உணர்வுறுத லெக்காலம்(42)

தளையாக்கும் ஆசை தனையுடைத்து ஞான
விளையாட்டை நான்காண வீதிவரல் எக்காலம்?(43)

வீதி தனிலிருந்த மேலாடைப் பெண்வீழ்ந்து
நாதியற நின்றொழிந்த நான்தேற லெக்காலம் (44)

 தேற்றி அழுமென்னைத் தேடி யிறைவந்து 
மாற்றி அருளி மருள்நீக்கல் எக்காலம்?(45)

நீக்கலும் யாவையும் நீக்கலாச் சோதியன்
நோக்கினில் வீழ்ந்து நுரைத்திருப்ப தெக்காலம் (46)

நுரையாய் விழிமறைக்கும் நூதனக் காமம்
விரைந்தோட என்னுள்ளம் வீச்சுறுதல் எக்காலம்? (47)

 வீச்சில் விளையாடி வீணில் வினைசேர
மூச்சடங்கு முன்னே முனைந்திருத்த லெக்காலம் (48)

 முனைந்தென்றன் எண்ணத்தால் முக்தி கொடுக்கும் 
வினையோனைப் பாடி வியத்தலுந்தான் எக்காலம்? (49)

வியக்கின்ற வாழ்வுற்று வீட்டையிழக் கின்றார்
நயந்தவர் நாதன்றாள் நத்துவது மெக்காலம் (50)

துவக்கத்தில் கொண்டிருக்கும் தூய்மையான பக்தி
தவக்காலம் முற்றுலுமே தானிருத்தல் எக்காலம்?(51)

இருக்கின்ற தெல்லாம் இறப்ப தறிந்தும்
செருக்கோ டலைபவர் சீருறுத லெக்காலம்(52)

சீருடையர் மாதர் சிறப்புடையர் என்றெல்லாம்
பேருரைகள் செய்வார் பிழைப்பதுதா னெக்காலம்? (53)

 பிழைக்கின்றா ராயின் பிழைசெய்வார் இல்லென்
றிழைக்கின்ற தீயோர் இணைப்புறுத லெக்காலம்(54)


இணையைக் கடிந்திடுவார் இல்லத்தை நோவார் 
துணையெனக் கோவிலைச் சார்ந்திருப்ப தெக்காலம்? (55)

சார்ந்தும் பணிந்தும் சாகாத வாழ்வுற்றுத்
தேர்ந்தவன் தாளிணையைச் சேர்வதுவு மெக்காலம் (56) 

சேர்க்கும் பொருள்மீதே சென்றிடுமோர் நாட்டத்தை
ஆர்க்கும் பணியில்லான் ஆட்சிசெயல் எக்காலம் (57)

ஆட்சி யவனாகும் ஆள்வன் அவனாவான்
மீட்சியெவ ரென்று மிரளாமை யெக்காலம் (58)

மிரண்டு பயங்கொண்டு மீண்டும் பிறவா
வரம்வந் தெனையுந்தான் வாழ்வித்தல் எக்காலம்? (59)

 வித்தாக்கி யுண்டாக்கி மேனிலையைத் தந்தோனும்
செத்த தறிந்து திருவிழத்த லெக்காலம் (60)

இழந்தேன்நான் யாவும் எனப்புலம்பி வீழா
துழைத்து முதல்வன்தாள் உற்றிடுதல் எக்காலம்? (61)

உற்றாளும் மாடும் மனையும் மறைகின்ற
உற்றறியா உண்மை உணர்வது மெக்காலம் (62)


தூயோனை நெஞ்சத்துத் தூணில் நிறுத்தியான்
வாயாரப் போற்றி வணங்கிடுதல் எக்காலம் (63)

வணங்கா திருப்போரை வாழ்விக்கு மீசன்
இணங்கா குறைபொறுத்து ஏற்பதுவு மெக்காலம் ( 64)

ஏற்பான் எனையிறைவன் ஏற்றிடுவேன் என்குறைகள்
தீர்ப்பான் அவனைத் தெரிந்துகொளல் எக்காலம் (65)

கொளுமிந்தச் செல்வம் குறையுநிலை யோர்ந்து
தெளிவுற்ற சிந்தையில் சேர்வதுவு மெக்காலம் (66)

