பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

25 Feb 2016

சோலைக்கவியரங்கம் "நிறைவு கவிதை "#சோலைக்கவியரங்கம்
கவியரங்கத் தலைவர்,
பாவலர் மா.வரதராசனின்..
"நிறைவு கவிதை "
*******************
(அறுசீர் விருத்தம்)
வாழ்வினில் போற்று தற்கு
        வாய்த்தநல் வழியீ தென்று
தாழ்விலாக் கவிதை யாலே
        சாற்றினர் கவிதை இங்கே
ஆழ்கடல் அலைபோல் ஆர்த்த
        அருங்கவி அனைத்தும் கேட்டே
ஆழ்மனத் தின்பங் கொண்டே
        அவர்களை வாழ்த்து வோமே!


(எண்சீர் விருத்தம்) 
வாழ்வில்நாம் போற்றுதற்கு முதலில் நிற்கும்
வழுவாத ஒழுக்கநிலை தலைமை யாகும்
ஏழாயி ரங்கோடி என்றால் கூட
எண்ஒன்றே தொடக்கமாகும்...அதனைப் போலே
தாழாத உயரத்தை அடைவ தற்குத்
தளராத ஒழுக்கந்தான் தொடக்க மாகும்
பாழில்லா நல்வாழ்வின் தொடக மான
படிக்கட்டின் தொடக்கந்தான் ஒழுக்க மாகும்.!

முதல்படியில் கால்வைத்த மனிதன் மீண்டும்
முயல்கின்றான் அடுத்தநிலை இயற்கை தன்னில்
விதையான ஒழுக்கத்தால் இயல்பாய்த் தோன்றும்
மேன்மையான பண்புகளும் தானே சேரும்
எதன்வழியில் செலும்போது நன்மை யுண்டோ
இயற்கையதன் பேரென்பேன் ...செயற்கை நீக்கி
அதன்வழியில் பயணித்தால் கடவுள் வாழும்
ஆலயமாய் நம்முள்ளம் மாறக் காண்பீர்!

இறையுணர்வைத் தம்முள்ளில் ஏற்ற மாந்தர்
ஏற்றத்தை வாழ்வினிலே பெறுதல் திண்ணம்
குறையற்ற வாழ்வுக்கு வழியாம்.. வாழ்வின்
குன்றாத மேன்மைக்கும் வழியாம்...போற்றும்
முறையான ஒழுக்கத்தின் ஆணி வேராம்
முன்னிரண்டு படிகடந்த மாந்த னுள்ளம்
உறைகின்ற வீடாக்கி இறைவன் தன்னை
ஒருபோதும் மறவாமல் உயரக் காண்போம்.!

இம்மூன்று படிகடந்த மனிதன் பின்னர்
இறுதிநிலை தாய்மையிலே திளைத்தல் வேண்டும்
அம்மாவின் காலடியில் சரண்பு குந்தால்
அம்மூன்றும் தானாக வந்து சேரும்
எம்மாநி லத்தவர்க்கும் தாயின் பாசம்
இருந்துவிடில் அம்மனிதன் நல்லோ னாவான்
செம்மாந்த மனிதயிம் தேறி வந்த
செம்மைவழி "தாயன்பு " வழிதான் கண்டீர்!

செந்நீரால் பாலூட்டிச் சிறுசோ றூட்டித்
தீமையெதும் வாராமல் பொத்திக் காத்து
நொந்தாலும் தன்மகவை நோயில் லாமல்
நொடிப்பொழுதும் அதற்கென்றே செலவ ழித்துச்
சொந்தங்கள் சொத்துகளும் மட்டு மன்றித்
தூய்மையுளம், நற்பண்பு, இறைமை யுள்ளம்
வந்தடையச் செய்திடுவாள் வருத்தம் தீர்ப்பாள்
வணங்கிடுவோம் போற்றிடுவோம் "தாய்மை " தன்னை.

(இன்னிசை வெண்பா)
உள்ளம் உருகும் உயிரும் உருகிடும்
கள்ளம் மறைந்தழியும் காதல் கசிந்திடும்
அம்மா எனுஞ்சொல்லால் ஆயிரம் இன்பம்வரும்
இம்மா நிலத்தவர்க் கீங்கு!
★★★★★
சோலைக் கவியரங்கம் சொன்ன கருத்துகளை
ஏலும் வரைசுவைத்த எம்மீரே - மாலையுளப்
பூக்கள் தருமணமாய்ப் போற்றி வணங்குகிறேன்
பாக்கள் சுவைத்தவர்பா தம்!

அனைவருக்கும் அன்பு கலந்த. 
நன்றி!
தமிழன்புடன்,
பாவலர் மா.வரதராசன்
நாள் : 25/01/2016
சென்னை.

No comments: