பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

25 Feb 2016

சோலைக்கவியரங்கம் "நிறைவு கவிதை "#சோலைக்கவியரங்கம்
கவியரங்கத் தலைவர்,
பாவலர் மா.வரதராசனின்..
"நிறைவு கவிதை "
*******************
(அறுசீர் விருத்தம்)
வாழ்வினில் போற்று தற்கு
        வாய்த்தநல் வழியீ தென்று
தாழ்விலாக் கவிதை யாலே
        சாற்றினர் கவிதை இங்கே
ஆழ்கடல் அலைபோல் ஆர்த்த
        அருங்கவி அனைத்தும் கேட்டே
ஆழ்மனத் தின்பங் கொண்டே
        அவர்களை வாழ்த்து வோமே!

சோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் : 19#‎சோலைக்கவியரங்கம்‬

கவிஞரை அழைத்தல் : 19
(நேரிசை வெண்பா)

இந்தக் கவியரங்கின் ஈற்றுக் கவிஞரிவர்
தந்து மனமகிழச் செய்திடவே - வந்தே
அமிழாத் தமிழோ டரங்கம் வருக
தமிழ்தங்க ராச ரே!

‪#‎தமிழ்தங்கராஜ்‬ அவர்களே வருக!
தண்டமிழ்த் தேனள்ளித் தருக!

சோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் : 18#‎சோலைக்கவியரங்கம்‬

கவிஞரை அழைத்தல் : 18
(நேரிசை வெண்பா)

தாயின் பெருமை தகவுடன் சொல்லுதற்குத்
தோய்வில் கவிதையில் சொல்லடுக்கி - வாய்த்திட்ட
சோலைக் கவியரங்கில் சொக்கும் கவிபாட
மாலை யிளம்பிறையே வா!

கணேசன் ராமசாமி அவர்களே வருக!
கன்னித் தமிழ்ச்சுவை தருக!!

சோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் : 17
#‎சோலைக்கவியரங்கம்‬

கவிஞரை அழைத்தல் : 17
(கலிவிருத்தம்)

சோலையின் குயிலெனத் தூய நற்கவி
மாலையின் தேனியாய் மயங்கச் செய்திடக்
காலையின் பரிதியாய் சீனி வாசனும்
சோலையில் நுழைகிறார் சொக்க வைக்கவே!

‪#‎நடராசன்சீனிவாசன்‬ அவர்களே வருக!
நற்றமிழ் தேன்கவி தருக!!

‎சோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் : 16#‎சோலைக்கவியரங்கம்‬

கவிஞரை அழைத்தல் : 16
( நேரிசை வெண்பா)

சிந்தை மயக்கும் செழுங்கவிதை பாடுதற் (கு)
இந்தக் கவிஞன் இன்கவி - செந்தேனில்
வைத்தளிக்க வந்திட்டார் வாழ்த்தி அழைக்கின்றேன்
மெய்களிக்க வாரும் விரைந்து!

போற்றப்பட வேண்டியது...
அ. இயற்கை
***************
கவிஞர் ‪#‎அய்யப்பன்‬
கோவில்பட்டி.
பைந்தமிழ்ச் சோலையின் உறுப்பினர். பாட்டியற்றுக பயிற்சியில் பங்கேற்றவர்.
மரபைப் பயிலும் ஆர்வலர்.
★★★
*************

21 Feb 2016

சோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் : 15#‎சோலைக்கவியரங்கம்‬

கவிஞரை அழைத்தல் : 15
(அறுசீர் விருத்தம்)

கடவுளைப் போற்றிப் பாடக்
        கவிசுரே (ஷ்) சீனி வாசன்
நடந்திடுங் கவிய ரங்கில்
        நற்கவி தரவந் துள்ளார்.
தொடக்கமே இதுதான்...பாட்டில்
        தொய்வுகள் இருந்தால் கூடப்
புடம்பட உதவு மென்று
        புகுந்தாரே சோலை தன்னில்!

#‎சுரேஷ்சீனிவாசன்‬ அவர்களே வருக!
சொற்றமி ழால்கவி தருக!!

சோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் : 14.
#‎சோலைக்கவியரங்கம்‬

கவிஞரை அழைத்தல் : 14.
(காவடிச்சிந்து)

நாளுந்த மிழ்தனை எண்ணி - நலம்
உண்ணி - என்றும்
நற்றமி ழைக்கொள்வார் சென்னி - இவர்
நறுந்தேன்மழை உளவாம்கவி
நலமோங்கிட மனமேகொள
நடப்பார் - புகழ்
படைப்பார்!

‪#‎இராசகிருட்டினன்‬ ஐயா வருக!
இன்றமிழ்த் தேனள்ளித் தருக!!
★★★

சோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் :13.#‎சோலைக்கவியரங்கம்‬

கவிஞரை அழைத்தல் :13.
(நேரிசை வெண்பா)

கன்னித் தமிழணங்கின் கன்னல் கவிஞனிவன்
மின்னற் கவியாக்கும் மேன்மையன் - இன்னும்
வரமாய் விளங்கும் வரகவி பாடப்
‪#‎பரமநாதன்‬ வந்தார் பணிந்து!

#பரமநாதன் அவர்களே வருக!
பைந்தமிழ் நற்கவி தருக!!

சோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் : 12


#‎சோலைக்கவியரங்கம்‬

கவிஞரை அழைத்தல் : 12
(எண்சீர்விருத்தம்)

இனமேன்மை மொழிமேன்மை கொண்ட வர்தான்
              இதயத்தில் தமிழன்னை வீற்றி ருப்பாள்.
தனக்கென்றே வாழ்கின்ற உலகில் மற்றோர்
              தான்சிறக்க நினைக்கின்ற உயர்ந்த நெஞ்சர்.
மனமெல்லாம் தமிழுணர்வும் கவிதைப் பேச்சும்
              மணக்கின்ற செந்தமிழ மரபின் வீச்சும்
தினங்கொண்ட கவிஞரிவர் சிறப்பு மிக்க
              சீராளன் நற்கவிதை கொடுக்கின் றாரே!

‪#‎சீராளன்‬ அவர்களே வருக!
செந்தேன் கவிமழை பொழிக!!

சோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் : 11#‎சோலைக்கவியரங்கம்‬

கவிஞரை அழைத்தல் : 11
(தரவு கொச்சகக் கலிப்பா)

தமிழ்த்தாயின் அருமைகளைத்
தகவுடனே ஆய்ந்தறிய
தமிழகழ்வன் எனும்பெயரான்
தகுமுறையில் தமிழாய்வான்
இமிழ்கடல்சூழ் தரணிதனில்
எழிலோங்கு வுயர்மொழியின்
அமிழ்தான கவிமலரால்
அழகுசெய அழைத்தேனே!

‪#‎தமிழகழ்வன்‬ அவர்களே வருக!
தண்டமிழ் தேன்கவி தருக!!
★★★

சோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் : 10
#‎சோலைக்கவியரங்கம்‬
கவிஞரை அழைத்தல் : 10
(கலிவிருத்தம்)
பெற்ற தாயவள் பீடுகள் சொல்லிட
நற்ற மிழ்தனில் நற்கவி கைக்கொடும்
உற்ற இக்கவி யரங்கிலே உள்நுழை
நற்ற மிழ்க்கவி நாமவர் போற்றுவாம்!

‪#‎அரவிவேகானந்தன்‬ அவர்களே வருக!
அருந்தமிழ்க் கவியைத் தருக!!

சோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் : 9#‎சோலைக்கவியரங்கம்‬
கவிஞரை அழைத்தல் : 9
(ஒயிற்கும்மி)
கன்னித் தமிழவள் காதல னாமிந்தக்
கல்லூரி மாணவன் காணுமய்யா
கட்டித்தமிழ் கொட்டிப்பல
கற்றுக்கவி மெச்சத்தகு
கன்னற் கவிஞனை வாழ்த்துவமே!

போற்றப்பட வேண்டியது...
இ.தாய்மை
*************
கவிஞர் ‪#‎நிறோஸ்அரவிந்த்‬ 
Nirosh G Aravind

சோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் : 8
#‎சோலைக்கவியரங்கம்‬
கவிஞரை அழைத்தல் : 8
(நேரிசை வெண்பா)
செந்தமிழ்த் தேனீ செழும்பா வலரிவரே
முந்தித் தனிச்சுவையிற் முத்தாக - நந்தம்
வியாபித் தொளிர்கின்ற மென்றமிழின் சீர்பாடும்
சியாமளா வந்தார் சிறந்து!
‪#‎சியாமளா‬ அவர்களே வருக!
செந்தேன் கவிமழை பொழிக!!

சோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் : 7#‎சோலைக்கவியரங்கம்‬

கவிஞரை அழைத்தல் : 7
(அறுசீர் விருத்தம்)

கணினியில் பணிசெய் தாலும்
         கவிதையை மறந்தா ரில்லை.
அணிசெயும் மரபில் யாக்கும்
         அருங்கவி பலருள் பூத்த
மணிக்கவி, பார திக்கு
         மனத்தினில் இடம ளித்துத்
துணிந்துபல் கவிதை செய்யும்
         தூயராம் சுந்தர் ராசன்!

#‎சுந்தரராசன்‬ அவர்களே வருக!
சொக்கும் கவிதையைத் தருக!!

20 Feb 2016

சோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் : 6
#‎சோலைக்கவியரங்கம்‬

கவிஞரை அழைத்தல் : 6
(ஆனந்தக் களிப்பு)

நாளும்நற் பாக்களை நாடி - இவர்
நற்றமிழ்த் தாயவள் சீரதைப் பாடி
ஆளும்த னித்திறத் தோடே - என்றும்
அன்னைத் தமிழினைப் போற்றிடுவாரே!

பாவலர் போற்றும் ரமணி - இவர்
பாவகை பல்வேறு தான்படைப்பாரே!
ஆவலால் நானழைத் தேனே - உங்கள்
யாப்பெனும் தோப்பில் இளைப்பாறு வேனே!

‪#‎குருநாதன்‬ ரமணியாரே வருக!
குன்றாத் தமிழ்ச்சுவை தருக!!

சோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் : 5சோலைக்கவியரங்கம்‬
கவிஞரை அழைத்தல் : 5
(எழுசீர் விருத்தம்)
காலையில் தோன்றி மாலையில் மறையும்
கதிரவன் சுடரொளி போலே
சோலையில் வீசும் செந்தமிழ்த் தென்றல்...
சொக்கிடும் பாக்களின் மூலன்.
வேலையின் அலைகள் தழுவுதல் போலே
வித்தக விவேக்இவர் நந்தம்
கோலமாம் தமிழின் கோவெனச் சிறக்கக்
கூடியே வாழ்த்திடு வேனே!

#‎விவேக்பாரதி‬ அவர்களே வருக!
வியன்றமிழ் நற்கவி தருக!! 

சோலைக் கவியரங்கம், கவிஞரை அழைத்தல் : 4கவிஞரை அழைத்தல் : 4
(அறுசீர் விருத்தம்)

தமிழ்மணம் கமழச் செய்து
     தளர்விலா ஊக்கத் தோடே
சிமிழென விளங்கும் பாக்கள்
     திறத்துடன் தேர்ந்து கற்றுக்
கமழ்கவி நாளும் யாத்துக்
     களிப்பினை நல்கித் நம்மை
அமிழ்த்திட. வருகின் றாரே?!
     அருந்தமிழ்ச் சுவையைக் கொண்டே!

சரஸ்வதி அவர்களே வருக!
சந்தத் தமிழ்க்கவி தருக!!

14 Feb 2016

கவிஞரை அழைத்தல் : 3. கவிஞர் ‪#‎வள்ளிமுத்து‬


சோலைக்கவியரங்கம்‬

கவிஞரை அழைத்தல் : 3.
(நொண்டிச் சிந்து)

புதுக்கவி நாயகராம் - இவர்
புதுப்புதுக் கவிதையின் தாயகமாம்
மதுதரும் போதையைப்போல் - மனம்
மயக்கிடும் சிலேடையில் ஓங்கிடுவார்!

சீரொடு யாப்பறிந்தே - தனிச்
சீருடன் பாக்களை யாத்திடுவார்
வாருங்கள் வள்ளி முத்து - உங்கள்
வண்டமிழ்ப் பாடலைக் கொட்டுகவே!

வள்ளிமுத்து அவர்களே வருக!
வண்டமிழை யள்ளித் தருக!!

கவிஞரை அழைத்தல் - 2 கவிஞர் வெங்கடேசன்


சோலைக்கவியரங்கம்‬

கவிஞரை அழைத்தல் - 2
(கும்மிச் சிந்து)

பைந்தமிழ்ப் பாக்களைப் பாடிடு வாரிவர்
பாங்குட னேதமிழ் கற்றிடுவார்.
நைந்தநி லைகண்டு சீறிடு வார்நாளும்
நற்றமிழ்ச் சீர்கவி பெய்திடுவார்!

வெங்கடே சக்கவி என்பவ ராந்தமிழ்
வேண்டுமட் டுந்தந்து சீர்பெறுவார்
பொங்கும டக்கிலும் சிலேடையி லுந்திறன்
பூத்துக்கு லுங்கிடும் பாவலராம்!

