பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

14 Nov 2022

#பாட்டியற்றுக_தொகுப்பு - 04 (புதியது)

 


அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! 

    பாட்டியற்றுக:04 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.

பயிற்சிக்குழுவில் தேர்வான பாடல்களை இந்தத் தாய்க்குழுவில் பதிவிட்டதற்குக் காரணம்...உங்களுடைய ஊக்கம் தரும் வாழ்த்துகளை வேண்டியே.

   இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. 

   இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும்.  பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.

                                     நன்றி.!

                            *****     *****     *****

           .  பாட்டியற்றுக,--04

         (வெள்ளொத்தாழிசை)

1. கவிஞர் Sachithananthan Kuganathan 

ஒருவேளை உண்ண உணவற்ற ஏழை                 

கருவூலம் கொள்ளாத காசுடையோ னென்று

பெருந்தெற்றுக் கில்லைப் பிரிவு

கருப்பா வெளுப்பா கலப்பா  கலவாப்

பெருமானா  வீரனா பேடியா வென்று 

பெருந்தொற்றுக் கில்லைப் பிரிவு

கருவினை ஈன்றெடுக்கக் காத்திருக்குந் தாயோ 

கருவோ குமரியோ  காளையோ என்று

பெருந்தொற்றுக் கில்லைப் பிரிவு.

2.கவிஞர் Kannan Balanethiram Kannan 

கசக்குந் துயரைக் களைந்த மனத்தைப்

பிசகு மியல்பால் பிழையில் வருத்தி

விசனந் தருங்கால் விலகு

வசன முதிர்த்தவர் வாழ்க்கையில் தன்சொல்  

கசடறக் சற்றும் கடைப்பிடிக் காமல்  

விசனந் தருங்கால் விலகு

குசலம் வினவுங் குணவான் பிழன்று 

வசைமொழி பொங்கிட வன்மம் மிகுந்து

விசனந் தருங்கால் விலகு

3. கவிஞர் Swarna Sabarikumar 

அன்னைத் தமிழின் அடிவணங்கி வேண்டினேன்

இன்னரு ளாலே இடரினைத் தீர்த்தவள்

என்னுள் நிறைவாய் இருப்பு.

கன்னல் சுவையாய்க் கருத்தில் உறைபவள் 

தென்றல் இதமாய்த்  தெவிட்டா தணைப்பவள்

என்னுள் நிறைவாய் இருப்பு.

பின்னலின் கோவையாய்ப் பீறிட் டெழுஞ்சொல்

மின்னலின் வேகத்தில் மீட்டித் தருபவள்

என்னுள் நிறைவாய் இருப்பு.

4. கவிஞர் Anbudan Ananthi 

அடியும் முடியும் அறிய இயலா 

அவனின் புகழை அவனின் அருளை

அகமும் புறமும் நினை

முன்னரும் பின்னரும் மூலமும் ஆனவன்

தன்னை உணரத் தடைகள் விலக

அகமும் புறமும் நினை

அறியாமை ஓங்க அறியாது செய்த

பிழைகள் பொறுத்துப் பிரியாமல் காக்க

அகமும் புறமும் நினை.