சேர்க்கைகளை நம்பிச் செலவழிக்கும் வையத்தீர்
ஊர்க்குமுனம் நாதனைநீர் ஒப்பிடுதல் எக்காலம் ( 67)

ஒப்பி யவன்பாதம் உச்சிதனிற் கொள்ளாமல்
பிச்சியென வாழ்வழித்துப் பின்னிவர லெக்காலம் ( 68)

பிணைக்கும் அழுக்குகளைப் பேர்க்க முதல்வன்
துணைக்கு விழிமுன்னம் தோன்றுவதும் எக்காலம்?( 69)

தோன்றிய யாவும் தொடக்கறுதல் கண்டறிந்தும்
ஊன்றி யவன்பாதம் ஊர்வதுவு மெக்காலம் (70 )

ஊரும் விலங்கோ டுலக உயிர்யாவும்
சாரும் தலைவனையான் சந்திப்ப தெக்காலம்?(71)

சந்தித்த லீசன் சடைத்தலை யென்றாகி
நிந்தித்த லின்றி நிலைபெறுத லெக்காலம் (72)

 நிலையாமை என்பதன் நிச்சயம் கண்டிங் 
கலையாமல் நெஞ்சம் அமர்ந்திருத்தல் எக்காலம்?(73)

அமரும் பராசக்தி அருட்பாதத் தையான்
அமரன்என் றாகி அரவணைத்த லெக்காலம் (74)

அரவணைக்கும் அன்னையவள் அன்பனெனைக் கண்டு
சுரக்கும் திருப்பாற் சுவைதருத லெக்காலம்(75)

சுவையும் ஊறோசை சுற்றுமிவ் வையக்
கவையில் நுழையாமல் கனிதுவு மெக்காலம்(76)

கனிந்த மனத்தில் கடவுளின் பாதம்
நினைந்தெனது வாழ்க்கையை நீட்டுவது மெக்காலம் (77)

நீட்டிப் படுத்தார் நிலையழியக் கண்டாலும்
ஆட்டுவான் ஆட்டத்தில் ஆகிடுத லெக்காலம்(78)

ஆகும் நிலைமாற்றம் அத்தனையும் வாழ்வினிலே
மேகம் எனவிறையை மேவிடுதல் எக்காலம்?(79)

மேவும் உயிர்க்கூட்டம் மேலான ஈசனருள்
யாவும் எனவுணர்ந் தாடிடுவ தெக்காலம் (80)

ஆடும் வறுமை அழிக்கும் பொருளாசை
நாடும் இறைவுணர்ந்து நன்மையுறல் எக்காலம்(81)

நன்மையும் தீமையும் நாடாமல் நத்துவர்
உண்மை யுணர்ந்தவர் ஊர்ப்புகுத லெக்காலம் (82)

 ஊர்ப்புகும் முன்னம் உயரிறைவன் எண்ணத்தின் 
வேர்பிடித்து மாந்தர்கள் வெற்றிபெறல் எக்காலம்? (83)

 பெறவாம் அருளாசி பெற்றிந்த வாழ்வில்
திறலாய்ச் சிவனருளிற் றோய்வதுவு மெக்காலம் (84)

தோய்கின்ற ஆன்மீகத் தொல்லியலில் நம்மிச்சை
மாய்கின்ற தென்கின்ற மாயம்வரல் எக்காலம் (85)

மாய மறுத்து மயக்கறுத்து ஈசனடி
தோய விழுந்து துணைபெறுவ தெக்காலம் (86)

பெறுகின்ற வாய்ப்பிலெலாம் பேரிறைவன் நாமம்
சிறப்புடனே சொல்லிச் செபித்திருத்தல் எக்காலம் (87)

 பித்தாகிச் சோராமல் பேசா தொழிந்துநான்
வித்தாகி முன்னம் வினையறுத்த லெக்காலம்(88)

வினைவழியே வாழ்க்கை விளையாடும்! ஆங்கே
எனையாள வெந்தலையன் ஈண்டிருத்தல் எக்காலம் (89)

 ஈன்றாளின் பாசப் பிணைப்பும் சிவனருளாய்
வேண்டுவாம் மேன்மை விளங்குவது மெக்காலம் (90)

விளக்கமிலா ஞான வினாவறியத் தெய்வம்
துளக்க வருதல் தொடங்குவது மெக்காலம்(91)

தொடக்கமாய் நிற்பான் துலக்கமு மாவான்
விடைகொள வேண்டி விழைந்திருத்த லெக்காலம் (92)

விழைகின்ற யாவையுமே விந்தை அவற்றை
அழைக்கின்ற ஈசன் அளிப்பதுவு மெக்காலம்(93)

அளிப்பான் அழிப்பான் அலைப்பான் அருள்வான்
களிப்போடு நானவனைக் கண்டிணைத லெக்காலம் (94)


கண்டிடாத மாயங்கள் காட்டி உயிரீர்க்கும்
கொண்டலைத் தெய்வத்தைக் கொண்டிடுதல் எக்காலம்(95)

கொண்டாளும் சேராளே கொள்வதும் சேராவே
உண்டீசன் ஞானம் உயிர்ப்பதுவு மெக்காலம் ( 96)

உயிர்வந்த காரணமே உன்னதமாந் நாம
செயஞ்சொல்ல வென்று செழித்திருத்த லெக்காலம் (97)

 செழிக்கின்ற வையச் சிறப்பொழிய கண்டோம்
விழித்தீசன் மேனி விதிர்ப்புறுத லெக்காலம் (98)

விதிவிதிர்த் தீசன் விளையாடல் கண்டு 
மதிமயங்கி பக்தியினை மந்திவரல் எக்காலம் (99)

வரவாய்ச் சிவனருளில் வாய்த்தயிச் சோலை
உரமுஞ் சிவனென்றே உலகறிவ தெக்காலம் ( 100)




                      நூற்பயன்

இரட்டைப் புலவர்கள் ஈண்டளித்த பாடற் 
றிரட்டை உணர்ந்தால் தெளிவர் - விரவி
இறைவன் பதம்காண்பர் இவ்வுலக வாழ்வின் 
நிறத்தை நிலையை நினைத்து!








23 Feb 2019

வாலிவதை நல்வழியா? அல்வழியா?

கம்பன் கவிநயம்! -7
வாலிவதை நல்வழியா? அல்வழியா? 

கம்பராமாயணத்தில் மிகவும் புகழ்பெற்ற விவாதம்.  . .வாலியை இராமன் மறைந்து நின்று கொன்றது சரியான முறையா? தவறான முறையா?

பலரும் அது தர்மத்தின்பாற்பட்டதே என்பர். ஏறத்தாழ இராமன் செய்தது சரியே என்பதற்குப் பல காரணங்களை அடுக்குவர். அவன் கடவுளாயிற்றே.!
 சிலர் அதர்மமே என்பர். ஆனால் அதை நிறுவ ஏதேனும் சான்று கேட்டால் அவரிடம் இருக்காது. 

இப்போது நாம் விளக்கத்திற்குப் போகலாமா.!?
இல்லறம் துறந்த நம்பி      
    எம்மனோர்க் காகத் தங்கள்
வில்லறம் துறந்த வீரன் 
    தோன்றலால் வேத நன்னூல்
சொல்லறம் துறந்திலாத 
    சூரியன் மரபும் தொல்லை
நல்லறம் துறந்தது என்னா 
    நகை வர நாணுக் கொண்டான்".
(கிட்; வாலிவதைப் படலம் : 76 : 1-2) 

தன் தந்தை  காட்டுக்குப் போகச் சொன்ன காரணத்தால், தனது இல்லற தர்மத்தைத் துறந்து தவ வாழ்க்கையை மேற்கொண்ட  இராமன்,  குரங்கு இனத்தவராகிய எமக்காக, விற்போருக்கு என்று அமைந்துள்ள தர்மத்தைக் கைவிட்டு மறைந்து நின்று எம்மீது அம்பு எய்த வந்து பிறந்த காரணத்தால், பெருமைக்குரிய சூரிய குலமும் தனது நல்லறத்தைத் துறந்து விட்டதே என்றெண்ணி ஏளனமாக நகைத்த வாலி, எப்பேற்பட்ட இராமன் தனது குலப் பெருமையையும், தனது விற்போர் தர்மத்தையும் குரங்கினத்தானாகிய தனக்காகக்
கைவிட்டான் என்பதை நினைத்து வெட்கப்பட்டான்.

தேவியைப் பிரிந்த பின்னைத் திகைத்தனை
போலுஞ் செய்கை (கிட் ; வாலிவதைப்படலம் :78 :4) என்றும்.

வலியவர் மெலிவு செய்தாற் புகழன்றி வுசையு முண்டோ (கிட் ; வாலிவதைப்படலம் : 80 : 4)

என்றெல்லாம் சரமாரியாகக் கேள்விக்கணைகளால் துளைக்கிறான் வாலி.

அதற்கு இராமனோ.  .  .தன் செயலைச் சரியெனக் காட்டுதற்குக் காரணங்களைக் கூறுகிறான்.
"தவறு செய்யாத தம்பியைத் தண்டித்தது, உன்னையே அடைக்கலம் என்று அடைந்தவனைக் கொல்ல முயன்றது, அறத்துக்குப் புறம்மாபாக உன் தம்பியின் மனைவியைக் கவர்ந்தது ஆகிய காரணங்களாலும், சுக்ரீவன் எனது உயிருக்கு உயிரான நண்பன் என்பதாலும், நான் உன்னைப் பயிருக்கு இடையே வளரும் களையை எடுப்பது போல எடுத்தொழித்தேன்." என்றெல்லாம் வாலி செய்த தவறுகளைச் சுட்டிக் காட்டி இராமன் பேசுகிறான்.

வாலி இவற்றை மறுத்து. . .
"எங்களுக்கு மனம் போனபடி வாழ்கின்ற முறையும், குணமும் அமைந்தன. வேத நெறியும், கற்பு நிலையும் வானரர்களுக்குக் கிடையாது.  எனவே எங்கள் பிறப்புக்குரிய தன்மைகளின்படி, நான் யாதொரு குற்றமும் செய்தவனல்லேன். இதை நீ புரிந்து கொள்ள வேண்டும்" என்று வாலி கூறினான்.

வாலியின் இந்த பதிலைக் கேட்டு இராமன் கூறுகிறான், "வாலி! நீ தேவர்களைப் போல பிறந்து, அறங்களையும், சாத்திரங்களையும் நன்கு கற்று, நீதிகளை உணர்ந்தவன். ஆதலின் உன்னை மிருக இனமாகக் கருத முடியாது." என்று சமாளிக்கும் இராமனை நோக்கி இறுதியாக., இராமனை ஊமையாக்கும் கணையைத் தொடுக்கிறான் வாலி.

 "நீ கூறிய அனைத்தும் உண்மையே ஆகட்டும். ஆனால் போர்க்களத்தில் நேருக்கு நேர் நின்று போரிட வராமல், காட்டில் விலங்குகளை மறைந்து நின்று கொல்லும் வேடனைப் போல என்மேல் ஒளிந்து நின்று அம்பு எய்தது என்ன நியாயம்? சொல்!" என்றான்.

இதற்கு இராமன் பதில் சொல்லவில்லை, இளவல் இலக்குவன் இடையில் புகுந்து பதில் கூறுகிறான்: "முதலில் உன் தம்பி சுக்ரீவன் வந்து இராமனிடம் சரணாகதி என்று அடைக்கலம் புகுந்தான். முறைதவறி நடந்து கொண்ட உன்னைக் கொல்வேன் என்று சுக்ரீவனிடம் இராமபிரான் வாக்குக் கொடுத்தார். தீமைகளை அழித்து அறத்தை நிலைநாட்டவே இராமன் உறுதி பூண்டவர் என்பதும், அறத்துக்குப் புறம்பான எதையும் அவர் செய்யமாட்டார் என்பதையும் அடைக்கலம் என்று வந்தவரைக் காப்பதே தனது தலையாய கடனாகக் கொண்டவர் என்பதையும் நீ உணர்ந்து கொள்ள வேண்டும். உன்னோடு நேருக்கு நேர் நின்று போர் செய்ய இராமன் வந்தால், நீயும் இராமனிடம் சரணடைந்து விட்டால், தனது வாக்குறுதியிலிருந்து மாறுபட நேருமென்பதால், சுக்ரீவனுக்களித்த வாக்குறுதிப்படி உன்னை மறைந்திருந்து கொன்றார்" என்றான்.

