பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

21 Feb 2016

சோலைக்கவியரங்கம்‬ கவிஞரை அழைத்தல் :13.#‎சோலைக்கவியரங்கம்‬

கவிஞரை அழைத்தல் :13.
(நேரிசை வெண்பா)

கன்னித் தமிழணங்கின் கன்னல் கவிஞனிவன்
மின்னற் கவியாக்கும் மேன்மையன் - இன்னும்
வரமாய் விளங்கும் வரகவி பாடப்
‪#‎பரமநாதன்‬ வந்தார் பணிந்து!

#பரமநாதன் அவர்களே வருக!
பைந்தமிழ் நற்கவி தருக!!போற்றப்படவேண்டியது...
அ. இயற்கை
"""""""""""""

கவிஞர் Paramanathan Kanesu
‪#‎பரமநாதன்கணேசு‬.
இலங்கையைச் சேர்ந்தவர். தற்போது 
டென்மார்க்கில் கதிரியக்கத் துறையில் பணி.
கவிதை நூலொன்றின் ஆசிரியர்.
பைந்தமிழ்ச் சோலையில் மரபு கற்றவர்.
★★★

தமிழ் வாழ்த்து
(நேரிசை வெண்பா)
செந்தமிழே! சிங்காரச் சீரெழிற் கோபுரமே!
சந்தனமே! சங்கத் தமிழ்த்தாயே! – வந்தேன்
கவியரங்கில் பாமாலை கட்டியுன் தாளில்
குவியலா யிட்டேன் குழைந்து.!

அவையடக்கம்
*****-*************
தேன்சுவைப் பைந்தமிழ்ச் சோலைப் பாவலரே!
நான்கவி பாடவே! நன்றெனை யாக்கினீர்
சான்றோரே! பெரியோரே! சபையோரே!
ஈன்றெடுத்த பெற்றோரே! என்னினமே! பணிகின்றேன்.

இயற்கை
************
(நிலைமண்டில ஆசிரியப் பா)

கண்முன் தோன்றும் காடும் மலையும்
மண்ணின் அழகும் மானும் மயிலும்
கொடியும் செடியும் கூவும் குயிலும்
கொடிய விலங்கும் கொள்ளை அழகாய்
அள்ளித் தந்த அரிய இயற்கை
துள்ளும் மனத்துள் துயரம் போக்குமே!
இலைகள் துளிர்கள் எழுந்தே ஆட
மலைத்து நிற்கும் மாலைப் பொழுதில்
வீசும் தென்றல் மேனி தீண்டிப்
பேசும் போது பிறக்கும் இன்பம்
சூடி யாடிச் சுகிக்கும் போது
நாடி வருமே நான்பெற இன்பமே!மழையும் வெய்யிலும் மயக்கும் எழிலும்
இழைத்தே இலங்கும் இயற்கை அழகை
வடித்து வைத்தார் வளமுறப் பாட்டில்
குடித்து மகிழக் கொடுத்து வைத்தோம்
எடுக்க எடுக்க இல்லை யென்றே
தடுத்த தில்லை தாயிவள் இயற்கையே!


(அறுசீர் விருத்தம்)

பச்சிலை யாடை கட்டிப்
… பார்த்திடப் புகுந்து கண்ணுள்
இச்சையை யூட்டிக் கூட்டி
… எத்தனை இன்பம் ஈவாய்
உச்சியும் குளிரும் உன்கீழ்
… ஒருகணம் அமர்ந்தால் போதும்
அச்சமும் அறவே நீங்க
… ஆடுமாம் மனமு மாங்கே!ஓடையில் ஓடும் நீராய்
… ஊர்வலம் வந்து போவாய்
நாடிதைப் பேணிக் காத்து
… நம்பயன் ஓங்கச் செய்வாய்
கேடுகள் செய்யில் நாமும்
… கேட்டிடும் முறையுன் வேறாம்
ஆடுவாய் கோபம் தீர்ந்தே
… அணத்திட வருவாய் மீண்டும்.அன்னையே! இயற்கைத் தாயே!
… அருள்நிறை இறையும் நீயே!
உன்பெரும் கோபத் தாலே
… உருக்குலை எங்கள் நாட்டை
என்னினம் காணச் செய்ய
… இற்றையே குமரிக் கண்டம்
நன்றென மேலே வந்து
… நம்புகழ் ஓங்கச் செய்வாய்.


வ-க-பரமநாதன். (கணேசு பரமநாதன்)
நாள் : 21/01/2016
★★★★★

No comments: