பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

13 Feb 2016

முயன்று பார்க்கலாம் 3 இன் தொகுப்பு‬அன்பு நண்பர்களே! கவிஞர்களே ! 
முயன்று பார்க்கலாம் : 3 இன் தொகுப்பு அப்பயிற்சியில் முயன்ற கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்பெறுகிறது. 
மிகக் கடினமான இப்பாவகையைப் பலரும் முயன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். அவர்களுக்குப் பைந்தமிழ்ச் சோலையின் சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து மகிழ்கிறேன்.
முயன்று வெற்றி யடைய இயலாதவர்கள் மனந்தளர வேண்டா. உங்கள் முயற்சியே சிறந்த பயிற்சியாகும்.
அரிதான ஒரு யாப்பைக் கற்பித்த நிறைவுடன் இத்தொகுப்பை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
தொகுப்பைப் படித்துப் பார்த்துச் சுவையுங்கள். கவிஞர்களை வாழ்த்துங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
தமிழன்புடன்,
பாவலர் மா.வரதராசன்


முயன்று பார்க்கலாம் : 3
(முற்று முடுகு வெண்பா)
1. கவிஞர் சுந்தரராசன்
விண்ணுலவு மென்னழகு வெண்ணிலவு மின்பமொடு
மண்ணுலவி நன்மைதர மன்னவனு மெண்ணமுற
வந்ததொரு முந்துமொழி வண்டமிழி னுந்துதலி
லிந்தசிறு வன்முடுகு மிங்கு!

2. கவிஞர் சியாமளா ராஜசேகர்
இந்தநா ளன்றுபோ லின்பமே தந்ததோ 
பந்தபா சங்களே பஞ்சமோ? - சொந்தமோ
நஞ்சுபோ லெண்ணுதே நன்றியே யின்றியே
வஞ்சமோ நெஞ்சிலே வம்பு.!

3. கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்
சினத்தைத் தடுத்துத் தெவிட்டத் தெவிட்டத்
தனித்துக் களித்துத் தரத்திற் - கனத்துப்
பிடிப்பைத் துடைத்துப் பிறப்பைத் தொலைக்கப் 
படிப்பைக் கொடுத்துப் பழக்கு!

4. கவிஞர் காவியக்கவி இனியா
கண்ணனன்று விண்ணகன்று மண்ணைவென்று முன்னடந்து 
விண்ணளந்து மண்ணளந்து! வெண்ணெயுண்டு - கண்ணிறைந்து
சங்குடன்சு ழன்றசிந்து சிந்தையில்நி றைந்ததென்ன!
பங்கமிங்க கன்றதென்ன பண்பு !

5. கவிஞர் அழகர் சண்முகம்
வந்தமர்ந்த வன்நெடுந்த வம்கலைந்த திர்ந்தெழுந்து
மந்திரம்தெ ரிந்தமங்கை முன்மயங்கி-வெந்தணைந்து
தந்துசென்ற தங்கமின்று தஞ்சமின்றி நின்றதென்று
வந்துகண்டு நெந்துகண்சி வந்து! 

6. கவிஞர் நிறோஸ் அரவிந்த்
விண்ணளவ நின்றவனை வெங்கடமு வந்தவனை
மண்ணதனை யுண்டவனை மங்கையினை - வென்றவனை
விண்ணழகு வண்ணமது விஞ்சுமொரு மன்னவனை
நண்ணமன முந்துவது நன்று!

7. கவிஞர் பொன்.பசுபதி
நன்செயுண்டு புன்செயுண்டு நன்கமைந்த நங்கையுண்டு
பஞ்சமின்றி உண்டியுண்டு பண்டமுண்டு-நன்மைகொண்ட
தென்றலுண்டு தென்னையுண்டு நெஞ்சுமன்னு துன்பகன்று
நன்மைநண்ண நன்றுபண்ண வெண்ணு! 

8. கவிஞர் கணேசன் ராமசாமி
பொங்கிவந்த இந்துகங்கை சங்கமந்த ரும்விருந்து
வங்கரங்கு வந்துதங்க உண்பதுண்டு--- செங்கரும்பு
துஞ்சுகின்ற இன்சுகந்த மங்கமெங்கு முண்டுநன்று
வஞ்சிதந்த சங்கமம்ப கன்று 

9. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
விண்ணுலக வின்னவரு மின்பமொடு வண்ணமிகு
மண்ணுலகு வந்திடவு மெண்ணமிட மன்னவனு
மின்னமுதை வண்டமிழை இன்பமொடு நன்றருள
வின்னவரு வந்திடுக வென்று! 

10. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
வெண்ணிலவோ விண்ணிலவோ வெந்தழலே உன்னெழிலோ 
பண்ணிசையோ வெண்மதியோ பங்கையமே --- கண்களிலே 
இன்னமுதே செந்தமிழே இன்னிசையே வந்தருகே 
நின்றவளே வண்டமிழே பொன்று! 

11. கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி
கொத்துதித்துக் கொத்துதித்துக் கொத்துபித்தத் தத்தகத்துத்
துத்ததத்துக் கொத்துகுக்கத் துத்துகுத்துச் - சத்தகத்துத்
தத்தகத்துச் சுத்தசித்துத் தத்திதத்துச் சச்சிதத்துப்
புத்தகத்துக் கத்துதொத்திப் பொத்து.

12. கவிஞர் வீ.சீராளன்
கண்ணொளிரு மென்னழகி கங்குலவ இன்மனது 
வண்ணமொழி கொண்டுகவி வஞ்சியெழி - லுண்டுவர 
வெந்தழியு மெண்ணமது விந்தையென கன்றுவிழு 
மந்தநிலை அன்னமவ ளன்பு !

13. கவிஞர் அர.விவேகானந்தன்
கந்தனென்ற அன்புதன்னை விண்ணிறைந்த பந்தமென்று
சொந்தமென்று தந்தையென்று சிந்தையொன்றி- அந்தமின்று
தஞ்சமென்ற உந்தனன்பு நெஞ்சுமிஞ்ச எண்ணினந்த
வஞ்சமென்ற நஞ்சுமிங்கு நன்று.

14. கவிஞர் குருநாதன் ரமணி
இங்குமுள வங்குமுள வெங்குமுள வங்கணனி
னங்கமதி லெங்குமுள வங்கதம டங்கிவர
மங்கையிட மிங்குசிவ மங்கலமி லங்குமவ
ளிங்குமன வங்குவினி லெங்கு?

15. கவிஞர் சுதர்சனா
மீனெனவொ ராமையென மேதினியி லேபெரிய
ஏனமொடு வீறுடைய ஏறரியு - மானபல
வானவுரு தானுடைய வானவுரு வானபெரு
மானுடைய மாயவனெ னாறு 
★★★

No comments: