பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

20 Feb 2016

சோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் : 5



சோலைக்கவியரங்கம்‬
கவிஞரை அழைத்தல் : 5
(எழுசீர் விருத்தம்)
காலையில் தோன்றி மாலையில் மறையும்
கதிரவன் சுடரொளி போலே
சோலையில் வீசும் செந்தமிழ்த் தென்றல்...
சொக்கிடும் பாக்களின் மூலன்.
வேலையின் அலைகள் தழுவுதல் போலே
வித்தக விவேக்இவர் நந்தம்
கோலமாம் தமிழின் கோவெனச் சிறக்கக்
கூடியே வாழ்த்திடு வேனே!

#‎விவேக்பாரதி‬ அவர்களே வருக!
வியன்றமிழ் நற்கவி தருக!! 


போற்றப்பட வேண்டியது...
அ. இயற்கை
****************
கவிஞர் #விவேக்பாரதி
திருச்சி, தமிழ்நாடு
★12ஆம் வகுப்பு மாணவர்,
மரபு கவிஞர், உரைவீச்சிலும் வல்லவர்.
13 வயது முதல் மரபு கவிதை எழுதி வருபவர்.
வித்தக இளங்கவி, கவியருவி உள்பட மேலும் பல விருதுகளைப் பெற்றவர்.
"பைந்தமிழ்ச் சோலையின் " பாட்டியற்றுக பயிற்சியில் தொடர்ந்து பங்கேற்பவர். சோலையில் "இலக்கியத் தேன்துளிகள்" தொடரை எழுதி வருபவர்.
★★★
அ. இயற்கை
"""""""""""
தமிழ் வணக்கம் :
(நேரிசை வெண்பா)
கல்லுடைந்து மண்ணான காலத்தே முன்தோன்றி 
நல்லணுவை விண்டிடுமிந் நாள்வரை - தொல்புகழில்
உய்வா யுயர்தமிழே உன்தாள் பணிந்துவிட்டேன்
பிய்ப்பாய் கவியிற் பிழை !

அவையடக்கம்
வரதனாள் கின்ற வளக்கவிய ரங்கில்
தரவந்தேன் என்கவி தன்னை - மரஞ்சாய்க்கும்
யானைகள் மத்தியில் யானோ சிறுவீட்டுப்
பூனையென் றிங்கே புகல் !

(அறுசீர் விருத்தம்)
போற்றுவம் இயற்கைத் தாயின் 
       பொன்னடி தன்னைச் சேர்ந்தே
ஆற்றினில் உரைவாள் ஆழத்
       தார்கலி அலையென் றாவாள்
நாற்றிடை நகர்வாள் ! நல்ல 
       நறுமலர் வாசத் துய்வாள் !
காற்றிடைக் கண்டோம் ! தாயின் 
       கவினெழில் காத்தல் செய்வோம் !

பிறப்பதும் இயற்கை யாலே
பிறந்தபின் வாழ்வு கண்டு
இறப்பதும் இயற்கை யாலே 
இடையிலே தாய்மை பெற்றுச்
சிறப்பதும் இயற்கை யாலே 
சீரிய ஒழுக்க மெய்தி
இறைப்பொருள் காண்ப 
தென்றால் 
இங்கதும் இயற்கை யாலே !
மரஞ்செடி கொடிக ளெல்லாம் 
மண்ணிலே நமக்கு முன்னே
இருந்ததென் றறிவீர் அஃதும்
இயற்கையின் சாலத் தாலே
உரந்தனைச் செயற்கை யாக்கி 
உயிர்பயிர் கொன்று ! ஓங்கும் 
மரந்தனை வெட்டி வீழ்த்தி 
மாரியைத் தடுத்தல் வேண்டா !
நறுமணப் பொய்கை ! ஊர்கள்
நாடெங்கும் பசுமைச் சோலை 
உறுமொரு நிலைமை வேண்டும் !
உலகெலாம் வயல்கள் வேண்டும் ! 
இறையவன், ஒழுக்கம், தாய்மை 
இங்குவந்து முரசில் நன்காய்
அறைவதும் இதுதான் ! எங்கும் 
அழிவிலா இயற்கை வேண்டும் !
ஆதலால் இயற்கை போற்றி 
அன்பினால் அதனைக் காத்தால், 
காதலால் தாய்மை நேரும் !
கலவியில் ஒழுக்கம் கூடும் ! 
யாதொரு குறையும் இன்றி 
யாவரும் இறைமை யெய்தி
மேதினி மேலே வாழ்ந்து 
மேன்மைகள் அடைய லாமே !!
★★★
-
வித்தக இளங்கவி 
விவேக்பாரதி
நாள் : 17/01/2016.

2 comments:

Unknown said...

மிகவும் அருமை

Unknown said...

மிகவும் அருமை