பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

10 Jan 2016

என்னைச் செதுக்கிய,..முந்நூறு நாள்சுமந்து முழுதாய்க் காத்து
        முறையாக உணவோடு காற்றும் தந்தே
எந்நினைவும் இல்லாமல் என்னை மட்டும்
        எப்போதும் நினைந்துருகி உயிர்நீ ராகச்
செந்நீரைத் தந்தென்னை உயிர்வ ளர்த்துத்
        தேகவலி வந்தாலும் பொறுத்துக் கொண்டு
கண்ணேறு தாக்காமல் காவல் செய்து
        காலமெலாம் எனைக்காத்த தாயே தெய்வம்!


என்நோயைத் தீர்ப்பதற்கு நோன்பி ருந்தாய்
        என்பசியைப் போக்குதற்குப் பசிம றந்தாய்
என்னுடலை வளர்ப்பதற்கே உடலி ளைத்தாய்
        எந்தவொரு துன்பமின்றி என்னைக் காத்தாய்
உன்னுடலின் பங்கான என்னைக் காக்க
        உன்னுடலை நீதேய்த்தே உயர்ந்தாய்...என்றன்
கண்முன்னே நடமாடும் கடவுள்...இல்லை
        கடவுளுக்கும் மேலான "கடவுள் " நீயே!

ஒருவேளை உணவுண்டாய். மூன்று வேளை
        உணவுதர எங்களுக்காய் உழைத்தாய். தாலி
உருவெல்லாம் விற்றென்னைப் படிக்க வைத்தாய்
        உயர்ந்தவொரு கவிஞனென "உருவைத் " தந்தாய்
கருவிருந்த காலத்தில் காத்த தைப்போல்
        காலமெலாம் எனைக்காத்தாய் மேன்மை தந்தாய்
ஒருவேளை நீவலியால் வெறுத்தி ருந்தால்
        உலகத்தில் வந்திருக்க முடியா தம்மா!

ஆத்திரத்தில் அறிவிழந்த துணையை நீங்கி
        அடலேறாய் எமையழைத்துக் கொண்டு வந்து
பூத்தொடுத்து விற்றெம்மை வளர்த்தாய். இன்றோ
        புவியுள்ளோர் போற்றுவிதம் புகழைப் பெற்றோம்.
பாத்தொடுக்கும் பாவலன்நான் என்கின் றார்கள்
        பக்குவமாய் நீசெய்த ஈகை தானே.?
காத்திருக்கும் உன்றனுக்கு வீடு பேறு
        காலமெலாம் உன்னடியில் என்றன் வாழ்வு!

மறுபிறவி என்பதைநான் நம்ப வில்லை
        மறுபிறவி எனவொன்றிங் கிருக்கு மாயின்
மறுபடியும் நானுன்றன் வயிற்றில் தங்கும்
        வரமளிக்க வேண்டுகிறேன் தாயே.,இன்றேல்
பொறுப்பாக நானுன்னை வயிற்றில் தாங்கும் 
        புகழ்நிலையை நீயெனக்குத் தருதல் வேண்டும்.
வெறுப்பின்றி உனைச்சுமந்து முலைப்பால் ஏந்தும்
        மேனிலையைப் பெறவேண்டும். அருள்வாய் அம்மா!

கல்லாக இருந்தயெனை மனித னாக்கிக் 
        கற்றோரும் போற்றுவிதம் கவிஞ னாக்கி,
நல்லதெலாம் நாற்றிட்டுச் செதுக்கி என்னை
        நல்லவனாய் உருவாக்கி வாழ்வ ளித்தாய்
சொல்லுதற்கே சொற்களின்றித் தவிக்கின் றேன்நான்
        சொற்களுக்குள் அடங்குவதா உன்றன் பாசம்?
எல்லையிலாப் பெருமையெலாம் பெற்ற தாயே
        இவ்வுலகம் அழிந்தாலும் வாழ்வாய் நீயே!
★★★

★இக்கவிதை ஒரு கவியரங்கில் நான் படித்தது. படிக்க முடியாமல் அழுது அழுது, கண்ணீரால் எழுத்துகள் கரைந்து மறைய, சிறப்பு விருந்தினராக வந்தவரே படிக்க, அதில் நிறைவு இல்லாமையால், மீண்டும் நானே தேம்பி அழுதபடியே படித்து முடித்தேன்.
#‎கவிஞர்ரௌத்திரன்‬ அவர்களின் தாயைப் பற்றிய கவிதைக்குப் பின்னூட்டத்தில் நான் கூறியபடி இக்கவிதையை இங்குப் பதிவதில் மகிழ்கிறேன்.
ரௌத்திரனுக்கு நன்றியும் உரித்தாகுக.
பாவலர் மா.வரதராசன்.
★★★★★

1 comment:

ஊமைக் கனவுகள் said...

மறுபிறவி என்பதைநான் நம்ப வில்லை
மறுபிறவி எனவொன்றிங் கிருக்கு மாயின்
மறுபடியும் நானுன்றன் வயிற்றில் தங்கும்
வரமளிக்க வேண்டுகிறேன் தாயே.,இன்றேல்
பொறுப்பாக நானுன்னை வயிற்றில் தாங்கும்
புகழ்நிலையை நீயெனக்குத் தருதல் வேண்டும்.
வெறுப்பின்றி உனைச்சுமந்து முலைப்பால் ஏந்தும்
மேனிலையைப் பெறவேண்டும். அருள்வாய் அம்மா! ““““

உணர்வின் உச்சம் பெற்ற வரிகள்.

தொடர்கிறேன் ஐயா.

நன்றி.