இறுதியில் வாலி ஒருவாறாக மனம் அமைதியடைகிறான். . 
"தாயென உயிர்க்கு நல்கி 
   தருமமும் தகவும் சார்வும்
நீயென நின்ற நம்ப 
   நெறியினில் நோக்கும் நேர்மை
நாயென நின்ற எம்பால் 
   நவை உறல் உணரலாமே
தீயன பொறுத்தி என்றான் 
   சிறியன சிந்தியாதான்".
★★★
இதுவரையே அனைவரும் வாலிவதம் பற்றிய கருத்து எல்லைக்குள் நிற்பர். சிக்கலான இவ்விவாதத்தை ஒருசார்புடைத்தாய் 'இராமன் செய்தது சரியே ' என்றும்,  கம்பரையும் ஒருசார்புடைத்தவராய்க் காட்டுவர்.

ஆனால். . .  

உண்மையிலேயே கம்பருக்கு அப்படிப்பட்ட உள்ளமில்லை. இராமன் செய்தது மிகப்பெருந்தவறு என்பதே கம்பரின் உள்ளம். 

உலகத்தார் என்னென்ன ஐயங்களை எழுப்புவர்? என்று எண்ணியெண்ணிப் பார்த்துத் தன்பனுவலை நகர்த்திய கம்பருக்கு., இராமனை நல்லவனாக்கி அவன் செய்த செயலைச் சரியென்று நிறுவி நடுவுநிலை தவறும் எண்ணம் இல்லாததால்.  . .

இராமன் வாயாலேயே 'தான் செய்தது தவறு, அறமற்ற செயல். . .'என்று #ஒப்புதல்_வாக்குமூலம் கொடுக்க வைக்கிறார்.

ஆம். . .குற்றவாளியே தன் குற்றத்தை ஒப்புக்கொண்டால் தீர்ப்பு எவ்வாறு அமையும்? குற்றம் செய்தவன் குற்றவாளியென்றுதானே தீர்ப்பு அமையும்? 

இதோ அந்தக் காட்சி. . .

வாலிவதம் முடிந்தபிறகு சுக்ரீவனுக்கு முடிசூட்டியும் முடிந்தபின், 
"இராமா!  இன்னும் சிலகாலம் கிட்கிந்தையில் தங்கிச் செல்லவேண்டுகிறேன் " என்கிறான் சுக்ரீவன். 

அப்போது இராமன் அவனுடைய வேண்டுகோளை மறுத்து அதற்கான காரணத்தைக் கூறுகிறான். ஆம். . . ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறான். பாருங்கள். . .அந்தப் பாடலை. . .!

★ (ஏனோ தெரியவில்லை. . .இலக்கிய வல்லார்கள் எவருடைய பார்வைக்கும் இந்தப் பாடல் தெரியாமல் போனது வியப்புதான்!  நான் சொல்லவேண்டும் என்று இதுநாள்வரை இருந்ததோ? )★

இல்லறம் துறந்தி லாதோர்
    இயற்கையை இழந்தும், #போரின்
#வில்லறம்_துறந்தும் வாழ்வேற்கு
இன்னன மேன்மை இல்லாச்
சில்லறம்; #புரிந்து_நின்ற
#தீமைகள்_தீரு_மாறு
நல்லறம் தொடர்ந்த #நோன்பின்
நவையற #நோற்பல் நாளும்”
(வாலி.வதை.  4137)

இல்லறத்தைத் துறக்கக் கூடாத இயல்பான நிலையை இழந்தும் (இல்லறத்தை நீங்கியும்),
     
போரில் மீறக்கூடாத வில்லறத்தைத் துறந்தும் (வாலியை மறைந்துநின்று கொன்றது),

வாழ்விற்கு 'இவையிவை 'மேன்மையெனச் சொல்ப்பட்ட எவையும் செய்யாமல் சிறுமைபூண்டும்,

#நானிழைத்த தீமைகளெல்லாம் தீர்ந்தொழிய வேண்டி நன்மை தரக்கூடிய #நோன்பு நோற்கப்போகிறேன். எனவே, நான் இங்குத் தங்கவியலாது "

இதுதான் இராமன் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம்.

" போரில் தான் செய்தது அறமற்ற செயல்.,  அந்தப் பாவம் தீரத் தவம் செய்யப்போகிறேன் " என்று "அறமே வடிவான இராமனே #ஒப்புக்கொண்டபிறகு.  . . நாம் என்ன முடிவுக்கு வருவது?

நீங்களே சொல்லுங்கள் நண்பர்களே!
★★★

கூடுதல் விளக்கம்
***********************
விசுவாமித்திர முனிவா், தாடகையைக் கொல்லுமாறு ஆணையிட்ட போது , இராமன் தயங்குகிறான். முதன் முதலில் ஒ௫ பெண்ணைக் கொல்வதா என்று நினைக்கிறான் . தாடகை அரக்கியானாலும் , அவள் ஒ௫ பெண்தானே ?  என்ற எண்ணமே அவன் மனதில் ஓடுகிறது. முனிவாின் வற்புறுத்தல் காரணமாகவே அவளை, இராமன் கொல்கிறான் . இதைக் கூட வில்லறம் துறந்த செயலாக இராமன் க௫தியி௫க்கக் கூடுமல்லவா ? 
    என்ற ஐயம் சிலருக்கு ஏற்படலாம்.. . 

ஆம்.. .நல்ல  ஐயம்.  . ..

தாடகையைக் கொல்ல இராமன் தயங்குகிறான்.. . .உண்மைதான். அவள் ஒருபெண் என்பது அதற்குக் காரணமே. ஆனால் முனிவரின் விளக்கத்தை ஏற்கும் இராமன் அவளைக் கொல்கிறான்.. .. எப்படி. .?

பாறையைப் போன்ற வைரம்போல் இறுகிய உடலைக் கொண்ட கொடிய அரக்கியாம் தாடகையில் மார்பில் பாய்ந்த அம்பு, கல்லாதவர் உள்ளத்தில் நில்லாத அறிவுரையைப்போல் அவளுடைய மார்பில் குத்தி நில்லாமல் துளைத்துக்கொண்டு மறுபக்கம் சென்றதாம்.  அவ்வாறாயின்.  . .எத்துனை வேகத்துடன், வலிவுடன் இராமன் கணையைச் செலுத்தியிருக்க வேண்டும்? தயக்கத்தை ஓட்டியபின் இராமனின் உள்ளத்தில் எந்தச் சலனமுமில்லை. எந்தத் தயக்க உணர்வும் குற்றவுணர்வுமில்லை...என்று காட்டும் காட்சியிது.

அவன் தாடகையை வீழ்த்தியபின் தேவர்கள் பூமாரிப் பொழிந்து வாழ்த்துரைக்கிறார்கள்.
யாமுமெம் மிருக்கை பெற்றோம் 
   உனக்கிடை யூறுமில்லை. . .

என்று முனிவரையும் இராமனை வாழ்த்துகிறார்கள். 
***
வில்லறம் எனில் வீரத்தைக் குறிக்கும்.  வீரமெனில் எதிரெதிர் நின்று போரிடலாகும். தாடகைப் போரில் இராமன் செய்தது போர். (காகுத்தன் கன்னிப்போர்.  .)
ஆனால், வாலியிடம் செய்தது சூழ்ச்சி. எதிர்நில்லாமல், வில்லறத்தை நீக்கி மறைந்துநின்று அம்பெய்தியது வில்லறம் பிழைத்தலாம். 
***
தாடகையின் வதம் சிறப்பான இடம்பெற்றதாலன்றோ விசுவிமித்திரரையே கவர்ந்தது அந்தப் போர். அதுவும் எங்கே. .? அகலிகைப் படலத்தில்.
இராமனின் கால்பட்டு அகலிகை உரூக்கொண்டெழுந்ததும் விசுவாமித்திரர்  இராமனின் மாண்பை வியந்து.. 

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
    இனியிந்த வுலகுக் கெல்லாம் 
.. . . .. 
#கைவண்ணம் அங்குக் கண்டேன்
   கால்வண்ணம் இங்குக் கண்டேன்.

என்று தாடகையை அழித்த செயலைக் 'கையின் ஆற்றலாகக் ' காட்டுவார் கம்பர்.

தாடகையுடன் இராமன் நிகழ்த்தியது போர் என்கிறார் கம்பர். அது இராமனின்கன்னிப்போராம்.

வாசநாள் மலரோன் அன்ன 
   மாமுனி பணி மறாத,
காசுலாம் கனகப் பைம்பூண், 
   காகுத்தன் கன்னிப் போரில்,
கூசிவாள் அரக்கர் தங்கள் 
   குலத்து உயிர் குடிக்க அஞ்சி,
ஆசையால் உழலும் கூற்றும், 
   சுவைசிறி தறிந்த தன்றே. 

உயிரைக் குடிக்கும் கூற்றுவனும் அந்தப் போரினால் சிறிதளவு உயிரைக் குடித்துச் சுவைபார்த்தானாம். எப்பேர்பட்ட அரக்கி. அவள் உயிரைக் கொன்றதே சிற்றளவுதானாம். 

இங்குக்  'கன்னிப்போர் ' என்று வாழ்த்தும் கம்பர்,

வாலிவதையை அவ்வாறு வாழ்த்தாமல், இராமன் செய்தது பெருங்குற்றமே என்ற மனவோட்டத்தாலேதான்.  . 

இல்லறந் துறந்தி லாதோர்.
..... 
 . . .. . புரிந்து நின்ற 
தீமைகள் தீரு மாறு. . .

என்று குறிப்பிடுகிறார்.

எனவே,
வில்லறம் துறந்தும் என்று ஈண்டு குறித்தது வாலி வதையே. என்று நன்குணரலாம்.
★★★

இன்பம்தரும்_இலக்கியக்_காட்சிகள்

#இன்பம்தரும்_இலக்கியக்_காட்சிகள்
(இந்தப் பதிவு பைந்தமிழ்ச்சோலை முகநூற் குழுவிலும், மரபுமாமணி பாவலர் மா.வரதராசன் என்னும் என் முகநூற் கணக்கிலும் 22/02/2019 அன்று 12மணியளவில் பதிவிடப்பட்டது. இது இணைய ஆவணத்திற்காக இங்கும் ,தமிழ்க்குதிர் என்னும் என்னுடைய மற்றொரு வலைப்பக்கத்திலும் பதிவேற்றப்படுகிறது.)


6. அழுகையிலும் இன்பம்

** * * * * * ** * ** * * ** * ** *
சுப்ரதீபக் கவிராயர். . . பெயரைப் பார்த்தாலே சிற்றிலக்கியக் காலத்துப் புலவர் என்றுணரலாம்.
இக்காலத்தைச் சேர்ந்த புலவர் தம் ஆற்றலைச் சொன்னயத்திலும், பொருணயத்திலும் மட்டுமின்றி, உத்திகளாற் பாடற்சிறப்பை உய்த்துணரச் செய்வதிலும், நுட்பங்களால் புதிய இலக்கணத்தைப் படைப்பதிலும் ஆற்றல் பெற்றவர்களாக விளங்கினர்.

அவ்வாறு நுட்பத்தைப் புகுத்திப் பாட்டைச் சுவைக்கும் முறையையும், புதிய நெறியையும் வகுத்த ஒருபாடலை இன்று காணலாம்.


தலைவி வருத்தமாக அமர்ந்திருக்கிறாள். இதைக்கண்ட தோழி, 'என்னாயிற்று!? ஏன் கவலையுடன் இருக்கிறாய்? 'என்று கேட்கிறாள்.

தலைவி 'அவர் முன்புபோல் என்னிடம் அன்பாக இருப்பதில்லை. என்னைக் கண்டாலே சினந்து கொள்கிறார். . .கடிந்து பேசுகிறார் 'என்று தன் கவலைக்கான காரணத்தைக் கூறுகிறாள்.

'ஏன் உனக்கென்னவாம்!  இனிக்க இனிக்கப் பழகியவர்தானே? இப்போது என்னவாயிற்றாம்? " என்ற தோழியின் உசாவலில் தலைவிக்குக் கண்களில் கண்ணீர் சேர்ந்து, தொண்டைக் கமறலுடன் குரலும் உடைந்துபோய், அந்த அழுகையினூடே.  . . .

