பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

21 Feb 2016

சோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் : 10
#‎சோலைக்கவியரங்கம்‬
கவிஞரை அழைத்தல் : 10
(கலிவிருத்தம்)
பெற்ற தாயவள் பீடுகள் சொல்லிட
நற்ற மிழ்தனில் நற்கவி கைக்கொடும்
உற்ற இக்கவி யரங்கிலே உள்நுழை
நற்ற மிழ்க்கவி நாமவர் போற்றுவாம்!

‪#‎அரவிவேகானந்தன்‬ அவர்களே வருக!
அருந்தமிழ்க் கவியைத் தருக!!

★★★
போற்றப்பட வேண்டியது...
இ.தாய்மை
""""""""""""
கவிஞர் அர.விவேகானந்தன்.
சிறந்த மரபு பாவலர், பைந்தமிழ்ச் சோலையின் 
பாட்டியற்றுக பயிற்சியில் தொடர்ந்து பங்கேற்பவர்.
தமிழே பேச்சாகவும், மூச்சாகவும் கொண்டவர்.
★★★
தமிழ் வாழ்த்து
(அறுசீர் விருத்தங்கள்) 
****************************
சிந்தையிலே ஊறுகின்ற சித்திரமே சிலையழகே
சீரே யுன்னைச்
சொந்தமென நெஞ்சமதில் நினைந்திடுவேன் தெளிதமிழைச்
சுரப்பா யென்னுள்
விந்தையாகி நிற்பவளே வினையெல்லாம் மாய்ப்பவளே
விரும்பி நாளும்
வந்தனமே செய்கின்றேன் வானுயர வளர்ந்திடவே
வாழ்த்தி நானே!

அவை வணக்கம்.
*********************
இற்றைநாளில் இன்பமதை எதிலெதிலோ இறைஞ்சியுமே
இருந்த போது
சொற்றமிழை வற்றாதப் பாற்குடமாய்ப் பெருகவைத்தீர்
சிறந்தே யென்னுள்
நற்றமிழின் நலம்வேண்டும் பாவலரா முமக்கிங்கே 
நவின்றேன் நன்றி
வற்றிடாதே கவிபாடும் சோலைக்கும் சொன்னேன்நான்
வணக்கம் தானே!

தாய்மை
***********
உலகினிலே உறவுகளு மாயிரந்தா னுண்டெனினும்
உறங்கு முன்னே
நிலவினையே சான்றுகாட்டி நித்தமூட்டும் தாயவளே
நினைவில் நிற்பாள்
உலவியெங்கும் நிறைந்திடுவாள் உள்ளன்பைக் கொட்டிடுவாள்
உலகில் யாரும்
நலம்பெறவே வேண்டிடுவாள் நற்றாயாய் நிலைபெறுவாள்
நம்மில் தானே!

பதியெனவே வாழ்வதனில் சிறந்திட்டே ஊனுருகிப்
பாசம் வைத்தே
உதிரமதைத் திரட்டியுமே உயிர்கொடுக்கும் உமையவளை
எண்ணி மண்ணில்
கதியெனவே கிடந்திடுவோம் காலமெல்லாம் கருணைவேண்டி
காவி லோடும்
நதியெனவே வளம்பெருக்கும் உன்னதமாம் தாயவளின்
நலமே வாழி!

தன்வயிற்றைச் சுருக்கியுந்தன் சேய்தனுக்கே உணவிடுவாள் 
தவிக்கும் நாளில்
முன்னதாகி நின்றிடுவாள் முழுநிலவாய்த் துயர்களைவாள்
முணங்கி நிற்பின்
தன்னுயிரை நொந்திடுவாள் தவித்துடனே கரைந்திடுவாள்
தன்நி னைப்பே
இன்றியுந்தான் தரணியதில் தன்னலத்தை விட்டொழிப்பாள்
தாயுந் தானே!

இறைவனுக்கு மாற்றாக உறைபவளே அன்னையென
அறியா தேநாம்
மறைதனிலே தேடுகின்றோம் மங்காத புகழ்தனையே
மனதி லென்றும்
கறையுடனே வாழ்வதனைக் கடக்கின்ற நிலைமாற்றிக்
கனிவாய் நாளும்
குறையிலாத மனமாகி அன்புகொண்டே அணிசெய்வோம்
குணத்தி னாலே!

வரிசையென தெய்வத்தின் வடிவமதைச் சுவரினிலே
வடித்து வைத்துப்
பரிசெனவே தாயவளைத் தனியாகத் தவிக்கவிடும் 
பண்பை மாற்றிப்
பரிவுடனே பணியாற்றிப் பதுமையெனத் தாங்கிடுவோம்
பாரில் நாளும்
புரிந்துகொண்டே தாயவளைப் புதுமையென வணங்கியுந்தான்
போற்று வோமே!

அர.விவேகானந்தன்
நாள் : 20/02/2015
★★★★★

No comments: