பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

14 Feb 2016

கவிஞரை அழைத்தல் - 2 கவிஞர் வெங்கடேசன்


சோலைக்கவியரங்கம்‬

கவிஞரை அழைத்தல் - 2
(கும்மிச் சிந்து)

பைந்தமிழ்ப் பாக்களைப் பாடிடு வாரிவர்
பாங்குட னேதமிழ் கற்றிடுவார்.
நைந்தநி லைகண்டு சீறிடு வார்நாளும்
நற்றமிழ்ச் சீர்கவி பெய்திடுவார்!

வெங்கடே சக்கவி என்பவ ராந்தமிழ்
வேண்டுமட் டுந்தந்து சீர்பெறுவார்
பொங்கும டக்கிலும் சிலேடையி லுந்திறன்
பூத்துக்கு லுங்கிடும் பாவலராம்!

வெங்கடேசன் அவர்களே வருக!
வியன்றமிழ்ச் சுவையைத் தருக!!


போற்றப்பட வேண்டியது...
ஈ. ஒழுக்கம்
"""""""""""""""""""""
கவிஞர் Venkatesan Srinivasagopalan
மன்னார்குடி.
(அரசு பணி, தமிழ்ப் பா வித்தகர், 
பைந்தமிழ்ச் சோலையின் தமிழ்த் தும்பி)
""""""""" """"""""" """""""""

தமிழ் வாழ்த்து:
(அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)

என்றுபி றந்தா யென்றறி யாதே
எம்மனோர் மயங்கினிற்க
இன்றுபி றந்தாற் போலிள மையோ
டிருப்பவ ளேதமிழே!
என்றுமு னைநி னைந்திருப் போருக்
கின்னமு தூட்டிடுவாய்
இன்றுனைப் பணிந்தே இவ்விடம் வந்தேன்
எனக்கருள் செய்குவையே!


அவை வாழ்த்து:

நற்றுணை யாக நாமகள் பாதம்
நாளெலாம் வேண்டிநின்றே
நற்றமி ழன்னை நாவினில் இருத்தி
நலந்தரு கவியியற்றும்
நற்றமிழ் கற்ற அரும்பெரி யோரின்
நல்லருள் வேண்டியவர்
பொற்பதம் பிடித்தே இக்கவி யரங்கில்
புகுவது செய்தேனே!


தலைவர் வாழ்த்து:

பைந்தமிழ்ச் சோலைக் குழுவிதன் தலைவர்
                    பாவலர் வரதராசர்
பைந்தமிழ் என்றும் மரபுடன் மிளிரப்
                    பாடுபட் டுழைத்தென்றும்
நைந்திடா வண்ணம் நற்றமிழ் காக்க
                    நாளுமே உழைக்கின்றார்
மைந்தனைத் தாயும் வளர்ப்பது போல
                    வளர்க்கிறார் கவிஞரையே!


ஈ. ஒழுக்கம்
**************
(அறுசீர்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) (வேறு)

அழுக்கில்லா மனம்வேண்டி ஆண்டவனைத் தொழுதிடுவோர்
                                         அனைவ ருக்கும்
பழிச்சொல்லே தாராத ஓர்குணமாம் பார்புகழ
                                         வைக்கும் அந்த
ஒழுக்கத்தின் மேன்மையினை உரைக்கின்ற மனத்தனனாய்
                                         உம்முன் வந்தேன்
விழுப்பத்தைத் தருமந்த ஒழுக்கத்தின் திறன்போற்றும்
                                         விருப்போ டிங்கே!

ஒழுக்கத்தில் இரண்டுவகை உண்டென்பேன் தனிமனித
                                         ஒழுக்கம் ஒன்று
குழுமத்தில் இயங்குகின்ற பொழுதினிலே வரும்சமூக
                                         ஒழுக்கம் ஒன்று
பழக்கத்தில் சரிசெய்து விடக்கூடும் முன்னொழுக்கம்
                                         மாறிப் போனால்
இழுக்கத்தைத் தந்திடுமே சமூகவொழுக் கந்தவறும்
                                         இயல்பி னார்க்கே!

பூமிதனில் பொருளிழப்பின் முனைந்துழைத்தே திருப்பிடலாம்
                                         பொறுமை யாக
சேமமெனும் நலமிழப்பின் மருந்ததனால் நலம்பெறலாம்
                                         திரும்ப, ஆனால்
காமமெனும் நெருப்பினிலே விழுந்தொழுக்கந் தனையிழக்கக்
                                         கடிதே நொந்து
பூமிதனில் பீடிழந்து பொதுவினிலே நிலைகுலைந்து
                                         போவார் தாமே!

நன்மையினை விளைவிக்கு மெண்ணமதை நம்மனத்தில்
                                         நன்றாய்க் கொள்ளும்
தன்மையினைப் பெற்றிட்டால் தரணியெலாம் புகழ்வந்து
                                         தானாய்ச் சேரும்
இன்னமுத விப்பெருமை நாம்பெறவே ஒழுக்கமதே
                                         என்றும் வேண்டும்
இன்னவகைத் தரமுடைய ஒழுக்கமதை ஏத்திடுவேன்
                                         என்றும் நானே!

பழந்தமிழர் காலம்தொட் டொழுக்கமதைப் புலவரெலாம்
                                         பாடிப் போற்றி
அழிந்திடாத காவியங்கள் தமைப்படைத்து வழிகாட்டி
                                         அமைந்து நின்றார்
இழுக்குற்று வாழுவாழ்வை எவருந்தான் ஏற்கலாகார்
                                         இழிவாய் எண்ணி
முழங்குகின்றேன் ஒழுக்கமதைப் போற்றிடவே உயர்வுண்டா
                                         முன்னீர் நீரே!

புவியிதனில் என்னையுமோர் பொருளாக்கிக் கவிதையெல்லாம்
                                         புனைய வைத்துக்
கவியரங்கு தனிலென்னைக் கலந்துகொள்ள அனுமதித்தக்
                                         கனிவு கொண்ட
அவைத்தலைவர் பாவலரின் அன்புக்கு நன்றிசொல்லி
                                         அவைக்கு மென்கை
குவித்தென்றன் நன்றியினைத் தெரிவித்தே பாமுடித்துக்
                                         கொண்டேன் இங்கே!

கவிஞர் வெங்கடேசன்
மன்னார்குடி.
நாள். 16/01/2016
★★★

2 comments:

Sara Bass said...

மிகவும் அருமை

Sara Bass said...

மிகவும் அருமை