பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

5 Jan 2016

பாட்டியற்றுக : 17 இன் தொகுப்பு


அன்பு நண்பர்களே! கவிஞர்களே! பாட்டியற்றுக : 17 இன் தொகுப்பு அப்பாடல்களை இயற்றிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
கொடுக்கப்பட்டுள்ள வரிசை எண்கள் தரவரிசையன்று. கவிஞர்கள் பாடலை அனுப்பிய வரிசை எண்களாகும்.
கவிஞர்களை வாழ்த்துங்கள். கவிதைகளைப் படியுங்கள். நண்பர்களுக்குப் பகிருங்கள்.
பாட்டியற்றுக - 17

வெண்டளையான் இயன்ற தரவிணைக் கொச்சகக் கலிப்பா

1. கவிஞர் விவேக் பாரதி
கண்ணே ! கனியமுதே ! கற்கண்டே ! என்றன்று
பெண்ணைப் புகழ்ந்தார் பெருந்தமிழ்ப் பாவலர்கள் !
மண்ணினில் இன்றோ மதிகெட்டுப் புத்தியின்றிப்
பெண்ணை இழிவுசெயும் பீப்பாடல் என்றுமொரு
பண்ணை அமைக்கின்றார் பாழ்கயவர் ! அய்யய்யோ !
உண்மை உணர்வின்றி உள்ளத் துணிவின்றி
எண்ணத் துயர்வுக்கு எப்போதும் வேராகும் 
பெண்ணை மிதிக்கின்ற பேதைகள் மாயாரோ?

2. கவிஞர் சுந்தரராசன்
நீலக் கழுத்தினனை! நெற்றிவிழி கொண்டவனை!
ஆல மமர்ந்திருக்கு மத்தனை! ஐங்கரனின்
கோலங் கொடுத்தவனைக்! கொற்றவனை! மாமதுரை
சீலத் திருப்பதியில் சித்தரென்று வந்தவனை!
மூல முழுமுதலை! முத்தமிழைப் பெற்றவனைக்!
காலங்கள் மூன்றினையும் கட்டி நடத்துகின்ற
சூலத் திருக்கையனைச்! சுந்தரனைச்! சுந்தரெனும்
பாலன் பணிந்தேன்! பரமாநீ பார்த்தருளே!

3. கவிஞர் வள்ளிமுத்து
விண்ணில் வெளிச்சமுடன் வெண்ணிலவும் ஓடுதடி
கண்ணில் கவினுறு காட்சிதந்தே ஆடுதடி
மண்ணில் உயிரெல்லாம் மாநிலவைத் தேடுதடி
விண்ணின் முகில்மறைந்தே தண்ணிலவும் வாடுதடி
பெண்மை முகம்போலப் பேரொளி வீசுதடி
தண்ணீர் நிறைந்தவிடம் தான்விழுந்துங் கூசுதடி
எண்ணின் இருவாரம் வளர்ந்துதேய்ந்து போகுதேயென்
பண்ணில் கலந்துவிட்ட பால்நிலவோ வேகுதடி..!

4. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
சாத்திரங்கள் தந்த சரியான நெஞ்சத்தைக் 
காத்திருக்கும் காதலுக்குக் கண்மணியே காட்டாகப் 
பூத்திருக்கும் வாசமுள்ள பூக்களினால் வாழ்த்திடுவேன் .
பாத்திகட்டி நாளுமே பாசமுள்ள உள்ளத்தில் 
சாத்தியமே ; இல்லறத்தில் சத்தியத்தைக் கைக்கொண்டால் 
பூத்துவிடும் புன்னகை பூமியிலே நன்னெறிகள் 
மூத்தோரால் நோக்கிடலாம் முத்தான மண்ணுலகில் .
காத்திருக்கும் காதலியே ! கண்மணியே ! நீவாழ்க !

5. கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்
முன்னைப் பெருமை முழுதும் அறியாதே
கன்னித் தமிழைக் கசடென் றொதுக்கியே
அன்னி யமொழி அழகெ னுமவலம்
நன்றா யிலையே நகைப்பிற் குரியதே
என்றும் குறையா இளமைப் பொலிவுடன்
இன்றும் நிறைய வளந்தரு சொற்கொண்டு
நன்று விளங்கிடும் நற்றமிழ் போற்றியே
வென்றிட லாமே வியனுல கோரே!

6. கவிஞர் கைலாசநாதன் காளிதாசு
வண்ணங்கள் மூன்றேற்றோர் வட்டத் திகிரியுடன் 
விண்ணோக்கிக் கையாட்டி விம்மிதங் கொள்ளவைக்கும் 
எண்ணிறந்த எம்மவரின் ஈகையை இன்னுயிரைக் 
கண்ணுடன் கருத்துக்கும் காட்டி நினைவூட்டும் 
உண்ணுமுண வும்நீரும் வன்பகையில் லாவாழ்வும் 
பண்ணும் பலகலையும் பார்போற்றும் பீடுதந்தாய் 
திண்மையும் மாண்பும்தந் தெம்மையும் ஆண்டுகொண்ட 
கண்ணொளியே நன்மணியே காலமெலாம் போற்றுவமே!

7. கவிஞர் நடராசன் பாலசுப்பிரமணியன்
பனையேடு தேடிப் பலநாள் பயணம்
தனியே நடந்தார் தமிழ்த்தாத்தா வென்றால்
முனைந்தே தொகுத்தது முத்தமிழ் நூலைக்
கனிந்தது நம்மொழி கன்னலாய் என்றால்
வினைப்பய னென்றே விளையும் புலமை
எனும்சொல் தவறில்லை யென்றா லதற்கு
மனத்திடம் தந்தாய் மலைமகள் நீயே
அனைவரும் போற்றுமோர் ஆனந்த வல்லியே!

8. கவிஞர் செந்தமிழ்ச் சேய் சின்னசாமி
பற்றுமிக நாளும் படர்ந்தணைந்த பைங்கிளியே,
உற்றுன்னை ஒன்றியதால் உள்ளேன் உயிரோடு!
கற்றைக் குழலசையக் கண்ணிரண்டும் நாண்மலராய்ச்
சுற்றிச் சுழலெழிலைச் சொல்லற்கும் சொல்லுளவோ?
முற்ற முடியாது மூப்பால் முயன்றிடினும்
கற்றகளி யாட்டம் கழியுவகை யூட்டிடுமே!
இற்றைக்கும் காணவுனை ஏற்படுவ தின்பமொன்றே.
எற்றைக்கும் நீயெனக்கே! ஏலேலோர் என்னுயிரே!

9. கவிஞர் நிறோஸ் அரவிந்த்
வெண்டளை கொண்டு விளங்கும் 'தரவிணை'
ஒண்டமிழ் தன்னில் உரைத்திட வெண்ணியான்
கண்டதைக் கேட்டதை யென்கருத்தில் நின்றதை
வண்டமிழ்ப் பாவினில் வள்ளுவன் தந்ததை
அண்டமெ லாமாய் அகன்ற பொருளினை
மண்டல மெங்கிலும் மாண்புடை நந்தமிழைக்
கொண்டென் உளமதிற் கோதறக் கோவையாய்
விண்டிட வேண்டி விரைந்திட்டேன் சோலைக்கே!

10. கவிஞர் சுந்தரமூர்த்தி
சிந்தனையை ஊட்டிவைத்துச் சீரியநற் பாவளித்தாய்
செந்தேனே புன்னகைத்தாய் ; செம்மையுடன் நாவினிக்க
வெந்தணலில் தாயிழந்து வெந்துமனம் நோகையிலே
பந்தமுள்ள தாயாகிப் பக்குவமாய் நீயணைத்தாய்
சந்தனத்தை ஈன்றெடுத்த சங்கீத மாமலையாய்
இந்திரனும் போற்றுகின்ற ஈசனது நன்மகளாய்
நந்தியுடைச் சூலனவன் நன்மகனும் காத்திடவே
வந்து பிறந்தொளிர்ந்தாய் வாழ்வே தமிழணங்கே !

11. கவிஞர் நடராஜன் சீனிவாசன்
கோசல நாட்டின்நற் கொற்றவன் பெற்றெடுத்த
மாசறு மைந்தனை மாதவனைத் தென்னிலங்கை
நீசனை மாய்த்த நிமலனை அன்புடைய
தாசருக் கீயும் தயைகொண்ட மன்னவனைப்
பேசருந் தெய்வத்தைப் பெம்மானை நானிலத்தில்
நாசங்கள் செய்வோர்தம் நல்வாழ்வைத் தீய்ப்பவனை
நேசமுடன் போற்றிவந்தால் நெக்குருகிப் போவானே!
பாசமுடன் இன்னருளைப் பல்லாண் டளிப்பானே!

12. கவிஞர் பசுபதி
தண்மதியோ தாமரையோ தங்கச் சிலைதானோ
கண்ணெதிரே தோன்றுகின்ற கற்சிலையோ ஓவியமோ
வண்ணமிகு தோகை வளைத்தாடும் நன்மயிலோ
என்னெதிரே வந்துநிற்கு  மேந்திழையைக் கண்டதுமே
என் மனம் பொங்குதே இன்பத்தில் மூழ்கியே
மண்ணிதனில் நான்தேடும் மங்கையிவள் தானென்றே
என்னிரு கண்களினால் ஏற்கவென்றன் காதலென்றேன்
புன்னகைத்த பூவிதழாள்  புரிந்தென்னை ஏற்றனளே!

13. கவிஞர் பரமநாதன் கணேசு
கோடி யெனக்காசு கொட்டிக் கிடந்தென்ன
ஓடி உழைத்தே உனக்கெனச் சேர்த்தென்ன
வாடிக் கிடப்போரை வாரி யணைக்காது
நாடி வருவோர்க்கு நன்மை புரியாது
மூடிப் புதைத்து முடக்கும் பழியுடைய
கேடினை விட்டொழித்துக் கேட்குமுன் தந்திடுவீர்!
தேடி யவர்துயர் தீர்க்க முயன்றிடுவீர்!
ஈடிலாப் பேர்புகழ் இப்புவியில் சேர்ந்திடுமே!.

14. கவிஞர் சியாமளா ராஜசேகர்
பட்டாடை கட்டிவந்தப் பால்நிலவோ? பைங்கிளியோ?
எட்டாத தாரகையோ? இன்சுவையில் செங்கரும்போ? 
மொட்டவிழும் செவ்விதழாய் மோகனமாய்ப் பூப்பவளோ? 
சொட்டிவிழும் சாரலைப்போல் சொக்கவைக்கும் சுந்தரியோ?
கொட்டிமுத்தம் தந்துன்னைக் கொஞ்சுகின்ற கோமகளோ? 
கட்டிலிலே நெஞ்சள்ளும் கந்தர்வக் கன்னிகையோ ?
குட்டையிலே பங்கயமாய்க் கொள்ளைகொள்ளும் பேரழகோ?
சட்டெனவே சொல்லிவிடு தங்கமிவள் காதலியோ!

15. கவிஞர் சிதம்பரம் சு.மோகன்
சாலவித்தை கற்றறிந்த சத்திமிக்க கோதையரை
ஆலஞ்சூழ் பூமிதனில் ஆர்வமாய்த் தேடுவரே..
கோலவெழில் காட்டியுளம் கூலமென ஆக்கிடுவார்
தாலமது தானுலர தம்மழகால் வீழ்த்திடுவார்
நீலவிழி பீலிமயிர் நெஞ்சினிலே எண்ணாமல்
ஓலமிட்டே உள்ளம் ஒடுங்கிவிழ ஓய்ந்தழிந்து 
ஞாலமிதில் வீழ்வதற்குள் நன்றுரைக்கக் கேட்பீர்காள்
மாலதனை நீக்கி மனைவியுடன் வாழ்வீரே!

16. கவிஞர் அழகர் சண்முகம்
தூயனை உய்யத் துகில்கொடுத்த மெய்யனை
ஆயர் துயர்துடைத்த அன்புச்ச கோதரனைத்
தாயனைக் காக்கின்ற தாமரைச்செங் கண்ணனை
நோயை விரட்டிட நோக்கும்கோ பாலனைத்
தீயரை மாய்த்த திருக்கரத்தால் தீங்கெனும்
தீயை அவித்திட்ட தீர்த்தத் துறைவனை
மாயனை மாலனை மண்ணுண்ட செங்கனி
வாயனை வாயார வாழ்த்தி வணங்குவேன்!

17. கவிஞர் ஐயப்பன்
மண்ணின் அருந்தவத்தால் மாதா பெருந்தவத்தால்
விண்ணிருந்த தூதுவரும் வேதங்கள் தாம்போற்றப்
புண்ணியர் பாலகராய் பூமியிலே தாம்பிறந்தார்
விண்ணில் ஒளிவீசி விண்மீன்கள் காட்டியதே
பண்ணிய அப்பம் பகிர்ந்தளித்த அன்புதனைத்
தண்ணீர் பழரசமாய்த் தாமாறச் செய்ததனைப்
புண்ணாம் தொழுநோயைப் போக்கிநலந் தேக்கியதைப்
பண்ணாகப் பாடிடுவீர் பாவங்கள் தீர்ந்திடுமே!

18. கவிஞர் குருநாதன் ரமணி
தயக்கமும் நாணமும் தன்முகத்தில் ஏற்றி
வயல்வழியில் நாளும் வளையல் ஒலிக்க
மயக்கம் விளைத்துவரும் மாமன் மகளாம்
கயல்விழிப் பாவையவள் காத்திருப் பாளோ?
முயல்வெண் முதுகாய் முகிழ்வெண் விழியில்
கயலென நீந்தும் கருவிழியின் பார்வை
அயலும் அசலும் அமுதைச் சொரியும்!
கயல்விழிப் பாவையவள் காத்திருப் பாளோ?