வெங்கடேசன் அவர்களே வருக!
வியன்றமிழ்ச் சுவையைத் தருக!!

கவிஞரை அழைத்தல்.,1 கவிஞர் பொன். பசுபதி‪‎சோலைக்கவியரங்கம்‬

கவிஞரை அழைத்தல்.,
(அறுசீர் விருத்தம்)

"புரட்சியைப் பாட்டில் ஊட்டும்
         புதுவையின் செம்மல்.. பாட்டில்
திரட்சியைக் கொட்டி வைத்துத்
         தீந்தமிழ்க் கவிதை செய்வார்
உரசிடுந் தீயாய்ச் சொற்கள்
         உகுத்திடும் இவர்தம் பாட்டில்
முரசென "இயற்கை " போற்ற
         முதன்மையாய் வருகின் றாரே!!

‪#‎பொன்பசுபதி‬ அவர்களே வருக!
பொற்றமிழ்ச் சுவைக்கவி தருக!
★★★

13 Feb 2016

முயன்று பார்க்கலாம் 3 இன் தொகுப்பு‬அன்பு நண்பர்களே! கவிஞர்களே ! 
முயன்று பார்க்கலாம் : 3 இன் தொகுப்பு அப்பயிற்சியில் முயன்ற கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்பெறுகிறது. 
மிகக் கடினமான இப்பாவகையைப் பலரும் முயன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். அவர்களுக்குப் பைந்தமிழ்ச் சோலையின் சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து மகிழ்கிறேன்.
முயன்று வெற்றி யடைய இயலாதவர்கள் மனந்தளர வேண்டா. உங்கள் முயற்சியே சிறந்த பயிற்சியாகும்.
அரிதான ஒரு யாப்பைக் கற்பித்த நிறைவுடன் இத்தொகுப்பை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
தொகுப்பைப் படித்துப் பார்த்துச் சுவையுங்கள். கவிஞர்களை வாழ்த்துங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
தமிழன்புடன்,
பாவலர் மா.வரதராசன்

கம்பன்கவிநயம்‬ -3. யார்கொள்இச் சொல்லின் செல்வன்?


அனுமனைச் "சொல்லின் செல்வன் " என இராமன் அழைக்க என்ன காரணம்.?
இந்தக் கேள்வியைப் பல நாள்களுக்கு முன் சோலையிலும், சொல்மேடை என்ற என் தனிப் பக்கத்திலும் கேட்டிருந்தேன்.
அதற்கான விடையைக் கூறுமுகத்தான் கம்பன் கவிநயம் கட்டுரையின் வாயிலாகக் கொடுக்கிறேன்.

12 Feb 2016

‪பாட்டியற்றுக 22 இன் தொகுப்பு‬


அன்பு நண்பர்களே! கவிஞர்களே! பாட்டியற்றுக : 22 இன் தொகுப்பு அப்பாடல்களை இயற்றிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
புதிதாகப் பல கவிஞர்கள் இணைந்திருப்பது மனத்திற்கு மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் தருகிறது. 
எந்தப் பயிற்சியிலும் இல்லாத வகையில் இந்தப் பயிற்சியில் 31 பேர்களின் பாடல் தேர்வானது, இந்தப் பாவகையின் எளிமையையும், பலருக்கும் இருக்கும் ஆர்வத்தையும் காட்டுகிறது.
பைந்தமிழ்ச் சோலையில் விருப்பத்துடன் பலர் இணைவது, தமிழ் மரபைக் கற்கப் பலரும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பதையே காட்டுகிறது. 
கொடுக்கப்பட்டுள்ள எண்கள் தரவரிசைக்குரியதல்ல. கவிஞர் அனுப்பிய வரிசைக்குரியதே.
கவிஞர்களை வாழ்த்துங்கள். 
கவிதைகளைப் படியுங்கள். நண்பர்களுக்குப் பகிருங்கள்.
பாட்டியற்றுக : 22
வஞ்சி விருத்தம்
*******************
1. கவிஞர் கட்டிக்குளம் ஓ.சுந்தரமூர்த்தி
நில்லா உலகே நீவாழ்க! ,
எல்லா வளங்க ளேதந்நாய் ! .
பொல்லாங் கொழிக்கும் பூப்பூக்க
வல்ல பலவும் ஈவாயே !

பாட்டியற்றுக - 22


நண்பர்களே.! கவிஞர்களே.! அறிஞர் பலரும் பாராட்டும் 
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 22" இதோ.!
"இப்பகுதியில் கொடுக்கப்படும் இலக்கணக் குறிப்புகள், புதிதாகக் கற்பவர்கள் அஞ்சி ஒதுங்காமல், குழப்பமடையாவண்ணம் எளிதில் கற்கும் விதத்தில் (பாட்டியற்றும் வகையில்) தேவையானவை மட்டுமே கொடுக்கப்படுகின்றன. 
மேல்விளக்கம் தேவைப்படுவோர்
முன்னோர் யாப்பியல் நூல்களைப் பார்க்கவும்."
முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, இந்தப் பதிவைப் பகிர்ந்தும், மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.! 

10 Feb 2016

பாட்டியற்றுக 21 இன் தொகுப்பு


அன்பு நண்பர்களே! கவிஞர்களே! பாட்டியற்றுக : 21 இன் தொகுப்பு அப்பாடல்களை இயற்றிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
புதிதாகப் பல கவிஞர்கள் இணைந்திருப்பது மனத்திற்கு மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் தருகிறது.
பைந்தமிழ்ச் சோலையில் விருப்பத்துடன் பலர் இணைவது, தமிழ் மரபைக் கற்கப் பலரும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பதையே காட்டுகிறது. 
கொடுக்கப்பட்டுள்ள எண்கள் தரவரிசைக்குரியதல்ல. கவிஞர் அனுப்பிய வரிசைக்குரியதே.
கவிஞர்களை வாழ்த்துங்கள். 
கவிதைகளைப் படியுங்கள். நண்பர்களுக்குப் பகிருங்கள்.

பாட்டியற்றுக : 21

நெஞ்சொடு கிளத்தல்நான்பெற்ற இன்பத்தை நானறிந்த வாறாக
ஏன்தந்தேன் எல்லோர்க்கும் என்னெஞ்சே - வான்பெய்
மழையெந்தக் கைம்மாறு மக்களிடம் கேட்கும்
விழைவாலே சொன்னேன் விரைந்து.!

பணத்திற்கா அன்றிப் பதவிக்கா உண்ணும்
உணவுக்கா இப்பணிசெய் கின்றேன் - கணந்தோறும்
இல்லாள் எரிச்சலும் என்கால வீணடிப்பும்
தொல்லை பலகண்டேன் தொய்ந்து!

கற்றுப் பயனென்ன கற்பித்தல் ஒன்றேயாம்
இற்றைநாள் இந்நிலையேன் இங்கில்லை - உற்றறிந்தே
முற்றுமிலை யென்றாலும் முத்தமிழின் யாப்புகளைச்
சொற்பமெனச் சொன்னேன் துணிந்து.!

போற்றற்கும் ஏத்திப் புகழ்தற்கும் நானென்றும்
ஆற்றவிலை என்றுரைப்பாய் அன்புளமே - தூற்றலுக் (கு)
எம்மலையும் வீழாதே என்கடனை என்றைக்கும்
செம்மையுடன் செய்வேன் தெளிந்து!
★★★

பாட்டியற்றுக - 21


நண்பர்களே.! கவிஞர்களே.! அறிஞர் பலரும் பாராட்டும் 
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 21" இதோ.!
"இப்பகுதியில் கொடுக்கப்படும் இலக்கணக் குறிப்புகள், புதிதாகக் கற்பவர்கள் அஞ்சி ஒதுங்காமல், குழப்பமடையாவண்ணம் எளிதில் கற்கும் விதத்தில் (பாட்டியற்றும் வகையில்) தேவையானவை மட்டுமே கொடுக்கப்படுகின்றன. 
மேல்விளக்கம் தேவைப்படுவோர்
முன்னோர் யாப்பியல் நூல்களைப் பார்க்கவும்."
முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, இந்தப் பதிவைப் பகிர்ந்தும், மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.! 
*** *** *** ***

3 Feb 2016

கம்பன் கவிநயம்‬ - 2 சொக்க வைக்கும் ஒருசொல்"யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவன்போல் இளங்கோ வைப்போல் யாங்கனுமே பிறந்ததில்லை..."" என்று பாரதி அயர்ந்து போகிறான்.
"எண்ணியெண்ணித் திட்டமிட்டு எழுதி னானோ?
எண்ணாமல் எங்கிருந்து கொட்டி னானோ? ",..
என்று வியக்கிறார் நாமக்கல் கவிஞர்.