பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

21 Feb 2016

சோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் : 12


#‎சோலைக்கவியரங்கம்‬

கவிஞரை அழைத்தல் : 12
(எண்சீர்விருத்தம்)

இனமேன்மை மொழிமேன்மை கொண்ட வர்தான்
              இதயத்தில் தமிழன்னை வீற்றி ருப்பாள்.
தனக்கென்றே வாழ்கின்ற உலகில் மற்றோர்
              தான்சிறக்க நினைக்கின்ற உயர்ந்த நெஞ்சர்.
மனமெல்லாம் தமிழுணர்வும் கவிதைப் பேச்சும்
              மணக்கின்ற செந்தமிழ மரபின் வீச்சும்
தினங்கொண்ட கவிஞரிவர் சிறப்பு மிக்க
              சீராளன் நற்கவிதை கொடுக்கின் றாரே!

‪#‎சீராளன்‬ அவர்களே வருக!
செந்தேன் கவிமழை பொழிக!!


போற்றப்பட வேண்டியது...
இ. தாய்மை
""""""""""""
கவிஞர் சீராளன், Seeralan Vee
இலங்கை.
அயலக வாழ் தமிழர். அருந்தமிழ்ப் பற்றாளர். இணையம், தமிழ், மரபு, அலுவல் என அனைத்திலும் சிறந்த ஆளுமை பெற்றவர். பைந்தமிழ்ச் சோலையில் பாட்டியற்றுக பயிற்சியில் தொடர் பங்கேற்றவர்.
தன்னால் ஆன தமிழ்த் தொண்டைத் தளராமல் செய்யும் பற்றாளர்.
★★★

தமிழ் வாழ்த்து !
(கலிவிருத்தம்)

காரிகையாள் கைதழுவிக் காக்குமுயர் செந்தமிழின்
சீரிளமை கொண்டுலகைச் சேர்த்தகவி முத்தெல்லாம்
பாரினிக்கப் பாடுகின்ற பாவலரைப் போற்றுதற்கும்
நேரிசையாய் வந்துற்றாய் நிறைதமிழே வாழ்த்துகிறேன் !

தலைவர் வணக்கம் !
(கலிவிருத்தம்)

வல்லதமிழ் சோலையிலே வழிகாட்டும் பாவலரின்
நல்லதமிழ் கண்டிங்கே நானிலத்தும் பூப்பூக்கும்
சொல்லுதமிழ் தேனூறும் சொக்கிமனம் பாவியற்றும்
வெல்லுதமிழ் கொள்தலைமை வேந்தருக்கென் நல்வணக்கம் !

அவை வணக்கம் !
(கலிவிருத்தம்)

கொஞ்சுமிசை கொட்டுகின்ற கோகுலத்துக் கண்ணனென
விஞ்சுகவி ஆர்க்கின்ற வேட்கையிலே கற்கவந்து
மஞ்சுதமிழ் மேடையிலே மாமலராய் வீற்றிருக்கும்
நெஞ்சு..தமிழ் கொண்டோர்க்கென் நேசத்தின் நல்வணக்கம் !

.'' தாய்மை ''
(எண்சீர் விருத்தம்)

இவ்வுலகில் எல்லோர்க்கும் இருப்பாள் தாயும்
இரவுபகல் கண்விழித்துக் காப்பாள் சேயும்
பவ்வியமாய் நல்வழிகள் காட்டி என்றும்
பார்போற்ற வைத்திடுவாள் ! பாசம் தன்னில்
எவ்வுயிர்க்கும் உதவுகின்ற பண்பை எம்முள்
எந்நாளும் பயில்விப்பாள் ! மன்றம் போற்றும்
அவ்வையவள் அருந்தமிழைப் பாடி எம்மை
அனுதினமும் தூங்கவைப்பாள் அன்பைப் போர்த்தி !

போற்றுதற்குப் பிறந்தவளாம் அவளை விஞ்சப்

பூவுலகில் யாருமில்லை ! பூவைத் தீண்டும்
காற்றுக்கும் எம்விழிகள் கலங்கா வண்ணம்
காக்கின்ற இமையாவாள் ! காலம் யாவும்
ஆற்றுகின்ற கடமைக்குப் பிரதி செய்தார்
அகிலத்தில் யாருண்டு !அறியும் முன்னே
ஏற்றமுறும் வழியெல்லாம் எமக்குக் காட்டி
எந்திரமாய்த் தூக்கிடுவாள் இருகை நீட்டி !

கருவுள்ளே உயிரசைவைக் கண்டு கொள்வாள்

கடிகாவல் புரிந்ததனைக் காத்துச் சொல்வாள்
உருவாகும் என்மகவும் எதிர்கா லத்தின்
இணையில்லாப் பரிசாவான் ! என்னைச் சூழும்
பெருவாரிச் சொந்தத்தின் பிணிகள் போக்கிப்
பிறப்புக்குப் பொருள்சேர்ப்பான் !வாழை போலும்
அருகாத வம்சத்தை வளர்த்துத் தூய
அறம்செய்வான் என்பவளுக் கிணையே இல்லை !

இறைவிட்டுச் செல்கின்ற எல்லாம் ஒன்றாய்

இருப்பதில்லை! அதுபோல பிறக்கும் பிள்ளை
குறைபட்டுப் பிறந்தாலும் குற்றம் சொல்லாக்
குழந்தைமனம் கொண்டவரை அணைத்துக் கொஞ்சி
நிறைபட்டு மனம்தேற்றி நித்தம் பேணும்
நேசத்தின் திருச்செல்வி அவளைப் போற்றல்
முறையென்று கொண்டாரின் பிறப்பின் மீதம்
முத்தமிழாய் இனித்திருக்கும் மூச்சின் பின்னும் !

இறைமனத்தாள் எழில்மனத்தாள் எல்லை இல்லா

இயல்மனத்தாள் ஏந்திழையாள் அன்னை என்னும்
நிறைமனத்தாள் நெகிழ்மனத்தாள் தர்மம் போற்றும்
நேர்மனத்தாள் நேரோளியால் இருளைப் போக்கும்
பிறைமனத்தாள் பெருவலியால் பிறப்பைத் தந்த
பெருமனத்தாள் பெரிதுவக்கும் சான்றோர் போற்றும்
மறைமனத்தாள் மாண்புடையாள் ! எல்லாம் ஆகி
மலர்கின்ற தாயவளைப் போற்று கின்றேன் !

கவிஞர் சீராளன்
நாள் : 21/01/2016
★★★★★

No comments: