பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

3 Feb 2016

கம்பன் கவிநயம்‬ - 2 சொக்க வைக்கும் ஒருசொல்"யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவன்போல் இளங்கோ வைப்போல் யாங்கனுமே பிறந்ததில்லை..."" என்று பாரதி அயர்ந்து போகிறான்.
"எண்ணியெண்ணித் திட்டமிட்டு எழுதி னானோ?
எண்ணாமல் எங்கிருந்து கொட்டி னானோ? ",..
என்று வியக்கிறார் நாமக்கல் கவிஞர்.


"பத்தாயி ரங்கவிதை முத்தாக அள்ளிவைத்த 
சத்தான கம்பனுக்கு ஈடு - இன்னும்
வித்தாக வில்லையென்று பாடு "
என்று புகழ்கிறார் கவியரசர்.
இவ்வாறு பலரும் கம்பனின் கவிநயத்திலே சொக்கிக் கிடக்கையிலே, கம்பனில் "சொக்க வைக்கும் ஒரு சொல் " என்று ஒரு சொல்லைப் பற்றிச் சொல்லி என் கருத்தைப் பதிவு செய்ய வந்துள்ளேன்.
பாற்கடலை நக்கிக் குடிக்கும் பூனைநான் : என்றார் கம்பர். கம்பன் என்ற மாக்கடலில் ஒருதுளியைப் பற்றிச் சொல்லி என் சிறுமையைக் காட்டுவதாகவே எண்ணுகிறேன்.
ஏதோ நான் சுவைத்தவரை என்னைச் சொக்க வைத்த ஒருசொல்லைப் பற்றிச் சொல்கிறேன்.
அடர்ந்த கானகத்தில் இராமன், இலக்குவன், சீதை மூவரும் நடந்து போகிறார்கள். கொடிய அவ் வனத்திலே, யாருமற்ற வழியில், முள்ளும், கல்லும் தைக்க அவர்கள் நடந்து சென்ற காட்சியைக் காட்ட வந்த கம்பருக்கு அவர்களின் துன்பநிலை தெரியவில்லை. அந்தத் துன்பச் சூழலிலும் ராமனின்
அழகே அருக்குத் தெரிகிறது.

"வெய்யவனின் ஒளியையும் மறையச் 
செய்யும் பேரொளி வாய்ந்த இவன்,
மை போன்ற நிறத்தவனோ? 
மரகதத்தின் பச்சை நிறம் வாய்ந்தவனோ?
ஆர்த்தெழும் கடலின் நீலவண்ணத்தைப் பெற்றவனோ?
மழையைப் பொழியும் மேகத்தின் இருளைப் போன்றவனோ? "
என்றெல்லாம் கூறி வியந்து போகும் கவிச்சக்ரவர்த்தி,
"இவனுடைய அழகை நான் எப்படி எடுத்துரைப்பேன்? என்னால் இயலவில்லையே! மையும், மரகதமும், கடலின் நிறமும், மேகத்தின் வண்ணமும் என்றைக்காவது அழியவும் கூடும்
ஆனால் இராமனின் அழகு என்றைக்கும் அழியாத பேரழகு "
என்று முடிக்கிறார்.
இந்த முடிவுக்கு அவர் வருவதற்கு முன் ★ஐயோ★ என்ற ஒரு சொல்லைப் போடுகிறார்.
"வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறைய
பொய்யோவெனும் இடையாளொடும் இளையானொடும் போனான்
மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
ஐயோவிவன் வடிவென்பதோர் அழியாவழ குடையான் "
என்ற பாடலில், வருகின்ற "ஐயோ " என்ற சொல்லே என்னைச் சொக்க வைத்த ஒரு சொல்லாகும்.
அப்படியென்ன அந்தச் சொல்லுக்கு மட்டும் தனிச்சிறப்பு?
1. இடைநிறை சொல்லாக வருகிறது.
2. அந்தச் சொல்லைத் தவிர வேறெந்தச் சொல்லைப் போட்டாலும் பொருத்தமாயிராது எனும் தன்மை.
3. முன்னின்ற அடிகளின் பொருளை
ஈற்றடியுடன் இணைக்கும் பாலமாய் நிற்கிறது.
4. சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை யறிந்து
என்ற வள்ளுவத்தின் விளக்கமாக நிற்கிறது.
ஏறத்தாழ 12000 பாடல்கள், 48000அடிகள், 2,35,000 சொற்களைக் கொண்டு தன் காவியத்தை நகர்த்திச் சென்ற கம்பருக்கு எந்த இடத்திலும் சொல்பஞ்சம் வந்ததாகத் தெரியவில்லை.
ஆனால், இராமனின் அழகைச் சொல்ல வந்த அவரையும் மயக்கிச் சொல்லற்ற நிலையையுண்டாக்கி, நம்மையும் படிக்குந்தோறும் மயக்கி நிற்கின்ற "ஐயோ " எனுஞ் சொல்லே என்னைச் சொக்க வைக்கும் ஒரு சொல் என்று நிறைவு செய்கிறேன்.
உங்களுக்குச் சொக்கியதா?

No comments: