பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

14 Nov 2022

#பாட்டியற்றுக_தொகுப்பு - 04 (புதியது)

 


அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! 

    பாட்டியற்றுக:04 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.

பயிற்சிக்குழுவில் தேர்வான பாடல்களை இந்தத் தாய்க்குழுவில் பதிவிட்டதற்குக் காரணம்...உங்களுடைய ஊக்கம் தரும் வாழ்த்துகளை வேண்டியே.

   இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. 

   இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும்.  பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.

                                     நன்றி.!

                            *****     *****     *****

           .  பாட்டியற்றுக,--04

         (வெள்ளொத்தாழிசை)

1. கவிஞர் Sachithananthan Kuganathan 

ஒருவேளை உண்ண உணவற்ற ஏழை                 

கருவூலம் கொள்ளாத காசுடையோ னென்று

பெருந்தெற்றுக் கில்லைப் பிரிவு

கருப்பா வெளுப்பா கலப்பா  கலவாப்

பெருமானா  வீரனா பேடியா வென்று 

பெருந்தொற்றுக் கில்லைப் பிரிவு

கருவினை ஈன்றெடுக்கக் காத்திருக்குந் தாயோ 

கருவோ குமரியோ  காளையோ என்று

பெருந்தொற்றுக் கில்லைப் பிரிவு.

2.கவிஞர் Kannan Balanethiram Kannan 

கசக்குந் துயரைக் களைந்த மனத்தைப்

பிசகு மியல்பால் பிழையில் வருத்தி

விசனந் தருங்கால் விலகு

வசன முதிர்த்தவர் வாழ்க்கையில் தன்சொல்  

கசடறக் சற்றும் கடைப்பிடிக் காமல்  

விசனந் தருங்கால் விலகு

குசலம் வினவுங் குணவான் பிழன்று 

வசைமொழி பொங்கிட வன்மம் மிகுந்து

விசனந் தருங்கால் விலகு

3. கவிஞர் Swarna Sabarikumar 

அன்னைத் தமிழின் அடிவணங்கி வேண்டினேன்

இன்னரு ளாலே இடரினைத் தீர்த்தவள்

என்னுள் நிறைவாய் இருப்பு.

கன்னல் சுவையாய்க் கருத்தில் உறைபவள் 

தென்றல் இதமாய்த்  தெவிட்டா தணைப்பவள்

என்னுள் நிறைவாய் இருப்பு.

பின்னலின் கோவையாய்ப் பீறிட் டெழுஞ்சொல்

மின்னலின் வேகத்தில் மீட்டித் தருபவள்

என்னுள் நிறைவாய் இருப்பு.

4. கவிஞர் Anbudan Ananthi 

அடியும் முடியும் அறிய இயலா 

அவனின் புகழை அவனின் அருளை

அகமும் புறமும் நினை

முன்னரும் பின்னரும் மூலமும் ஆனவன்

தன்னை உணரத் தடைகள் விலக

அகமும் புறமும் நினை

அறியாமை ஓங்க அறியாது செய்த

பிழைகள் பொறுத்துப் பிரியாமல் காக்க

அகமும் புறமும் நினை.

5. கவிஞர் சேக்கிழார் அப்பாசாமி 

வறுமையில் வாழ்ந்திடும் மாந்தர் நலனில்

சிறுமை யகற்றிடத் திக்கெட்டும் தேடிச்

சிறந்ததைத் தானமாகச் செய்

குருதிக் கொடைதான் குணத்தில் சிறப்பு

பெரும்பிணி நீக்கிடப் பேருதவி யாகச்

சிறந்ததைத் தானமாகச் செய்

கல்வியைக் கற்றிடக் கைப்பற்றி நின்றிடும்

செல்வம் குறைந்தோர் செழுமையாய்க் கற்றிட

சிறந்ததைத் தானமாகச் செய்

6.கவிஞர் க.சந்தோஷ்குமார் 

தவழும் முகிலாள் தரைவீழ் மழைபோல்

தவறா தெனைநீ தழுவிப் புணர்ந்தால்

உவகை நிறையும் உளம்

கவலையி லாழ்ந்த கடும்பிணி யுற்றோன்

அவலம் ஒழிக்கும் அருமருந்து பெற்றால்

உவகை நிறையும் உளம் 

சிவந்த இதழினில் செந்தமிழ் சிந்தும்

அவளது கூடல் அகலா திருந்தால்

உவகை நிறையும் உளம்

7.கவிஞர் Umaipalan Thiyagaraja 

பிச்சைக்குக் கையையேந்திப் பீடிழக்க நேரினும்

இச்சிறிய வாழ்வில் இருள்தான் நிறைந்தாலும்

கற்றகல்வி கைவிடாது காண்!

பெற்றெடுத்த பிள்ளைகளால் பேர்கெட நேரினும்

சுற்றமெல்லாம் தூரநிற்கச் சோக முறைந்தாலும் 

கற்றகல்வி கைவிடாது காண்!

மூப்பெய்தி மூச்சிழுத்து மூலையில் வீழ்ந்தாலும்

காப்பாற்ற யாருமற்றுக் கண்ணீர் சொரிந்தாலும்

கற்றகல்வி கைவிடாது காண்!

                              ★★★

1 comment:

balaamagi said...

கவிஞரே நலமா என்னவாயிற்று அருமையான கவிதைகளை தருவீர்கள் எழுதுங்கள்.