பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

10 Jan 2016

பாட்டியற்றுக - 19


நண்பர்களே.! கவிஞர்களே.! அறிஞர் பலரும் பாராட்டும் 
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 19" இதோ.!
"இப்பகுதியில் கொடுக்கப்படும் இலக்கணக் குறிப்புகள், புதிதாகக் கற்பவர்கள் அஞ்சி ஒதுங்காமல், குழப்பமடையாவண்ணம் எளிதில் கற்கும் விதத்தில் (பாட்டியற்றும் வகையில்) தேவையானவை மட்டுமே கொடுக்கப்படுகின்றன. 
மேல்விளக்கம் தேவைப்படுவோர்
முன்னோர் யாப்பியல் நூல்களைப் பார்க்கவும்."
முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, இந்தப் பதிவைப் பகிர்ந்தும், மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.! 
*** *** *** ***
பாட்டியற்றுக - 19

வெண்கலிப்பா
*******************
சேரிடம் சிறப்பாயின் சிறுமைக்கு வழியில்லை
நாரது மலர்சேர்ந்தால் நறுமணமந் நாருக்கே
சீரொடு தமிழ்மலரில் செழுமையுட னிணைந்ததனால்
நாரென மணந்தேனே நான்!
-- பாவலர் மா.வரதராசன் -- 
*** *** *** ***
கருத்தூன்றுக.:
மேற்கண்ட பாடல் "வெண் கலிப்பா" ஆகும்.
வெண்பாவைப் போல் ஈற்றடி அமைவதாலும், வெண்டளை கொண்ட சீர்களாலும் அமையும் தன்மை நோக்கி இப்பெயர் வந்தது.
"வெண்கலிப்பா" வேறு..."கலிவெண்பா " வேறு.
கலித்தளையானும், வெண்டளை விரவியும், ஆசிரியத் தளை விரவியும் வருவது"வெண்கலிப்பா "
வெண்டளை மட்டுமே கொண்டு வருவது "கலிவெண்பா " ஆகும்.
இப் பாவகை அவ்வளவாக எழுதப்பெறுவதில்லை. நாம் எழுதிப் பரப்பலாம்.
மேற்கண்ட பாடல் தன் தளையானும் (கலித்தளை) , ஆசிரியத் தளையானும் அமைந்த வெண்கலிப்பா. (காய்முன் நிரை வருவது கலித்தளை.) 
வெண்டளை விரவி வருவதுமுண்டு. 
ஆனால் மாச்சீர்களும், நிரைநடுவஞ்சிச் சீரும் வாரா.
★பொது இலக்கணம்.
*நான்கு சீர்கள் கொண்டதாய்,
*நான்கு அடிகள் முதல் பல அடிகளைக் கொண்டதாய்,(பயிற்சிக்கு நான்கடிகளே போதும்) 
*முதல் சீரும், மூன்றாம் சீரும் மோனையால் இணைந்து,
* இரண்டு அடிகளுக்கு ஒரு எதுகையைப் பெற்றும்,
* ஈற்றடி வெண்பாவைப் போல் முச்சீராய், 
* ஈற்று சீர் நாள், மலர், காசு, பிறப்பு இவற்றில் ஒன்றைக் கொண்டும்,
* கலித்தளை(தன் தளை)யானும், கலித்தளையுடன் வெண்டளை விரவியும்,(பயிற்சிக்கு கலித்தளையே கொள்க) 
வருவது "வெண் கலிப்பா" எனப்படும்.
இவ்வகையான ஒரு பாடலை வரும் வெள்ளிக்கிழமை நண்பகலுக்குள் இப்பதிவின் கருத்துப் பகுதியில்(comment) மட்டுமே எழுதி அனுப்புங்கள்.
அன்பு கூர்ந்து ஒருவர் ஒரு பாடலை மட்டுமே அனுப்பவும். பயிற்சிக்கு நேரம் ஒதுக்க உதவியாக இருக்கும்.
★★★

No comments: