பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

5 Sept 2019

நோவறு_பதிகம்

நோவறு_பதிகம்
* * * * * * * * * * *
பாவலர் மா.வரதராசன்
(என் குடும்பச்சூழலையும், மன இறுக்கத்தையும் நன்கறிந்த என் கெழுதகை நண்பர் மன்னை வெங்கடேசன் அவர்கள் நீண்ட காலமாக "நோயறு பதிகம்"
எழுதினால் நன்மை கிடைக்கும்" என்று வற்புறுத்திக் கொண்டேயிருந்தார். ஆயினும் மனம் ஒன்றாத காரணத்தால் எழுத முடியவில்லை.

நம்ம இளங்கவி விவேக்பாரதி வல்லமைக்கு ஒரு பிள்ளையார் ஒருபா ஒருபஃது எழுதித் தரச்சொல்லிக் கேட்க. . ..

இருவரின் வேட்கையையும் தீர்க்குமுகத்தான் #நோவறு_பதிகமாக எழுதிவிட்டேன்.
(நோ - இன்னல், துன்பம்
நோய் - உடல்நலக்குறைவு)
எனவே நோ+அறு - வகரவுடம்படு மெய்பெற்று நோவறு என்றாகியது)
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கட்டளைக் கலித்துறையானமைந்த பதிகம்
* * * * * * * * * * * * * * * *  * * * * * *
மாயிரு ஞாலத் தருள்செய சத்தி மகிழ்ந்துதந்த
ஆயிரும் ஞான்ற திருக்கையைப் பெற்றவன் ஐங்கரத்தன்
தீயிரும் இன்னல் தொலைந்திட வேண்டிச் சிலம்புகிறேன்
வாயிருந் தென்னை மகிழ்வுறச் செய்வாய் வணங்குவனே!           (1)

செய்யும் வினையெலாம் என்றன் திறனென்று தேர்ந்திருந்தேன்
ஐய நினதருள் என்றறி யாத அறிவிலனைப்
பெய்யு மழையெனப் பேதைமை நீக்கிப் பிணைத்திடுவாய்
உய்யு வழியென வந்து பணிந்தனன் உன்னடியே!        (2)

அடியொடு காயம் அணைந்திடு மாயினும் ஆறிவிடும்
முடிவிலாத் துன்பம் முடிவரை மூழ்கிடில் மூச்சிருமோ?
கடிமலர்க் கொன்றை அகலத்தன் பெற்ற கணபதிநின்
அடியினில் வீழ்ந்தேன் அருகென வாக அருளுகவே!         (3)

ஆக மிலாதவா றின்னற் கடலா யழுத்துமெனை
ஆகத் தழிவுட னில்லா ளியல்பு மழியுதையா
ஆகத்தி லேயுனைக் கொண்டு வழுத்தினேன் அம்பிகையை
ஆகத்தே கொண்ட அருட்சிவன் மூத்த அருமகனே!          (4)

அருமக ளென்றே இருவரைத் தந்தாய் அகமகிழ்ந்தேன்
கருமமும் பின்னே தொடர்ந்திடச் செய்தல் கருணையதோ?
இருமலும் சோகையும் ஈழையும் வெப்பும் இலவெனினும்
கருக்கிடும் அன்பில் மனையறம் தந்தாய் கணபதியே!            (5)

கணபதி யேயுன்றன் காலைப் பிடித்தேன் கலக்கத்துடன்
அணைகுவை நெஞ்சில் இறுக்கிடும் துன்பம் அணைந்திடவே
புணையெதிர் கொள்ளும் புரைகடல் துன்பமாம் புன்மையறத்
துணையென வுன்னைத் தொடர்குவன் காக்கவே தூயவனே!                (6)

தூயவா நின்பதஞ் சேர்ந்தால் துயரந் தொலைப்பவனே
மாயக் கணையெதிர் வந்தென்னை யாழ்த்த மறந்தனையோ?
நேயத்தோ டுன்னை உளத்தில் நிறைத்தவர் நிம்மதியைக்
காயத்து ளேவைத்துக் காத்திட வேண்டும் கணபதியே!           (7)

வேண்டும் வரங்களை வேண்டுவார் வேட்கும் விருப்புடனே
யாண்டும் அருள்பவ னேநினை நானுமின்(று) யாசிக்கிறேன்
தீண்டும் துயர்களும் தேடும் துயர்களுந் தேய்ந்தொழிய
நீண்டநற் கையுடை நேயனே செய்க நிறைவினையே!         (8)

வினையழித் தெம்மைநீ ஆட்கொள்ள வேண்டும் வியன்முகனே
எனையெதிர் நோக்குந்தீ யின்னற் பொசுங்கி இரிந்திடவும்
நினைகுவர் நெஞ்சம் நிறைவுடன் உன்னை நினைந்திடவும்
இணையெழிற் பாதத் தருள்செய வேண்டும் இளஞ்சிவனே!           (9)

சிவனொடு சத்தியும் சேர்ந்த திருகொண்ட செம்மலினை
அவமழிந் தேகிட வேண்டுவர் வாழ்வை அகங்கொளுமே
தவறியும் உன்னை மறந்திடும் உள்ளம் தரித்திடாமல்
இவனையும் செய்வாய் இனியவன் என்றே இறைமுதலே!      (10)

நூற்பயன்
* * * * * * * *
வேத முதலோனை வேழ முகத்தோனைப்
பாதகந் தீரப் பதிகத்தைச் - சேதமில்
வண்ணத் தொருநாளும் வாகாய்த் துதிப்போருக்(கு)
என்றைக்கும் சேரா திடர்.!

2 comments:

இமயவரம்பன் said...

தீயினும் வெய்யவாம் தீமைகள் மாய்க்கும் சிவப்புதல்வன்
தாயினும் அன்பினன் தன்சரண் நாடித் தனைத்தொடரும்
நோயினைத் தீர்த்திடும் நுண்பொருள் வாய்ந்தநன் நூலளித்தீர்
ஞாயிறு போலெழும் நற்கவி யாலிந்த ஞாலத்திற்கே.

இமயவரம்பன்
https://solvelvi.blogspot.com

Ranjith Ramadasan said...

மிகவும் அருமை நல்ல பதிவு வாழ்த்துக்கள்,,, நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/