5. கவிஞர் சேக்கிழார் அப்பாசாமி 

வறுமையில் வாழ்ந்திடும் மாந்தர் நலனில்

சிறுமை யகற்றிடத் திக்கெட்டும் தேடிச்

சிறந்ததைத் தானமாகச் செய்

குருதிக் கொடைதான் குணத்தில் சிறப்பு

பெரும்பிணி நீக்கிடப் பேருதவி யாகச்

சிறந்ததைத் தானமாகச் செய்

கல்வியைக் கற்றிடக் கைப்பற்றி நின்றிடும்

செல்வம் குறைந்தோர் செழுமையாய்க் கற்றிட

சிறந்ததைத் தானமாகச் செய்

6.கவிஞர் க.சந்தோஷ்குமார் 

தவழும் முகிலாள் தரைவீழ் மழைபோல்

தவறா தெனைநீ தழுவிப் புணர்ந்தால்

உவகை நிறையும் உளம்

கவலையி லாழ்ந்த கடும்பிணி யுற்றோன்

அவலம் ஒழிக்கும் அருமருந்து பெற்றால்

உவகை நிறையும் உளம் 

சிவந்த இதழினில் செந்தமிழ் சிந்தும்

அவளது கூடல் அகலா திருந்தால்

உவகை நிறையும் உளம்

7.கவிஞர் Umaipalan Thiyagaraja 

பிச்சைக்குக் கையையேந்திப் பீடிழக்க நேரினும்

இச்சிறிய வாழ்வில் இருள்தான் நிறைந்தாலும்

கற்றகல்வி கைவிடாது காண்!

பெற்றெடுத்த பிள்ளைகளால் பேர்கெட நேரினும்

சுற்றமெல்லாம் தூரநிற்கச் சோக முறைந்தாலும் 

கற்றகல்வி கைவிடாது காண்!

மூப்பெய்தி மூச்சிழுத்து மூலையில் வீழ்ந்தாலும்

காப்பாற்ற யாருமற்றுக் கண்ணீர் சொரிந்தாலும்

கற்றகல்வி கைவிடாது காண்!

                              ★★★

பாட்டியற்றுக_தொகுப்பு - 03 (புதியது)

 


அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! 

    பாட்டியற்றுக:03 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.

பயிற்சிக்குழுவில் தேர்வான பாடல்களை இந்தத் தாய்க்குழுவில் பதிவிட்டதற்குக் காரணம்...உங்களுடைய ஊக்கம் தரும் வாழ்த்துகளை வேண்டியே.

   இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. 

   இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும்.  பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.

                       நன்றி.!

           *****     *****     *****

           .  பாட்டியற்றுக,--03

              (நேரிசைவெண்பா)

1. கவிஞர் Sachithananthan Kuganathan 

ஆடிவெயில் கண்பொரிய ஆற்றாது கூடத்தில் 

வாடிப்போய் வீழ்ந்து மயக்குற்றேன் - ஆடியது

முன்கதவு வீடெங்கும் முற்றத் திருந்தகுளிர்

தென்றல் தவழ்ந்த திறம்.

2.கவிஞர் சேக்கிழார் அப்பாசாமி 

பாட்டெழுதப் பற்றினோம்

பாவலர் பாதத்தை!

மீட்டெம்மைக் காக்கின்றார் மேன்மையாக! - ஏட்டினில்

யாமியற்றும் பாக்களை யாவ ருமறியத்

தாமிங்குச் சாற்றிடுவார் சான்று

3.கவிஞர் Anbudan Ananthi 

சொல்லுக்குள் நிற்கும் சுமைகள் கடப்பவர்

வெல்லும் வழியின் வெளிச்சத்தில் - நில்லாது

செல்லும் அறவழியும் சொல்லும் எவர்க்குமிங்குக்

கல்வியே கேடயக் காப்பு.

4.கவிஞர் Umaipalan Thiyagaraja 

கூட்டைப் பிரிந்தழும் குஞ்சுகளைப் போல்தம்தாய்

நாட்டைப் பிரிந்துழல்வார் நாள்தோறும் - மீட்டணைத்துத்

தோழமையாய் நின்றொரு தோள்கொடுப்பார் இல்லையெனில்

பாழாய்ப்போம் என்றுமிந்தப் பார்!

5.கவிஞர் Swarna Sabarikumar 

மலரத் துடித்திடும் மல்லிகைச் செண்டு

புலர்ந்த தினமும்  பொலிவாம்- அலர்ந்த

நறுமுகை வாசனை நாசி நுழைந்து 

வருடும்  மனத்தின் வரம்.

6.கவிஞர் Balanethiram Kannan 

ஆந்தைக்குக் கேட்குமாம் அச்சிற் றெலிச்சத்தம்   

மாந்தர்க்குக் கேட்காது மைந்தர்காள்! - ஈந்தநல் 

மாற்றுத் திறனனைத்தும் மண்ணில் மகத்துவம் 

ஏற்பிலை போட்டி இயல்பு

7.கவிஞர் CA Manimaran Kathiresan 

மகளவளின் பாசம் மகத்துவம் பேசும்

அகவை முதிர்ந்தும் அணைக்கும் - அகவை

புதிதாய்த் தொடங்கும் புதுவுறவை ஈன்றும்

உதிராதே தந்தை உறவு 

8.கவிஞர் க.சந்தோஷ்குமார் 

கற்றுயர்ந்த மேன்மக்கள் கல்லாத மாந்தர்க்கும்

நற்றுணையாய் உற்றுழி நல்குவர் - நற்பதமாய்ச்

சேற்றில் விதைத்தவை செம்பயி ராய்விளையும்

மாற்றந் தருமாம் மழை

9. கவிஞர் Thilagavathi Ramesh 

வண்ண வனப்புடனே வானுயர்ந்த வாமனவன்

வெண்ணெய் திருடுவதில் வென்றிடுவான்-கண்ணனவன்

கோலத்தைக் கண்டிங்கு கோதையவள் கொஞ்சிடவே

காலமெல்லாம் காத்திருக்கும் கண்

                                 ★★★


31 Oct 2022

பாட்டியற்றுக_தொகுப்பு - 02 (புதியது )



அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! 

    பாட்டியற்றுக:02 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.

பயிற்சிக்குழுவில் தேர்வான பாடல்களை இந்தத் தாய்க்குழுவில் பதிவிட்டதற்குக் காரணம்...உங்களுடைய ஊக்கம் தரும் வாழ்த்துகளை வேண்டியே.

   இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. 

   இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும்.  பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.

                       நன்றி.!

           *****     *****     *****

           .  பாட்டியற்றுக,--02 

              (குறள்வெண்பா)

1.கவிஞர் Sachithananthan Kuganathan 

எண்ணத்திற் சீர்கள் எழுந்து நடைபயில

வெண்பா வருமே விரைந்து

2.கவிஞர் Swarna Sabarikumar 

இறைவன் அருளால் எடுத்த பிறப்பில் 

மறைபொருள் காண்பதே மாண்பு.

3.கவிஞர் Anbudan Ananthi 

முத்தமிழே மூலமே மூத்தவளே உன்னாலே

தித்திக்கும் எந்தன் பிறப்பு.

4.கவிஞர் Umaipalan Thiyagaraja 

இன்பத் தமிழ்பருக ஈர்த்தணைத்தாய் சோலைக்கே

அன்னைத் தமிழே அழகு

5.கவிஞர் Balanethiram Kannan 

கடலிலே மூழ்கையில் கைகொடுப் பாரும் 

கடனுக்கு நீட்டிடார் கை

6.கவிஞர் சேக்கிழார் அப்பாசாமி 

பாட்டுக்குப் பாரதிபோல் பைந்தமிழ்ச் சோலையாம்

காட்டாற்று வெள்ளத்தில் கல்

7.கவிஞர் க.சந்தோஷ்குமார் 

முப்பால் நெறிநின்று மூவுலகும் ஆழ்ந்தறிந்தால்

ஒப்பிலா வாழ்க்கை உயிர்க்கு

8.கவிஞர் CA Manimaran Kathiresan 

தேவைக்காய் வந்திடும் தேடுபொருள் யாவையும் 

சேவைக்காய்க்  கொள்ளற் சிறப்பு

9.கவிஞர் திலகவதி

அன்பென்ற சொல்லால் அகிலமும் கட்டுண்டு 

நன்றென்று நாட்டப் படும்

                                ★★★


#பாட்டியற்றுக_தொகுப்பு - 01 (புதியது )



அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! 

    பாட்டியற்றுக:01 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.

    இந்த ஆண்டின் முதல் பயிற்சியின் தொகுப்பு இது. 

