பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

3 Oct 2015

யாப்பறிவோம் -5 தளை ,அடி


தளை

1. தளை என்ன என்பதைக் கூறி அதன்வகைளை விளக்கிக் கூறுக?

ஒரு பாவின் ஓர் அடியில் நின்ற சீரின் ஈற்றøசையோடு வரும்சீரின் முதற்சீரைத் தளைத்து அல்லது இணைத்து பந்தமுற நிற்பது தளையாகும்.
அதாவது தளைத்து நிற்பது. சீரோடு சீரை இணைத்துச் செய்யுள் அடிகளை அமைக்கும் போது அவற்றுக்கிடையே ஏற்படும் இயைபே தளையாகும்.
பந்தம் என்பது தளையின் இன்னொரு பெயராகும்.

அ.தளையை இனங்காணும் முறை
நின்றசீரின் வாய்பாட்டை இனங்கண்டு வரும்சீரின் முதலசையை அவ்வாய்பாட்டோடு இயைத்துக் கவனமாகத் தளையை இனங்காண வேண்டும்
எடுத்துக்காட்டு
யாயும் ஞாயும் 
நின்றசீர் வருஞ்சீர்
தேமா நேர் நேர்
நின்றசீர் தேமா வருஞ்சீரின் முதலசை நேர்
எனவே மாமுன் நேர் என்பது நேரொன்றாசிரியத் தளை
ஒன்றிய தளை ஒன்றாத் தளை
நின்றசீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் முதலசையும் ஒரே அசையாக இருந்தால் ஒன்றிய தளையாகும்.
அவ்வாறுஇல்லாமல் நின்றசீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் முதலசையும் வேறாக இருந்தால் ஒன்றாத் தளையாகும்.
தளைகள் ஏழு வகைப்படும்
வாய்பாடு எடுத்துக்காட்டு
1.நேரொன்றாசிரியத்தளை மா முன் நேர் 
    அன்பும் பண்பும்
2.நிரையொன்றாசிரியத்தளை விளமுன்நிரை 
    அன்பினால் அரவணை
3.இயற்சீர் வெண்டளை மாமுன் நிரை,விளமுன் நேர் 
    வந்தால் தருவேன் , துணிவுடன் செய்க
4.வெண்சீர் வெண்டளை காய்முன் நேர் 
    நானழைத்தால் வா
5.கலித்தளை காய்முன்நிரை 
    நானழைத்தால் ஒளி
6. ஒன்றிய வஞ்சித்தளை கனிமுன் நிரை 
    வருவதுடனே வரும
7. ஒன்றாவஞ்சித்தளை கனிமுன் நேர் 
     வருவதுடனே வாரா

இயற்சீர் வெண்டளைக்கு மட்டும் இரண்டு சீர்கள் வரும்
ஏனைய தளைகளுக்கு ஒவ்வொரு சீரே வரும்
அ.வெண்பா வுக்குரிய தளை = வெண்டளை 
1. இயற்சீர் 
2. வெண்சீர்
வெண்பாவில் வேற்றுத்தளை விரவவே முடியாது. அதாவது தளை தட்டவே கூடாது.
ஆ.ஆசிரியப் பாவுக்குரிய தளை = ஆசிரியத்தளை.
1.நேரொன்று 
2.நிரையொன்று
ஆசிரியப்பாவில் ஏனைய தளைகள் அருகிவிரவலாம்.ஆனால் நிரைநடு வஞ்சி உரிச்சீர்( கூவிளங்கனி, கருவிளங்கனி) வாரா.
இ.கலிப்பாவுக்குரிய தளை= கலித்தளை
(காய்முன் நிரை) ஏனைய தளைகள் அருகிவிரவலாம். ஆனால் நிரைநடு வஞ்சி உரிச்சீர்( கூவிளங்கனி, கருவிளங்கனி) வாரா.
ஈ. வஞ்சித்தளை = வஞ்சித்தளை.
1.ஒன்றிய (கனிமுன் நிரை) 2. ஒன்றா. (கனிமுன் நேர்)
ஏனைய தளைகள் அருகிவிரவலாம்
நாலசைச் சீர்கள் எல்லாப்பாக்களுக்கும் உரிய பொதுச்சீர்கள் என்றாலும் இப்போது இச்சீர்கள் பாக்களில் இடம்பெறுவதில்லை. பாவழக்கில் இல்லை.


அடி

இருசீர் குறளடியாம், இன்னொருசீர் சிந்தாம்,
மருவறு நாற்சீர் அளவாம், -தெரிதரு
ஐஞ்சீர் ஆகும் நெடில்,ஆறே மேöல்லாம் 
மைதீர் கழிநெடில் மாண்பு

1.அடியினை விளக்கி அதன்வகைகளைக் கூறுக
இரண்டு முதலான சீர்களைக் கொண்டு முடிவதே அடியாகும்.அல்லது ஒன்று முதலிய தளைகளைஅடுத்து வருவது அடியாகும்.
அடிகள் ஐவகைப் படும்
அ.குறளடி ஆ.சிந்தடி இ.அளவடி(அடி) ஈ.நெடிலடி உ.கழிநெடிலடி
1..குறளடி= ஓரடியில் இரண்டுசீர்கள் வரப்பெறுவது
2..சிந்தடி= ஓரடியில் மூன்றுசீர்கள் வரப்பெறுவது
3  அளவடி..= ஓரடியில் நான்குசீர்கள் வரப்பெறுவது
4..நெடிலடி= ஓரடியில் ஐந்துசீர்கள் வரப்பெறுவது
5..கழிநெடிலடி= ஓரடியில் ஆறு அல்லது அதற்கு மேலும்சீர்கள்     
      வரப் பெறுவது

நான்குசீர்கள் கொண்ட அளவடி அல்லது அடி எனப்படும் இவ்வடியே சிறப்பான அடியாகும். தொல்காப்பியர்
“ நாற்சீர் கொண்டது அடியெனப் படுமே “ (தொல்.பொருள்.செய்.31)
என்றும்
“ அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே “(தொல்.பொருள்.செய்.34)
என்றும் கூறுகிறார்.
நாற்சீர் அடியாகிய அளவடிதான் பாக்களில் பெரும்பாலும் பயன்படுகிறது.

சிந்தடி நான்கில் வஞ்சிவிருத்தம் அமைந்திடும்.
அளவடிநான்கில் கலிவிருத்தம் அமைந்திடும்.
நெடிலடி நான்கில் கலித்துறை அமைந்திடும்.
கழிநெடிலடியில் ஆசிரிய விருத்தம் அமைந்திடும்.

2 comments:

Raj Krish said...

தட்டுத் தடுமாறி யாப்பறியா சீடருக்கு
மட்டில்லா பாமரபில் வார்த்திடக் காட்டியும்
கட்டுக் கவிதைகள் காவில் பொழியவே
இட்டநல் ஏந்தலிவர் வாழி

Susila Susi said...

பல்விளக்கம் நீர் தந்தீர்
நல்விளக்கம் நாம் பெறவே
பா மரபு அருமை அய்யா
நா நவிழும் நன்றி !!