"மார்புக் கச்சையை இறுக்கிக் கட்டி இளமை வனப்புடன் நானிருந்தபோது அவருக்குக் கரும்பைப்போல் இனித்தேன்.
மணமாகிக் குழந்தைகள் பெற்றதால் என் மார்பு தளர்ந்து, உடலில் வனப்பும் குறைந்துபோனதால் இன்று அவருக்கு நான் வேம்பாகக் கசந்துபோனேன். கண்களில் நஞ்சுகொண்டு கவர்ந்திழுக்கும் பரத்தையர் இன்று அவருக்குக் கரும்பைப்போன்று இனிக்கின்றனர். . . அதனால் இப்போதெல்லாம என்னைக் 'கண்டாலே கசக்கிறது அ. . வ. . ரு.  ..க்.. .கு '. . . "
         என்று அழுகையினூடே சொல்லிக் கொண்டுவந்தவளுக்கு இறுதியில் 'கண்டாலே கசக்கிறது 'என்னும்போது அழுகை பீறிட்டுக் கிளம்புகிறது. #அவருக்கு என்று சொல்லி முடிக்கும்போது சொற்கள் முழுமைபெறாமல் குமுறி அழுகிறாள்.

ஆம். . .முழுமை பெறாத அந்தச் சொல் "வெண்பாவின் ' ஈற்றுச்சீராக வரவேண்டியது. ஆனால் வரவில்லை.. . .

பாடலைப் படியுங்கள். . .அந்தத் தலைவியாக உங்களை வைத்துக் கொண்டு அழுதுகொண்டே பாடலைப் படியுங்கள். கவிராயர் என்ன நுட்பத்தை வைத்திருக்கிறார்.  . .புதிதாக எந்த நெறியை வகுத்திருக்கிறார் என்பது விளங்கும்.

கச்சிருக்கும் போது கரும்பானேன் கைக்குழந்தை
வச்சிருக் கும்போது வேம்பானேன் - நச்சிருக்கும்
கண்ணார் கரும்பானார்
 காணவும்நான் வேம்பானேன்
அண்ணா மலையரசுக்  கு.

 என்ன நுட்பம் என்று விளங்குகிறதா?

அவலச்சுவையாக அமைந்த இப்பாடலில், தலைவியின் துன்பநிலையால் ஏற்பட்ட அழுகையொலியால் பாடலின் ஈற்றுச் சீராக ஒலிக்கவேண்டிய 'கு' என்னும் சீர் ஒலிக்காமல் அழுகையாக விசும்பலாக மட்டுமே கேட்கிறதா?

ஆம். . .அதேதான்.  .நுட்பமும்.!

வெண்பாவின் ஈற்றுச்சீர் 'நாள், மலர், காசு, பிறப்பு, என்பனவற்றுள் ஒன்றைக் கொண்டு முடியவேண்டும் என்பது எழுதப்பட்ட விதி. தனிக்குறில் ஈற்றுச்சீராக வாரா என்பது எழுதப்படா விதி.

மேற்கண்ட பாடலில் 'கு ' என்ற குறிலை. . . அதுவும் குற்றியலுகர எழுத்தையன்றோ இந்தப் புலவர் வைத்திருக்கிறார்.!

குற்றியலுகரம் அரை மாத்திரையென்பதால் அது அலகுபெறாது. அந்த எழுத்தை வைத்துப் பாடலின் அவலச்சுவை நன்கு புலப்படும் ஈற்றுச் சீராக வைத்து, அழுகையின் காரணமாக அந்த எழுத்தே தோன்றாதபடி அதைக் குற்றியலுகரமாக வைத்து 'அழுகையிலும் நமக்கு இன்பத்தைக் கொடுத்த புலவரின் ஆற்றலை வியக்காமலிருக்க முடியுமா?

புலவர் நினைத்திருந்தால்
"அண்ணா மலையர. சுக்கு"
என ஈற்றடியை அமைத்திருக்கலாம். ஆனால் பாடலின் அவலச்சுவை நன்றாகப் புலப்பட வேண்டும் என்பதற்காகவே மேற்கண்டவாறு தனிக்குறிலாகக், குற்றியலுகரமாக வைத்துப்.. . .

பொருண்மை வேண்டின் விதிகள் புதிதாக அமையலாம் என்ற நெறியைக் காட்டுகிறார்.

என்ன நண்பர்களே!  இலக்கியச் சுவையைச் சுவைத்தீர்களா?