பயிற்சிக்குழுவில் தேர்வான பாடல்களை இந்தத் தாய்க்குழுவில் பதிவிட்டதற்குக் காரணம்...உங்களுடைய ஊக்கம் தரும் வாழ்த்துகளை வேண்டியே.

   இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. 

   இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும்.  பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.

                       நன்றி.!

           *****     *****     *****

           .  பாட்டியற்றுக,--01

       (குறள்வெண் செந்துறை)

1. கவிஞர் Anbudan Ananthi 

சிவமே சீவனே சிந்தையில் நின்றவா

தவமே புரிவேன் தருவாய் அருளே!

2.கவிஞர் Sachithananthan Kuganathan 

வேழ முகத்து விநாயகா வுன்பதந்

தாழப் பணிந்தேன் தமிழினிற் பாடவே!

3.கவிஞர் Umaipalan Thiyagaraja 

உமையொரு பாகம் உடையாய் நீயே

அமைதி தருவாய் அகிலத் தரனே!

4.கவிஞர் Swarna Sabarikumar 

சங்கரன் மனமகிழ் சங்கரி உன்னருள்

எங்களை அரண்போல் என்றுமே காக்கவே!

5.கவிஞர் CA Manimaran Kathiresan 

வேலுடன் நின்றவா வேதனை அகற்றவா

வேலும் மயிலும் வேண்டும் துணையே!

6.கவிஞர் Kannan Balanethiram 

மனத்திலே திடமும் மகிழ்வுட னுளமும்

தினமுமே தருவாய் தில்லையம் பலனே

7.கவிஞர் க.சந்தோஷ்குமார் 

வினையின் பயனால் விளைந்தேன் முருகா

வினைகள் ஒழித்துயர் வீடளித் தேற்கவே

8.கவிஞர் சேக்கிழார் அப்பாசாமி 

ஏறு முகமாய் ஏற்றி விடவே

ஆறு முகமே அருளைத் தருகவே

9.கவிஞர் திலகவதி

மாயக் கண்ணனே மரகத வண்ணனே

காயம் பொய்யே காத்திடு நீயே

                                ★★★

15 Feb 2020

தமிழ்ப் புத்தாண்டு


லகெங்கிலுமுள்ள தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

அறிவியலுக்கொவ்வாத சித்திரை 1 (ஏப்ரல் மாதம். . .கடுங்கோடைக் காலம்) தமிழ்ப் புத்தாண்டென்று நுழைக்கப்பெற்று அதை இன்றளவும் ஏற்றுக் கொண்டாடும் தமிழர்காள். . .

ஆடியில் விதைத்துத் சுறவத்தில் (தைத்திங்கள் என்னும் சனவரியாம் .. .வாழ்வின் மலர்ச்சிக் காலம்) அறுத்து இந்த உலகத்திற்கே சோறிடும் நம் பண்டைய முன்னோர் கண்டறிந்த வானியற் கூற்றின்படி நமக்கெல்லாம் இன்றுதான் தமிழ்ப் புத்தாண்டாகும்.!

5 Sept 2019

நோவறு_பதிகம்

நோவறு_பதிகம்
* * * * * * * * * * *
பாவலர் மா.வரதராசன்
(என் குடும்பச்சூழலையும், மன இறுக்கத்தையும் நன்கறிந்த என் கெழுதகை நண்பர் மன்னை வெங்கடேசன் அவர்கள் நீண்ட காலமாக "நோயறு பதிகம்"

3 Apr 2019

நெஞ்சொடு கிளத்தல் .

இன்றைக்கு (நாள் – 24.03.2019 ) நிகழ்ந்த ஒருநிகழ்வால் மனம் கொதித்துக் கொண்டிருக்கிறது. அம்மனத்தை ஆற்றுவிதத்தான் 'என்னெஞ்சே அமைதிபெறு ' என

                          நெஞ்சொடு கிளத்தல் .

ஒற்றை இலக்கப் பாடல்கள் பாவலர் மா.வரதராசன் 
இரட்டை இலக்கப் பாடல்கள் விவேக்பாரதி 


கேளாய் மடநெஞ்சே கீழோர் நிறைவையம்
தேளாய்க் கொடுக்காற் றிகைப்பூட்டும் - நாளாக
எல்லாம் தெளிவாகும் ஈசன் செயலென்று
நல்லதே நாளும் நினை                                                                         .

நினைவே அழையாதே நீயுந்தேம் பாதே
கனவே அனைத்தும் கலையும் - மனமே
அமைதியுடன் வையத்தின் ஆட்டத்தைக் கண்டால்
சுமையெதுவும் இல்லை சுகம்!

சுகமொன்றே நோக்காய்ச் சுமக்கின்றார் பல்லோர்
முகம்முன்னே பாடித் துதிப்பர் - அகத்திலோ
ஆயிரம் கீழ்மை அணைந்திருக் கச்செய்வான்
பேயினும் தீய செயல்

செயல்கண்டு பல்லோர் செழிப்பெல்லாங் கண்டு
வியப்புற்றுச் செய்திடுவார் வஞ்சம் - அயலானா
நம்நிலைமை மாற்றுவது நன்னெஞ்சே தேம்பாதே
கம்மென் றிருத்தல் கலை!

கலையே உயிரென்பான் கன்னித் தமிழை
விலைகொண்டு விற்றுப் பிழைப்பான் - அலைநெஞ்சே
பொன்னாடைக் கேங்கிப் புலைதீய செய்யுமப்
பன்னாடை யையுள் தவிர்

தவிர்ப்பவரை நம்செய்கை கண்டு மனத்தால்
தவிப்பவரை வாழ்வில் தரிசி - அவர்சொல்வார்
நம்வழிப் பாட்டையது நல்வழி என்பதை
உம்மெனும் வார்த்தை உகுத்து

உகுக்கின்ற கண்ணீரே உம்மத்தர் தம்மைச்
செகுக்கின்ற வாளாம் தெருள்க - பகுக்கின்ற
காக்கைக்கும் உண்டாம் பகுத்தறிவு இவ்வோட்டை
யாக்கைக்கு முண்டோ அது?

அதுசெய்க இன்னும் இதுசெய்க வென்பார்
மெதுவாக கால்வாரிச் செல்வார் - பொதுநலத்தை
எண்ணுதல் முக்கியம் ஏ!மனமே அத்துடன்
உண்மையும் சேர்த்தே உணர்

உணரும்போ தெல்லாம் உயிர்கொய்யு மாகில்
திணறுத லாமே இயற்கை - அணங்கிற்கும்
நன்மன முண்டாங்கொல் நாயா மிம்மூடர்க்குக்
கன்மனம் தானே களிப்பு

களிப்பார் விழிகள் கலங்கிடக் கண்டு
விளிப்பார் நகைத்திடுவார் வீணாய் - புளித்திருக்கும்
பாலை எறிதல்போல் பாவியரை நாமெறிந்தால்
நாலும் நடக்கும் நலம்

நலமென்று கண்டும் நலமில்லை யாமால்
பலங்கொள்ள லாமோ பகர்வாய் - முலைகெட்ட
மாதர்தம் வேட்கையும் மாய்க்கும்நற் பண்பென்னும்
ஓதலே நன்றாம் உணர்

உணர்ந்துவிட்டால் நெஞ்சே உதரலினி இல்லை
புணர்ந்து பிரிகின்ற பொய்யர் - வணங்கிடுவார்
வாலாட்டு வார்பின்னால் வாரிமண் தூற்றுவார்
நூலாட்டம் நீயறுப்பாய் நட்பு!

அறுப்பாய்நன் னெஞ்சே அடுப்பாய் பகையை
ஒறுத்தல்நம் வேலை ஒழிக - பொறுத்தலும்
முட்டாள் தனமாகும் முந்தி யுணர்வாயே
பட்டால் தெரியும் வலி

வலிமை வளர்ப்பாய் வளைநெஞ்சே உன்னை
எலியாய் நினைத்திங்கே ஏசும் - வலியில்லாப்
புல்லரை உன்செயலால் பூழ்தி யெனவாக்கு
கல்வியால் தீர்ப்பாய் களை

களைப்பால் அயராதே காண்நெஞ்சே தீதை
உளைப்பாய் உயர்தொண்டால் ஒன்றி - விளைசெய்கை
நற்றமிழே என்னும் நறும்பணியைக் கொள்ளப்
பெற்றிடுவாய் என்றும் சிறப்பு

சிறப்புடையான் நீநெஞ்சே சேராத நட்பால்
சிறப்பிழந்து நோயில் சிதையாய்! - பொறுப்புனக்
குண்டுபல வேலை உடனுண்டே உன்பகைவர்
உண்டு கொழுத்திருப்பார் உற்று!

உற்றறிக நன்னெஞ்சே ஒல்லார்தம் தீமனத்தை
முற்றொழித்த லாகா முனையழியும் - நற்றுணையாய்ப்
பொற்றமிழைக் கொள்வாய் புதுத்தெம்பை நீயடைவாய்
கற்றுயர வேண்டும் கனிந்து

கனிந்தபடி பேசுவார் காலம் நெருங்க
மனத்தில் அவிழ்ப்பார் விலங்கை - மனிதரிங்குப்
பொய்சூழ் உலகத்தைப் போகமென வாழ்கின்றார்
மெய்நீ உணர்ந்திட்டால் மேல்

மேலும் நிலையில்லை கீழூம் நிலையில்லை
காலுமிரண் டென்பாய் கவினெஞ்சே - பாலுள்
துளிநஞ்சும் கூடத் துயராக்கும் போதிங்
குளைதலோ நல்லோர் உளம்?

உளமே உனகோர் உபாயம் மொழிவேன்
களிப்பை உனதாய்க் கருது! - குளத்தினில்
கல்லை எறிந்தால் குழப்பந்தான் தேம்பாதே
எல்லாம் நடக்கும் இனிது

துன்பம் வருங்கால் நகுகவென் றையனும்
முன்ன முரைத்த தறிநெஞ்சே - இன்னமும்
தீயோர் செயலெண்ணித் தேம்பிக் கிடக்காமல்
மாயோன் பதத்தை வளை!

வளையப் பழகிக்கொள் மென்நெஞ்சே உன்னைத்
தளையிடும் தீயுணர்வைத் தீர்ப்பாய் - விளையாட்டே
யாவும் எனநினைத் தானந்தம் நீகொள்க
யாவும் அடங்கும் அணைந்து!

அணைந்தாலும் கங்கு கனன்றிருத்தல் காண்பாய்
இணையாரை என்றும் இருத்து - முனைநெஞ்சே
தண்ணீரும் தீயாய்ச் சுடுமுண்மை யோர்கவே
மண்ணில் இதுவே நிலை


நிலையாமை எல்லாம் நினைக்குமென் நெஞ்சே
கலையாமை தன்னைக் கருது! - மலைபோலத்
துன்பம் நெருங்கும் துணையாக நம்பிக்கை
இன்பம் கொடுக்கும் இதம்

தம்முள்ளத் தைநம்பும் தக்காரின் நற்பண்பு
இம்மியும் வீணாய் இரியாதே - எம்மனோர்
சொன்ன தெலாமோர்க தூயநன் னெஞ்சமே
நன்னயம் என்றும் நலம்

நலமதனை மட்டும் நினைப்பாய் மனமே
பலமது! கண்டு பழகு! - உலகமிதில்
இன்னாசெய் தாரை ஒருத்தர் அவர்நாண
நன்னயம் செய்தலைநீ நாடு

நாடும் நலமெல்லாம் நற்றமிழத் தொண்டென்றே
நாடுகநீ நன்னெஞ்சே நட்டாரைத் - தேடுக
தீயோர் செயன்மறந்து சேர்வாய் தமிழோடு
நீயோர் பிறவி நெருப்பு

நெருப்பென நின்றால் நெருங்குவோர் தாமாய்ச்
செருக்கழி வெய்திடுவார் செய்வாய்! - கருத்திலே
தூய்மை யுடனிருத்தல் தோன்றும் நெருப்பாகும்
வாய்மையே கங்கு! வளர்!

வளர்மரமே கல்லடிக்கு வாய்க்கும் அறிவாய்
தளராமல் செய்வாய் தமிழோ(டு)- உளைநெஞ்சே
நல்லார் பலரிருக்க நாளும் நடுங்காதே
ஒல்லார் வினையை யொழி

ஒழிக்க நினைப்பவருக் கோரத்தில் நின்று
வழிவிடக் கற்றால் வசந்தம் - பழிவந்தால்
விட்டான் எனும்பழி மேல்தான் பிறரைநீ
சுட்டாய் எனும்சொல் சுடும்!

சுடுசொல்லும் தீய்க்கும் கொடுஞ்செய்கை மாய்க்கும்
அடுப்பாரே தீமை அகத்து - விடுநெஞ்சே
நாளை நமக்குண்டு நற்பணிக ளென்றீசன்
தாளை நினைந்து தொடர்

தொடர்ந்தின்னல் செய்கின்ற தொல்லைகளை மாய்க்கப்
படர்ந்தின்னும் தொண்டைப் பழகு! - முடக்கிடுவான்
எல்லாத் திசையும் எதிர்க்க வியலாதே
வெல்வாய் வெகுண்டால் விரைந்து

விரைகநன் னெஞ்சே வியன்றமிழின் சீரை
உரக்கப் பணிசெய்க ஓர்ந்து - திரைகடல்
ஓசை யடங்குமோ ஓட்ட மொடுங்குமோ
ஆசை யடங்குமோ சொல்

சொல்லால் நலம்கொள்வாய் சொற்கள் இருக்கையிலே
இல்லை யொருகுறை என்நெஞ்சே - சொல்லே
பகையாக்கும் சொல்லை பகைமாய்க்கும்! சொல்லே
நகைசெய்யும் நம்மை நனைத்து

நனைத்தருள் செய்வான் நமையாளு மீசன்
எனைத்தொன்றும் துன்பமில் நெஞ்சே - பனையுச்சி
வாழும் புழுவுக்கும் வாழ்வளிக்கும் அவ்வீசன்
தாழ்சடை தன்னை யடை

அடையும் புகழை அழைக்கும் மதிப்பை
உடைமையைக் காண்பார் உறுத்தத் - தடைசெய்வார்
ஏதும் நமதல்ல எல்லாமே தெய்வத்தின்
தூதென் றுணர்திடுதல் தோது

தோதாய்ப் பல்லன்பர் தோற்றித் துணைசெய்ய
தீதாய் எதையும் நினையாதே - ஆதாயம்
கொண்டலையும் தீயர் குறையுள்ளங் கண்டுணர்வாய்
கொண்டலென நற்பா குவி

குவிந்தொரு மோனத்தில் குந்தப் பழகு
தவிப்படங்கிக் காண்பாய் தவத்தை - அவனியில்
சித்தம் அடக்கச் சிவனைநாம் கண்டிடலாம்
பித்தும் அவன்செய்யும் பீடு

பீடுறுக நன்னெஞ்சே பித்தனவன் றாள்போற்றி
வீடுறுத லொன்றே வினையாகும் - கேடுடைய
நற்றமிழைக் காக்கும் நயஞ்செய்க இவ்வையம்
பொற்றேரில் வைக்கும் பொதித்து.

பொதிந்து கிடக்கின்ற போதந்தான் மோனம்
அதிராமல் அஃதை அறிவாய் - பொதுவாக
ஆண்மை எனமோன ஆழத்தைச் சொல்லிடுவர்
கேண்மை அதனுறவு கேள்