பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

31 Jan 2016

கம்பன் கவிநயம் 1 - கம்பனும் - துளசிதாசரும்


வான்மீகியை மூலமாகக் கொண்டு கம்பர் தன் காப்பியத்தைப் படைக்கும் காலத்தில் பல மாறுதல்களுக்குட்பட்ட ராமன் வரலாறு அவருடைய எழுத்திலும் எதிரொலித்தது..இராமனை ஒரு மனிதனாகவே காட்டுவார் வான்மீகி. ஆனால் கம்பரின் காலத்தில் ராமன் கடவுளாக வணங்கப்பட்டிருந்தான். எனவே கம்பர் ராமனைக் கடவுளாகவே காட்டினார்.
இப்படி பல வேறுபாடுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம் என்றாலும்,
கம்பர் பல நிலைகளில் மற்ற ராமாயண ஆசிரியர்களிடமிருந்தும் தனித்த சிறப்புடன் நிற்கிறார். அவ்வாறான ஒரு நிகழ்வைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இராவணன் வீழ்ச்சி
"""""""""""""""""""
கம்பர் தன் காப்பியத்தில் இராவணன் மரணத்தை மிக அழகாகக் காட்டுகிறார்.
"வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்
எள்ளிருக்கும் இடனின்றி உயிரிருக்கும் இடன்நாடி இழைத்த வாறோ? 
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக்கருதி உடல்புகுந்து தடவியதோ ஒருவன் வாளி!
(கம்ப.யுத்த.இராவணன் வதை : 237)
தன் மனைவியைக் காம மேலீட்டால் கவர்ந்து வந்தவன் இராவணன். அவனுடைய உள்ளத்தில் சீதையின் நினைப்பே எப்போதும் இருக்கிறது. எனவே, அவனை மட்டும் அழித்தால் போதாது.. அவனுள்ளத்தில் மறைந்துள்ள சீதையைப் பற்றிய நினைவையும் அழிக்க வேண்டும் எனக் கருதிய இராமனின் அம்பு, அவனுடைய உள்ளத்தில் அணு அணுவாகத் தேடியவாறு உடல் புகுந்து உயிரையும், சீதையைப் பற்றிய நினைப்பையும் ஒருங்கே அழித்தது.
//இது கம்ப ராமாயணத்துக் காட்சி.//
இதில் கம்பரது "அறிவியல் அறிவு " நம்மைச் சிலிர்க்க வைக்கிறது. ஆம்...பன்னூறாண்டுகளுக்கு முன்பே கம்பருக்கிருந்த. பகுத்தறிவும், பிற்காலத்தில் கண்டுபிடிக்கலாம் எனக் கருதிய அவருடைய அறிவும் நினைக்குந்தோறும் களிப்பைத் தருவதாம்.
இரண்டாம் உலகப் போரின் போது, அமெரிக்கா தன் உளவுபடை வீரர்கள் சிலரை ரஷியாவுக்கு உளவு பார்க்க அனுப்பியது. அவர்களை ரஷிய அரசு கண்டுபிடித்துக் கைது செய்தது. 
தங்கள் அரச ரகசியங்களைக் கண்டறிந்த அவர்களைக் கொன்றால் உலக நாடுகளின் கண்டனத்தை எதிர்கொள்ள நேரும் எனக்கருதிய ரஷிய அரசு, அவர்களுக்குப் புதுமையான தண்டனையைக் கொடுத்தது. அது என்ன தெரியுமா?
அந்த உளவாளிகளின் மண்டையோட்டைப் பிளந்து, மூளையின் அடுக்குகளில் படிந்திருந்த சாம்பல் போன்ற துகள்களை அகற்றிவிட்டு, மறுபடியும் மண்டையோட்டைத் தைத்து விட்டது. (அந்தச் சாம்பல் துகள் தான் நம்முடைய நினைவாற்றலுக்கும், செயலாற்றலுக்கும் காரணம்)
கொடுமையான தண்டனையது.
அந்த அமெரிக்க உளவாளிகள் உயிருடன் இருந்தார்கள்...ஆனால் வெறும் பொம்மையைப் போல. பசியறியாமல், வலியறியாமல்., தங்கள் தேவைகளைச் செய்து கொள்ளும் அறிவுமின்றி "ஒரு குழந்தையைப் " போல.
//இந்த அறிவியல் நுட்பத்தைத் தான் கம்பர் தன் காப்பியத்தில் காட்டுகிறார். இப்போது அந்தப் பாடலைப் படித்துப் பாருங்கள்...வியப்பும் களிப்பும் அடைவீர்கள்.
//துளசிதாசர் காட்டும் இராவணன் மரணம்.//
துளசிதாசர் இராவணன் வீழ்ச்சியை வேறு விதமாகக் காட்டுகிறார். கம்பரின் அறிவியல் நுட்பம் அங்குத் தெரிவதைப் போல், துளசியின் போர்த்திறமை மிகத் தெளிவாகத் தெரியும் விதத்தில் இராமன் அம்பெய்து இராவணனைக் கொன்றதைக் காட்டுவார்.
இராவணனின் உள்ளத்தில் சீதையின் நினைவு நீங்காமல் இருக்கிறது. அதாவது அந்தக் கொடியவனின் இதயத்தில் தன் மனையாள் வாழ்கிறாள்...எனவே அவனை அழிக்க வேண்டி அம்பெய்தால் அது அவனுள்ளத்தில் இருக்கும் சீதை என்ற தன் மனைவியின் உருவத்தையும் கொன்றுவிடுமே.! சீதைக்கு கற்பனையிலும் துன்பந் தரக்கூடாது. எனக் கருதிய ராமன் மிக நேர்த்தியான போர்முறையைக் கையாள்கிறான்.
கம்பரின் அறிவியலைப் போல., துளசிதாசரின் "உளவியல் " அறிவைப் பறைச்சாற்றும் காட்சியது.
இராமன் ஒரு அம்பை எய்கிறான். அது 31 ஆகப் பிரிகிறது.
20 அம்புகள் இராவணின் கைகளைத் துண்டிக்கிறது. நிலைகுலைந்து போகிறான் இராவணன். என்ன செய்வது? என அவன் சிந்திக்கவும் நேரமின்றி அடுத்த 10 அம்புகள் அவனுடைய பத்துத் தலைகளை வெட்டி வீழ்த்துகின்றன. அவ்வளவு தான்...ஒருநொடி...ஒரேநொடி, தன் நினைவுகள் எல்லாம் இராமனை எதிர்க்க வேண்டுமே! என்ன செய்யலாம்? என்ற இராவணின் நினைப்பில், அவனுடைய இதயத்தில் சீதையைப் பற்றிய நினைவு நீங்குகிறது.
பெருந்துன்பம் அல்லது அதிர்ச்சி ஏற்பட்டால் நம் உள்ளத்தில் வேறெந்த நினைவுகளும் இருக்காது. இது உளவியல் (சைக்காலஜி)
அந்த ஒரு விநாடியில் மீதமிருக்கும் ஒரு அம்பு அவனிதயத்தைக் குத்திக் கிழிக்கிறது. 
இராவணணை அழித்தாயிற்று... சீதையின் நிழலுக்கும் துன்பம் நேராமல். //
ஒரே காட்சி தான். ஆனால் இருபெரும் கவிச்சக்ரவர்த்திகள் தங்கள் காப்பியத்தில் அதை அமைத்த விதம் ....
அட.,அட,.அட! வேறென்ன சொல்ல?

1 comment:

sury Siva said...

தங்கள் ஆய்வின் அகலமும் ஆழமும்
அதிசயிக்க வைக்கின்றன. வாழ்த்துக்கள்.

இராமன் வான்மீகிக்கு மனிதனாகவும்
கம்பனுக்குக் கடவுளாகவும்
துளசிக்கு ?

சொல்லுங்கள். பிறகு நான் சொல்கிறேன்.

சுப்பு தாத்தா.