19. கவிஞர் அர.விவேகானந்தன்
மாலாகி நின்றுமே மாவுலகைக் காப்பவனைக்
கோலமே கொண்டுக் கொடுந்துயர் போக்குவானைக்
காலடியால் ஞாலைக் கணக்கா யளந்தானைச்
சீலமென வந்தவனை!சீதையின் நாயகனை!
நீலமேனி வண்ணனை!நெஞ்சில் நிறைந்தானைப்
பாலமெனத் தாங்கிப் பயனைத் தருவானைப்
பாலகனாய் மாறிப் பதமலர் போற்றினால்
காலமெல்லாம் நம்வாழ்வைக் கற்கண்டா யாக்குவானே!

20. கவிஞர் அஷ்ஃபா அஷ்ரஃப் அலி
பற்றைப் படர்ந்திருக்கப் பால்நிலவும் பாய்விரிக்க
ஒற்றையடிப் பாதையிலே ஓரிரவு நாமிருவர்
ஒற்றையிலே நின்றதையே ஒட்டநின்று பார்த்தவரார்
சற்றே கசிந்துவிடச் சாதிசனங் கண்திறக்க
உற்றா ரெனைக்கேட்க ஊருசன மும்சிரிக்கச்
சொற்கலக மாகியதே சொல்லாத சொல்லுமெழ
முற்று மிழந்தேனே மூச்செல்லா முன்னினைவே
பற்றோ டிருப்பவளைப் பாராயோ என்னுயிரே!

21. கவிஞர் சுரேஷ் சீனிவாசன்
மண்ணையுண்ட மன்னவனை மாதவனைக் கேசவனை
வெண்ணைநாடிச் சென்றவனை வேதமதைச் சொன்னவனைக்
கண்குளிரக் கண்டிடுவேன் கண்ணனையே போற்றிடுவேன்
புண்ணியமே செய்ததனால் பூமியிலே கண்டுவிட்டேன்
கண்ணனுனைக் காதலிக்க கன்னியர்கள் காத்திருப்பார்
மன்னனுனை மாலையிட மாதவமும் செய்திடுவார்
விண்ணவரும் போற்றிடுவார் விண்டவரோ தோற்றிடுவார்
எண்ணமெலாம் உன்நாமம் என்றென்றும் பேரின்பம்!

22. கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி
மாரி கழிந்தது மாவிமம் சூழ்ந்தது
நீரில் உறங்கும் நெடுமாலை நாம்பாடித்
தேரின் மனத்தெண்ணம் தெள்ளியசொல் செந்நாவில்
சேரின் அதன்பொருட்டே செய்செயலும் மாறாமல்
போரில் புனிதமிகு பொன்னுலகை நாம்படைத்(து)
ஓரில் ஒருகுடை ஓருளமென்(று) ஓர்ந்துயர்ந்து
சீரிளமைச் செந்தமிழ்ப்பா தித்திக்கத் தாலாட்டும்
மாரி நனைந்தே மகிழ்வோடு வாழ்குவமே!

23. கவிஞர் வனராசன் பெரியகண்டர்
எந்தநிலை வந்தே எதிர்த்திடும் போதிலும்
மந்தநிலை கண்டே மருண்டிடும் நாளிளும்
பந்தநிலைப் பண்புடன் பாராட்டி நீதினம்
சொந்தநிலை மாறாத சூத்திரம் கற்றிடு!
வந்தநிலை நாளும் வருந்திடச் செய்யினும்
இந்தநிலை மாறியே ஏகிடும் என்றறி!
அந்தநிலை யற்றே அழகுறும் தேன்தமிழ்
சொந்தமெனப் பற்று! சுகித்திடும் வாழ்வதே!

24. கவிஞர் இரா.கி. இராஜேந்திரன்
பள்ளியிலே பாவலராய்ப் பாங்குடனே செய்யுளைத் 
துள்ளியெழ வைத்தங்குத் தூண்டுதலால் பாவடிக்கும்
வள்ளிமுத்து ஆசிரியர் வாழ்வியலைப் போற்றிடுவோம்
அள்ளியிடும் பாக்கள் அழகாக மேம்படுத்த
வெள்ளமெனும் ஆற்றில் வெளியேறும் யாப்பினையும்
கள்ளமில்லா உள்ளமுடன் காட்டுகிற வெங்கடேசன் 
பள்ளத்தில் நில்லாமல் பாவோடை சோலைபுக
வள்ளலவர் பாபயிற்றும் வல்லவரின் சோலையிதே

No comments: