பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

17 Jan 2016

15) கடலிலே செந்தூள் !


பைந்தமிழ்ச் சோலைவசிகளுக்கு வணக்கம் !
தங்கள் அனைவரையும் இந்த ‪#‎இலக்கியத்_தேன்துளிகள்‬ தொடரில் சந்திப்பதில் ஆனந்தம் அடைகின்றேன். இதோ இவ்வாரத்துத் துளி !
15) கடலிலே செந்தூள் !
மிகவும் சுத்தமான வெண்மை நிறம் கொண்ட பாற்கடல் மீது அன்று திடீரெனச் சிவப்பு நிறத்தில் துகள்கள் பறந்தன. "அவை ஏன் பறந்தன அதுவும் கடலுக்கு நடுவில் திடீரென எப்படிப் பரவின?" என்று அனைவரும் ஐயம் கொள்ளக் கூடும் அதற்கான காரணத்தைக் கவிஞர் பின்னால் இப்படிக் கூறுகின்றார்.
மத்தகத்தைக் கொண்ட ஒரு ஆண் யானையைக் கொன்று அதன் தோலினை உரித்துப் போர்த்திய சிவபெருமான் தன்னுடன் சண்டையிட வந்த அழகில் சிறந்த ஆடவனான மன்மதனோடு போரிட்டு வென்று முப்புரத்தில் அவனை நெற்றிக் கண்ணின் சுடரால் எரித்தான். இந்தச் செய்தி எட்டு திக்கும் பரவி அண்டம் முழுவதும் நிறைந்தது.

இதிகாசங்கள் கூறுவதாவது மன்மதன் நாரயணனின் பிள்ளை ! ஆகையால் தனது மகன் இறந்து போன புத்திர சோகத்தால் அறிவின் வித்தகம் நிறைந்த அந்தப் பேதையான இலக்குமி தேவி தனது களபம் தழுவப் பெற்ற மார்பில் அடித்துக் கொண்டு அழுதிடத் துவங்குகின்றாள்
அந்த இடத்தில் காற்றோடு கலந்த அவளது மார்பின் செந்தூரத் துகள்கள் கடலின் மேலே பறந்த செந்தூள் ஆயின. அதுவும் திருமால் துயிலும் பாற்கடல் மேலே பறக்கும் செந்துள்கள் ஆயின.
மாரனைக் கண்ணால் எரித்த செய்தியினைக் கேட்ட அந்தத் திருவானவள் என்னதான் அறிவுடையவளாக இருந்தாலும் புத்திர சோகத்தால் புத்தி இழந்து மாரில் அடித்துக் கொண்டதாய் விளக்கும் இந்தப் பாடல் முழுக்க முழுக்கக் கற்பனைப் பாடலே என்று நினைக்கையில் நெஞ்சம் இனிக்கின்றது.
ஆம்! "கடல் நடுவிலே செந்தூள்" இருப்பதாகப் பாடல் புனைய இயலுமா என்றொரு புலவர் அவரது சவாலுக்கு விடை கொடுக்கக் காளமேகப் புலவன் கற்பனையில் புனைந்த பாடல் எத்துணை இனிமையுடையதாகத் திகழ்கின்றது. வெறும் கடல் நடுவில் செந்தூள் என்றொரு தலைப்புக்கு அழகான ஒரு காட்சியைக் கண்முன் விரித்த காளமேகக் கவிஞரின் பாடல் இதோ ! கறபனையில் உதித்த தேன் துளி !
பாடல் :
சுத்தபாற் கடலின் நடுவினில் தூளி 
தோன்றிய அதிசயம் அதுகேள் 
மத்தகக் கரியை யுரித்ததன் மீது 
மதன்பொரு தழிந்திடும் மாற்றம் 
வித்தகக் கமலை செவியுறக் கேட்டாள் 
விழுந்துநொந் தயாந்தழு தேங்கிக்
கைத்தல மலரால் மார்புறப் புடைத்தாள் 
எழுந்தது கலவையின் செந்தூள் !
-காளமேகம்

No comments: