பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

14 Feb 2016

கவிஞரை அழைத்தல் : 3. கவிஞர் ‪#‎வள்ளிமுத்து‬


சோலைக்கவியரங்கம்‬

கவிஞரை அழைத்தல் : 3.
(நொண்டிச் சிந்து)

புதுக்கவி நாயகராம் - இவர்
புதுப்புதுக் கவிதையின் தாயகமாம்
மதுதரும் போதையைப்போல் - மனம்
மயக்கிடும் சிலேடையில் ஓங்கிடுவார்!

சீரொடு யாப்பறிந்தே - தனிச்
சீருடன் பாக்களை யாத்திடுவார்
வாருங்கள் வள்ளி முத்து - உங்கள்
வண்டமிழ்ப் பாடலைக் கொட்டுகவே!

வள்ளிமுத்து அவர்களே வருக!
வண்டமிழை யள்ளித் தருக!!போற்றப்பட வேண்டியது...
அ. இயற்கை
""""""""""""""""""""""""
கவிஞர் ‪#‎வள்ளிமுத்து‬
தமிழாசிரியர்,
புதுக்கவிஞர், மரபு கவிஞர்,
பைந்தமிழ்ச் சோலையில் இரட்டுற மொழிதல் பாடல்களை அதிகம் பாடியவர். பாட்டியற்றுக பயிற்சியில் அனைத்திலும் பங்கேற்றவர்.
********** ********** ********

தமிழ் வாழ்த்து
(நேரிசை வெண்பா)

சங்கமேறி நின்றவளே ! சாகா வரம்பெற்றே
எங்கும் உலவிடும் என்தாயே- அங்கத்தில்
ஆயிரம் பாமாலை சூட்டியப் பைந்தமிழே
தாயேநீ நின்னருள் தா..!

பாவலர் வணக்கம்.

கற்றவரே கற்றதமிழ் கட்டிக் கரும்பெனவே
பெற்றவரே பெற்றதமிழ்ப் பேரறிவை- விற்றிடாது
பல்குயிலும் கூவிடவே பைந்தமிழ்ச் சோலையாத்து
நல்வழியை நட்டவரே காப்பு!

போற்றவேண்டியது...
அ.இயற்கை
[நிலை மண்டில ஆசிரியப்பா]

காடும் மலையும் கவினுறு சோலையும்
ஓடும் நதியும் ஒளிறும் நிலவும்
பாலை நிலவும் பனிபட ரிடமும்
ஆலை யாக அவனியிற் கொண்டே
அத்தனை உயிரும் அழகுறப் படைத்த
சாலச் சிறந்த சாமியாம் இயற்கை

சூரிய மூலத்தைப் புல்நுனி சமைக்க
நேரிய வாழ்வில் நெடும்பசி தீர்க்கத்
தாவர உண்ணியும் விலங்கின உண்ணியும்
யாவரும் போற்றும் பூச்சியும் புழுக்களும்
பல்கிப் பெருகிப் பாரினில் உலவிட
எல்லாம் வல்ல இயற்கை வகுத்ததே..!

சிக்கி முக்கிக் கல்லை யுரசிச்
சிந்தனைத் தீயைத் தட்டி யெழுப்பிக்
குரங்கினும் தன்னை விடுவித்துக் கொண்டே
வரம்பெற்ற விலங்காய் வலம்வந்தான் மனிதன்

நதிக்கரை கற்பித்த நாக ரிகத்தின்
விதியைப் போற்றி விலங்கினைப் பழக்கி
நெல்லும் புல்லும் நேரிய வித்தும்,
எல்லாம் விதைத்து விளைச்சல் மிகுத்தான்

விளைவளம் பெருகக் காக்கவும் பகிரவும்
தலைவனும் அரசும் நாடும் வகுத்தான்
ஓய்வு பெறவே கலையும் கவியும்
ஆய்வும் மிகுத்துப் புதியன படைத்தான்
எல்லை குறித்த பகையும் நிறையத்
தொல்லை குறைக்கக் கருவிகள் குவித்தான்

காற்றைக் கெடுத்தான் கழனி குலைத்தான்
போற்றும் நதியைக் கடலை யொழித்தான்
ஊற்று நீரையும் உறிஞ்சி யெடுத்து
நாற்றிடும் வயலெலாம் நகரினைத் தொடுத்தான்

சிந்தனைச் செருக்கு மிகுந்து போக
நிந்தனை செய்தான் இயற்கைத் தாயை
வந்தனை செய்ய மறந்திட்ட மனிதா
உந்தனுக் கொன்று சொல்வேன் கேளடா

ஆணவம் மிகுந்தே ஆட்டம் போடும்
மானிடர் வாழும் நாட்டி லெல்லாம்
பேரிடர் வந்தே கொட்டம் ஒடுக்கும்
பெருமழை சுனாமி கடுவெயி லென்றே
எரிமலை யோடு அசரீரி விடுக்கும்
பூகம்பம் புயலெனப் புவியோ நடுக்கும்
ஆகச் சிறந்த வல்லானே கேளும்

மாற்றம் மட்டுமே மாறா மகிமை
மாற்றுக் கருத்திலை இயற்கையை மாற்ற
மறந்தும் மனிதா முயற்சி யெடுத்தால்,
இறப்பாய் கொத்துக் கொத்தாய் எச்சரிக்கை
நேற்றுச் செய்த பிழைகளைத் திருத்திப்
போற்றுவோம் இயற்கைத் தாயை நித்தமே..!


கவிஞர் வள்ளிமுத்து
நாள் : 16/01/2016
★★★★★

2 comments:

Sara Bass said...

மிகவும் அருமை

Sara Bass said...

மிகவும் அருமை